காற்றினிலே வரும் கீதம்- 10
வாலிக்கு வாழ்வளித்த பாடகர் தாராபுரம் சுந்தரராஜன்
காட்சியைப் பார்த்தும், வசனத்தைக் கேட்டும் வரும் நகைச்சுவை உணர்வு பாடலைக் கேட்டால் வருவதில்லை. ஆனால், அப்படியொரு பாடல் எப்போது கேட்டாலும் இதழில் புன்னகை ஒட்டிக் கொள்ளும். கலாச்சார காவலர்கள் சவுண்டு குடுக்காத காலம் அது. ஆனால், அப்பாடலை உன்னிப்பாக இப்போது கேட்டால், பதறிப் போவார்கள்.
1972ல் இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளர் கோபு இயக்கிய ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படம் ‘காசே தான் கடவுளடா’. எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் மேலை நாட்டு சங்கீதம் மற்றும் பக்தி கச்சேரியைக் கலந்து கட்டி அடித்த பாடல். அடிக்கடி தொலைக்காட்சியில் காணக்கிடைக்கும் இப்பாடல், கேட்க மட்டுமல்ல பார்க்கவும் ரசிக்க வைக்கிறது. முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த் பாடலில் தோன்றி நடித்திருப்பார்கள்.
டிஎம்.சௌந்தராஜன் குரலைப் போலவே இருக்கும் கோவை சௌந்தராஜன், பக்தி பாடகர் வீரமணியோடு மூன்றாவதாக ஒரு குரல் தனித்து ஒலிக்கும். அந்த குரல் தான் இந்த பதிவின் நாயகன். நகைச்சுவை மிளிரும் அப்பாடல் வரிகளைக் கேட்க மட்டுமல்ல, படிக்கவும் ரசிக்கத்தான் செய்கிறது.
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா வாயுலிங்கமே அடா புடா பஞ்சலிங்கமே மடா படா வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா…..
காலனை உதைத்த என்னப்பனே – உன்னை
காலால் உதைத்தான் கண்ணப்பனே… ஏ..ஏ… மகாதேவா
காலனை உதைத்த என்னப்பனே – உன்னை
காலால் உதைத்தான் கண்ணப்பனே….
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
பாம்பை அடிக்கும் ஆண்டவனே.. (அடேய்)
பம்பை அடிக்கும் ஆண்டவனே
உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
பம்பை அடிக்கும் ஆண்டவனே
உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே..
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
சைவப்பொருளாய் இருப்பவனே…. ஏ..ஏ…
சைவப்பொருளாய் இருப்பவனே
அன்று ஓட்டல் கறியை கேட்டவனே
பிள்ளைக்கறியை கேட்டவனே…
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
காட்சி பொருளாய் நின்றவனே
அன்று சாட்சியை சொல்ல வந்தவனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
மகனிடம் பாடம் படித்தவனே
அன்று காமனை கண்ணால் எரித்தவனே..ஏ..ஏ..
மகனிடம் பாடம் படித்தவனே
அன்று காமனை கண்ணால் எரித்தவனே
மல கசாயத்தை குடித்தவனே….
மகா விஷத்தை குடித்தவனே
தில்லை வெளியில் ஆடி முடித்தவனே
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
நானும் கூட உன்பிள்ளை
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை…..
இந்தப் பாடல் வரிகள் சென்சார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டவை என்றால் நம்ப முடிகிறதா?
ஒரிஜனலில் ‘பஞ்சலிங்கமே மசால் வடா’ என்றும், ‘கோழிக்கறியைக் கேட்டவனே’ என்றும், ‘மதுக்கஷாயத்தைக் குடித்தவனே ‘ என்றும்தான் இருந்தது.
சென்சாரின் கத்திரிக்குப்பின் ‘ மடா படா, ஓட்டல் கறி, மல கஷாயம்’ என்று மாற்றத்திற்கு உள்ளானது. இப்படியான நகைச்சுவை மிளிரும் பாடல்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்றே சொல்லலாம். அப்படியான பாடல்கள் இப்போது வருவதில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.
இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை வழங்கிய நிகழ்ச்சிகளைக் கேட்டு வளர்ந்தவன் நான். மலர்ந்தும் மலராதவை,புதுவெள்ளம், நேயர்விருப்பம், ஒலிமஞ்சரி, பூவும் பொட்டும், இன்றைய நேயர், பாட்டுக்குப்பாட்டு, இசைத்தேர்வு, இரவின் மடியில் என அத்தனை நிகழ்ச்சிகளையும் வானொலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கேட்ட காலம் உண்டு.
வித்தியாசமான வரிகளைக் கொண்ட பாடல்கள் வந்தால் அப்பாடல் குறித்து இலங்கை வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கொஞ்சம் கூடுதலாக கதைப்பார்கள். அப்படி கதைத்த ஒரு பாடல் டிஆர்.ராமண்ணா இயக்கிய ‘நீச்சல்குளம்’ படத்தில் இடம் பெற்றது.
ஏனெனில், அப்பாடலைப் பாடிய ஆண் குரல் கொஞ்சம் வித்தியாசமானது. பி.சுசீலாவுடன் இணைந்து “ஹனி ஹனி சொல் சொல் தித்திப்பது ஹனி ஹனி” என்ற அந்த பாடல் இப்போது கேட்டாலும் இனிக்கும்.
அந்த இனிக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் சாய்பாபா. அவர் வேறு யாரும் அல்ல. பழம்பெரும் நடிகர் டிஎஸ்.பாலையாவின் மூத்த மகன் தான்.
‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் ‘ஹலோ மை டார்லிங்’, ‘வீட்டுக்கு வீடு’ படத்தில் ‘மலர்களில் படுத்தவள் சகுந்தலை’ போன்ற பாடல்களைப் பாடியுள்ளார். பகவதிபுரயில்வே கேட் படத்தில் இசைஞானி, உமாரமணன் பாடிய செவ்வரளி தோட்டத்திலே உன்னை நினைச்சேன் பாட்டில்,
ஆறும் அலை ஓயாதம்மா
ஆசை அது தேயாதம்மா
வாடைபட்டு நின்னாளம்மா
வாசம்பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம்
மலருல செண்டாட்டம்….
என்ற வரிகளைப் பாடியும் இதே சாய்பாபா தான். மிகச்சிறந்த குரல் வளம் கொண்ட கலைஞர். அதனால், அவரைப் பற்றிய பதிவென்று நீங்கள் நினைக்க வேண்டாம்.
இது நீச்சல் குளம் படத்தின் இசையமைப்பாளரும், ஜம்புலிங்கமே ஜடாதரா பாடலைப் பாடிய மகத்தான கலைஞனைப் பற்றியது.
அந்த கலைஞன், அந்தக் காலத்திலேயே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கர்னாடக சங்கீதத்தில் முதல் வகுப்பில் தேறி பட்டம் பெற்றவர். அத்துடன் தமிழ்நாடு கர்னாடக இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு விரிவுரையாக பல காலம் பணியாற்றியவர். பாடுவதோடு, இசையமைக்கும் ஆற்றல் கொண்ட அந்த மகத்தான ஆளுமை தாராபுரம் சுந்தரராஜன் .
1960ம் ஆண்டு சென்னையில் திரைப்பட வாய்ப்பு தேடி நாகேஷ், ஸ்ரீகாந்த், வாலி ஆகியோருடன் அலைந்த நான்காவது நபர் இந்த தாராபுரம் சுந்தரராஜன் .
கவிஞர் வாலி எழுதிய கீர்த்தனைகளைத் தொகுத்து அதற்கு மெட்டமைத்து புத்தமாக வெளியிட்டவர் தாராபுரம் சுந்தரராஜன். அந்த நூலிற்கு கவிஞர் வாலி எழுதிய முன்னுரை குறிப்பிடத்தகுந்தது. எம்ஜிஆர் படத்திற்கு பாட்டெழுத யாரால் தனக்கு வாய்ப்பு கிட்டியது என்பது வாலி எழுதிய இந்த முன்னுரையின் மூலமே வெளிப்பட்டது.
