காற்றினிலே வரும் கீதம்-9

நடிப்பின் மூலம், வசனம் மூலம் பகடி செய்வது தமிழ் சினிமாவில் நீண்ட நெடுங்காலமாக உள்ளது. அந்த காலத்தில் அதை சட்டையர் என்பார்கள். இந்த காலத்தில் நடிகர் சந்தானம் சொல்வது போல கலாய்ப்பு என்பார்கள்.

நடிகர் சந்தானம் என்றவுடன் அவர் படத்தில் இப்படியான வசனங்கள் வரும் போதெல்லாம் கவுன்டர் பன்ஞ் அடிக்கிறேன் என சதாய்ப்பு செய்வார். அதாவது கலாய்ப்பார்.

“பாஸ் என்ற பாஸ்கரன்” படத்தில், ” பாருடா கடன் வாங்க எவ்வளவு தூரம் வர வேண்டியது இருக்கு” என சந்தானம் கவலைப்பட்டு கூற ஆர்யா, ” விடுடா கடன் திருப்பி வாங்க அவன் அலைவான்ல” என்று கூலாகா கலாய்ப்பார். இப்படியான சட்டையர் எம்ஆர். படத்திலேயே வந்து விட்டது.

“பலே பாண்டியா” படத்தில் கடன்காரர்கள் சிவாஜிகணேசன் வீட்டை முற்றுகையிட்டு தகராறு செய்து கொண்டிருப்பார்கள். சிவாஜியின் மனைவியான சந்தியா ( ஜெயலலிதாவின் தாயார்) கடன்காரர்களை திட்டி விரட்டுவார்.

அப்போது அங்கு வரும் எம்ஆர்.ராதா, கடன்காரர்களைப் பார்த்து கேட்பார், ” எதற்காக அவருக்கு கடன் கொடுத்தீங்க?” …. அதற்கு கடன் கொடுத்தவர்கள், “இல்லையென்பதால் கொடுத்தோம்” என்பார்கள். “அடப்பாவிகளா இல்லாதவனிடம் வந்து இப்போது கடனைக் கேட்டால் எப்படி தருவான்?” என்பார் எம்ஆர்.ராதா.

இப்படி பழைய படங்கள் இருந்த பகடிக்காட்சிகள் தான் பின்னாளில் பல படங்களில் வேறுகாட்சிகளாக உருவாகின.

காட்சியமைப்பில் பகடி செய்வது போல, தமிழ் சினிமாவில் பகடி பாடல்களுக்காக ஒரு கவிஞர் வாழ்ந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். அவர் பெயர் வி.சீத்தாராமன்.

அவரைப்பற்றி எழுத அவரைப்பற்றி பாடல்களைத் தேடி தேடி கிட்டத்தட்ட எனக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. அறியப்படாத பாடலாசிரியரை அறிமுகம் செய்து வைக்கும் எனது பணியில் இந்த மெனக்கெடல் எனக்குப் பிடித்திருக்கிறது.

1957ம் ஆண்டு கிஷோர்குமார், வைஜெயந்திமாலா நடிப்பில் வெளிவந்த இந்தி படம் “ஆஷா”. இந்த படம் 1959ம் ஆண்டு எம்வி. ராமன் இயக்கத்தில் “அதிசயப்பெண்” என்ற பெயரில் தமிழில் வெளியானது. தெலுங்கிலும் வெளியானது.

இந்த இரண்டு மொழிகளிலும் படத்தின் கதாநாயகனாக நடித்தவர் நாகேஸ்வரராவ். கதை ஜாவர் சீத்தாராமன். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அப்போது பிரபலமானது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் பி.சுசீலா பாடிய இந்த பாடலை எழுதியவர் வி.சீத்தாராமன். படுவேகமான மெட்டு இந்த பாடல்,

“ஈனா மீனா டீகா ஜெய் ஜாம நீகா

மாக நாக நாகா சீகா பீகா ரீகா

ஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா

மாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா

சொன்னாலே சந்தோசம்…..”

