க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் 11

Insomnia | English | 2002 | USA | 1 hr 58 mins | Christopher Nolan

உலகெங்கிலும் காவல் துறை என்பது அத்துமீறல்களின் ராஜாங்கம் தான். எவ்வளவு மோசம் என்பதிலும், எண்ணிக்கையிலும், மாறுபாடு இருக்கலாம். ஆனால் அத்துமீறல் இருக்கவே செய்யும். காரணம் அதிகாரம் கைக்கு வரும் போது எல்லா மனிதர்களும் கொஞ்சமேனும் தம் மிருகஇயல்பை வெளிக்காட்டவே முனைகிறார்கள். அது மரணம் வரையிலும் கூடப் போவதைப் பார்க்கிறோம். அது மின்னபோலிஸில் போலீஸாரால் தெருவிலேயெ கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டோ அல்லது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸோ, எல்லாமே காவல்துறையின் அதிகாரத் திமிர் தான். அதன் பின் இன வெறி, சாதி வெறி எல்லாம் இருக்கலாம் எனினும் அவற்றுக்குக் கொம்பு சீவுவது காக்கிச் சட்டையின் பலம் தான்.

இன்னொரு விதமான அத்துமீறலும் இருக்கிறது. நல்ல நோக்குடன் செய்வது. அதைப் போலீஸ்காரர்கள் நீதிக்கான அத்துமீறல் என நம்புகிறார்கள். Ethical Hacking போல். ஒரு குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தர, இல்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது அல்லது போலியான ஆதாரங்களைத் தயாரிப்பது. அதாவது அப்படிச் செய்யாவிடில் அவன் நீதி விசாரணையில் விடுவிக்கப்படலாம் என்பதால். சட்டத்துக்கு உண்மையை விடச் சாட்சியே முக்கியம் என்ற எதார்த்தத்தால் வேறு வழியில்லை என இம்மாதிரி விஷயங்கள் நியாயப்படுத்தப்படுவதுண்டு. இதுவும் எல்லா நாடுகளிலும் நடப்பதுதான்.

இது மேலோட்டமாகப் பார்க்க‌ நல்ல விஷயம் போல் தோன்றினாலும் இதிலும் பல விதச் சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் அந்த மேலோட்ட நல்ல‌ பிம்பம் காரணமாக இது பொதுப்புத்தியால் கொண்டாடப்படும். இங்கு நாம் எத்தனை என்கவுண்டர்களைப் பார்க்கிறோம்! இவற்றின் பிரதிபலிப்புகள் தமிழ் வெகுஜனப் படங்களிலும் பார்க்கலாம். (சிங்கம், சாமி உள்ளிட்ட ஏராளமான ஹரி படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.)

Insomnia படம் இது தொடர்புடைய கதை தான். ஆனால் நேரடியாக இந்த விஷயத்தை விவாதிக்காமல் வேறொரு கதையைச்சொல்லி இதை உள்ளே நுழைத்திருக்கிறார்கள்.

1997ல் அதே பெயரில் வெளி வந்த‌ நார்வேஜிய மொழிப் படத்தின் மறு ஆக்கம் தான் Insomnia. எரிக் ஷோல்ட்பெர்க் என்பவர் அதை எழுதி இயக்கியிருந்தார். அதைத் தழுவி ஹில்லாரி சீட்ஸ் என்ற பெண் ஆங்கிலத்தில் திரைக்கதை எழுதித்தர‌, க்றிஸ்டோஃபர் நோலன் அதை இயக்கினார். 2001ல் மூன்று மாதங்களில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

வடதுருவ ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு. அங்கே பகல் நடந்து கொண்டிருக்கும் போது கே என்ற‌ பதின்ம வயதுப் பெண் கொல்லப்படுகிறாள். அதை விசாரிக்க டார்மர் மற்றும் எக்ஹார்ட் என்ற இரு போலீஸ்காரர்கள் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு முன்கதை இருக்கிறது. டார்மர் கையாண்ட ஒரு வழக்கு மீது மறுவிசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் பெண் குழந்தையை வல்லுறவு செய்து கொன்ற குற்றவாளி என நன்கு தெரிந்தும் போதிய ஆதாரங்கள் இல்லாமல் விடுவிக்கப்படும் சூழலில் அவனைச் சிக்க வைக்க டார்மர் போலி ஆதாரத்தை உருவாக்கி இருக்கிறார்.