அந்த முன்னுரையில் வாலி எழுதியது, ” நடிகர் நாகேஷ், நடிகர் ஸ்ரீகாந்த், தாராபுரம் சுந்தரராஜன், நான் ஆகிய நால்வரும் பக்கத்து பக்கத்து அறைகளில் தங்கிக் கொண்டு, இந்த தருமமிகு சென்னையிலேயே திரையுலகக் கனவுகளோடு குடியிருந்தோம். நாகேஷீம் தாராபுரத்துக்காரர் தான். எனவே, சுந்தரராஜனை உடன் தங்க வைத்துக் கொண்டு உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார்.
அனேகமாக நாள் தவறாமல் எங்கள் அறையில் சுத்தமான கர்நாடக சங்கீதம் ஒலித்துக் கொண்டிருக்கும். பொடிப்பொடி சங்கதிகளாக வைத்து, அதே நேரத்தில் உணர்ச்சி பூர்வமாக , கேட்பவர் உள்ளத்தை ஈர்க்கும் வண்ணம் நண்பர் தாராபுரம் பாடிக் கொண்டிருப்பார்.
அவருடைய அருமையான சங்கீதத்தில் நான் பல நாட்கள் கரைந்து போனதுண்டு. நான் எழுதி வைக்கும் பாடல்களையெல்லாம் வாங்கி நண்பர் தாராபுரம் வர்ணமெட்டமைத்து அற்புதமாக பாடுவார். இப்படி நான் எழுதி வைத்திருந்த திரைப்படத்திற்கான பாடல்கள் ஒன்றிரண்டை தாராபுரம் தான் செல்லுகின்ற சினிமாக் கம்பெனிகளில் பாடிக்கட்டியதன் பயனாகத் தான் திரு. எம்ஜிஆர் அவர்கள் நடித்த ‘நல்லவன் வாழ்வான்’ திரைப்படத்தில் பாட்டெழுத வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
தாராபுரம் சுந்தரராஜன் தொல்லிசை, மெல்லிசை இரண்டிலும் வல்லவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவர். எம்எம்.தண்டபாணி தேசிகரின் பிரதான மாணவர். சங்கீதத்தில் நுனிப்புல் மேய்ந்தவரல்ல சுந்தரராஜன். அதன் ஆழ அகலங்களை நன்கு ஆராய்ந்து அறிந்தவர். கீர்த்தனைகளை அவற்றிற்குரிய பந்ததியும், பாடாந்தரமும் கெடாமல் , சாஸ்திரோக்தமாகப் பாடுவார். இன்றைக்கெல்லாம் கெட்டுக் கொண்டுக் கொண்டிருக்கலாம். அவ்வளவு இனிமையான சாரீரம்.
தமிழிசையை கணீர் என்று நம் காதுகளில் வார்த்த முதல் கர்நாடக சங்கீத வித்வான் இசையரசு எம்எம்.தண்டபாணி தேசிகர். அவரின் வாரிசாகத் திகழ்பவர் தாராபுரம் சுந்தரராஜன். நானும், தாராபுரமும் தங்கியிருந்த நாட்களில், நான் ஒரு சில பாடல்களை எழுதி வைத்திருந்தேன். இந்தப் பாடல்களில் பெரும்பாலானவை நான் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் போது என் பதிநான்கு, பதினைந்து வயதில் புனைந்தவையாகும். அவற்றையும் நான் சென்னைக்கு வரும் போது என்னுடன் கொண்டு வந்திருந்தேன்.
