அங்கே என்ன சத்தம் – 12
நான் மணிரத்னத்தின் படங்களை அடிக்கடி காட்சிமொழியை ரசிப்பதற்காக பார்ப்பேன். அதில் 90களின் நினைவேக்கமும் சேர்ந்து கொள்ளும். நேற்று ‘அலை பாயுதே’ (2000) படத்தை வேறொரு நோக்கத்துக்காக – அதன் திரைக்கதை அமைப்புக்காக – பார்த்தேன்: திரைக்கதை விதிப்படி ஒரு படத்தின் ஒவ்வொரு 20 / 30 நிமிடங்கள் இடைவெளியிலும் ஒரு முக்கியமான திருப்புமுனை வர வேண்டும்; அதனுடன் கதையில் ஒரு பிரதானமான சிக்கல் வர வேண்டும். அந்த சிக்கலுக்குப் பிறகு வாழ்க்கை முன்பைப்போல இருக்கவே முடியாது. பிரச்சனையும் (மகிழ்ச்சியும் திகைப்பும்) பல மடங்கு அதிகரிக்க வேண்டும். கிளைமேக்ஸ் என்பது இந்த மூன்று நான்கு திருப்புமுனைகளின் லாஜிக்கலான நீட்சியாக அமைய வேண்டும். நான் “அலை பாயுதே” படத்தை சரியாக 20-30வது நிமிடம், அடுத்து 100வது நிமிடம், 120வது நிமிடம், 220வது நிமிடம் என நிறுத்தி இந்த திருப்புமுனைகள் தோன்றுவதை, அதற்கு ஏற்ப கதை பார்வையாளர்களின் கவனத்தை இழுத்துக் கொள்ளும் வண்ணம் மேலும் மேலும் சிக்கலாவதை, தீவிரம் கொள்வதை ஆச்சரியத்துடன் கவனித்தேன்.
இவ்வளவு துல்லியமாக திரைகதையை அமைப்பது ஒன்றும் சாதாரண விசயமில்லை. ஒரு காட்சிகூட வீணாகப் பொருத்தமற்று கதையில் இல்லை.
தன் நண்பனின் திருமணத்தில் ஷாலினியை மாதவன் சந்தித்து காதல் வயப்படுவதுடன் படம் துவங்கி விடுகிறது (விபத்தான ஷாலினியை அவர் கவலையுடன் ரயில் நிலையத்தில் தேடுவது துவக்கம் அல்ல. அது பிளாஷ்பேக்கில் கதையைச் சொல்வதற்காக ஒரு முன்னோட்டம் மட்டுமே). அவர்கள் அடுத்து சந்திப்பார்களா, சந்தித்தால் காதல் வளருமா, அதன் தடைகள் என்னவாக இருக்கும், அத்தடைகளை எப்படி மீறுவார்கள் என சுவாரஸ்யமாக வளரும் திரைக்கதையில் மாதவனின் குடும்பத்தார் பெண் பார்க்க வந்து பிரச்சனையைப் பெரிதாக்குவதுடன் ஒரு பாரித்த சிக்கல் ஆரம்பிக்கிறது.
இச்சிக்கல் ஷாலினி இனிமேல் காதலைத் தொடர முடியாது என மாதவனிடம் உறுதிபட சொல்வதுடன் பிரதான திருப்புமுனையாகிறது – இனி இவர்கள் காதலிப்பார்களா எனும் ஒரு எளிய கேள்வியுடன் இது முடிகிறது. அடுத்து அவர்களின் காதல் மீண்டதும் அடுத்த திருப்புமுனை மற்றொரு பெண் பார்த்தல் காட்சியால் நடக்கிறது. அக்காவை பெண் பார்க்க வருகிற குடும்பம் ஷாலினியையும் மாப்பிள்ளையின் தம்பிக்குக் கேட்க ஷாலினி தனக்கு ஏற்கனவே திருமணமான உண்மையைப் போட்டுடைக்க வேண்டி வருகிறது. ஆனால் இத்திருப்புமுனைக்கான விதை இரண்டாவது அரைமணிநேர பகுதி முடியும்போதே இடப்படுகிறது – திருட்டுக்கல்யாணம் செய்து பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டில் இருந்து கொள்ளலாம் என ஷாலினி மாதவனிடம் சொல்கிறாள்.