வேகமாக ரிதத்தில் ஒலிக்கும் இந்த பாடலை  எம்.சௌந்தரராஜனும் பாடியுள்ளார். ஆனால், இந்த பாடலை அறியாத தமிழ் இசை ரசிகர்களுக்கு நடிகர் விஜய் நடிப்பில் உருவான தெறி படத்தில் இடம் பெற்ற

ஈனா மீனா டீகா ஈ காட்டும்மா ஷோக்கா

குட்டி போனி டெய்லு

கியூட்டா கையில் மாட்டிக்கிட்டா….   பாடல் ஞாபகத்திற்கு வரலாம்.

ஆனால், 60 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியான ஒரு பாடலை எழுதியவர் தான் சீத்தாராமன். அதிசயப்பெண் படத்தில் ஒலித்த 8 பாடல்களையும் வி.சீத்தாராமன் தான் எழுதியிருந்தார். ஏபி.கோமளா பாடிய ‘மகர வீணை தனது மதுர நாத மகிமை அறியுமோ’ பாடல் தனித்த அடையாளமாய் அப்போது ஒலித்த பாடலாகும்.

இந்த படத்தில் பி.சுசீலா பாடிய

எப்ப வருவாரோ ஓஓஓஓ

அவர் எப்ப வருவாரோ ஓஓஓ எந்தன் மனமோகன்… என்ற கர்நாடக இசையில் ஒலித்த இந்த பாடல் அக்காலத்தில் மிகப்பிரபல பாடலாக திகழ்ந்துள்ளது. இந்த பாடலை வி.சீத்தாராமன் எழுதினார். இந்த படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்த பாடல் படுகேலியும், கிண்டலும் நிறைந்தது.

அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை

கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை ஆகப்

பல பிள்ளைகள் உண்டு உலகினிலே

அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை…..

மணிவண்ணன் போல் பிள்ளை

மாநிலம் மீதில் இல்லை

மதிப்பாய் நடந்து கொள்ள

சொன்னாலும் தெரியல்லே…  என்ற வித்தியாசமான பாடலும் உள்ளது.

1958ம் ஆண்டு டிஆர்.ராமச்சந்திரன், பாலாஜி, எஸ்எஸ்.ராஜேந்திரன், தேவிகா நடித்த படம் அன்பு எங்கே. வேதா இசையில் பட்டையைக் கிளப்பிய பாடல்கள் அமைந்த படம் இது. ஜப்பானை அமெரிக்கா வெடிகுண்டு வீசி அழித்ததை தனது பாடல் மூலம் நினைவூட்டினார் சீத்தாராமன். டிஎம்.சௌந்தரராஜன் பாடிய இந்த பாடல்

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஹா

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

இந்த பாடல் பல இடங்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியதாகவே பதிவாகியுள்ளது. ஆனால், இந்த பாடலை எழுதியவர் வி.சீத்தாராமன் தான். ஏனெனில், இந்த பாடலில் அவர் எழுதிய கருத்து அப்படியிருந்தது.

அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு

அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு அறிவில்லாம அடக்கிப்புட்டா மிருகமின்னு சொன்னோம் – அந்த மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம்…..

என இந்த பாடலில் சீத்தாராமன் எழுதியிருந்தார். பெரிய ஆச்சரியமென்னவென்றால், இவர் பாடலில் ஆங்கில சொற்கள் சர்வசாதாரணமாக அந்த காலத்தில் புழங்கியுள்ளது.

1961ம் ஆண்டு கேவி.ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவான பாக்கியலெட்சுமி திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர். மெல்லிசை மன்னர்கள் இசையில் ராதா ஜெயலட்சுமி பாடிய வரலட்சுமி வருவாயம்மா என்ற அற்புதமான பாடல் சீத்தாராமன் எழுதினார். இதே படத்தில் பளிங்கு மணப்பந்தலிலே பாடலும் அவர் கைவண்ணத்தில் உருவானது தான்.