(டைட்டில் கார்ட் தொடங்கி, படம் முழுக்க அவ்வப்போது ஒரு துணியின் மீது ரத்தம் பரவுவதை மைக்ராஸ்கோப் க்ளோஸப்பில் காட்டுவது இந்த ஆதாரத் திரிப்பையே. அதன் மூலம் இதுவே படத்தின் மைய இழை என்பதையும் உணர்த்துகிறார் நோலன்.)

இப்போது விசாரணையில் எக்ஹார்ட் டார்மருக்கு எதிராகச் சாட்சி சொல்ல வேண்டி வரும். அப்படிச் சொன்னால் அந்தக் குற்றவாளி விடுவிக்கப்படுவது மட்டுமின்றி டார்மர் கையாண்ட எல்லா வழக்குகளும் மீண்டும் விசாரணை செய்யப்பட்டு பல குற்றவாளிகள் விடுவிக்கப்படுவார்கள். அதனால் சாட்சி சொல்ல வேண்டாம் என எக்ஃஹார்ட்டைக் கோருகிறார். ஆனால் அவர் மறுத்து விடுகிறார். மறுநாள் கே கொலை வழக்கின் கொலைகாரனைப் பொறி வைத்துப் பிடிக்கும் ஒரு சூழலில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டில் பனிமூட்டம் காரணமாக டார்மர் கொலைகாரனுக்குப் பதில் தவறுதலாக‌ எக்ஹார்ட்டைச் சுட்டுக் கொன்று விடுகிறார். பழைய‌ வழக்கின் மறுவிசாரணையின் சாட்சியான எக்ஹார்ட்டைத் தான் சுட்டுக் கொன்றது விபத்து என நம்பப்படாது என்பதால் கேயின் கொலைகாரனே எக்ஹார்ட்டைச் சுட்டதாகச் சொல்லி விடுகிறார். அதன் பிறகு அந்தக் குற்றவுணர்வினாலும் அலாஸ்காவின் தொடர்பகல்களின் காரணமாகவும் பல நாட்கள் தூக்கமின்மையால் தவிக்கிறார். (Insomnia என்ற தலைப்பு கூட‌ தூக்கமின்மை நோயைக் குறிக்கும் சொல் தான்.)

கொலைகாரன் அவர் தன் சகாவைச் சுட்டதைப் பார்த்து விடுகிறான். தான் தப்பிக்க அவர் உதவினால் அவரைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் எனப் பேரம் பேசுகிறான். (ஓரிடத்தில் கேயின் கொலைகாரன் தன்னையும் டார்மரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுகிறார், இருவருமே கொலை புரிந்தவர்கள் தான் என்ற அடிப்படையில், அதுவும் “அறியாமல்” கொலை செய்தவர்கள் என்பதான‌ அர்த்தத்தில்: “You and I share a secret. We know how easy it is to kill somebody. That ultimate taboo. It doesn’t exist outside our minds.”)

டார்மர் தப்பித்தரா, கொலைகாரன் சிக்கினானா என்பது தான் படத்தின் மீதிக் கதை.

முன்பு அசல் குற்றவாளிகளைச் சிக்க வைக்க ஆதாரங்களைப் புனைந்த டார்மர், இப்போது அசல் குற்றவாளியான தான் தப்ப ஆதாரங்களைத் திரிக்கிறார். முதலில் தான் விபத்தாய் நிகழ்த்திய கொலை அவரை உறுத்துகிறது. அடுத்து தெரிந்தே ஆதாரத்தை மாற்றியது மேலும் அதை அதிகரிக்கிறது. காரணம் அதுகாறும் அவர் நல்ல நோக்கில் செய்து வந்த ஆதாரத்தைத் திரிப்பது என்ற செயல் இப்போது அர்த்தமற்றதாகி விட்டது. ஏனெனில் அதே விஷயம் குற்றவாளியைத் தப்புவிக்க இப்போது பயன்படுகிறது. போக, கேயின் கொலைகாரனும் தப்பும் சாத்தியமுள்ளது. இவை எதுவுமே டார்மருக்கு உவப்பான விஷயங்கள் அல்ல என்பதே பிரச்சனை.