மூன்றாவது திருப்புமுனை ஷாலினியின் அப்பாவின் மரணம். இது இனி இருவரையும் நிம்மதியாக வாழவிடாது. அவர்கள் பிரிந்துவிடுவார்களா எனும் கேள்வியை எழுப்புகிறது. கடைசித் திருப்புமுனை நம்மை படத்தின் துவக்கத்திற்கே கொண்டு செல்கிறது – ஷாலினியின் விபத்து – அவள் பிழைப்பாளா, காதல் காப்பாற்றப்படுமா?
மாதவன் ஷாலினிக்கு விபத்தானது தெரியாமல் ரயில் நிலையம், மருத்துவமனை, தன் வீடு, ஷாலினியின் வீடு என அலையும் காட்சிகள் பிளாஷ்பேக்குடன் இணைக்கப்படும் இடங்களும் கச்சிதம். காதல் வளர்ந்து மகிழ்ச்சியில் இருவரும் திளைக்கும்போது, திருமணம் செய்து ஒவ்வொரு சிக்கலாக அவர்கள் எதிர்கொள்ளும்போது என உற்சாகமான ஒரு மனநிலைக்கு அடுத்தபடியாய் மாதவனின் அவநம்பிக்கையும் சோர்வுமான முகம் விபத்துக்குப் பின்னான காட்சிகளுடன் இணைக்கப்படுகின்றன;
முன்பின்னான நான்லீனியர் படஅமைப்பு நமக்கு அலுக்காமல் இடறாமல் நன்றாக எடிட் செய்யப்பட்டு சரளமாக செல்கிறது. ஒரு காட்சிக்குள் அடுக்கடுக்காய் வரும் மனநிலை மாற்றத்தை திரைக்கதையில் beat என்பார்கள். Beat என்பதை ஒரு காட்சியின் ஒரு பகுதியில் வெளிப்படும் உணர்வுத்துடிப்பு எனலாம். ஒரு காட்சி துவங்கும்போது பாத்திரங்களின் உறவாடலாலோ அல்லது காட்சிப்படுத்தலாலோ உணர்வுநிலைகள் முன்னுக்குப்பின் முரணாக மாறியபடி இருக்க வேண்டும். அப்போதே சுவாரஸ்யமும் நிஜத்தன்மையும் ஏற்படும். நேர்மறையான beatஉடன் (உணர்வுத்துடிப்புடன்) ஆரம்பிக்கும் ஒரு காட்சி எதிர்மறையான உணர்வுத்துடிப்புடன் அல்லது குழப்பம் மற்றும் எதிர்பார்ப்புக்கான உணர்வுத்துடிப்புடன் முடியலாம். மாறாக காட்சி முழுக்க உணர்வுத்துடிப்புடன் மாறாமல் இருந்தால் தட்டையாக மாறிவிடும். “அலைபாயுதேவில்” 99% காட்சிகள் இந்த விதியை மீறாமலே அமைக்கப்பட்டுள்ளன எனலாம். ரொம்ப பிரசித்தமான சில காட்சிகளை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன்:
ரயிலில் ஒரு பெட்டியில் தன் தோழிகளுடன் இருக்கும் ஷாலினியை அவர்கள் சீண்டியபடி இருக்கிறார்கள். ஷாலினி சற்று முறைப்பாக மாதவனின் சேஷ்டைகள் ஒன்றும் தன்னை ஈர்க்கவில்லை என்கிறாள். ஆனால் அவன் அன்று வரவில்லை என்றதும் அவளது கண்கள் அவனைத் தேடுகின்றன. அவன் நேரடியாக வராமல் எதிர்-பிளாட்பார்மில் நிற்கிறான் என்பதை தோழிகள் காட்ட அவள் ஆச்சரியப்படுகிறாள். அப்போது பிடிவாதத்தை மீறி அவளிடமிருந்து திகைப்பும் மகிழ்ச்சியும் வெளிப்படுகிறது. உணர்ச்சிநிலைகள் ஒன்றில் இருந்து மற்றொன்றாக காட்சிப்படுத்தலின் வழியாக மட்டுமே வெளிப்படுவதற்கு இது உதாரணம். அடுத்து ஒரு காட்சியில் இது இன்னும் கவித்துவமாக உருப்பெறுவதைப் பாருங்கள்:
மாதவன் ஷாலினியை மருத்துவக்கல்லூரியில் வந்து பார்க்க அவள் அவனது மூக்கை உடைக்கும் விதமாக “நீ பணக்காரப் பையனா, கிளாஸில் கடைசி பெஞ்சில் உட்காருவியா, நிறைய பாடங்களில் பெயிலாவியா?” என அடுக்கடுக்காகக் கேட்டு பொழுதுபோக்குக்காக பெண்ணின் பின்னால் சுற்றும் உன்னையெல்லாம் காதலிக்க முடியாது எனப் புரியவைக்க முயல்கிறாள்.
