காற்றினிலே வரும் கீதம்-7
வித்வான் வே.லட்சுமணன்…..
இந்தப் பெயரைக் கேட்டவுடன் உங்களுக்குச் சட்டென என்ன தோன்றும்? பிரபல ஜோதிடராயிற்றே என்று தானே? அப்படி இவரை அவ்வளவு எளிதாகச் சுருக்கி விட முடியுமா? முடியாது என்கிறேன் நான்.
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ஆஸ்தான ஜோதிடர் என்பதைத் தாண்டி வே.லட்சுமணனுக்கு பல முகங்கள் உண்டு. கதை வசனக்கர்த்தா, திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என அவர் பயணித்த பாதை மிகப்பெரியது.
எம்ஜிஆர் இயக்கத்தில் மகத்தான வெற்றி பெற்ற “நாடோடி மன்னன்” படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் படத்தின் கதை, வசனம் தான். அப்படத்தின் கதை இலாகாவில் இருந்தது மூன்று பேர். அவர்கள் ஆர்எம்.வீரப்பன், வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகிய மூவர் தான்.
இதே போல எம்ஜிஆர் இயக்கிய” அடிமைப்பெண்” படத்தின் கதை எழுதியதும் ஆர்எம்.வீரப்பன், வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோர் தான். இப்படி மகத்தான பல வெற்றிப் படங்களில் எம்ஜிஆரின் பின்னணியில் இருந்த வே.லட்சுமணனை, திடீரென பட அதிபராக்கியவரும் எம்ஜிஆர் தான்.
எம்ஜிஆர் உருவாக்கிய உதயம் புரடொக்சன் கம்பெனியின் இரண்டு முதலாளிகள் பத்திரிகையாளர் மணியன், வே.லட்சுமணன் தான். இவர்களுக்காக இந்த பேனரில் எம்ஜிஆர் நடித்த படம் “இதயவீணை”. மிகப்பெரிய வெற்றிப்படம் . எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த படம் “சிரித்து வாழ வேண்டும்”. உதயம் புரொடக்சன் தயாரிப்பான இப்படத்தை ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியம், எஸ்எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கினார். இந்த படமும் மகத்தான வெற்றி பெற்றது. உதயம் புரொடக்சனின் அடுத்த தயாரிப்பும் மகத்தான வெற்றி படம் தான்
சாந்தாராமின் “தோ ஹாங்கி பாராத்” என்ற இந்தி படத்தை “பல்லாண்டு வாழ்க” என்ற பெயரில் வெளியான இந்த படம் தயாரிப்பாளர்களுக்கு லெட்சுமி கடாச்சமாக்கியது.இந்தியில் இறுதியில் கதாநாயகன் இறந்து விடுவார். ஆனால், எம்ஜிஆருக்காக பல்லாண்டு வாழ்க படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதெல்லாம் தனிக்கதை.
தன்னை நம்பி வந்தவர்களுக்கு உதவிடும் பண்பு எம்ஜிஆரிடம் இருந்தது என்பதற்கு அவர் துவக்கிய உதயம் புரடொக்சன் கம்பெனியே சான்று. 6 படங்களை இவர்கள் தயாரித்துள்ளனர். அதற்காக எம்ஜிஆர் நிழலில் இருந்து தான் வித்வான் வே.லட்சுமணன் வளர்ந்தவர் என்ற நினைப்பு இருந்தால் அதை தூர எறிந்து விடுங்கள்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் படத்திலேயே வித்வான் வே.லட்சுமணன் தனது பாட்டுப் பயணத்தை துவக்கி விட்டார். 1952ம் ஆண்டு சுரதா எழுதிய “அமரகவி” படத்தை எப்.நாகூர் இயக்கினார். இப்படத்திற்கு ஆர்.ராமநாதன், டிஏ.கல்யாணம் இணைந்து இசையமைத்தனர். இப்படத்தில், தியாகராஜ பாகவதர், டிஆர்.ராஜகுமாரி உள்பட பலர் நடித்திருந்தனர்.