1956ம் ஆண்டு வெளியான படம் ஒரே குலம். இப்படத்தில் எம்.வி. ரங்காராவ், எஸ்.வி. வெங்கட்ராமன் இருவரும் இசையமைத்துள்ளனர். இப்படத்தில் இடம் பெற்ற

ஏன் பிறந்தாய் கண்ணே நீ ஏன் பிறந்தாய் கண்ணே ஏன்பிறந்தாய் கண்ணே நீ ஏன் பிறந்தாய் கண்ணே

ஈன சாதி என்று எல்லோரும் ஏசிடும்

தீண்டாமை பாவியே தேடிய பெண்ணா ஏன் பிறந்தாய் கண்ணே… என்ற அருமையான பாடலை சீத்தாராமன் எழுதியுள்ளார். இந்த பாடலைப் பாடி இசையமைத்தவர் எஸ்.வி. வெங்கட்ராமன். இந்த படத்தில் சீத்தாராமன் எழுதிய புகழ் பெற்ற பாடல், சிரிப்பு வாராதோ கண்களென திரும்பி பாராதோ பாடல் தான். எஸ்சி. கிருஷ்ணனும், கே. ராணியும் இணைந்து பாடிய பாடல் இது.

1955ம் ஆண்டு ஜித்தன் பானர்ஜி இயக்கத்தில் வெளிவந்த படம் எல்லாம் இன்பமயம். டி ஆர். ராமச்சந்திரன், டிகே. ராமச்சந்திரன், ராகினி, ராஜசுலோச்சனா, லட்சுமி பிரபா, லலிதா,பத்மினி உள்ளிட்ட பலர் நடித்த படம்.கண்டசாலாவின் இனிய இசையில் வி.சீத்தாராமன் எழுதிய இந்த பாடலை பாடியவர்கள் ஏஎம்.ராஜா, பி.லீலா.

வண்டுகள் எல்லாம் வானமழையில்

வெண் நிறமாகுதே

தன்நிறம் மாறுதே என லீலா பாட

வெள்ளி மீது உலவும் மேகம் கண்டு மயிலும் மறைதோடுதே…..

என ஏஎம்.ராஜா அதிராமல் பாட கேட்க கேட்க எவ்வளவு இனிமையான மெல்லிசை. இந்த படத்தில் இடம் பெற்ற கண்ணைப் பார்க்கும் வானம், உல்லாசமே வெகு ஆனந்தமே பாடல்களையும் சீத்தாராமன் எழுதியுள்ளார்.

1963ம் ஆண்டு ஏசி.திருலோகசந்தர் இயக்கத்தில் எஸ்எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, ஏவிஎம்.ராஜன், புஷ்பலதா உள்ளிட்ட பலர் நடித்த படம் நானும் ஒரு பெண். இந்த படத்திற்கு இசை சுதர்சனம். இந்த படத்தில் சீத்தாராமன் எழுதிய பகடி பாடலை டிஎம்.சௌந்தரராஜன், பி.சுசீலா குழு பாடியுள்ளது. மிக வேகமான மெட்டில்

மாலு என டிஎம்எஸ் குரல் கொடுக்க…

பாலு என பி.சுசீலா குரல் கொடுக்க…

கண்ணுக்குள் சிக்கி கொண்ட பெண்ணின் பேரை

சொல்லவா ஸ்கூட்டர் இன் பின்னே வைத்து

ஏற்றி கொண்டு செல்லவா மண்ணுக்குள்ளே

மாட்டி கொண்ட வண்டியை நான் தள்ளி விடவா

எனக்கூறி ஹா ஹா என்பார் டிஎம்எஸ். அதற்கு பி.சுசீலா,

கல்லூரி நாடகத்தில் கெட்டிக்கார ஹீரோதான்

காலேஜ் பாடத்திலே வாங்குவது ஜீரோதான்

எல்லாம் வல்ல இவருக்கு இல்லாதது வாலு

ஒன்னுதான் ஹான் ஹான்…. என்பார்.

மேரி ஸ்டைல பார்த்து விட்டு தானா

மெர்லின் மன்றோ மேல்

உலகம் போனா காஞ்சனாவின் கெட் அப்பு

காகித பூ செட் அப்பு கர்மன் க்ராண்டா டைப்பு

என அடுக்கடுக்கான வரிகளை அள்ளிப்போட்டு ரசிக்க வைத்திருப்பார் கவிஞர் சீத்தாராமன்.