இக்காட்சி மாதவன் எதையும் சொல்லாமல் முகமெல்லாம் சிரிப்பாக அவளை நோக்கி எதையோ தான் சாதித்துவிட்ட பாவனையைக் காட்டுவதுடன் முடிகிறது (மாதவனின் அந்த க்யூட்டான ‘வாயெல்லாம் பல் எனக்கு’ சிரிப்பு). அதற்குமுன் ஷாலினியின் குண்டு குண்டு கண்கள் அவள் சொல்வதற்குச் சம்மந்தமேயில்லாமல் அவனைத்தான் ரசிப்பதைக்காட்டி தான் சொல்ல நினைத்ததன் நோக்கத்தை முறியடித்து விடுகின்றன. இதை அவன் கண்டுபிடித்து விடுகிறான். அடுத்த காட்சியில் அவன் கடற்கரையில் பைக்கை வேகமாக ஒட்டியபடி “அவள் என்னைப் பார்த்துட்டா” என கத்தியபடி செல்கிறான். காதலை அவள் மறுப்பதில் ஆரம்பித்து நேர்மாறாக தன்னையும் மீறி அவள் காதலை ஏற்பதில் அக்காட்சி முடிகிறது.
உணர்வுத்துடிப்பு (beat) மறுப்பின் ஏமாற்றத்தில் இருந்து ஏற்பின் திளைப்புக்கு மாறுகிறது. இந்தக் கடைசி உணர்வுத்துடிப்பை உன்னதப்படுத்தும் சிறிய காட்சியை ஒன்றையும் மணி அடுத்து இணைக்கிறார். அந்த குண்டு குண்டு கண்கள் அவனை விழுங்கியதற்கான ஒரு கொண்டாட்டமாக அது அமைகிறது. (படம் முழுக்க இப்படி காதலின் கொண்டாட்டத்திற்கான ஒரு வெளியாக கடற்கரை, நதிக்கரை என வெளிப்புறக் காட்சிகள் அமைகின்றன – அறைக்குள் இருக்கும்போது ஏற்படும் மன இறுக்கம் பாத்திரங்களுக்கு வெளியே வந்ததும் கலைந்து கொண்டாட்ட நிலை ஆகிவிடுகிறது.)
எப்போதெல்லாம் ஜாலியான பரபரப்பு படத்தில் தோன்றுகிறதே அதை உச்சத்திற்கு எடுத்துச் செல்ல மணிரத்னம் நகைச்சுவையைப் பயன்படுத்துகிறார். அப்போது பார்வையாளர்களின் இதயத்துடிப்பு எகிறுகிறது. மாதவன் நாடார் கடைக்கு போன் செய்து ஷாலினியை அழைக்கச் செய்யும் காட்சியை சொல்லலாம். அப்போது ஷாலினி அவருக்குப் பதிலளிப்பது, மாதவன் பேசிக் கொண்டிருக்கையில் அவனது அப்பா குறுக்குமறுக்கும் (என்ன நடக்கிறது என தெரிந்து கொண்டே) நடப்பது இந்தப் பரபரப்புடன் விளையாட்டுத்தனத்தையும் சேர்த்து காட்சியைத் தூக்கி மேலே எடுத்து வைக்கிறது.
இரண்டு உணர்வுத்துடிப்புகளை (beats) ஒன்றை மற்றொன்றின் மேலேற்றி அவர் பயன்படுத்துவதை இதில் காணலாம். திருட்டுக் கல்யாண நாளன்று நிகழும் காட்சிகளும் இப்படியே. தன்னால் ஷாலினியின் அக்காவின் திருமணம் நின்று போனதால் அதை சீர்செய்யும் பொருட்டு மாதவன் ஷாலினியின் அக்கா மற்றும் எதிர்கால கணவரை பொய் நாடகம் மூலம் சேர்த்துவைக்க முயல்கிறார். அப்போதும் காட்சி நகைச்சுவையில் ஆரம்பித்து பதற்றத்துக்கு சென்று கோபம், சமாதானம், வேடிக்கை என ஒரு சுற்று சுற்றி வந்து ஆரம்பித்த புள்ளியிலே முடிகிறது.
