காற்றினிலே வரும் கீதம்-11
பி.சுசீலா, எல்ஆர்.ஈஸ்வரி போன்ற ஜாம்பவான்கள் காலத்தில் தனது தனித்த குரல் அடையாளத்தால் புகழ்பெற்ற வாணி ஜெயராமை தமிழ் திரை இசையில் அதிகம் பயன்படுத்தியது சங்கர் கணேஷ் இரட்டையர்கள் தான். திரையிசை திலகம் கேவி.மகாதேவன், மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, வி.குமார்,விஜயபாஸ்கர், ஷ்யாம், இசைஞானி இளையராஜா, சந்திரபோஸ், எஸ்ஏ.ராஜ்குமார் உள்பட பலர் இசையில் வாணி ஜெயராம் பாடியுள்ளார்.
ஆனால், அதில் அதிகம் பாடியது சங்கர் கணேஷ் இசையில் தான். மேகமே மேகமே துவங்கி எத்தனை, எத்தனை வகையான பாடல்கள். அதற்காகவே சங்கர் கணேஷ் இரட்டையர்களின் பாதம் பணிந்து இசை ரசிகர்கள் நன்றியைத் தெரிவிக்கலாம்.எனவே, இந்த கட்டுரையில் அதிகம் சங்கர் கணேஷ் பாடல்கள் தான் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்.
ஒருவரின் முகபாவனைகளை விட அவரின் குரல்கள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். அப்படித்தான் பலரின் நெஞ்சக்குளத்திற்குள் பல்வேறு எண்ண அலைகளை உருவாக்கி வைத்திருக்கிறார் கலைவாணி. அது தான் பாடகி வாணி ஜெயராமின் உண்மையான பெயர். பெயருக்குத் தகுந்த இசைவாணி தான் அவர். இப்படித்தான் பாடுவார் என சில பாடகிகளைப் பட்டியலிடலாம். ஆனால், வாணி எந்தக் கூட்டுக்குள்ளும் அடங்காத பறவை.
ஏழு சுவரங்களில் எத்தனைப் பாடல் எனப்பாடிய வாணி, நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்தரிக்காய் என கிராமத்து மண்ணைப் பிசைந்து நமக்குத் தருவார் . ஒருநாள் உன்னோடு ஒரு நாள் என ரிதமெடிக் டூயட்டை நினைக்கும் போதே மண்ணுலகில் இருந்து தேவன் இறங்கி வருகிறான் என்ற இறைகீதம் பாடி பக்தியில் மெய்மறக்க வைப்பார்.
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது என கேட்கும் போது மனதை நொறுங்க வைப்பார். நானே நானா யாரோ தானா என மெய்மறக்கச் செய்வார். வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகளில் கேட்டு சலசலக்க வைப்பார். நினைவாலே சிலை செய்து உனக்காக வைப்பேன் எனப் பாடி நினைவைக் கிளறுவார். கங்கை நதியோரம் ராமன் நனைந்தான் என சொற்களில் நனைய வைப்பார். அம்மானை அழகுமிகு கண்மானை என பாடலில் திளைக்க வைப்பவர் சட்டென, மலைராணி முந்தனை சரிய சரிய என தடுமாற வைப்பார். என் கல்யாண வைபோகம் உன்னோடு தான் என ஏக்கத்துடன் ஏங்க வைப்பார். நானே நானா யாரோ தானோ என கிறங்கவும் வைப்பார். இப்படி எத்தனை பாடலை நான் பட்டியலிடுவது?
வேலூரில் 1945ம் ஆண்டு பிறந்த வாணி, படித்து பட்டம் பெற்று வங்கி ஊழியராக பணியாற்றினார். அவரிடமிருந்த இசை உத்வேகம் வங்கி வேலையை உதற வைத்தது. மும்பையில் கணவருடன் குடியேறிய வாணியின் பாட்டுப்பயணம் முதலில் இந்தியில் தான் துவங்கியது. வசந்த் தேசாய் இசையில் `குட்டீ’ என்ற இந்தி படத்தில் “போல் ரே பப்பிஹரா’ என்ற மெகாஹிட் பாடலை 1970ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி வாணி பாடினார். இது தான் அவரின் முதல் திரையிசை பாடல்.