முல்லைச் சிரிப்பிலே எல்லாம் என் கையிலே மூவுலகும் வசமாகாதோ வண்டாக நான் பறந்து ….
என்ற பாடலை இப்படத்திற்காக வித்வான் வே.லட்சுமணன் இயற்றினார். இப்பாடலை பி.லீலா, என்எல்.ஞானசரஸ்வதி இணைந்து பாடினர்.
1959ம் ஆண்டு சுதர்ஸன் பிக்சர்ஸ் தயாரித்த “அவள் யார்” என்ற படத்திற்கு கதை, வசனம் மட்டுமின்றி பாடல்களையும் எழுதினார் வே.லட்சுமணன்.
“நான் தேடும் போது நீ ஓடலாமோ, கண் காணும் மின்னல் தானோ, பட்டுப்பூச்சி போலும் ராணி” போன்ற பாடல்கள் தமிழ் திரையுலகில் லட்சுமணனை பிரபல பாடலாசிரியராக்கியது. வே.லட்சுமணனின் திறமைக்கு தீனி போட்டவர் என்றால் அது வீணை பாலச்சந்தர் தான். தமிழ் சினிமாவின் தனித்த அடையளமாக விளங்கியவர் வீணை பாலச்சந்தர். அவர் இயக்கிய படங்களில் வே.லட்சுமணன் பெரும் பங்கு வகித்துள்ளார்.
1962ம் ஆண்டு வீணை பாலச்சந்தர் இயக்கிய “அவனா இவன்?” திரைப்படத்தின் திரைக்கதை, வசனத்தை பாலச்சந்தருடன் இணைந்து எழுதியவர் வே.லட்சுமணன். அத்துடன் வீணை பாலச்சந்தரின் அற்புதமான இசையில் எல்ஆர்.ஈஸ்வரி, ரேணுகா பாடிய,” கல்யாண பொண்ணு கலங்காதே”, பி.சுசீலா பாடிய “கல்யாண திருநாள்”, எல்ஆர்.ஈஸ்வரி, கமலா பாடிய “மனம் விட்டு”, ராதா ஜெயலட்சுமி பாடிய வானம் ஆயிரம் சூழ, சதன் , சீதா பாடிய “வள்… வள்.. வள்ளி.. வள்… வள்.. வள்ளி”, “ஐ லவ்யூ ட்ரூலி ப்ளீஸ்” என்ற வித்தியாசமான பாடல்களையும் வே.லட்சுமணன் எழுதியுள்ளார்.
1964ம் ஆண்டு சார்லி – மணியம் இயக்கத்தில் வெளியான “நல்வரவு” படத்தில் டி.சலபதிராவ் இசையில் 6 பாடல்களை மட்டுமின்றி கதையையும் வித்வான் வே.லட்சுமணன் தான் எழுதினார். இதில் எல்ஆர்.ஈஸ்வரி பாடிய. “ஆசையுடன் அவர் அணைத்தார் நாணாமலே” பாடலை ரசிக்கலாம்.
1964ம் ஆண்டு வீணை எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் “பொம்மை” திரைப்படத்தின் கதை வே.லட்சுமணன் எழுதியது தான். அத்துடன் இப்படத்தில் 6 பாடல்களையும் அவர் எழுதியுள்ளார். கானகந்தர்வ குரலோன் கேஜே.யேசுதாஸ் தமிழில் இவர் எழுதிய பாடலை பாடி தான் அறிமுகமாகியுள்ளார். அந்த பாடல்,
“நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை…”
பழுத்த ஆன்மிகவாதியான வே.லட்சுமணன் இந்த பாடலில் இப்படி எழுதினார்,
“தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
கோயிலில் வாழும் தெய்வமும் பொம்மை – அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை….”
இப்படி யோசித்த லட்சுமணன், அற்புதமான நடனப்பாடலையும் இப்படத்திற்காக எழுதியுள்ளார். எல்.விஜயலட்சுமி நடனமாடும் இந்த பாடலை பி.சுசீலா பாடியுள்ளார்.
“எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்
எப்போடியோ என் மனதைக் கவர்ந்தவராம்…”
இந்த விஜயலட்சுமி தான், குடியிருந்த கோயில் படத்தில் எம்ஜிஆருடன் ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடலுக்கு நடனமாடியவர். பிற்காலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
கருப்பு, வெள்ளை காலப்படங்களில் குழந்தை கேரக்டர்களுக்கு பாடல் வழங்கப்படுவது வாடிக்கையாகவே இருந்தது. அப்படித்தான் “பொம்மை” படத்தில் ஒரு பாடல் உள்ளது. சிறுமிக்கு எல்ஆர்.ஈஸ்வரி குரல் கொடுத்திருப்பார். புகழ்பெற்ற இந்த பாடலை வே.லட்சுமணன் தான் எழுதியுள்ளார்.
“தத்தித்தத்தி தத்தித்தத்தி நடந்து வரும்
தங்கப் பாப்பா நீ இத்தனை நாள்
எங்கிருந்தாய் சொல்லு பாப்பா…”
இந்தப் பாடலுக்கு படத்தின் மெயின் கேரக்டரான பொம்மையும் நடித்துள்ளது. இப்படத்தில் பி.சுசீலா பாடிய “நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன்” என்ற பாடலையும் வே.லட்சுமணன் எழுதியுள்ளார்.
இந்திய அளவில் எடுக்கப்பட்ட திகில் படங்களில் இன்றளவும் தமிழில் பெயர் சொல்லும் படமாக இருப்பது “நடுஇரவில்” திரைப்படம் தான். 1970ம் ஆண்டு வீணை பாலச்சந்தர் இயக்கிய படமிது. 24 கேரக்டர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், அகதா கிறிஸ்டி எழுதிய And Then There Were None என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. மேஜர் சுந்தர்ராஜன், பண்டரி பாய், சௌகார் ஜானகி, வீணை பாலச்சந்தர் உள்பட பலர் நடித்திருந்தனர். அடுத்தடுத்து நடக்கும் கொலைகளை செய்தவர் யார் என்பதை யூகிக்க முடியாதபடி கதை சொல்லப்பட்ட படம்.
இந்த படத்தின் திரைக்கதை வே.லட்சுமணனும், வசனத்தை வீணை பாலச்சந்தரும் எழுதினர். இந்த படத்தின் இசையும் வீணை பாலச்சந்தர் தான். மௌனத்தை விட சிறந்த இசை இல்லையென்பதை இந்த படத்தைப் பார்க்கும் போது நீங்கள் உணரலாம். இந்த படத்தில் பி.சுசீலா பாடிய இந்த பாடல் வே.லட்சுமணன் எழுதிய சிறந்த பாடல் என்று கூறலாம்.
“கண்காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்
அந்த காவியத்தில் சோகமெனும் ஓவியம் கண்டேன்
வாடிப்போன முகத்தினிலே வனப்பு மாறவில்லை
வளர்மதி உன் பொன்னொளியை இன்னும் மீறவில்லை…”
சௌகார் ஜானகி பாடப்பாட, மேஜர் சுந்தரராஜன் பியோனா வாசிப்பது போன்று எடுக்கப்பட்ட இந்த பாடல், எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம். இந்த படத்தில் எல்ஆர்.ஈஸ்வரியின் அதிரடிப்பாடல் ஒன்றும் உள்ளது.
“நாலு பக்கம் ஏரி ஏரியிலே தீவு தீவுக்கொரு ராணி ராணிக்கொரு ராஜா நாலு பக்கம் ஏரி ஏரியிலே தீவு தீவுக்கொரு ராணி ராணிக்கொரு” என வரிகளை மாற்றி மாற்றி பாடும் இந்த பாடலை வே.லட்சுமணன் தான் எழுதினார்.