1964ம் ஆண்டு கிருஷ்ணன், பஞ்சு இரட்டையர் இயக்கத்தில் வெளியான படம் சர்வர் சுந்தரம். இந்த படத்தில் சீத்தாராமன் ஒரு பாடல் எழுதியுள்ளார் என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த படத்தில் ஒரு நாடகம் நடைபெறும் காட்சி இடம் பெறும். அதில் நேருஜி ஞாபகார்த்த நிதிக்காக நட்சத்திரங்கள் நடிக்கும் மகத்தான பிரச்னை நாடகம் என்ற விளம்பரத்துடன் வரும் ஒம் நமோ நாராயணா என்ற பாடலை ஏஎல்.ராகவன், எஸ்சி.கிருஷ்ணன், எல்ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடியிருப்பார்கள். இந்த பாடலை சீத்தாராமன் எழுதினார்.

1965ம் ஆண்டு பி.நீலகண்டன் இயக்கத்தில் வெளியான படம் பூமாலை. கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான இப்படத்தில் எஸ்எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, அஞ்சலிதேவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை ஆர்.சுதர்சனம். எஸ்சி.கிருஷ்ணன், எல்ஆர்.ஈஸ்வரி பாடிய இந்த பாடல்,

ராணி டைமன் ராணி

நம்மை வாழவிடாது இந்த சொசைட்டி

நம் உயிர் போனால் தருமே பப்ளிசிட்டி

சார்மினார் சிகரெட் வேணும் ஒரு பாக்கெட்

இல்லாட்டி நம் காதல் கட்டு

ராணி டைமன் ராணி நீயே சிக்கன் பிரியாணி

ராஜா இஸ்பெட் ராஜா நீயே சில்வர் கைகுஜா ….

என இப்படி போகும் இந்த பாடலை எழுதியவர் சாட்சாத் சீத்தாராமனே தான். இதே படத்தில் எல்ஆர்.ஈஸ்வரி பாடிய வித்தியாசமான பாடலையும் சீத்தாராமன் எழுதியுள்ளார்.

டீ…. டீ….டீ… ஐட்டீட்டீ

பியூட்டி… பியூட்டி..பியூட்டி

பார்த்தவர்கள் மயங்கி விழும் பாரிஸ் நகர பியூட்டி

பாவையிவள் கணவருக்கு சமையல் அறையில் டியூட்டி

ராணியம்மா ராக்கட்டிலே சந்திரலோகம் போவாள்

தேனிலவை நிலவினிலே அனுபவித்து வருவாள்…

என தொடரும் பாடலில்

காதல் குளிர் ஜுரம் உனக்கு

அதனால் கொஞ்சம் டிபெக்ட் இருக்கு

தீராது மாறாது மேரேஜ் ஆகாமல்

இந்நோயும் தீராதடி…. என பாடல் முழுவதும் ஆங்கிலமும், தமிழுமாய் கிண்டலும், கேலியுமாக பாடல் ஒலிக்கிறது.

1954ம் ஆண்டு சி.ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படம் போன மச்சான் திரும்பி வந்தான். கேஏ.தங்கவேலு, குசலகுமாரி,ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தில் எம்எஸ்.விஸ்வநாதன், பாண்டுரங்கன் இசையமைத்தனர். இந்த படத்தின் அனைத்து பாடலையும் சீத்தாராமன் தான் எழுதியுள்ளார். இப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாடிய,

ஆதாரம் நின் பாதம் அம்பிகையே உன் அருள் தந்து கண்பாரம்மா கவுரி ஆதாரம் நின்பாதம் அம்பிகையே….

என்ற அற்புதமான பாடல் சீத்தாராமனின் இசைப்புலமைக்கு கிடைத்த சான்று. வீணையின் நாதம் எழுந்தோடும் இந்த பாடல் அற்புதமான வர்ணமெட்டு. ஏஎம்.ராஜா, ஜீவரத்தினம் பாடிய இதயமென்னும் கோயில், ஏஜி.ரத்னமாலா, செல்லமுத்து பாடிய குடித்துடு நீயே குடித்துடு, ஜீவரத்தினம் பாடிய யாரை ஏமாற்ற வந்தீர் என பல பாடல்களை சீத்தாராமன் எழுதியுள்ளார்.