பல நுட்பமான காட்சிகள் ஆங்காங்கே இருக்கின்றன. உதாரணமாக ஒரு கட்டத்தில் தான் எக்ஹார்ட்டைத் தெரியாமல் சுட்டேனா அல்லது வேண்டுமென்றேவா என்பதே டார்மருக்குக் குழம்பிப் போய் விடுகிறது (“I don’t know anymore. I couldn’t see him in the fog. But when I got there, he was afraid of me. He thought I meant to do it. So maybe I did. I just don’t know anymore.”). தூக்கத்திற்காக நாட்கணக்கில் முயன்று, பின் ஏங்கி, பின் அதன் பக்க விளைவாய் மூளை செயல்படுவது மழுங்கியது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் டார்மரின் குற்றவுணர்வின் தாக்கம் அத்தகையதாக இருக்கிறது என்று எடுக்கலாம்.

டார்மர் தான் எக்ஹார்ட்டைக் கொன்றது என்பதற்கு ஆதாரம் எல்லிக்குக் கிட்டுகிறது. ஆனால் இறுதிக் காட்சியில் அவள் டார்மரைப் புரிந்து கொண்டு (“Nobody needs to know. You didn’t mean to do it, and I know that, even if you don’t.”) அதை ஆற்றில் தூக்கி எறிய முற்படுகையில் டார்மர் தடுக்கிறார். நேர்மை தவற வேண்டாமென அறிவுறுத்துகிறார் (“Don’t lose your way”). அத்தனை காலமும் கறார் நீதிபரிபாலனம் என்ற பெயரில் தான் குற்றவாளிகளுக்கு எதிராகச் செய்து வந்த ஆதாரத் திரிப்புகள் எல்லாமும் தவறு தான் என அவர் ஒப்புக் கொண்டதாக அதைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

ஆம். அப்படிச் செய்வதிலுள்ள சிக்கல் ஒரு நாள் அதைத் தவறான விஷயத்துக்கும் பயன்படுத்தும் சூழல் உருவாகும். அல்லது குற்றவாளி என உறுதியாய் நம்பும் ஆள் குற்றவாளியாக இல்லாமலும் இருக்கலாம். நீதியை விடவும் அறம் மிக முக்கியம். உண்மை எப்போதும் தனித்து இயங்குவது. பொய் என்றும் உண்மையைக் காக்காது.

நேர்மையானவர்கள் நீதியை நிலைநாட்டக்கூட‌ நேர்மையற்று நடப்பது பிழையே என‌டார்மர் தெளிவாக‌ உணர்ந்து கொள்வதற்குக் கொடுத்த விலை இரண்டு உயிர்கள்!

என்வரையில் இப்படத்தின் மைய நாடி என்பது டார்மருக்கும் கொலைகாரனுக்கும் இடையேயான தத்துவார்த்தமான உரையாடல்களே. அசை போடத்தக்க இடங்கள். காரணம் அவையே அவரைத் தெளிவை நோக்கி மெதுவாக‌ இட்டுச் செல்கின்றன.

இதில் கொலைகாரன் ஓர் எழுத்தாளன். கே அவரது தீவிர வாசகி. அவள் அவரை ஓர் அறிவுஜீவியாகப் பார்க்கிறாள். அவரோ அவளை அழகான இளமையான‌ பெண்ணாக மட்டும். தன் இச்சை நிறைவேறாத போது அவளை அடித்தே கொல்கிறான். அவளது நகத்தைப் பிடுங்குகிறான். பிற்பாடு டார்மரிடம் அது பற்றிப் பேசும் இடம் வருகிறது.