இந்தப் பாடல்கள் நாடகத்திற்காகவோ, திரைப் படங்களுக்காகவோ புனையப்படுகின்ற மெல்லிசை வகையைச் சார்ந்தவை அல்ல. பல்லவி, அனுபல்லவி, சரணம் என வகைப்படுத்தப்பட்டு கச்சேரிகளில் கர்நாடக சங்கீத வித்வான்கள் இசைப்பதற்காக எழுதப்பெற்ற மரபு வழிக் கீர்த்தனை வகையைச் சார்ந்தவை. எனக்கு மொழிப் பயிற்சி இருந்த அளவிற்கு இசைப்பயிற்சி கிடையாது. இருப்பினும், கீர்த்தனைகளைப் புனைய வேண்டும் என்னம் ஆதுரம் அதிகம் இருந்தததால் அந்நாளிலேயே நான் சாஹித்யங்களை ஆசை ஆசையாகப் புனைந்திருக்கிறேன்.
என்னுடைய சாஹித்தியங்களில் மிகுந்த பற்றுதல் வைத்ததன் காரணமாக நான் பல்லாண்டுகளுக்கு முன்னால் புனைந்த கீர்த்தனைகளை பத்திரப்படுத்தி வைத்து, இன்று அவற்றிற்கு வண்ணமெட்டமைத்து ஸ்வரப்படுத்தி ஒரு நூலாகவே வெளியிட தாராபுரம் சுந்தரராஜன் முன் வந்திருக்கிறார் என்றால், அவருக்கு நான் காலமெல்லாம் நன்றி சொல்ல கடைப்பட்டிருக்கிறேன். ஏனெனில், இத்தகு பாடல்கள் தான் காலவெள்ளத்தில் கரைந்து போகாமல் நிலைத்து நிற்கக்கூடியவை என அந்த நூலில் கவிஞர் வாலி சுட்டிக்காட்டியிருந்தார். அந்த முன்னுரைக்கு அவர் வைத்த தலைப்பு “இவரும் ஒரு இசையரசு” .
வாலிபக்கவிஞர் வாலியின் வாலிபக்கவிதைகளுக்கு உயிர் கொடுத்த தாராபுரம் சுந்தரராஜன் மிகச்சிறந்த இசையமைப்பாளர்.
‘நீச்சல் குளம்’ படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அத்தனையும் அற்புதம். இன்றளவும் கோயில் திருவிழாக்களில் தவறாது ஒலிக்கும் ஒரு பாடல் எஸ்.ஜானகி பாடிய, “ஆடி பதினெட்டு ஆடுது பூஞ்சிட்டு”. இந்தப் பாடல் இடம் பெற்ற படம் நீச்சல் குளம் தான்.
இப்படத்தில் எஸ்பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா பாடிய “கட்டழகைத் தொட்டாலென்ன கன்னத்திலே இட்டாலென்ன” , வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன் பாடிய “ஆத்துக்குள்ளே ஊத்து ஆடுதம்மா நாத்து” பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. இப்படத்தில் பாடல்களை எழுதியது “பதினாறும் நிறையாத பருவமங்கை” என்ற புகழ்பெற்ற பாடலை எழுதிய கவிஞர் குமாரதேவன்.
நாகேஷ் ஹீரோவாக நடித்த படம் ‘ஹலோ பார்ட்னர்’. இப்படத்தில் தாராபுரம் சுந்தரராஜன் இசையில் டிஎம்.சௌந்தராஜன் பாடிய,
வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ
புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ
என்ற அருமையான பாடல் அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி தாராபுரத்தின் நினைவை ஞாபகப்படுத்துகிறது. ‘தாயே வருக’ படத்தில் அவரின் இசையில் ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் இணைந்து பாடிய “மலர்கள் பனியில் நனையும்” என்ற அருமையான மெல்லிசை பாடல் உள்ளது.
1973ம் ஆண்டு வெளியான “கல்யாணமாம் கல்யாணம்” படத்தில் தாராபுரம் சுந்தரராஜன் இசையில் “டிங்டாங் டிங்டாங் டிங்கியாலோ” என்ற பாடல் வித்தியாசமான இசைவடிவம்.
