அங்கே என்ன சத்தம்? – 15
ஒரு படம், அது வணிகப் படமாக இருக்கும் போது கூட, அது பெருமளவில் மக்களிடம் போய் சேர, மக்களின் நினைவுகளில் நீங்காது இடம் பெற, அது சில முக்கியமான விழுமியங்களைக் தன்னிடத்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார் தனது Story எனும் நூலில் ராபர்ட் மெக்கீ. இந்த விழுமியத்தைத் தான் நாம் தமிழில் ‘கதை’ என்கிறோம். ஒரு படம் நம் மனதுக்கு நெருக்கமான கதையைக் கொண்டிருந்தால் ‘கருத்தான படம்’ என்கிறோம். அதென்னங்க கருத்து எனக் கேட்டால், ‘கதை சிறப்பாக இருக்கிறது’ என பதில் சொல்வோம்.
‘அது என்னங்க கதை?’
‘நல்ல கருத்துள்ள கதைங்க’
‘அதென்னங்க கருத்து?’
‘கருத்துன்னா கதைங்க’
இப்படி முடிவற்று இந்த உரையாடல் போகும்.
ஆனால் சினிமாவில், குறிப்பாக வணிகப் படங்களில், நாம் ‘கருத்துக்களைக்’ காண்பதில்லை. சினிமாவில் நாம் உணர்ச்சிகரமான தருணங்களை, கேளிக்கையை, கொண்டாட்ட காட்சிகளை, ஆக்ரோஷத்தை, வியப்புற வைக்கும் பிம்பங்களைக் காண்கிறோம். இவை ஒன்றாக நம்மை உணர்ச்சி மேலிட்டு கிளைமேக்ஸ் வரை அழைத்து செல்வதைக் காண்கிறோம். இதற்கிடையே கருத்து எங்கே வந்தது? ஆனால் மிகப்பிடித்த படங்களில் எல்லாம் நாம் ஒரு கருத்துநிலையை உணர்கிறோம். அது நம்முடைய நம்பிக்கைகளின் உலகைக் கட்டமைக்கிறது. அது தேர்தல் அரசியலை, சமூக அசைவுகளை பாதிக்கிறது. நம் அன்றாட உரையாடலைக் கூட பாதிக்கிறது.
ஒரு காலத்தில் இளைஞர் கூட்டம் தம்மை எம்.ஜி.ஆராகவும் பின்னர் ரஜினியாகவும் நம்பியதற்கு அவர்களின் நடிப்புக்கு அல்ல இந்த ‘கருத்துக்கே’ பிரதான இடமுண்டு என்பேன். அவர்கள் இந்த ‘கருத்துக்கு’ தம் சினிமாக்களின் வழி புதுப்புது வடிவங்கள் அளித்தார்கள். ‘கருத்து’ இல்லையெனில் எம்.ஜி.ஆர் கையை முறுக்கி வானை நோக்கி உயர்த்தி பாடும் வரிகளுக்கு அர்த்தமிருக்காது; திராவிட இயக்க சிந்தனையில்லை எனில் அவரது கணிசமான வெற்றிப்படங்கள் மக்களின் மனதைத் தொட்டிருக்காது. ‘கருத்து’ இல்லையெனில் ரஜினியின் ஸ்டைல் நமக்கு பைத்தியக்காரத்தனமாகப் படும். “இது எப்படி இருக்கு?” எனும் வசனத்தை நாம் பாரதிராஜா உருவாக்கிய பாத்திர அமைப்பில் இருந்து, அது பொருந்தி இருந்த திரைக்கதையில் இருந்து, பிற பாத்திரங்களின் கருத்துநிலைகளில் இருந்து பிரித்து விட முடியுமா? சப்பாணி இல்லாமல் அந்த வசனத்துக்கு என்ன மதிப்பு? “கெட்டபய சார் இந்த காளி”யும் அப்படித் தான். இந்த ஸ்டைல் என்பது அப்படங்களின் கருத்தோட்டங்களின் கிளையாக இருந்தது. அந்த கிளையில் தோன்றிய அழகிய மலராக ரஜினி இருந்தார். ஆனால் ‘கருத்து’ இல்லையெனில் அந்த கிளை முறிந்து விடும். அதன் பின்னர் ரஜினியின் பிம்பம் ஒரு தனி கருத்தமைவாக உருக்கொண்டாலும் ஒவ்வொரு காலத்திலும் திரைக்கதையாளர்கள் அவரை உயிர்ப்பித்தார்கள்; அண்மை உதாரணம் ரஞ்சித் பங்களித்த தலித் ‘கருத்து’. இந்த கருத்துக்கு மேற்கத்திய திரைக்கதை மொழியில் உள்ள பெயர் தான் ‘விழுமியம்’.