“Do you how many of you I’ve caught with their pants down?”

“I never touched her like that!”

“But you wanted to, and now you wish you had. The best you could do was clip her nails.”

அந்த நகச் சிதைப்பு ப்ரக்ஞையற்ற செயல். பாலியல் அத்துமீறல்களின் வெளிப்பாடு பெரும்பாலும் காமமாக அல்லாமல் வன்முறையாகவே இருக்கிறது என்கிறது படம்.

கொலை நடந்த சூழலை கொலைகாரனின் சொற்களில் பிரமாதமாக விவரிக்கிறார். அவமானம், பயம் இந்த இரண்டும் தான் அக்கொலைக்குக் காரணமாகி இருக்கிறது –

“I only wanted to comfort her, hold her. I kissed her and got a little exited. And then she started laughing at me. She didn’t stop laughing. Did you ever have someone laugh at you… Someone you thought respected you? I just wanted to stop her laughing that’s all. And then you know, I hit her. A couple of times, just to stop her. Let her know, a little respect… She’s terrified, she’s screaming her head off, I put my hand over her mouth. And then I get really scared, I mean, I’m scared shitless, more scared than I’ve ever been. And I’m more scared than her, and then everything’s clear. There’s no turning back. After that, I was calm. Real calm.” கொலையுண்டவளை விடவும் அதிக பயம்!

கேயின் கொலைகாரன் டார்மரிடம் அக்கொலை தன்னை ஞானம் நிறைந்தவனாக்கி விட்டது என்கிறான்: “Killing changes you. It’s not guilt. I never meant to do it. It’s like, awareness.” டார்மர் அதை மறுதலித்து அவன் ஒரு வக்கிரக் கொலைகாரன் மட்டுமே என்கிறார்: “You think killing that girl makes you special, but you’re not. You’re the same distorted, pathetic freak.”

சில நல்ல வசனங்களும் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. எக்ஹார்ட்டின் கொலை வழக்கை விசாரிக்கும் டார்மரின் பரம ரசிகையான இளம் போலீஸ்காரியான‌ எல்லி பர் ஓரிடத்தில் டார்மரின் வசனம் ஒன்றை அவருக்கே நினைவூட்டுகிறாள்: “A good cop can’t sleep because he’s missing a piece of the puzzle. And a bad cop can’t sleep because his conscience won’t let him.” அதை அவர் முன்பு சொல்லும் போது அவர் நல்ல போலீஸாய் இருந்தார். இப்போது எல்லி சொல்லும் போது அதில் வரும் கெட்ட போலீஸ் பற்றிய விஷயம் அவருக்குப் பொருந்துகிறது. அதனால் அதற்கு மழுப்பலாகப் பதிலளிக்கிறார்.

ஓரிடத்தில் டார்மர் தான் தங்கியிருக்கும் விடுதியின் உரிமையாளரான ரேச்சலிடம் தான் முன்பு குற்றவாளிகளைச் சிக்க வைக்கச் செய்த ஆதாரத் திரிப்புகள் பற்றிச் சொல்கிறார். அவள் தன்னைப் பற்றிச் சொல்கிறாள்: “There are two kinds of people in Alaska: those who were born here and those who come here to escape something. I wasn’t born here.”

படத்தின் ஆரம்பத்தில் டார்மர் எல்லியிடம் சொல்கிறார். சிறிய விஷயங்களில், சிறிய பொய்களில், சிறிய தவறுகளில் தான் குற்றவாளிகள் அறியாமல் வெளிப்படுகிறார்கள் என: “It’s all about small stuff. You know, small lies, small mistakes. People give themselves away, same in misdemeanors as they do on murder cases. It’s just human nature.” விசாரணையின் போது இன்னொரு இடத்திலும் அதை அழுத்துகிறார் (“Small things, remember? The second you’re about to dismiss something, think about it. Look at it again.”) இறுதியில் அவருமே அவ்வாறு தான் ஒரு சிறிய ஆதாரத்தின் வழியாக எல்லியிடம் சிக்கிக் கொள்கிறார்.