இந்தப் பாடலை நீங்கள் இப்போது கேட்க விரும்புகிறீர்களா? எந்த பிரச்னையும் இல்லை. முக்தா சீனிவாசன் இயக்கிய ‘சினிமா பைத்தியம்` படத்தில் சங்கர் கணேஷ் இசையில் ஒலித்த
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
அதில் உன் வண்ணம் தான் என்னோடு தான் ….
என்ற பாடலைக் கேளுங்கள். அந்த பாடல் தான் `குட்டீ’ இந்தி படத்தில் வாணி ஜெயராம் பாடியது. அதையே தமிழில் சினிமா பைத்தியம் படத்தில் வாணியே பாடியது தான் பியூட்டி. கிட்டத்தட்ட 19 மொழிகளில்10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி அவர் சாதனை படைத்துள்ளார். 3 தேசிய விருதுகள், பல்வேறு மாநில மொழி விருதுகளைப் பெற்ற வாணி ஜெயராம், எந்த பாடல் என்றாலும் அவரின் தனித்த உச்சரிப்பால் அழகுற வைத்தார்.
டெல்லியில் தூதர்ஷன் துவங்கப்பட்ட போது சினிமா முயற்சிக்கு முன் வாணி அங்கு தான் பாட ஆரம்பித்தார். பிரபல இந்துஸ்தானி கலைஞர் உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் வாணி கற்ற பாடம் அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் தர உதவியது என்றால் அதை வாணியே மறுக்கவில்லை.
`மூன்றாம் பிறை’ படத்தில் பொன்மேனி உருகுதே என எஸ்.ஜானகி பாடிய போது என்ன இவர் இப்படி பாடியிருக்கிறார் என குறுகுறுப்புடன் பேசியவர்கள் உண்டு. `குரு சிஷ்யன்’ படத்தில் முத்து முத்து திருநாளு என் மேனி செந்தேனு என ஸ்வர்ணலதா பாடிய போது என்னடா இவர் இப்படி பாடுகிறார் என்று ஆச்சரியப்பட்டார்களும் உண்டு.
ஆனால், தமிழ் திரையிசையில் கர்நாடக இசையை மிக அழகான ஆலாபனையோடு பாடிய பாடல்கள் மட்டுமின்றி கேபரா எனச்சொல்லப்படும் பாடல்களை அதிகம் பாடியவர் வாணி ஜெயராம் தான் என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். எல்ஆர்.ஈஸ்வரியை விட அப்படியான அதிக பாடல்களை வாணி பாடியுள்ளார். அதற்கு உதாரணம் சில பாடல்களைச் சொல்லலாம்.
மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் `அழைத்தேன் வருவேன்’ படத்தில் வாணி பாடிய வரிகள்,
எனக்கொரு டேட்.. அன்று அழைத்தால் வருவேன்
எனக்கொரு ரேட் அதை கொடுத்தால் சுகம் தருவேன்…
என கலகலவென சிரிப்போடு துவங்கும் பாடல் முழுவதும் வாணி பேசியும் இருப்பார். நடிகை சுமலதா நடித்த இந்த பாடல் வாணி பாடிய வித்தியாசமான பாடல்களின் ஒன்று. இது போல பல பாடல்களை அவர் பாடியுள்ளார்.
ஜெயமாலினி கதாநாயகியாக நடித்த கருப்பு வெள்ளை படம் `கராத்தே கமலா’. சங்கர் கணேஷ் இசையில் ஜெயமாலினிக்கு வாணி,
நானே …. ஓரு வேட்டையாட வந்தேன்
ஒரு வேங்கை தேடி வந்தேன் …
என்று பாடிய பாடல் வித்தியாசமான மெட்டு. இதே போல சங்கர்லால் படத்தில் வாணி ஜெயராம் பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் வாணி மட்டுமின்றி இக்காட்சியில் நடித்த நடிகை சீமா. அவ்வளவு அழகாக இருப்பார்.
கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெற்ற பாடல் அது. முதியவரான கமலை வில்லன் கட்டி போட்டிருப்பார். அவரது மகளான சீமா பாடல் பாடியவாறு காப்பாற்றுவது போன்ற காட்சி அது. இசைஞானி இசையில் வாணி இந்த பாடலை பாடும் தொனி கேட்க கேட்கப் பிடிக்கும். அந்த பாடல்,
உண்மை என்றும் வெல்லும்
காலம் மாறும் நீதி தேவனின் தீர்ப்பு
நன்மை வரும் போது வேஷம் மாறும்
கவலைகள் தீரும்…..
எஸ்ஏ.ராஜ்குமார் இசையில் `சின்னப்பூவே மெல்லப்பேசு’ படத்தில் எஸ்பிபியோடு வாணி பாடிய தொட்டவுடன் நெஞ்சு சிலிர்க்குது பாடல் அப்படி வகைப்படுத்தது தான் என்றாலும் மிக அற்புதமான வர்ண மெட்டு.
பாரீஸில் எடுக்கப்பட்ட`47 நாட்கள்’ படத்தில் ஒரு வித்தியாசமான பாடல். சிரஞ்சீவி, ஜெயபிரதா தோன்றும் இந்த காட்சியில் ஈபிள் டவர் அழகு உள்ளிட்ட பல இடங்களை ஜெயபிரதாவிடம் சிரஞ்சீவி எடுத்துக்காட்டுவது போல பாடல் படமாக்கப்பட்டிருக்கும்.
இப்படத்தில் சிரஞ்சீவிக்கு குரல் கொடுத்தது நடிகர் டெல்லி கணேஷ் என்றே நினைக்கிறேன். மெல்லிசை மன்னர் இசையில் எஸ்பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து வாணி பாடிய அந்த பாடல்,
தொட்டிக்கட்டிய மாப்பிள்ளை
தோளும் சாய்ந்தது பெண் பிள்ளை….
இந்த பாடலுக்கு மெல்லிசை மன்னர் இசையமைத்த விதம் ஒரு வெளிநாட்டினை சுற்றிப்பார்க்கும் ஆர்வத்தை உருவாக்கியிருக்கும்.
சில பாடல்களை யூடியூப்பில் பார்க்கும் போது கேட்பதை விட பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கும். பாடல் நன்றாக இருக்கும். ஆனால், அதில் நடித்த நடிகர்களைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். `வேலி தாண்டிய வெள்ளாடு’ என்ற படத்தில் சங்கர் கணேஷ் இசையில் ஒரு டூயட் பாடல். ராதாவோடு யார் டூயட் ஆடியிருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்ன யோசித்தாலும் விடை பொருந்தி போகாது. அதில் ராதாவோடு டூயட் ஆடியது விசு. நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அந்தப் பாடல்,
தொட்டுத் தொட்டுப் பார்க்கணும்
தொண தொணனும் கேட்கணும்….
என மலேசியா வாசுதேவனுடன் வாணி பட்டையைக் கிளப்பியிருப்பார்.
சங்கர் கணேஷ் இரட்டையர்கள் மைக்கேல் ஜாக்சனின் திரில்லர் இசையை நகலெடுத்து வித்தியாசமான பாடலை `மங்கம்மாள் சபதம்’ படத்திற்கு வழங்கியிருந்தனர்.
சொர்க்கத்தின் வாசல் சொல்லட்டும் கண்கள் இங்கே
பார்த்தாக்க பச்சைப்பிள்ளை பாவங்கள் மிச்சமில்ல….