இந்த விழுமியம் என்பது ஒழுக்க விழுமியம் அல்ல. இது அப்படத்தின் மையக் கருத்தோட்டத்துடன் (controlling idea) உடன்படுகிற ஒரு நம்பிக்கை என விளக்கலாம். இந்த விழுமியமே அப்படத்துக்கு ஒரு திசையை, அர்த்தத்தை அளிக்கும்.
சில படங்களைப் பார்க்கும் போது “இதில கதையே இல்லையே” என நாம் உணர்வோம். அல்லது இது பிளாஸ்டிக்காக இருக்கிறது, இது நிறைவளிக்கவில்லை, இது மனதைத் தொடவில்லை என சொல்லுவோம். ஆனால் இப்படங்களில் ‘கதை’ என ஒன்று இருக்கும், அக்கதைக்கு ஒரு விழுமியம் தான் தெளிவாக சொல்லப்பட்டிருக்காது. “தர்பார்” படத்தை எடுத்துக் கொண்டால் அதில் ஒரு விழுமியம் இருக்கலாம், ஆனால் அது தெளிவாக இல்லை – அப்படத்தின் ஒற்றை வரியை அமைத்து “ஏன்” எனும் கேள்வியை எழுப்பி ஆழமாக அலசினால் விழுமியம் துலங்க வேண்டும், அலைகள் அடங்கியதும் நீரின் தரை தெரிவது போல. தீயவர்களை அழிப்பதற்காக சட்டத்தை வளைக்கத் தயங்காத ஒரு துணிச்சலான போலீஸ் அதிகாரியின் (நாயகன்) மகளை ஒரு சர்வதேசக் குற்றவாளி (வில்லன்) கொல்லுகிறான்; ஏனெனில் வில்லனின் மகனை நாயகன் கொன்று விட்டான். இப்போது இரண்டு அப்பாக்கள் ஒரே நோக்கத்துக்காக பரஸ்பரம் மோதுகிறார்கள் – இவர்களில் தீமையை முறியடித்து நன்மை வெல்லுமா? இப்போது முதல் கேள்வியைக் கேட்போம் – ஏன் வில்லனின் மகனை நாயகன் கொல்ல வேண்டும்? அவனை சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதால். எனில் இந்த படத்தின் விழுமியம் என்பதை ‘சட்டநடைமுறைகளில் அர்த்தமில்லை, தீமையை கண்ட இடத்திலேயே அழித்து விடு’ என்பது. ஆனால் இந்த விழுமியமானது படத்தின் முதல் முக்கால் மணிநேரத்திலேயே நிறுவப்பட்டு விடுகிறது; பிற்பகுதி கதையில் நாம் அதற்கு மேல் எதையும் தெரிந்து கொள்வதில்லை. கதை திசையற்று அலைகிறது, ஏனெனில் அது தனது விழுமியத்தை தொலைத்து வெறும் வன்முறைக் காட்சிகள், காதல், பாசம் என சம்மந்தமின்றி பேசுகிறது. பாதி படத்துக்கு மேல் பார்வையாளனுக்கு அலுப்பு தட்டுகிறது.
ஒரு படத்தின் விழுமியமானது சரியாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு அது திரைக்கதையின் முதல் காட்சியில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்டு 60 மற்றும் 90வது நிமிடங்களின் போது வரும் இரண்டு தலைகீழ் மாற்றங்களின் (major reversals) போது புதிய வடிவம் பெற்று, கிளைமேக்ஸில் நிறைவான முற்றுக்கருத்தைத் தருவதே ‘நல்ல கதை’. இதற்கு நல்ல மற்றும் சற்றே மோசமான உதாரணங்களை ஹாலிவுட் மற்றும் தமிழ்ப் படங்களில் இருந்து அடுத்து தருகிறேன்.