இதில் வரும் மூன்று பிரதானப் பாத்திரங்கும் அப்போது ஆஸ்கர் விருது வாங்கிய பிரபல நடிகர்கள் செய்தார்கள்: டார்மராக அல் பசீனோ, கொலைகாரனாக ராபின் வில்லியம்ஸ், எல்லியாக ஹிலாரி ஸ்வாங்க் (Million Dollar Baby படத்தின் நாயகி).

அல் பசீனோ தூக்கமின்மையால் துன்புறும் காட்சிகளில் மிகப் பிரமாதமான நடிப்பு. சமயங்களில் அவரது முகபாவங்கள் நமக்கு கமல் ஹாசனை நினைவூட்டுகின்றன. ராபின் வில்லியம்ஸ் அதுகாறும் நகைச்சுவை நடிகராகவே பெயரெடுத்தவர். இதன் மூலம் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் தோன்றினார். ஹிலாரியும் அழகான நடிப்பு.

ஒளிப்பதிவு இப்படத்தில் சிறப்பாய் அமைந்திருந்தது (நோலனின் முந்தைய Memento படத்துக்கு ஒளிப்பதிவு செய்த வாலி ஃபிஸ்டர் தான் இதற்கும்). குறிப்பாக அலாஸ்கா மாகாணாத்தில் முழுக்கவே பகல்தான் என்பதாலும், அவ்வூர் நெரிசலற்ற கிராமப்புறம் என்பதாலும் மிக அழகான காட்சிகள் சாத்தியப்பட்டிருக்கின்றன. குறிப்பாக படத்தின் ஆரம்பத்தில் வரும் பனி சூழ்ந்த காட்சிகள் பிரமாதம். இன்னோர் இடம் ஆற்றில் வெட்டிப் போட்ட மரக் கட்டைகளுக்கு இடையே டார்மர் விழுந்து மூச்சுச் திணறி நீந்தித் தப்பித்துக் கரையேறும் காட்சி. Insomnia படத்துக்கு இசை நோலனின் அது வரையிலான அத்தனை படங்கள், குறும்படங்களுக்குச் செய்த‌ டேவிட் ஜூல்யன்.

வணிகரீதியாகவும் இத்திரைப்படம் வெற்றி பெற்றது. படத்தைத் தழுவி ராபர்ட் வெஸ்ட்ப்ரூக் ஒரு நாவலை அந்த ஆண்டிலேயே வெளியிட்டார் வெளியிட்டார்.

க்றிஸ்டோஃபர் நோலன் இதுகாறும் இயக்கிய ஒரே மறுபதிப்பு படம் இது மட்டுமே!

உளவியல்ரீதி விஷயங்கள் பேசப்பட்டிருந்தாலும் இது வழக்கமான க்ரைம் த்ரில்லர் படம் தான். மிக நேரான திரைக்கதை. எனில் இம்மாதிரி ஒரு மறுபதிப்புப் படத்தை ஏன் நோலன் மெனக்கெட்டு இய‌க்க வேண்டும்? யோசித்துப் பார்த்தால் படத்தின் புறச் சூழல் தான் காரணம் எனப் படுகிறது. வட துருவப் பிரதேசம். ஆறு மாதம் முழுக்கப் பகல். அதனால் நாயகனுக்கு நேரும் காலக் குழப்பம். அது தான் நோலனுக்கு இதில் வசீகரமாய்ப் பட்டிருக்க வேண்டும். அவ்வகையில் இதுவும் ஒரு நேர விளையாட்டே!

***

(கடிகை ஓடும்)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. க்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்
  2. நோலனின் ’ஃபாலோயிங்’: ஆடு புலி ஆட்டம்- சி.சரவண கார்த்திகேயன்
  3. ராஜா சின்ன ரோஜா- சி. சரவண கார்த்திகேயேன்
  4. க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்-சி.சரவணகார்த்திகேயன்