என வரும் வரிகளை எஸ்பிபியோடு, வாணிஜெயராம் அசத்தலாக பாடியிருப்பார். திரில்லர் போலவே இப்படத்தின் காட்சியும் அமைக்கப்பட்டிருப்பது தான் சிறப்பு.
உணர்வுப்பூர்வமான பல பாடல்களை சங்கர் கணேஷ் இசையில் வாணி பாடியுள்ளார். `கல்யாண காலம்’ படத்தில் இடம் பெற்ற
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே அன்பு ஏங்குதே
இது தலைமுறை இடைவெளி இல்லையே….
என்ற சோகப்பாடல் கேட்க கேட்க மனதை பிழியும். இதே போல `ராஜாங்கம்’ படத்தில் விஜயசாந்திக்காக வாணி பாடிய
உயிரின் நிழலே விலகக்கூடாது
அடிநெஞ்சில் சுடுகின்றதே
என்னைத் தாங்கும் சுமைதாங்கி…. பாடலும் சோகத்தை வாரி வழங்கும்.
சொர்ணம் இயக்கத்தில் `வாலிப விளையாட்டு’ படத்தில் சங்கர் கணேஷ் இசையில், நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா என்ற பாடலை எஸ்பிபியோடு வாணி மிகவேகமாக பாடியிருப்பார். ஸ்ரீதர் இயக்கிய `குளிர்கால மேகங்கள்’ படத்தில் சங்கர் கணேஷ் இசையில் யேசுதாஸ், வாணி பாடிய
வானம் செவ்வானம்
வெண்மேகம் அதன் மடியினில் ஆடும்...
பாடலைக் கேட்க கேட்க குளிர்ச்சி. `பூம் பூம் மாடு’ படத்துக்கு மலேசியா வாசுதேவனோடு இணைந்து வாணி பாடிய நாடறிய தேதி வச்சி… .நாள் கிழமை பார்த்து வச்சு…. என்ற பாடல் நாட்டுப்புற கீதம்.
இயக்குநர் எம்ஏ.காஜா எழுதிய ஒரு பாடல் இலங்கை வானொலியில் கேட்டிருக்கிறேன். `எத்தனை ஜென்மம் எடுத்தாலும்’ என்ற படத்திற்காக ஜெயச்சந்திரனோடு வாணி பாடிய,
உன் விழி சொல்லும் சிறு கதை ஒன்று
இன்று தொடராது மலர்கின்றதோ சுகமென்ன
அதன் சுவையென்ன நாளை விடிந்தாலே தெரியும் கண்ணே… என்ற பாடல் வரிகள் அத்தனையும் அற்புதம். `காடு’ படத்தில் சங்கர் கணேஷ் இசையில் ஜெயச்சந்திரனோடு டூயட் பாடினார் வாணி. அந்த பாடல்,
உன் பார்வை தந்த மயக்கம்
என் காதல் வாழ்வின் துவக்கம் ..
வாணி ஜெயராம் டிஎம்.செளந்தராஜனுடன் இணைந்து பாடிய இந்த டூயட் பாடல் இடம் பெற்ற படம் `சட்டத்தின் மறுபக்கம்’. சங்கர் கணேஷ் இசையில்,
உன்னைத் தான் …ஹே ….உன்னைத்தான்
எப்போதும் நினைச்சிருக்கேன்.. உன் உருவத்தை என ஹே ஹே என பாடல் முழுவதும் வித்தியாசமான மெட்டு கேட்க கேட்க வித்தியாசமாக இருக்கும். `நெருப்பு நிலா’ படத்தில் வித்தியாசமான மெட்டில் சங்கர் கணேஷ் இசையில் எஸ்பிபியோடு வாணி பாடிய
உறவே உறவே உயிரின் உறவே
கண்ணாளா வா…. பாடல் யாரும் யோசிக்க முடியாத மெட்டு.