எம்ஜிஆர் நடித்த பல படங்களுக்கு கதை எழுதிய வித்வான் வே.லட்சுமணன் ஒரே ஒரு பாடலை தான் எம்ஜிஆருக்கு எழுதினார் . 1966ம் ஆண்டு சாணக்யா இயக்கத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி நடித்த படம் “நான் ஆணையிட்டால்”. இந்த படத்தில் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இசையில்,
“கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே
என்னைத் தடுத்துத் தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைத்து நினைத்து நெஞ்சம் இனிக்குமே
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே…”
இந்த பாடலை பாடியது பி.சுசீலா. ஆனால், பாடல் முழுவதும் ஹம்மிங் கொடுப்பது மெல்லிசை மன்னர். எம்ஜிஆருக்கு அவர் பாடிய பாடல் இதுவாகத்தான் இருக்கும்.
1967ம் ஆண்டு சிஎன்.சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த படம் “கற்பூரம்”.டிபி. ராமச்சந்திரன் இசையில் மணிமாலா, ஸ்ரீகாந்த் பாடும் டூயட் பாடலை எழுதினார் வே.லட்சுமணன்.
“நிலவே உனக்குக் குறையேது
நீ நினைத்ததும் கதிரவன் வரும் போது
அமுதே உனக்குத் தடை ஏது
அருகினில் பருகிட வரும் போது…”.
இந்த பாடலை பிபி.ஸ்ரீனிவாசுடன் இணைந்து பாடியது சூலமங்கலம் ராஜலட்சுமி. இப்படத்தில் எல்ஆர்.ஈஸ்வரி பாடிய , “அம்மா வேணுமா இல்லை அப்பா வேணுமா” என்ற பாடலையும் வே.லட்சுமணன் எழுதியுள்ளார். சூலமங்கலம் ராஜலட்சுமி “மகிழம்பூ” படத்தில் பாடிய “வேண்டியதை வாரிக்கொள்ள வாருங்கள்” என்ற பாடல் தான் வித்வான் வே.லட்சுமணன் எழுதிய கடைசி பாடல் என்று சொல்லப்படுகிறது.
சுமார் 11 படங்களுக்கு கதை, வசனம் எழுதிய வே.லட்சுமணன் குறைந்த அளவு தான் பாடல்களைத் தான் எழுதியுள்ளார் என்றாலும் அத்தனையும் அன்றைய கால கட்ட இசை ரசிகர்களை மகிழ்வித்தவை. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வே.லட்சுமணன் வித்வான் பட்டம் பெற்றவர் . அதே பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஜோதிட நூல்கள் மட்டுமின்றி கன்னிப்பாவை,நீலவேணி, பாவை மன்றம் போன்ற புதினங்களையும் எழுதியுள்ளார்.
இத்தனை பன்முகத்தன்மை கொண்ட மனிதனை ஜோசியத்துடன் மட்டும் முடிச்சிப் போட்டு பார்க்கக் கூடாது என்பதற்காகவே தான் இந்த பதிவு.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- மனதின் ஆசையை தூண்டிய குரல் - ப.கவிதா குமார்
- சிவாஜி, ரஜினியை இயக்கியும் தோல்வியடைந்த இயக்குநர்-- ப.கவிதா குமார்
- ஏழு சுவரங்களில் எத்தனைப் பாடல்:வாணி ஜெயராம் - ப.கவிதா குமார்
- கோழிக்கறி கேட்டதற்காக சென்சார் செய்யப்பட்ட பாடல்- ப.கவிதா குமார்
- வித்தியாசமான பாடல்களின்முகவரி வி.சீத்தாராமன்- - ப.கவிதா குமார்
- கண்மணி சுப்பு: கவியரசு வீட்டுக்கட்டுத்தறி- ப.கவிதா குமார்
- ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை: வங்கத்துக் குயில் எம்ஆர்.விஜயா - ப.கவிதா குமார்
- தென்னாட்டு தமிழ்க்குரல் விஎன்.சுந்தரம்-ப.கவிதா குமார்
- ’புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே’ :கவி சீமான் கேபி. காமாட்சி- ப.கவிதா குமார்
- ''தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்'':யார் இந்த நேதாஜி? - ப.கவிதா குமார்
- ஜாவர் சீத்தாராமன் சரி... அது யார் ராஜ் சீத்தாராமன்?- ப.கவிதா குமார்
- மனோவின் முன்னோடி ...மறக்க முடியாத பாடகர் ரமேஷ்- ப.கவிதா குமார்