பிரான்ஸிஸ் போர்ட் கப்போலாவின் “காட்பாதர்” படங்களைக் கண்டிருப்பீர்கள். உலகம் முழுக்க மாபியா படங்களுக்கு உன்னதமான டெம்பிளேட் இப்படங்களே. ஒரு சாமான்ய மனிதன் சந்தர்ப்ப சூழலால் குற்றவாழ்க்கைக்குள் வருகிறான், அது பின்னர் அவனது தொழிலாகிறது, புலியின் முதுகில் ஏறியதைப் போல இனி அவனால் அதை விட முடியாது, விட்டால் தனக்கும் குடும்பத்துக்கும் ஆபத்து எனும் நிலை ஏற்படுகிறது. ஆனாலும் அவன் வன்முறையில் இருந்து மெல்ல மெல்ல விலகி ஓரளவுக்கு சமூகம் மதிக்கிற தொழில்களுக்குள் செல்ல விரும்புகிறான். ஆனால் சூழல் மீண்டும் அவனை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. அடுத்தடுத்து என்னவாகும் என்பது தான் “காட்பாதர்” 1, 2 மற்றும் 3 படங்களின் ஒற்றை வரி (அப்பா காட்பாதருக்குப் பிறகு அவரது மகன்களின் வாழ்க்கை காட்டப்படும் போது ஒற்றைசரி கிட்டத்தட்ட மாறாமலே நீடிக்கிறது). இந்த ஒற்றை வரியின் “எப்படி இது நிகழ்கிறது?” எனும் கேள்வியை மட்டுமே நான் இங்கு எடுத்துக் காட்டியிருக்கிறேன். “ஏன் இப்படி அவனுக்கு நிகழ்கிறது?” எனும் கேள்விக்கு அடுத்து வருவோம். அது தான் காட்பாதரின் விழுமியம்; அது தான் காட்பாதரை பிற மாபியா தலைவர்களிடம் இருந்து, கொலைகாரர்கள், கள்ளக்கடத்தல்காரர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது.
“காட்பாதரின்” நாயகனான விட்டோ கோர்லியானோ நீதியை நம்புகிறார் (இரண்டாம் பகுதி). தன்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே தனக்கு நீதி மறுக்கப்படுவதாக நம்புகிறார். அவர் செய்யும் முதல் குற்றமே தான் நடத்துகிற தொழிலை உருக்குலைக்க நினைக்கும் ஒரு சிறிய தாதாவை கொல்வது தான். அடுத்து அவர் இத்தாலியின் ஒரு கிராமத்துக்குச் சென்று சின்னவயதில் தன்னுடைய குடும்பத்தை அழித்த ஒரு உள்ளூர் தாதாவைக் கொல்கிறார். பின்னர் அவரது கடத்தல் வணிகம் கொழிக்கிறது. துயரப்படும் எளிய மக்களுக்கு எந்த உதவியும் செய்யத் தயாராக அவர் இருப்பதையும் படம் காட்டுகிறது. இந்த கோர்லியானோ தான் முதல் பாகத்தில் மயக்கமருந்துகளை கடத்தும் வியாபாரத்தை தான் பண்ண முடியாது என சொலோசா எனும் கடத்தல்காரனுக்கு சொல்கிறார். அதற்கு கோர்லியானோ சொல்லும் காரணம் இந்த தொழில் ஆபத்தானது, அரசியல்வாதிகளின் ஆதரவை தான் இதனால் இழக்க நேரிடும் என்பது. அதாவது தான் தவறு செய்வேன், ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு என அவன் வகுத்து வைத்திருக்கிறார். இந்த விழுமியம் பிடிக்காததனால் தான் சொலோசா கோர்லியானோவை அழிக்க அவரது எதிரி மாபியா குடும்பமான தத்தாலியாக்களின் உதவியை நாடுகிறான். இப்போது இரு குடும்பங்களுக்கும் மோதல் ஆரம்பிக்கிறது. தத்தாலியாக்களின் அடியாட்களை பயன்படுத்தி சொலோசா