வாணி ஜெயராம் பாடாத இசையமைப்பாளர் இல்லையென்றே கூறலாம். ஆர்சி.சக்தி இயக்கிய ஸ்பரிசம் படத்திற்கு இசை (ஷோபனா) ரவி. இந்த படத்தில் முரளியோடு வாணி ஜெயராம் பாடிய,
உறக்கம் இல்லா இரவுகள்
இரக்கம் இல்லா உறவுகள்
என் நினைவில் உனது முகம் அது சுகம்
கண் இமை நனைவது சுகம் எங்கே வசந்தம்…. புதிய வடிவத்தில் இந்த பாடல் இசை மீட்டப்பட்டிருக்கும்.
மெல்லிசை மன்னர் டிகே.ராமமூர்த்தி அதிக கோரஸ் கொண்டு இசையமைத்த படம் `இவள் ஒரு பவுர்ணமி’. இந்த படத்தில் இடம் பெற்ற உயிரே உயிரே உயிரே இனிமேல் சுகமோ ஒருநாள் இதுபோல் திருநாள் வருமோ என்ற பாடல் எஸ்பிபியோடு, வாணி குழுவினர் பாடியதை கேட்கும் போது இப்படியான பாடல்களை ஏன் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யமறுக்கின்றன என்ற கோபம் தான் வருகிறது.
எனக்காகவா என்ற காலத்தால் அழியாத பாடலை பாடிய தாராபுரம் சுந்தர்ராஜன் இசையமைத்த படம் `தாயே வருக’. இந்த படத்தில் ஜெயச்சந்திரனோடு வாணி பாடிய அருமையான டூயட், மலர்கள் பனியில் நனையும் நனையும் இதழ்கள் மயங்கும் என்ற வரிகளை கேட்கும் போது எப்படியான மெட்டு போட்டுள்ளார் சுந்தர்ராஜன் என வியக்க வைக்கிறது.
நாதமணி டிஆர்.மகாலிங்கத்தின் மகள் வாணியோடு சேர்ந்து பாடியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? மெல்லிசை மன்னர் இசையில் `அனு’ என்ற படத்தில் வானிலே எந்த நாளும் ஆனந்த சூரியோதரம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்திரோதயம் என்ற பாடலை வாணி, மகாலட்சுமி, டிஆர்.மகாலிங்கத்தின் மகள் சாவித்திரி ஆகியோர் பாடியுள்ளனர்.
இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய அவசர போலீஸ் 100 ஞாபகமிருக்கிறதா? அந்த படத்தில் சில காட்சிகள் எம்ஜிஆர் நடித்த `அண்ணா நீ என் தெய்வம்’ படத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும். வெளிவராத அந்த எம்ஜிஆர் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் எஸ்பியியோடு, வாணி பாடிய அந்த டூயட் பாடல் தான் இது, உன்னைத் தேடி வந்தாள் தமிழ் மகாராணி உந்தன் ஆசை போல….
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகள் தோன்றிய காலமது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் `புது செருப்பு கடிக்கும்’ படத்தில் சங்கீதமேதை எம்பி.சீனிவாசன் இசையில் வாணி ஜெயராம் பாடிய இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று தெரியவில்லை. மீண்டும் மீண்டும் கேட்க கேட்க கண்ணீர். உடலென்பார் எனதுயிரென்பார்… கடல் என்பார் உன் கண் என்பார். இப்படியான பாடலை இனி கேட்க முடியுமா என்ற ஆதங்கத்தை வாணியின் குரல் எண்ண வைத்தது.
பெண் பாடகிகள் பலருடன் இணைந்து வாணி பாடியுள்ளார். பி.சுசீலாவுடன் இணைந்து `பாதபூஜை’ படத்தில் பாடிய இந்த பாடல் கொஞ்சம் விசேஷம். ஏனெனில், கண்ணாடி அம்மா உன் மேனி.. நான் அதைப் பார்த்தால் எனத் துவங்கும் பாடலின் இசை வழங்கியது ஜெய- விஜயா.