இன்றளவும் தாராபுரம் சுந்தரராஜன் என்று சொன்னால், அவர் பாடிய ஒரு பாடல் குறிப்பிடப்படுகிறது. சிவாஜிகணேசன் நடித்த ‘செல்வம்’ படத்தில் ஜமுனாராணியுடன், தாராபுரம் சுந்தரராஜன் இணைந்து பாடிய இனிமையான பாடல்
‘எனக்காகவா நான் உனக்காகவா’.
இப்பாடலில் ஜமுனாராணியும், தாராபுரம் சுந்தரராஜனும் பாடல் வரிகளை உச்சரித்தவிதமும், அதற்கு கேவி.மகாதேவன் இசைவடிவம் கொடுத்த பாங்கும் காலத்தால் அழியாத பாடலென்றால் அது மிகையில்லை.
ஆச்சி மனோரமாவோடு கூட்டணி சேர்ந்து தாராபுரம் சுந்தரராஜன் சூப்பர்ஹிட் பாடலை தந்துள்ளார். ‘கன்னித்தாய்’ படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதிய ‘வாழவிடு, இல்லை வழியை விடு’ என்ற பாடல் தான் அது. இதே ஜோடி ‘ஆயிரம் பொய்’ படத்தில் ‘ தமிழ்விடு தூது அந்நாளில், கிளி விடு தூது இந்நாளில்’ என்ற வித்தியாசமான பாடலையும் பாடியுள்ளனர். ஆனால், பதிவுகளில் இப்பாடலைப் பாடியது டிஎம்.சௌந்தரராஜன் என்று தவறாகவே உள்ளது.
‘பாலாடை’ படத்தில் ஜமுனாராணியுடன் தாராபுரம் சுந்தரராஜன் இணைந்து பாடிய ‘டூயட்டு டூயட்டு டூயட்டுப் பாடிடும் முதலிரவு’ ,’தேனும் பாலும்’ படத்தில் எல்ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடிய ‘அடுத்தவன் போட்ட தாளத்துக்கெல்லாம் ஆடாதே ஆடாதே’, ‘திருமலை தென்குமரி’ படத்தில் சீர்காழி, ஏஎல்.இராகவனுடன் இணைந்து பாடிய ‘அழகே தமிழே நீ’, ‘ காவல் தெய்வம்’ படத்தில் சுசீலாவுடன் பாடிய ‘அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்’, ‘கற்பூரம்’ படத்தில் பி.சுசீலாவுடன் இவர் இணைந்து பாடிய ‘அழகு ரதம் பொறக்கும்’ போன்ற பாடல்கள் தாராபுரம் சுந்தரராஜன் என்ற மகத்தான கலைஞனை என்றென்றும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்.
=====
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- மனதின் ஆசையை தூண்டிய குரல் - ப.கவிதா குமார்
- சிவாஜி, ரஜினியை இயக்கியும் தோல்வியடைந்த இயக்குநர்-- ப.கவிதா குமார்
- ஏழு சுவரங்களில் எத்தனைப் பாடல்:வாணி ஜெயராம் - ப.கவிதா குமார்
- வித்தியாசமான பாடல்களின்முகவரி வி.சீத்தாராமன்- - ப.கவிதா குமார்
- கண்மணி சுப்பு: கவியரசு வீட்டுக்கட்டுத்தறி- ப.கவிதா குமார்
- வித்வான் வே.லட்சுமணன் ஜோசியக்காரர் மட்டும்தானா? - ப.கவிதா குமார்
- ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை: வங்கத்துக் குயில் எம்ஆர்.விஜயா - ப.கவிதா குமார்
- தென்னாட்டு தமிழ்க்குரல் விஎன்.சுந்தரம்-ப.கவிதா குமார்
- ’புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே’ :கவி சீமான் கேபி. காமாட்சி- ப.கவிதா குமார்
- ''தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்'':யார் இந்த நேதாஜி? - ப.கவிதா குமார்
- ஜாவர் சீத்தாராமன் சரி... அது யார் ராஜ் சீத்தாராமன்?- ப.கவிதா குமார்
- மனோவின் முன்னோடி ...மறக்க முடியாத பாடகர் ரமேஷ்- ப.கவிதா குமார்