காட்பாதரைக் கொன்று, அவரது மூத்த மகனைக் கொண்டு தனக்கு சாதகமான ஒரு வணிக ஒப்பந்தத்தை ஏற்படுத்தலாம் என திட்டமிடுகிறான். காட்பாதர் தாக்கப்படுவது தான் இத்திரைக்கதையின் பிரதான சம்பவம் (key incident). இதன் விளைவாகத் தான் படமே ஆரம்பிக்கிறது – பணத்துக்காக எதையும் செய்யலாம் எனும் புதிய தலைமுறை மாபியா கும்பலுக்கும் குற்றவாழ்க்கைக்கும் ஒரு நெறிமுறை, விழுமியம் வேண்டும் என நம்புகிற பழைய தலைமுறை மாபியாக்களுக்கும் மோதல் வலுக்கிறது. ஆனால் சொலோசா எதிர்பார்த்ததைப் போல காட்பாதர் சாகவில்லை, அவரது மூத்த மகனும் சமாதானத்துக்கு தயாரின்றி முழுமூச்சாக எதிரிகளை அழிக்கத் துணிகிறான். கடுமையான உயிர்சேதங்கள் இரு பக்கமும். இது இத்திரைக்கதையின் அடுத்த திருப்புமுனை. இதற்கு அடுத்து என்னவாகும் என்பது பிற்பகுதி காட்பாதர் படத்தின் கதை.
இப்போது மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்போம் – விட்டோ கோர்லியானோ நினைப்பது சரி தானா? ஒரு குற்றத்துக்குள் நல்ல குற்றம், மோசமான குற்றம் என ஒன்று உண்டா? கடத்தலும் சூதாட்டமும் சமூகத்தை கெடுப்பதை விட மோசமாகத் தான் போதை மருந்துத் தொழில் கெடுக்கிறது. ஐயமில்லை. ஆனால் இரண்டிலும் நிகழ்த்தப்படும் கொலைக்குற்றங்கள், கறுப்புப்பணம், சட்டத்தை மீறிய செயல்கள் தவறு அல்லவா? நீங்கள் நல்லது என நம்பும் ஒன்றுக்காக கொல்லும் போது நேரும் பாவத்தை சுலபத்தில் கழுவி விட முடியுமா? நல்ல மனத்துடன் குற்றவாழ்க்கைக்குள் புகுந்திட நேரும் ஒருவன் முடிந்தளவுக்கு தன்னை நீதிவானாக நினைக்க முயல்கிறான்; ஆனால் அவன் தோற்றுக் கொண்டே போகிறான். அவன் குற்றவாழ்வில் நீதியை நிலைநாட்ட நாட்ட பல அநீதிகளையும் அதற்காக அவன் செய்ய நேர்கிறது. எனில், நீதி என்றால் என்ன? சரி-தவறு எனும் இருமைக்குள் அடங்காத ஒன்று தான் நீதியா? இந்த தத்துவார்த்தமான கேள்விகள் காட்பாதர் படங்களில் திரும்பத் திரும்ப எழுப்பப்படுகின்றன.இவை தாம் இப்படங்களின் ‘கருத்து’.
இப்படங்களின் திரைக்கதையே இந்த கேள்விகளை மேலும் மேலும் சிக்கலாக்கும்படியே அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்பாதர் படத்தின் துவக்கமும் முடிவும் இந்த விழுமியங்கள் குறித்த விசாரணையுடன் நுட்பமாகத் துவங்கி அவ்வாறே முடிகின்றன. கதையின் போக்குடன் அவ்வளவு சாமர்த்தியமாக பின்னப்பட்டுள்ளதாலே நமக்கு இப்படி ஒரு விவாதம் உள்ளதே வெளியே துருத்திக் கொண்டு தெரிவதில்லை. அதனாலே தான் வியப்புடன் இப்படங்களை திரும்பத் திரும்பப் பார்க்கிறோம். ஆனால் இந்த விவாதங்கள் தாம் இப்படங்களை வெறும் சாகசப் படங்களாக அல்லாமல் வாழ்க்கையை பெரிதும் ஒத்திருக்கிற படங்களாக நம் மனத்தில் பதிந்துள்ளன. தொடர்ந்து அரை நூற்றாண்டாய் இப்படங்களை பேச வைக்கின்றன.
