காற்றினிலே வரும் கீதம்- 4

சன் லைப் தொலைக்காட்சியில் 1950 காலத்து பாடல்கள் அடிக்கடி ஒளிபரப்பு செய்யப்படும். எனக்கு மிகவும் பிடித்தமான  நிகழ்ச்சி அது. இந் நிகழ்ச்சியில் அடிக்கடி ஒருபாடல் ஒளிபரப்பாகிக் கொண்டேயிருக்கிறது. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

வசந்த முல்லையும் மல்லிகையும்

அசைந்தே ஆடிடுதே

இசைந்த காதலன் சேகரனை

மனம் நாடுதே… என் மனம் நாடுதே….

குழந்தை குரலால் எல்லோரையும் குதூகலிக்க வைத்த  எம்எஸ்.ராஜேஸ்வரி கொஞ்சிக் கொஞ்சி பாடிய  பாடல் இது. இந்தப்பதிவு இந்த பாடலை எழுதிய கவிஞரைப் பற்றியது தான்.

1945ம் ஆண்டு அறிஞர் அண்ணா எழுதிய நாடகமான ஓர் இரவு, 1951ம் ஆண்டு திரைக்காவியமான போது அதில் இடம் பெற்ற , வசந்த முல்லையும்,  மல்லிகையும் அசைந்தே ஆடிடுதே பாடல் இடம் பெற்றது.

ஏவிஎம் தயாரிப்பில் பி.நீலகண்டன் இயக்கிய “ஓர் இரவு” படத்தில் நடிப்பிசை புலவர் கேஆர். ராமசாமி, நாகேஸ்வரராவ், லலிதா, பாலையா, டிகே.சண்முகம், பிஎஸ். சரோஜா  உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  படத்தின் கதையோட்டத்துடன் அந்த காலத்தில் பாடல்கள் பயணித்தன.

இப்படத்தில் இடம் பெற்ற 10 பாடல்களும் அற்புதமானவை. மகாகவி பாரதி, புரட்சிக்கவி  பாரதிதாசன் எழுதிய இரண்டு பாடல்களும் இப்படத்தில் இடம் பெற்றன. குறிப்பாக, பாரதிதாசன் எழுதிய, துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா என்ற புகழ்பெற்ற பாடல் இப்படத்தில் தான் இடம் பெற்றது.

நடிப்பிசை புலவர் கேஆர்.ராமசாமி பாடிய பாடல், என்ன உலகமடா இது என்ன உலகமடா இது ஏழைக்கே நரகமடா, என்ன உலகமடா… தன்னல பேய்களுக்கே இது தங்க சுரங்கமடா … என்ற பாடல் கேட்க கேட்க பொதுவுடமை ததும்பும் இப்படியான பாடலை எழுதியவர்  தமிழ் நாடக உலகில் 7 வயதில் நடிக்க வந்த கலைஞர்.

பாய்ஸ் கம்பெனியில் எம் ஜி. சக்கரபாணி, எம் ஜி. ராமச்சந்திரன், காளி என். ரத்தினம், பியு. சின்னப்பா, எம்கே.ராதா உள்ளிட்டோருடன் சிறுவயதில் இருந்து நடித்தவர்.  அத்துடன் சிறுவயதில் பெண் வேடமிட்டு நடிக்கத் துவங்கிய அவர், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். சுமார் 22 ஆயிரம் நாடகங்களுக்கு மேல் நடித்த நடிகர், மிகச்சிறந்த கவிஞர். அவர் பெயர் கேபி.காமாட்சி சுந்தரம்.

ஆனால், சினிமாவில் கேபி.காமாட்சி என்றால் தெரியாதவர் ஆளில்லை. மிரட்டும் வில்லனாக திரையை உலுக்கியவர். நடிப்புத்திறமை மட்டுமின்றி கவிப்புலமை மிக்கவர் கேபி.காமாட்சி.