கங்கை அமரன் இசையில் பல ஹிட் பாடல்களை வாணி ஜெயராம் தந்துள்ளார். சட்டென உங்கள் நினைவிற்கு வருவது `சட்டம்’ படத்தில் எஸ்பிபியியுடன் வாணி பாடிய வா வா என் வீணையே விரலோடு கோபமா பாடலாகத்தான் இருக்கும். அல்லது மழைக்கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது இதற்காகத்தானே அன்று ஒரு ஜீவன் வாடியது என்ற பாடலாகத்தான் இருக்கும். ஆனால், இன்னும் அழகிய பல பாடல்களை கங்கை அமரன் இசையில் அவர் பாடியுள்ளார்.
குறவர் இன மக்கள் குறித்து தமிழில் வந்த ஒரே படம் `கரை கடந்த ஒருத்தி’. ஆனால், இந்த படம் என் சின்ன வயதில் `கரை கடந்த குறத்தி’ என்றே சொல்லப்பட்டது. இப்படத்தில் கங்கை அமரன் இசையில் வாணி பாடிய இந்த பாடல் இலங்கை வானொலியில் கொடி கட்டிப்பறந்த பாடல் எனலாம்.
நாலு மாதங்கள் உலகினில் வசந்த காலங்கள்
நாளு ராகங்கள் இசையில் பிறந்த ராகங்கள்…
கங்கை அமரன் இசையில் `எழுதாத சட்டங்கள்’ படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் அழகான ஆலாபனையுடன் துவங்கும். மலேசியா வாசுதேவனின் கணீர் குரலில் நபி பெருமான் அருளால் இருவரும் வாழ்க சுகம் பல காண்க என துவங்கும் இந்த பாடல்
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்குப் பிடிச்ச ஆம்பளை என வாணி பாடும் போது கேட்க கேட்க துள்ளாட்டம் போட வைக்கும்.
சந்திரபோஸ் இசையில் வாணி ஜெயராம் பல பாடல்களைப் பாடியுள்ளார். `கழுகுமலை கள்வன்’ படத்தில் வாணி பாடிய இந்த பாடல் அந்த காலத்தில் மிகப்பெரிய ஹிட். அடிக்கடி நான் கேட்டும் மகிழும் பாடல்களில் இதுவும் ஒன்று.
உச்சி மலையில்..ஊரிருக்க ஊருக்கொரு பேரிருக்க என்ற அந்த பாடலை கேட்க கேட்க எவ்வளவு இனிமை. அவருடன் மனோ இணைந்து இந்த பாடலை பட்டையைக் கிளப்பியிருப்பார். சந்திரபோஸ் இசையில் `சின்ன சின்ன ஆசைகள்’ படத்தில் இடம் பெற்ற பைலா வகைப் பாடலை வாணி பாடியிருப்பார். அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே அத்தானுக்கு மெத்தை இங்கே போட வந்தாளே என்ற இந்த பாடல் கொஞ்சம் வித்தியாசமானது தான்.
`கைநாட்டு’ படத்தில் சந்திரபோஸ் இசையில் ஜெயச்சந்திரனுடன் இணைந்து வாணி பாடிய ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே பாடல் அடடே ரகம். ‘ராஜாத்தி ரோஜாக்கிளி’ படத்தில் வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது தோப்புக்கிளிகளை என்ற பாடல் சந்திரபோசுக்கு வாணி கொடுத்த அழகிய பரிசு.
தமிழ் சினிமாவில் அற்புதமான பாடல்களை வழங்கிய இசையமைப்பாளர் ஜி.தேவராஜன். `வில்லியனூர் மாதா’ படத்தில் மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் பாடும் இந்த பாடலுக்கு படத்தில் ஒய்ஜி.மகேந்திரன், ராணி பத்மினி ஆடுவார்கள். உன் சேலை பறக்குது காத்துல அது ஆளை இழுக்குது தோப்புல என்ற அந்த பாடல் நாட்டுப்புற மெட்டில் சிறப்பாக இசையமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ஆடுவதாக நினைத்துக் கொண்டு ஓய்ஜி நெளிவதைப் பார்க்கும் போது கோபமாக வரும்.