அமைதியைக் கோரும், நீதியைக் கோரும் ஒருவன் அதற்காக கடுமையான வன்முறைச் செயல்களில் பங்கெடுக்க நேரலாம் என்பது “காட்பாதர்” படங்களின் மையக் கருத்தோட்டம். ஒரு மனிதன் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க மிருகமாக மாற நேரிடும், அது அவனது அறம் என்பது இந்த மையக் கருத்தோட்டத்தின் விழுமியம். , ஆனால் அந்த அறத்துக்குள் அநீதி ஒரு முரணாக இருக்கிறது என்னும் எதிர்-விழுமியமும் (counter-idea) சேர்ந்து கொள்கிறது. ஒரு படத்துக்கு நகைமுரண் தொனியை கொடுப்பதற்கு, அதன் மூலம் அதை மேலும் எதார்த்தமாக, உண்மையாக, ஆழமாகக் காட்ட இப்படி விழுமியமும் எதிர்-விழுமியமும் பின்னிப்பிணைந்து வருவது அவசியம் என்கிறார் மெக்கீ. நாயகன் தான் நம்புகிற அறத்துக்காக சிலநேரம் தன் காதலியை பலிகொடுக்க நேரலாம், சொந்த சகோதரனைக் கொல்ல நேரலாம், தான் நம்பாத வாழ்க்கை ஒன்றை வாழ நேரலாம், அவன் இரண்டாக உடைந்து போய் விடலாம் – இப்படி நாம் இந்த விழுமியம் அவன் வாழ்வில் ஏற்படுத்துகிற விளைவுகளைப் பட்டியலிடலாம். இப்போது அவனுடைய தத்தளிப்பானது, தவிப்பானது ஒரு லட்சிய நாயகன் ஒரு நிறுவனத்துக்குள் (அது கட்சியோ சமூகமோவாக இருக்கலாம்) எதிர்கொள்கிற போராட்டத்தினால் விளைகிறதாக நமக்குத் தோன்றுகிறது; ஒரே வித்தியாசம் அவனது நிறுவனம் குற்றத்தின் நிழல்கள் பரவிய இந்த சமூகம் என்பது. நன்மையின் சிறுகீற்று கூட விழாத இந்த உலகம் என்பது. காட்பாதர் மூன்று பாகங்களில் தான் நம்புகிற விசயங்களுக்காக, தான் நேசிக்கிற மனிதர்களுக்காக செய்யும் கொடுங்குற்றங்கள் நம்மை வியந்து போற்றவும் கசந்து வெறுக்கவும் செய்கின்றன. கிட்டத்தட்ட நம்முடைய அப்பா மீது நமக்கு ஏற்படும் மட்டற்ற அன்பும் அர்ப்பணிப்பும் அவற்றின் பின்னே ஒரு கசப்பை, அருவருப்பைக் கொண்டுள்ளன அல்லவா? ஒரு அன்பான அப்பாவை சற்றே கோபக்காரராகக் காட்டினால் நமக்கு அது பாசத்தின் உச்சமாகத் தெரிகிறதே ஏன்? இதனால் தான். (நுட்பமாக நோக்கினால் ஒருவித ஈடிபல் காம்பிளக்ஸை காட்பாதர் படங்களில் காணலாம்) வாழ்க்கை இப்படி முரண்களால் நிறைந்தது என்கிறார் மெக்கீ. சினிமாவில் இந்த முரண்கள் சரியாக கையாளப்படும் போது அப்படம் ஒரு கிளாசிக் ஆகிறது. “காட்பாதர்” படங்களைப் போல காலத்தால் அழியாத புகழ் பெறுகின்றன. அதற்குத் தான் விழுமியங்களும் எதிர்-விழுமியங்களும் மாறி மாறி சித்தரிக்கப்பட வேண்டியதாகிறது. ஒன்று மட்டுமே இருந்தால் அது மிகையான ஹீரோயிசமாக, செண்டிமெண்டல் படமாகும் அல்லது மிகையான துன்பியல், anti-hero படமாகும்.