1936ம் ஆண்டு பதிபக்தி படத்தில் நடிக்கத் துவங்கிய காமாட்சி, நடிப்போடு பாடல்களையும் எழுதி வந்தார். எம்ஜிஆர் நடிப்பதற்கு முன்பே என்எஸ்.கிருஷ்ணனால் “அலிபாபா 40 திருடர்கள்” என்ற தலைப்பில்  திரைப்படம்  எடுக்கப்பட்டது. அதில் கொள்ளையர்கள் தலைவனாக நடித்தவர் இந்த  காமாட்சி தான். அத்துடன் அப்படத்தில் இடம் பெற்ற “அடிச்சுப்புட்டானே நோகுதடா” உள்ளிட்ட அனைத்து பாடல்களையும் எழுதினார்.

சினிமா என்ற நவீன சாதனத்தை பகுத்தறி பிரச்சார பீரங்கியாக மாற்றிய திரைஓவியம் “பராசக்தி”. கலைஞர் கருணாநிதி எழுதிய தீப்பறக்கும் வசனமும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் இணையற்ற நடிப்பும் இன்றளவும் நடிக்க வருபவர்களுக்கு அரிச்சுவடியாக இருக்கிறது.

அப்படத்தில் நீதிமன்ற கூண்டில் நின்று கொண்டு செவாலியே சிவாஜி கணேசன் பேசும் வசனத்தை பேசியே பல நடிகர்கள் நடிக்க வாய்ப்பு கேட்டதாக இப்போதும் கூறுகிறார்கள்.

“கடவுள் பக்தர்கள் கல்யாணிக்கு கருணை காட்ட முன் வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கல்யாணியின் கற்பைக் காணிக்கையாக கேட்டிருக்கிறான். பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால் , கல்யாணி  உலகத்தில் புழுவாக துடித்தப்படியாவது உயிரோடு இருந்திருப்பாள். அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த பூசாரி தான்” என சிவாஜி  வசன சாட்டையைச் சொடுக்கும் குற்றவாளியாக நடித்த  பூசாரி  வேறு யாருமல்ல, சாட்சாத் கவிஞர் கேபி.காமாட்சி தான். “பராசக்தி” படத்தில் பூசாரி வேடத்தில் புயலைக் கிளப்பிய காமாட்சி  இப்படத்தில் எழுதிய பாடல்கள் காலப்பெட்டகம் என்றே கூற வேண்டும்.

எம்எஸ்.ராஜேஸ்வரி இனிய குரலில் என்றும் அழியாத இனிய கானமாக திகழும்,

புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே

உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க

இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே

அந்த மர்மத்தை சொல்லி விட்டுப் போங்க..

என்ற அற்புத பாடலை காமாட்சி எழுதினார்.  இந்தப் பாடலுக்கு பண்டரிபாய் காட்டும் பாவனைகள் அடடா. இப்பாடலைப் பார்க்கும் போதெல்லாம் எம்ஜிஆரை விட வயது குறைந்த பண்டரிபாய் எதற்காக அவருக்கு அம்மாவாக இத்தனை படங்களில் நடித்தார்  என்ற கேள்வி குடைந்து கொண்டேயிருக்கிறது.

மிக அழகான உருவம், நடிப்புத்திறமை மிக்க பண்டரிபாய், சிவாஜிகணேசனின் முதல்பட கதாநாயகி. ஆனால், அதன் பின் பல படங்களில் அவரின் தாயார். என்ன கொடுமை..பராசக்தியில்  இடம்பெற்ற மற்றொரு சூப்பர் ஹிட் பாடல்,

ஓ… ரசிக்கும் சீமானே வா

ஜொலிக்கும் உடையணிந்து

களிக்கும் நடனம் புரிவோம் 

அதை நினைக்கும் பொழுது மனம்

இனிக்கும் விதத்தில் சுகம்

அளிக்கும் கலைகள் அறிவோம்....

என எம்எஸ்.ராஜேஸ்வரி பாடிய புகழ்பெற்ற பாடலை எழுதியவரும் கேபி.காமாட்சி தான்.  ஆனால்,   இந்த பாடலை எழுதியது உடுமலை நாராயணகவி என்று இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லட்சிய நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரன் அறிமுகமான படம் “பராசக்தி” என்றே நினைக்கிறார்கள். ஆனால், 1947ம் ஆண்டு அவர் அறிமுகமான படம் “பைத்தியக்காரன்”. எம்ஜிஆரை போலவே சில காட்சிகளில் எஸ்எஸ்ஆர் நடித்திருப்பார்.  எஸ்வி. சகஸ்ரநாமம் எழுதிய கதையை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினர். எம்ஜிஆருக்கு ஜோடி மதுரம்.