அடுத்து இதிலிருந்து மாறுபட்ட (நகைச்சுவைத் உணர்வுத்துடிப்பில் இருந்து சோகத்துக்கு மாறும்) ஒரு காட்சிக்கு வருகிறேன்:
ஷாலினியின் அக்காவைப் பெண் பார்க்க வருகிறார்கள். அது ஒரு நல்ல வரன் என்பதால் காட்சியின் துவக்கத்தில் எதிர்பார்ப்பும் நன்னம்பிக்கையும் பொங்குகின்றன. எல்லாரும் சிரிக்கிறார்கள், பரஸ்பரம் பாராட்டுகிறார்கள். இந்த மனநிலை ஷாலினியை தம் இரண்டாவது மகனுக்கு வரனின் பெற்றோர் கேட்கும்போது மாறுகிறது. ஷாலினிக்கோ கல்யாணம் முடிந்துவிட்டது. இது அவள் அக்காவைத் தவிர யாருக்கும் அங்கு தெரியாது. என்னாகுமோ என ஒரு பயம் நம் வயிற்றைக் கவ்வுகிறது. காட்சித் துவங்கும்போது பெண்ணின் தங்கையான ஷாலினியும் மாப்பிள்ளையின் தம்பியான கார்த்திக் குமாரும் பரஸ்பரம் கலாய்த்துக்கொள்ளும் காட்சிகள் நமக்கு (நகைமுரணாக) படத்தின் துவக்கத்தில் ஷாலினியும் மாதவனும் வேறொரு தொனியில் பரஸ்பரம் வம்புக்கு இழுக்கும் காட்சியைச் சன்னமாக நினைவுபடுத்துகிறது. ஷாலினி சட்டென சேலை கட்டி பெண் பார்க்கப்படும் இடத்துக்கு தள்ளப்பட கார்த்திக்கின் முகம் மாறுகிறது. அவன் தனக்கு அவளைப் பிடித்திருப்பதை வெளிப்படுத்துகிறான். அதாவது எதற்கு இந்த கல்யாணம் கில்யாணம் எனும் மனநிலையில் என இருந்தவன் இப்போது அவள்மீது தன் மயக்கத்தைக் காட்டுகிறான் (முதல் காட்சியில் மாதவன் அவளிடத்து செய்ததைப் போன்றே).
ஆனால் ஷாலினி இப்போது சட்டென அமைதியைக் விடுகிறாள். இப்போது நமக்கு இது விளையாட்டு அல்ல அல்ல எனப் புரிகிறது. ‘சுடிதார் போட்டப்போ நிறைய பேசுனீங்க, சேலை அணிந்ததும் மாறி விட்டீர்களே’ என கார்த்திக் கேட்கிறான் (என்னவொரு நகைமுரணனான வசனம்). இப்போது ஷாலினி தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்கிறாள். எல்லாருடைய முகபாவமும் மாறுகிறது – கார்த்திக்கும் அவன் குடும்பத்தாரும் அதிர்ச்சியாகிறார்கள், ஷாலினியும் பெற்றோர் அவமானத்தில் குறுகுகிறார்கள்; ஷாலினி கலக்கத்திலும் துணிச்சலாக நிற்கிறாள். உணர்வுத்துடிப்புகள் (beats) நம்பிக்கை, மகிழ்ச்சி, வேடிக்கை, மலர்ச்சியில் இருந்து கவலை, பயம், அதிர்ச்சி, அவநம்பிக்கை, அவமான உணர்வு, துணிச்சல் என வந்து முடிகின்றன.
இந்தக் காட்சியைப் பார்க்கும்போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது – நேரடியாக ஷாலினியைப் பெண் பார்க்க வரும்படியாகவே அமைத்திருக்கலாமே? சுருக்கமாக இன்னும் காத்திரமாக அமைந்திருக்குமே? ஒன்று அப்படிச் செய்தால் அக்காவை வைத்துக்கொண்டே தங்கைக்கு மாப்பிள்ளைப் பார்ப்பதாகிவிடும். அடுத்து, அக்காவின் பெண் பார்த்தலின்போது இப்படி ஒரு சிக்கல் ஏற்படுவதாக அமைத்ததன் மூலம் ஷாலினி மாட்டி உள்ள இக்கட்டான நிலைமையும் நன்றாக வெளிப்படுகிறது. இப்போது ஷாலினி உண்மையைச் சொன்னால் அதனால் பாதிக்கப்படப் போவது அவளது பெற்றோர் மட்டுமல்ல, அவளது அக்காவின் எதிர்காலமும்தான். ஆக, அவள் வீட்டைவிட்டு வெளியேறும்போது தாங்க முடியாது குற்றவுணர்வுகளின் மூட்டையை சுமந்துதான் வர வேண்டும். அந்த உறுத்தல்களுடன் வருத்தங்களுடன் அவளது காதல் திருமண வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாகுமா என்பதே அடுத்த திருப்புமுனைக்கான முன்னோட்டமாகும். ஆனால் வீட்டைவிட்டு வெளியேறி மாதவனுடன் ஆட்டோவில் கிளம்பும்போது அவள் – எப்போதும்போல – அவள் தன் மனத்தில் இருப்பதற்கு நேர் எதிராகவே பேசுகிறாள்:
“நமக்கு இனி அப்பா அம்மா யாருமே வேண்டாம். நமக்கு நாமமட்டும்தான்”.