1954ம் ஆண்டு எம்வி.ராமன் இயக்கத்தில் வெளியான படம் பெண். வைஜெயந்திமாலா, ஜெமினி கணேசன்,அஞ்சலிதேவி, வீணை பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு இசை மீட்டியவர் ஆர்.சுதர்சனம். இப்படத்தில் பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி,குசா.கிருஷ்ணமூர்த்தி, கேபி.காமாட்சி போன்ற ஜாம்பவான்களோடு பாடல் எழுதினார் சீத்தாராமன். அவர் எழுதிய,

காதல் இன்ப வாழ்விலே மின்னாமலே இடிவீழ்ந்ததே

பேதை ஆசை கனவிலே நீங்காத பேருருள் சூழ்ந்ததே….

என்ற சோகம் பிழியும் பாடலை டிஎஸ் பகவதி பாடினார்.

1962ம் ஆண்டு எம்வி.ராமன் இயக்கத்தில் வெளியான படம் கொஞ்சும் சலங்கை. ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலர் நடித்த இப்படத்தில் எஸ்எம்.சுப்பையா நாயுடு இசையில் பாடல்களால் புகழ் பெற்ற படமிது.

இப்படத்தில் சீத்தாராமன் எழுதிய,

தினமிதுவே சுபதினமிதுவே திசையெல்லாம் கொண்டாடும்

தினமிதுவே சுபதினமிதுவே திசையெல்லாம் கொண்டாடும்

நினைவில் நின்றாடுகிறார் இணையில்லாத அபராஜிதா….

என்ற அற்புதமான கிராமப்புற தெம்மாங்கு. எஸ்சி.கிருஷ்ணன் குழுவினருடன் பாடிய பாடல் இது.

அன்றைய பழைய படங்களில் கதாநாயகிக்கு கட்டாயம் சோகப்பாடல் உண்டு. 1955ம் ஆண்டு டிஆர்.ரகுநாத் இயக்கத்தில் வெளியான கணவனே கண் கண்ட தெய்வம் அடிக்கடி சன்லைப்பில் ஒளிபரப்பாகிறது. இப்படத்தில் பி.சுசீலா பாடிய பாடல் கண்களில் நீர் பெருக்கும். இப்படத்திற்கான இசையமைத்தவர்கள் ஏ. ராமராவ் , ஹேமந்த் குமார். இப்படத்தில் சீத்தாராமன் எழுதிய அந்த பாடல்,

அன்பில் மலர்ந்த நல்ரோஜா

கண் வளராயோ என் ராஜா

வாழ்விலே ஓளி வீசவே வந்தவனே கண்வளராய்…

இந்த படத்தில் சீத்தாராமன் எழுதிய புகழ்பெற்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. ஆனால், அவர் தான் எழுதினார் என்று எங்கும் பதிவு இல்லை.

எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ

கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை தானோ?

பி.சுசீலா குரலில் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இந்த பாடலில்,

எண்ணாத எண்ணம் எல்லாம்

எண்ணி எண்ணி ஏங்குறேன்

எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்த நாளோ

என பாடல் கேட்க கேட்க ஏங்க வைக்கும்.

மிகச்சிறந்த தத்துவப்பாடல்களையும் வி.சீத்தாராமன் எழுதியுள்ளார். 1967ம் ஆண்டு வெளியான ஆர்.முத்துராமன், ஏவிஎம்.ராஜன் நடித்த மனம் ஒரு குரங்கு படத்தில் டிபி.ராமச்சந்திரன் இசையில் சீத்தாராமன் எழுதிய இந்த பாடலை பாடியவர் டிஎம். சௌந்தரராஜன்.

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்

தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்

பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

இந்த படத்தில் முத்துராமன், கேஆர்விஜயா நவநாகரீக உடையணிந்து பாடும், போகிறேன் புதிய உலகம் போகிறேன் பாடலையும் சீத்தாராமன் தான் எழுதினார். இதே படத்தில் சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய வித்தியாசமான பாடலையும் சீத்தாராமன் எழுதியுள்ளார்.