இந்த படத்தில் சிஆர். சுப்புராமன் இசையில்

“ஜெயிலுக்கு போய் வந்த தேச மக்கள்” என் பாடலை என்எஸ்.கிருஷ்ணன் பாடினார். இந்த பாடலை எழுதியதும் காமாட்சி தான்.   சிறைச்சாலையில் குற்றவாளிகள் தொலைக்காட்சி, செல்போன் உள்ளிட்ட சகல வசதிகளுடன் இப்போது இருப்பதைப் போல, கறிக்கஞ்சி சாப்பிட்டதை 1947ம் ஆண்டே பதிவு செய்த பாடல் இடம் பெற்ற படம் பைத்தியக்காரன் என்பதை மறக்க முடியுமா?

1949ம் ஆண்டு இளங்கோவன் எழுத்தோவியத்தில் நோடானி இயக்கத்தில் வெளிவந்த படம் “இன்பவல்லி”. இப்படத்தில் டிஆர். மகாலிங்கம், பிஎஸ். சரோஜா, என்எஸ். கிருஷ்ணன், டிஏ.மதுரம் உள்பட பலர் நடித்தனர். ஜி.ராமநாதன் இசையில் காமாட்சி எழுதிய பாடலை என்எஸ்.கிருஷ்ணன், மதுரம், பி.லீலா ஆகியோர் பாடிய பாடல்.

 

டங்க்ருத டிங்காலே டங்க்ருத

டிங்குட டிங்குட டங்க்ருத டிங்காலே…

என்ற இந்த பாடலில் என்எஸ்.கிருஷ்ணன், மதுரம் உரையாடலோடு

போகாதே போகாதே என் கணவனா

பொல்லாத சொப்பனம் கண்டு வந்தேன்….

என பி.லீலா பாட அதற்கு போட்டி போட்டு கிருஷ்ணன் பாடுவார்.

1949ம் ஆண்டு ப.நீலகண்டன் கதையை ஏவி.மெய்யப்ப செட்டியார் இயக்கிய “வாழ்க்கை” படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் அற்புதமான பல பாடல்களை கேபி.காமாட்சி எழுதியுள்ளார். வைஜயந்தி மாலா, டிஆர்.ராமச்சந்திரன் இருவரும் போட்டி போட்டு நடித்த இப்படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களையும் இப்போது கேட்டாலும் மனம்  இனிக்கிறது.  அத்துடன் வைஜயந்தி மாலா நடனம் இப்படத்தை ரசிக்க வைத்தது.

இந்த படத்தில் 13 படங்கள் 12 பாடல்களை கேபி.காமாட்சி எழுதினார். பெரும் ஆச்சரியம் என்னவென்றால் காமாட்சி எழுதிய பல பாடல்களை எம்எஸ்.ராஜேஸ்வரி பாடியுள்ளார் என்பது தான். அப்படி ஒரு பாட்டு,

எண்ணி எண்ணிப் பார்க்க மனம்

இன்பம் கொண்டாடுதே

என்னை அறியாமல் உள்ளம்

துள்ளி விளையாடுதே…

இப்பாடல் வரியில் இடையில் இப்படி எழுதியிருப்பார் காமாட்சி.

என் ஆசை போலவே

என்னாலும் வாழ்வேன்…

அந்த காலத்திலேயே ஒரு பெண் இப்படி பாடுவது போல் காட்சிக்கு தைரியமான வார்த்தைகளைப் போட்டு எழுதிய கவிஞர் கேபி.காமாட்சி என்பதை மறந்து விடக்கூடாது.

முட்டைக்கண் ராமச்சந்திரன் என உருவத்தை வைத்து கேலி பேசப்பட்ட டிஆர்.ராமச்சந்திரன் நடிகர் மட்டுமல்ல சிறந்த பாடகர் என்பதை நிரூபித்த படம் வாழ்க்கை.