ஒரே காட்சிதான் – ஆனால் அது முதலில் வரும் பெண் பார்க்கும் காட்சியைவிட நிலைமையைப் படமடங்கு சிக்கலாக்கிவிடுகிறது. இனி ஷாலினியால் உண்மையை மறைக்கவே முடியாது என்கிற அளவுக்கு. உண்மையை வெளிப்படுத்தினாலும் நிலைமை மேம்படாது எனும் அளவுக்கு.
எப்படிக் காட்சிக்குள் உணர்வு மாற்றங்கள் நேர்த்தியாகப் பின்னப்பட்டுள்ளனவோ அவ்வாறே காட்சிகளுக்கு இடையிலும், அவநம்பிக்கைக்குப் பிறகு மகிழ்ச்சி, உல்லாசம், அதன் பிறகு அவநம்பிக்கை, கலக்கம், பயம் என உணர்ச்சிகளின் ஒரு சீட்டுக்கட்டாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது – இந்த சீட்டு கைக்கு வந்ததும் அடுத்து அந்த சீட்டு என நாம் எதிர்பார்க்கும்போது மற்றொரு சீட்டு வருகிறது; அந்தத் திகைப்பு முடியும்முன் மற்றொன்று.
ஒரு எளிய ஒற்றை வரியை இவ்வளவு சிக்கலான ஒரு குடும்பக் கதையாக வளர்ப்பதற்கான ஒரு பாடமாக ‘அலைபாயுதே’ இருக்கிறது.
முந்தைய தொடர்கள்:
11.தனிமையின் காதலே நட்புhttps://bit.ly/33w4JzG
10.ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?https://bit.ly/2QqQx63
9.பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்https://bit.ly/3a2CSJT
8.அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்https://bit.ly/392trZQ
7.காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்https://bit.ly/33tiHCB
6.எனது நண்பன் எனது நண்பன் அல்லhttps://bit.ly/2xTmygJ
5.ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?https://bit.ly/2U1ZmW0
4.நிழல் நிஜமாகிறதுhttps://bit.ly/3a3P9xM
3.பாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்https://bit.ly/2QuC09r
2.தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர்https://bit.ly/2Qsg1jn
1.யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன்https://bit.ly/33AmePx
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- திரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்
- கிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும்? - மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை - ஆர். அபிலாஷ்
- ’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை - ஆர். அபிலாஷ் (பெங்களூர்)
- கொரோனோ பயங்கரமும் பா.ஜ.க அரசின் கார்பரேட் பயங்கரவாதமும் - ஆர். அபிலாஷ்
- முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது?- ஆர். அபிலாஷ்
- காட்ஃபாதர் முதல் முள்ளும் மலரும் வரை: கதைக்குள் இருக்கும் கதை- ஆர். அபிலாஷ்
- சினிமாவில் போதனை இருக்கலாமா?- ஆர். அபிலாஷ்
- பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் - ஆர். அபிலாஷ்
- தனிமையின் காதலே நட்பு- ஆர். அபிலாஷ்
- ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?- ஆர். அபிலாஷ்
- பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- ஆர். அபிலாஷ்
- அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- ஆர். அபிலாஷ்
- காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- ஆர். அபிலாஷ்
- எனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்
- ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?- ஆர். அபிலாஷ்
- நிழல் நிஜமாகிறது - ஆர்.அபிலாஷ்
- சத்யன் அந்திக்காடு: தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர் - ஆர். அபிலாஷ்
- யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன் - ஆர்.அபிலாஷ்