காற்றினிலே வரும் கீதம்-8

“ குடும்பத்தை, குழந்தைகளை பெரிதும் நேசித்தார். தான் எழுதிய கவிதைகளையும் சரி, பெற்ற பிள்ளைகளையும் சரி எப்போதுமே அடித்து திருத்தும் பழக்கமில்லாதவர்” என்று தன் தந்தை குறித்து இந்த மனிதன் சொல்லிய சொல் எனக்கு அவர் மீது இனம் புரியாத ஈர்ப்பை ஏற்படுத்தியது. அந்த சொல்லுக்குச் சொந்தக்காரர் கவியரசு கண்ணதாசனின் மகன் கண்மணி சுப்பு.

தன் தந்தையிடம் பாட்டு எழுதும் உதவியாளராகத் தான் துவங்கியது கண்மணி சுப்புவின் கலைப்பயணம். கவியரசு சொல்ல சொல்ல அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். ஒருமுறை சொன்னதை கவியரசர் மீண்டும் சொல்லமாட்டார். ஆகவே, கவனத்துடன் தான் இந்த பணியைச் செய்ய வேண்டும். நீண்ட நாளாக அந்தப் பணியை பஞ்சு அருணாசலம் செய்தார்.

அப்படி ஒரு வாய்ப்பு கவிஞர் வாலிக்கும் வந்தது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். அப்போது சினிமாவில் வாலி சான்ஸ் தேடிக் கொண்டிருந்தார். அவரை மாதம் 300 ரூபாய் சம்பளத்தில் கண்ணதாசனிடம் உதவியாளராக வேலை செய்ய இசையமைப்பாளர் ஜிகே.வெங்கடேஷ் அழைத்தார்.

ஆனால் அதை வாலி மறுத்து விட்டார். நான் கண்ணதாசனுக்கு எதிர்கடை போட வந்திருக்கிறேன். அவரிடம் சேர்ந்தால் என் தனித்தன்மை போய் விடும் என வாலி திட்டவட்டமாக மறுத்தார். அப்படிப்பட்டவர் பின்னாளில் கவியரசருக்கு இணையாக பல பாடல்களை எழுதி வெற்றியைக் குவித்தார்.

கவியரசு கண்ணதாசனின் அண்ணன் மகனான பஞ்சு அருணாசலம் இதன் பின் உதவியாளராக மாறினார். பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பதற்கு பஞ்சு அருணாசலம் தான் சான்று.

நூற்றுக்கணக்கான ஹிட் பாடலை எழுதியதுடன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என அத்தனை துறையிலும் முத்திரை பதித்தார். அதைப் போலத்தான் கவியரசின் மகன் கண்மணிசுப்புவும் தந்தையிடம் உதவியாளராக சேர்ந்தார். பிறகு தனிக்கடை விரிக்கிறேன் என அப்பாவிடம் சொன்னார். போ என அவரும் அனுப்பி வைத்தார். சில பாடல்களை எழுதிய பின் அப்பாவிடமே வந்தார். இதன் பின் கே.பாலச்சந்தரிடம் நடிகர்களுக்கு வசன உச்சரிப்பை சொல்லிக் கொடுக்கும் உதவியாளராக சேர்ந்தார் கண்மணி சுப்பு.

1976ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய “மூன்று முடிச்சு” பட டைட்டிலில் உதவி இயக்குநர் என இருவர் பெயர் வந்தது. ஒருவர் அமீர்ஜான். மற்றொருவர் கண்மணி சுப்பு. தமிழ் சினிமாவில் சில பாடல்களை மறக்க முடியாது. அப்படியான பாடல்களுக்குச் சொந்தக்காரர் தான் கண்மணி  சுப்பு.

அவர் பாடலாசிரியர் மட்டுமின்றி இயக்குநராக, கதை, வசனக்கர்த்தாவாக மிளிர்ந்தார். தமிழ் சினிமாவின் அழியாத கோலம் நடிகை ஷோபாவின் கடைசி படத்தை இயக்கியது கண்மணி சுப்பு தான்.