உன் கண் உன்னை ஏமாற்றினால்

என் மேல் கோபம் உண்டாவதேன்?….

என்ற புகழ்பெற்ற பாடலை டிஆர்.ராமச்சந்திரன் தான் பாடினார். அவர் எம்எஸ். ராஜேஸ்வரியுடன் இந்த படத்தில் டூயட்டும் பாடியுள்ளார். இந்த பாடலை கேபி.காமாட்சி எழுதினார். அதுமட்டுமின்றி

செந்தமிழும் சுவையும் போலவே

நம் காதலால் மிக சுகமே பெறவாழ்வோம்… பாடலையும் எழுதினார்.

தமிழ் சினிமாவில் தனித்த அடையாளமாக திகழ்ந்த ஏஜி.ரத்னமாலா, எம்எஸ்.ராஜேஸ்வரியுடன் இணைந்து பாடிய

ஆசை கொல்லும் மீசை கொண்ட

 ஆம்பளையை பார்த்தாயே

அடையாளம் சொல்லுங்க..என்ற பாடலையும்,

” அன்னையே நீ கைவிடல்” என்ற சோகரசம் பிழியும் பாடலை  டிஎஸ்.பகவதி பாடியிருப்பார். இந்த பாடல்களையும் எழுதியவர் கேபி.காமாட்சி தான்.

எம்எல்.வசந்தகுமாரியின் புகழ் பெற்ற பாடலான

கோபாலனோடு ஆடுவேன்

நந்தகோபாலனனோடு

நான் ஆடுவேன்

நந்தகோபாலன் ஆ.. நந்தகோபாலன் …. பாடலை எழுதியதும் காமாட்சியே தான்.

கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணன் 1949ம் ஆண்டு தயாரித்த படம் “நல்லதம்பி”. அறிஞர் அண்ணாவின் கதையை  கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் இயக்கினர். சிஆர். சுப்பராமன்  இசையில் எம்எல்.வசந்தகுமாரி குரலில் ஒலித்த ” கானலோலன் மதனகோபாலன்” என்ற பாடலை அற்புதமாக எழுதியதும் இதே கேபி.காமாட்சி தான்.

1956ம் ஆண்டு ஸ்ரீதர் கதை, வசனத்தில்  டி.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த படம் “அமரதீபம்”. சிவாஜி கணேசன், தங்கவேலு, பத்மினி, சாவித்திரி மற்றும் பலரும் நடித்த இப்படத்தில் டி.சலபதிராவ் இசையில் கேபி.காமாட்சி எழுதிய இப்பாடல் காலத்தால் அழியாதது.

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு

திரிந்தலைந்து பாடுவதேன் 

ரீங்காரம் கொண்டு

பூங்கொடி யே நீ சொல்லுவாய்

பூங்கொடி யே நீ சொல்லுவாய்..

இசைக்குயில்கள் ஏஎம்.ராஜா, பி.சுசீலா இணைந்து இப்பாடலில் காமாட்சியின் கவிப்புலமை பலரால் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த பாடலில் மாமலர் என்ற சொல்லாட்சியை  கவிஞர் காமாட்சி மட்டுமே பயன்படுத்தியுள்ளார்  என்பவதால் இன்றளவும் புகழப்படுகிறார்.

இப்பாடலை ராஜாவுடன் இணைந்து முதலில் பி.லீலா பாட முடிவானது. அவர் பாடுவதற்கு தனி மைக் கேட்டதால், பின் பி.சுசீலா  இந்த பாடலைப் பாடினார் என்று கூறப்படுகிறது. எப்படியோ, எப்போதும் கேட்கும்  தேனமிர்தம் தான் இந்த பாடல்.

1950ம் ஆண்டு எம்ஜிஆர்,விஎன்.ஜானகி இணைந்து நடித்த படம் “மருதநாட்டு இளவரசி”. கலைஞர் கருணாநிதியின் கதை, வசனத்தில்  ஏ.காசிலிங்கம் இயக்கிய இப்படத்தில் எம்ஜிஆருக்கு எம்எம்.மாரியப்பா பாடிய, “இந்த இன்பமே தந்த பைங்கிளி ஜீவன் அல்லவோ, கங்கை போன்ற வாழ்வு” என்ற சோகம் ததும்பும் பாடலை கேபி.காமாட்சி  எழுதினார். எம்ஜிஆர் இப்படியான கர்நாடக சங்கீதப்பாடலை பாடியிருப்பாரா என நினைக்க வைக்கும் வகையில் மாரியப்பா பாடியிருப்பார்.