பட்டணத்து சந்தையிலே கூடைக்காரி – அன்று

பகல் வேஷம் தெரியாத வேலைக்காரி

பட்டணத்து பகட்டுக்கெல்லாம் சொந்தக்காரி- பலர்

பார்வையிலே வெறியூட்டும் ஜாலக்காரி….

மனம் ஒரு குரங்கு படத்தில் சூட்டிங் எடுப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும். கேஆர்.விஜயா ஆடுவது போன்ற காட்சி எடுக்கப்படும். இயக்குநர் வேறு யாருமல்ல, நடிகர் சதன்.

ருப்புக்கோட்டை மச்சான்

ஆசை என்மேல் வச்சான்

துருப்பு சீட்டு போட்டு

வெட்டி தூண்டில் போட்டு வச்சான் …. என்ற இப்படியொரு பாடலையும் சீத்தாராமன் தான் எழுதினார்.

பியூட்டிபுல் மார்வெலஸ் எக்சல்ண்ட்

நான் பிறந்திருக்க வேண்டியது இங்கிலாந்து… என சோ, சச்சு டூயட் பாடும் பாடலையும் அவர் தான் எழுதினார்.

மாலையும், மங்கலமும் படத்தில் சீத்தாராமன் எழுதிய, சிங்காரவேலா விளையாட வா

என்னுடன் விளையாடவா என்ற பாடலை டிஏ.கல்யாணம், டிஎம்.சௌந்தரராஜன், என்எல்.ஞானசரஸ்வதி பாடியுள்ளனர். மிகச்சிறந்த இசைமாலையான இப்பாடலுக்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

1959ம் ஆண்டு கேவி.சீனிவாசன் இயக்கத்தில் வெளியான படம் கண் திறந்தது.டிஆர்.ராஜகோபால் இசையில் சீத்தாராமன் எழுதி பி.சுசீலா பாடிய

என் மனம் அறிவாளோடி

அவன் என் மனம் அறிவாளோடி…. என்ற புகழ்பெற்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இதே படத்தில் பெண்களைக் கண்டாலே மனம், புதுவாழ்வு வருமோடா, பார்த்தேனே உன்னை பார்த்தேனே உள்ளிட்ட பாடல்களையும் சீத்தாராமன் எழுதியுள்ளார். காதல்,வீரம்,சோகம், நகைச்சுவை என இத்தனை பாடல்களை எழுதிய வி.சீத்தாராமன் பெயர், விக்கி பீடியா  தமிழக பாடலாசிரியர்கள் பட்டியலில் இல்லை என்பதை விட மிகப்பெரிய சோகச்செய்தி வேறு என்ன இருந்து விட முடியும்?

=========

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. மனதின் ஆசையை தூண்டிய குரல் - ப.கவிதா குமார்
 2. சிவாஜி, ரஜினியை இயக்கியும் தோல்வியடைந்த இயக்குநர்-- ப.கவிதா குமார்
 3.  ஏழு சுவரங்களில் எத்தனைப் பாடல்:வாணி ஜெயராம் - ப.கவிதா குமார்
 4. கோழிக்கறி கேட்டதற்காக சென்சார் செய்யப்பட்ட பாடல்- ப.கவிதா குமார்
 5. கண்மணி சுப்பு: கவியரசு வீட்டுக்கட்டுத்தறி- ப.கவிதா குமார்
 6. வித்வான் வே.லட்சுமணன்  ஜோசியக்காரர் மட்டும்தானா? - ப.கவிதா குமார்
 7. ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை: வங்கத்துக் குயில் எம்ஆர்.விஜயா - ப.கவிதா குமார்
 8. தென்னாட்டு தமிழ்க்குரல்  விஎன்.சுந்தரம்-ப.கவிதா குமார்
 9. ’புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே’ :கவி சீமான் கேபி. காமாட்சி- ப.கவிதா குமார்
 10. ''தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்'':யார் இந்த நேதாஜி? - ப.கவிதா குமார்
 11. ஜாவர் சீத்தாராமன் சரி... அது யார் ராஜ் சீத்தாராமன்?- ப.கவிதா குமார்
 12. மனோவின் முன்னோடி ...மறக்க முடியாத பாடகர் ரமேஷ்- ப.கவிதா குமார்