1981ம் ஆண்டு தனது சகோதரர் கலைவாணன், ஷோபா நடிக்க எம்எஸ்.வி்ஸ்வநாதன் இசையில் கண்மணி சுப்பு இயக்கிய படம் “அன்புள்ள அத்தான்”. 1984ம் ஆண்டு முரளி அறிமுகமான “பூவிலங்கு” படத்தில் வசனகர்த்தா, 1985ம் ஆண்டு “புதிர்” படத்தின் வசனகர்த்தா, 1986ம் ஆண்டு “டிசம்பர் பூக்கள்” படத்தில் வசனகர்த்தா, 1991ம் ஆண்டு தனது சகோதரர் கலைவாணன் கண்ணதாசன் இயக்கிய “வா அருகில் வா” படத்தில் வசனகர்த்தா, பாடலாசிரியர், 1994ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த “நம்மவர்” படத்தில் வசனகர்த்தா என தொடர்ந்து கண்மணி சுப்பு இயங்கியுள்ளார்.

மெல்லிசை மன்னர், கவியரசு கூட்டு போல இசைஞானி ,கண்மணி சுப்பு பல இனிய பாடல்களைத் தந்துள்ளது. 1984ம் ஆண்டு வெளியான “தர்மபத்தினி” படத்தில் இசைஞானி இசையில் கண்மணி சுப்பு எழுதிய பாடல் இன்றளவும் அவர் பெயர் சொல்லும் பாடலாக உள்ளது. இசைஞானி, ஜானகி இணைந்து பாடிய அந்த பாடலில் இசைஞானி அழகாக ஆலாபனையோடு துவங்குவார்… அந்த பாடல்,

“நான் தேடும் செவ்வந்தி பூவிது

ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பூவோ இது வாசம்

போவோம் இனி காதல் தேசம்

பூவோ இது வாசம்

போவோம் இனி காதல் தேசம்…”

1989ம் ஆண்டு ராஜன் இயக்கத்தில் வெளியான படம் “சோலைக்குயில்”. எம்எஸ்.முராரி இசையில் கண்மணி சுப்பு எழுதிய இந்த பாடல் எஸ்பி.பாலசுப்பிரமணியம் குரலில் கேட்க கேட்க திகட்டாதது.

“கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே

அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்

மைவிழி மானுக்கும் ஆசை இருக்குது பாவம்

சொல்லட்டும் சேதிய மூடி மறைச்சென்ன லாபம்

அடி தூது போக யாரு வேணும் நான் தான் நீ தான்….

1991ம் ஆண்டு நடிகை வினோதினி கதாநாயகியான “சித்திரைப்பூக்கள்” படத்தை கண்மணி சுப்பு தான் இயக்கினார். ஜெயந்த்குமார் ஹீரோவாக நடித்த இந்த படத்திற்கு எம்எஸ்.முரளி இசையில் கண்மணி சுப்பு எழுதிய இந்த பாடல் மனோவின் குரலில் சூப்பர் ஹிட்டானது.

“சங்கீதம் கேட்டால் வயல் விளையும்

சந்தோஷமாக பயிர் வளரும்

கட்டாந்தரையில் நட்டா முளைச்சிடும்

கச்சேரி பண்ணுங்க எல்லோரும்..”

1991ம் ஆண்டு கலைவாணன் கண்ணதாசன் இயக்கிய திகில் திரைப்படமான “வா அருகில் வா” படத்தில் கண்மணி சுப்பு பணியாற்றினார். 1991ம் ஆண்டு பிரபு, அமலா, ரேவதி நடிப்பில் வெளியான படம் “ராஜா கைய வெச்சா”. இந்த படத்தில் இசைஞானி இசையில் அற்புதமான பாடலை கண்மணி சுப்பு எழுதியுள்ளார். இந்த பாடலை இசைஞானி, மனோ, எஸ்.ஜானகி இணைந்து பிரமாதப்படுத்தியிருப்பார்கள்.

“மருதாணி அரைச்சேனே உனக்காக பதமா

மயிலே நீ இட வேண்டும் இதமா நிறம் மாறும் ….”

நடிகர் ஜனகராஜூக்கு இசைஞானியும், பிரபுவிற்கு மனோவும் குரல் கொடுத்திருப்பார்கள். நடிகர் ஜனகராஜூக்கு அன்றைய காலக்கட்டத்தில் இப்படியான பாடல் கிடைத்தது.

நடிகை ஜெயசித்ரா இயக்குநராக அவதாரம் எடுத்தபடம்

“புதிய ராகம்”.1991ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரகுமான், ரகுவரன் மற்றும் ரூபிணி நடித்தனர். இப்போது இசையமைப்பாளராக திகழும் ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ், இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இசைஞானி இசையில் காலத்தால் அழியாத பாடலை கண்மணி சுப்பு எழுதியுள்ளார்.நிறைய இசை சங்கதிகளுடன் இந்த பாடலை மனோ, எஸ்.ஜானகி இணைந்து பாடியிருப்பார்கள்

“வாடுமோ…..ஓவியம்…..