1956ம் ஆண்டு  ஆர்ஆர்.சந்திரன் இயக்கத்தில் சிவாஜிகணேசன் , சிவரஞ்சனி, எம்என்.ராஜம் நடித்த படம் “நானே ராஜா”. டிஆர்.ராமநாத் இசையமைத்த இப்படத்தில் காமாட்சியின் எளிய தமிழ் வரிகள் டிஎம்.சௌந்தரராஜன் மகத்தான ஹிட் பாடலை வழங்கியது. மது போதையில் உலவும் நிலவைப் பார்த்து கதாநாயகன் பாடுவது போன்று இந்த பாடல் காட்சியமைக்கப்பட்டிருக்கும். சிவாஜிக்கு நடிப்பை சொல்லியா தர வேண்டும்?

மந்தமாருதம் தவழும்

சந்திரன் வானிலே திகழும்

இந்த வேளையே இன்பமே – ஏகாந்தமான

இந்த வேளை…யே இன்பமே

வந்து வந்து வீசும் முல்லை

மனசிற்கேதும் ஈடே இல்லை

செந்தமிழ்ப் பெண்ணைப் போலே

சிரிக்குதே என் தென்னம் பாளை ….

என பாடிக்கொண்டே டிஎம்.சௌந்தரராஜன், ‘ ஹக்’ என்ற சத்தத்தை எழுப்புவார். தமிழ் பாடலில் தென்றல் என்ற சொல்லுக்கு மந்தமாருதம் என வார்த்தைகளைப் பயன்படுத்திய மாகவி கேபி.காமாட்சி என்றே சொல்ல வேண்டும்.

இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது சட்டென குலேபகாவலியில் ஜமுனாராணி பாடிய ஆசையும், என் நேசமும் பாடலை சட்டென ஞாபகத்திற்கு கொண்டு வந்தது. அதிலும் குடிபோதையில் வரும் ‘ ஹக்’ சத்தம்  இடம் பெற்றிருக்கும்.  நானே ராஜா படத்தில் கேபி.காமாட்சி 4 பாடல்களை எழுதியுள்ளார்.

ஆதி அந்தம் இல்லாத அருள்ஜோதியே

ஆண்டவனே எம்மையே ஆளும் தயாநிதியே.. என்ற  கல்யாணி ராகத்தில் டிஎம்.சௌந்தரராஜன் பாடிய அழகான பாடலை கேபி.காமாட்சி எழுதியுள்ளார். மிகச்சிரமமான இந்த பாடலை டிஎம்.சௌந்தரராஜன் மிக அற்புதமாக பாடியிருப்பார்.    டிவி.ரத்னம் பாடிய “ஆணும் பெண்ணும் வாழ்வில் இன்பம், பேசுவதால் இன்பம் பெருவார் உண்டோ “பாடல்களையும் காமாட்சி எழுதியுள்ளார்.

பதிவின் நிறைவாக,” எதிர்பாராதது” படத்தில் இடம் பெற்ற பாடலோடு காமாட்சி குறித்த பாடல் நிறைவு பெறுகிறது.

சிவாஜிகணேசன், பத்மினி, சித்தூர் நாகையா படித்த இந்த படம் 1954ம் ஆண்டு வெளியானது. படத்தின் கதை, வசனம் ஸ்ரீதர். படத்தை இயக்கியது சித்ரபுரா நாராயணராவ்.

இப்படத்தின் கதை சிக்கலானது. அதன் காரணமாகவே விருதும் இந்த படம் பெற்றது சிவாஜி, பத்மினி காதலர்கள். இந்நிலையில் சிவாஜியின் தந்தை நாகையா, பத்மினியை இரண்டாம் தாரமாக மணம் முடித்து விடுவார். இதனால் சிவாஜிக்கு பத்மினி சிற்றன்னையாகி விடுவார். நாகையா சில நாட்களில் இறந்து விடுவார். பத்மினியை உணர்ச்சி வசப்பட்டு சிவாஜி தொடுவார். பத்மினி சிவாஜி கன்னத்தில் அறைவது போன்ற காட்சி.