மக்கள் பெருமளவில் இந்த விழுமியங்களுடன் உடன்பட நேர்நததே இப்படங்கள் வெற்றி பெற ஒரு காரணம். ஆனால் அது மட்டுமல்ல இப்படங்களின் கதையமைப்பு, சினிமா மொழி இந்த விழுமியத்தை தமக்குள் பொதிந்து வைத்திருந்ததும் முக்கிய காரணம் எனலாம். நாம் இந்த விழுமியத்தின் காட்சி வடிவமாகவே “காட்பாதர்” படங்களை திரையில் கண்டோம். மைக்கேல் கோர்லியோனோ (விட்டோ கோர்லியோனோவின் கடைசி மகன்) – உள்ளுக்குள் அமைதியான நிதானமான வாழ்க்கையை கோருகிறவனாக இருக்கிற மைக்கே கோர்லியானோ, குற்றவாளிகள் நிறைந்த குடும்பத்தில் ரொம்ப அப்பாவியாக வாழ்ந்த மைக்கேல் கோர்லியானோ – கூலாக ஒரு உணவகத்தில் வைத்து ஒரு காவல்துறை அதிகாரியை தலையில் சுட்டு விட்டு வெளியேறுகிற காட்சிக்கு நாம் கைதட்டினோம். தொடர்ந்து அவனது ஒவ்வொரு செயலும், அதன் எதிர்விளைவும் நம்மை சிலாகிக்க செய்தது. இதே விழுமியத்தை இந்தியச் சூழலுக்கு தகவமைத்து (பெரும்பாலும் சாதி மேலாதிக்கத்தை கொண்டாடுகிற) படங்கள் இங்கு தோன்றின. “நாயகன்” மற்றும் “தேவர் மகன்” உடனடியாக நினைவுக்கு வருகிற உதாரணங்கள். அப்படங்களின் திரைக்கதை எப்படி அமைந்துள்ளது என அடுத்து பார்ப்போம்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
14. சினிமாவில் போதனை இருக்கலாமா?- https://bit.ly/2TZpxN8
13. பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல்- https://bit.ly/2QpCTjh
12.அலைபாயுதே’ – திரைக்கதை நுணுக்கங்கள்- https://bit.ly/2vyqCCb
11.தனிமையின் காதலே நட்பு- https://bit.ly/33w4JzG
10.ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?- https://bit.ly/2QqQx63
9.பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- https://bit.ly/3a2CSJT
8.அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- https://bit.ly/392trZQ
7.காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- https://bit.ly/33tiHCB
6.எனது நண்பன் எனது நண்பன் அல்ல- https://bit.ly/2xTmygJ
5.ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?- https://bit.ly/2U1ZmW0
4.நிழல் நிஜமாகிறது- https://bit.ly/3a3P9xM
3.பாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்- https://bit.ly/2QuC09r
2.தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர்- https://bit.ly/2Qsg1jn
1.யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன்- https://bit.ly/33AmePx
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- திரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்
- கிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும்? - மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை - ஆர். அபிலாஷ்
- ’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை - ஆர். அபிலாஷ் (பெங்களூர்)
- கொரோனோ பயங்கரமும் பா.ஜ.க அரசின் கார்பரேட் பயங்கரவாதமும் - ஆர். அபிலாஷ்
- முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது?- ஆர். அபிலாஷ்
- சினிமாவில் போதனை இருக்கலாமா?- ஆர். அபிலாஷ்
- பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் - ஆர். அபிலாஷ்
- ‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்
- தனிமையின் காதலே நட்பு- ஆர். அபிலாஷ்
- ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?- ஆர். அபிலாஷ்
- பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- ஆர். அபிலாஷ்
- அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- ஆர். அபிலாஷ்
- காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- ஆர். அபிலாஷ்
- எனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்
- ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?- ஆர். அபிலாஷ்
- நிழல் நிஜமாகிறது - ஆர்.அபிலாஷ்
- சத்யன் அந்திக்காடு: தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர் - ஆர். அபிலாஷ்
- யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன் - ஆர்.அபிலாஷ்