ஆ… பாடுமோ காவியம்

ஆ… சந்தோஷம் காணாத உள்ளம்

ஆ… சங்கீதம் கேட்டாலே துள்ளும்

ஒரு ராகம் பாடு போதும்

அதில் சோகம் யாவும் ஓடும்

நலம் காணலாம் தினம்

வாடுமோ ஓவியம்.. “

இப்படி அற்புதமான பாடலை எழுதிய கண்மணி சுப்பு, 1996ம் ஆண்டு எஸ்ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் விஜய்,ஸ்வப்னா பேடி நடிப்பில் வெளியான “மாண்புமிகு மாணவன்” படத்தில் தேவா இசையில்,

டிசம்பர் மாதத்து பனித்துளியே

நீ நவம்பரை தேடி வந்ததென்ன

டிசம்பர் மாதத்து பனித்துளியே

நீ நவம்பரை தேடி வந்ததென்ன….”

என எஸ்என்.சுரேந்தர், சுஜா அருண் பாடிய பாடலை எழுதினார். 2003ம் ஆண்டு வெளியான “அன்பே உன் வாசம்” படத்தில் தீனா இசையில் உதித் நாராயணன், பாப் ஷாலினி பாடிய,

“எங்கே போறா எங்க போறா

எம்மனச அள்ளிப்போறா?=”

இன்றைய டிரெண்டிற்கு ஏற்ற பாடலையும் கண்மணி சுப்பு எழுதியுள்ளார். 2017ம் ஆண்டு சரத் கே.அத்வைதன் இயக்கத்தில் வெளியான “களத்தூர் கிராமம்” படத்தில் கண்மணி சுப்பு எழுதிய பாடல் மனோ, மலேசியா வாசுதேவன் இருவரும் இசைஞானி இசையில் பட்டையைக் கிளப்பியது.,

“மருதாணி வச்ச பொண்ணு இவ தான்

மகாராணி எங்க அம்மா மட்டும் தான்…”

இசைஞானியைப் போல அனைத்து இசையமைப்பாளர்களும் கண்மணி சுப்புவை அரவணைத்திருந்தால் இன்னும் அற்புதமான பாடல்கள் தமிழ் திரையுலகிற்கு கிடைத்திருக்கும். கம்பன் வீட்டு கட்டுத்தறியோ பாடும் என்பார்கள், கவியரசு வீட்டுக்கட்டுத்தறி கவி பாடாதா என்பதை தமிழ் இசையமைப்பாளர்கள் அறியாமல் போய் விட்டார்களே என்பதை நினைத்தால் வருத்தம் மேலோங்குகிறது.

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மனதின் ஆசையை தூண்டிய குரல் - ப.கவிதா குமார்
  2. சிவாஜி, ரஜினியை இயக்கியும் தோல்வியடைந்த இயக்குநர்-- ப.கவிதா குமார்
  3.  ஏழு சுவரங்களில் எத்தனைப் பாடல்:வாணி ஜெயராம் - ப.கவிதா குமார்
  4. கோழிக்கறி கேட்டதற்காக சென்சார் செய்யப்பட்ட பாடல்- ப.கவிதா குமார்
  5. வித்தியாசமான பாடல்களின்முகவரி  வி.சீத்தாராமன்- - ப.கவிதா குமார்
  6. வித்வான் வே.லட்சுமணன்  ஜோசியக்காரர் மட்டும்தானா? - ப.கவிதா குமார்
  7. ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை: வங்கத்துக் குயில் எம்ஆர்.விஜயா - ப.கவிதா குமார்
  8. தென்னாட்டு தமிழ்க்குரல்  விஎன்.சுந்தரம்-ப.கவிதா குமார்
  9. ’புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே’ :கவி சீமான் கேபி. காமாட்சி- ப.கவிதா குமார்
  10. ''தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்'':யார் இந்த நேதாஜி? - ப.கவிதா குமார்
  11. ஜாவர் சீத்தாராமன் சரி... அது யார் ராஜ் சீத்தாராமன்?- ப.கவிதா குமார்
  12. மனோவின் முன்னோடி ...மறக்க முடியாத பாடகர் ரமேஷ்- ப.கவிதா குமார்