ஆனால், உண்மையில் கன்னம் வீங்கி 3 நாட்கள் சிவாஜி படப்பிடிப்பிற்கு வரவில்லை. இதனால் சிவாஜி வீட்டிற்கு நேரில் சென்ற பத்மினி, மன்னிப்பு கேட்டதுடன், ஒரு காரையும் பரிசாக சிவாஜிக்கு வழங்கினார். எதிர்பாராதது என்ற படத்திற்கு தலைப்பு வைத்தது சிவாஜிக்கு பொருத்தமாகவே அமைந்தது.

இப்படத்தில் இடம் பெற்ற காலத்தால் அழியாத பாடலை காமாட்சி எழுதியுள்ளார். ஜிக்கி சந்தோஷமாகவும், ஏஎம்.ராஜா சோகமாகவும் பாடிய இந்த பாடலுக்கு இசையமைத்தவர்  சிஎன்.பாண்டுரங்கன். அந்தப் பாடல்,

சிற்பி செதுக்காத பொற்சிலையே 

எந்தன் சித்தத்தை நீ அறியாயோ ….

எத்தனை முறை கேட்டாலும் மெல்லிசையில் ரசிக்க வைக்கும் இந்த பாடலை எழுதியவர் காமாட்சி . மெட்டிற்கு பாட்டு எழுதுவதில் வல்லவராக இருந்துள்ளார். இவருக்கு முன்னோடியாக  தஞ்சை ராமையாதாஸ், கம்பதாசன் இருந்துள்ளனர்.  இவர்கள் மூவரும் பாட்டில் மட்டுமின்றி பாட்டிலிலும் மன்னர்களாக இருந்துள்ளனர். பாட்டெழுத  பாட்டோடு மட்டுமின்றி பாட்டிலோடும் வந்ததாக வசனக்கர்த்தா ஆரூர்தாஸ் “என் கரையைத் தொட்ட அலைகள்’ நூலில் குறிப்பிடுகிறார்.

குடி சாய்த்த கோபுரங்களில் அற்புதமான பாடல்களை எழுதிய காமாட்சியும் ஒருவர் என்று நினைக்கும் போது, அவர் எழுதிய வரிகள் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது “அற்ப செயலுக்கு இப்படியும்  மனஅவஸ்தைப் பட விடுவாயோ?”

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. மனதின் ஆசையை தூண்டிய குரல் - ப.கவிதா குமார்
 2. சிவாஜி, ரஜினியை இயக்கியும் தோல்வியடைந்த இயக்குநர்-- ப.கவிதா குமார்
 3.  ஏழு சுவரங்களில் எத்தனைப் பாடல்:வாணி ஜெயராம் - ப.கவிதா குமார்
 4. கோழிக்கறி கேட்டதற்காக சென்சார் செய்யப்பட்ட பாடல்- ப.கவிதா குமார்
 5. வித்தியாசமான பாடல்களின்முகவரி  வி.சீத்தாராமன்- - ப.கவிதா குமார்
 6. கண்மணி சுப்பு: கவியரசு வீட்டுக்கட்டுத்தறி- ப.கவிதா குமார்
 7. வித்வான் வே.லட்சுமணன்  ஜோசியக்காரர் மட்டும்தானா? - ப.கவிதா குமார்
 8. ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை: வங்கத்துக் குயில் எம்ஆர்.விஜயா - ப.கவிதா குமார்
 9. தென்னாட்டு தமிழ்க்குரல்  விஎன்.சுந்தரம்-ப.கவிதா குமார்
 10. ''தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்'':யார் இந்த நேதாஜி? - ப.கவிதா குமார்
 11. ஜாவர் சீத்தாராமன் சரி... அது யார் ராஜ் சீத்தாராமன்?- ப.கவிதா குமார்
 12. மனோவின் முன்னோடி ...மறக்க முடியாத பாடகர் ரமேஷ்- ப.கவிதா குமார்