மேடை இசைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அபஸ்வரம் ராம்ஜி இசையமைத்த படம் `உருவங்கள் மாறலாம். இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்தர், குயிலி டூயட் பாடும் இந்த பாடலை எஸ்பிபி, வாணி இணைந்து பாடியிருப்பார்கள்.
வானில் வாழும் தேவதை
எந்தன் நேரில் வந்தாளோ
வானம்பாடி கானம்பாடி
காதல் சுவையை தந்தாளோ
என்ற அற்புதமான வடிவத்தில் ராம்ஜி இசையமைத்திருப்பார். ஷியாம் இசையில் `சந்தோஷ கனவுகள்’ படத்தில் வாணி பாடிய உயிரே மாப்பிள்ளை தேடி மணமாலை சூடி தேருவெங்கும் ஊர்வலம், விஜயபாஸ்கர் இசையில் `உன்னைத் தான் தம்பி’ படத்தில் எஸ்பிபியோடு வாணி டூயட் பாடிய உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம் பாடல் 75 காலக்கட்டங்களில் திரும்பிய திசையெல்லாம் எதிரொலித்தது. விஜயபாஸ்கர் இசையில் டிஎம்எஸ், பி.சுசீலா, எஸ்பிபி, வாணி பாடிய `எங்கம்மா சபதம்’ படத்தில் இடம் பெற்ற வா இளமை அழைக்கிறது என் இதயம் இனிக்கின்றது உறவை நினைக்கின்றது கனவில் மிதக்கின்றது பாடல் அழகான மெட்டு.
அற்புதமான இசைக்கலைஞர் விஎஸ்.நரசிம்மன் இசையில் டிரம்ஸ் அதிர `கடைக்கண் பார்வை’ படத்தில் இடம் பெற்ற ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும் நாளை நாமே காண்போமே வாணியின் மேடைப்பாடலுக்கு அழகிய சான்று.
இசைஞானி இசையில் வாணியின் பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும் . அதில் கேஜே.யேசுதாசுடன் அவர் இணைந்து பாடிய `உன்னை நான் சந்தித்தேன்’ படத்தில் இடம் பெற்ற உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் ராகம் பல நூறு பாடும் தினந்தோறும் காலம் நேரம் ஏது பாடலை இன்றும் கேட்டேன். வாணி பாடலை கேட்க கால நேரம் ஏது?
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- மனதின் ஆசையை தூண்டிய குரல் - ப.கவிதா குமார்
- சிவாஜி, ரஜினியை இயக்கியும் தோல்வியடைந்த இயக்குநர்-- ப.கவிதா குமார்
- கோழிக்கறி கேட்டதற்காக சென்சார் செய்யப்பட்ட பாடல்- ப.கவிதா குமார்
- வித்தியாசமான பாடல்களின்முகவரி வி.சீத்தாராமன்- - ப.கவிதா குமார்
- கண்மணி சுப்பு: கவியரசு வீட்டுக்கட்டுத்தறி- ப.கவிதா குமார்
- வித்வான் வே.லட்சுமணன் ஜோசியக்காரர் மட்டும்தானா? - ப.கவிதா குமார்
- ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை: வங்கத்துக் குயில் எம்ஆர்.விஜயா - ப.கவிதா குமார்
- தென்னாட்டு தமிழ்க்குரல் விஎன்.சுந்தரம்-ப.கவிதா குமார்
- ’புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே’ :கவி சீமான் கேபி. காமாட்சி- ப.கவிதா குமார்
- ''தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்'':யார் இந்த நேதாஜி? - ப.கவிதா குமார்
- ஜாவர் சீத்தாராமன் சரி... அது யார் ராஜ் சீத்தாராமன்?- ப.கவிதா குமார்
- மனோவின் முன்னோடி ...மறக்க முடியாத பாடகர் ரமேஷ்- ப.கவிதா குமார்