காற்றினிலே வரும் கீதம்-2

ஜாவர் சீத்தாராமனை தெரிந்த தமிழ்  ரசிகர்களுக்கு  ராஜ் சீத்தாராமனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பின்னணி பாடகர் .  தமிழில் சில பாடல்கள் தான் என்றாலும் அரிதான பாடல்களை இவர் பாடியுள்ளார். தெலுங்கு தான் இவருக்குத் தாய்மொழி என்றாலும், தமிழை அட்சரம் பிசகாமல் மிக அழகாக பாடியிருக்கிறார். மிக அற்புதமான குரல் வளம் கொண்ட ராஜ் சீத்தராமன்,”  பூ வாடைக் காற்று வந்து ஆடை தீண்டுமோ” பாடலை   பாடியதாக எழுத்தாளர் ஆத்மார்த்தி  2012ம் ஆண்டு ஒரு பதிவு எழுதியிருந்தார்.

ஆனால், இந்தப் பாடலை பாடியவர் தீபன் சக்கரவர்த்தி. இது பிழையல்ல. ராஜ் சீத்தாராமனின் குரலை, கண்களை மூடிக் கொண்டு கேட்டால் தீபன் சக்கரவர்த்தி குரல் போல அவ்வளவு வசியம் கொண்டது. எஸ்என்.சுரேந்தர் குரல் போல வெட்கம் கலந்தது. எஸ்பி.பாலசுப்பிரமணியம் குரல் போல அலட்டல் மிகுந்தது.

தமிழ் சினிமாவில் சில பாடல்களே பாடியுள்ள ராஜ் சீத்தாராமன், தெலுங்கு, கன்னடத்தில் மிகப்பிரபலமான பாடகர்.  தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சேனல் பிடிக்காவிட்டால், வேறு சேனலை மாற்றிக் கொள்கிறோம். ஆனால், ஒரு காலத்தில் தூர்தர்ஷன் நிகழ்ச்சி மட்டும் தான் இருந்தது. அதில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகும் “ஒலியும், ஒளியும்” பாடல்களைப் பார்க்க தெருவே கூடியிருக்கும்.

 

பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது திடீரென “தடங்கலுக்கு வருந்துகிறோம்” என்று விளம்பரப்பலகை விழுகும். வீட்டு வேலைகள் அனைத்தும் முடிந்து வந்து அமர்ந்த பின்பும், அந்தப் பலகை அகற்றப்படாமல் இருக்கும்.  எப்போது காட்சி வரும் என்பது தெரியாது.

இந்தக் காட்சியை வைத்து இசையமைத்தவர்  விஎஸ்.நரசிம்மன்.    “கல்யாண அகதிகள்” படத்தில்  கவிஞர் வைரமுத்து எழுதிய அந்தப் பாடல்,

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்

என் மௌனத்தை இசையாக்கி மொழிபெயர்த்தாய்

.பாலச்சந்தர் பல படங்களில் பாடல் காட்சிகளை அமைத்திருப்பார்.  அப்படி ஒரு புகழ்பெற்ற பாடலுக்கு

இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய் 

இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்….

மிக அழகான மெட்டில் உருவான இந்தப் பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடியவர் தான் இந்த ராஜ் சீத்தாராமன். இந்த பாடலில் பி.சுசீலாவைத் தொடர்ந்து ராஜ் சீத்தாராமனின் சரணம் தொடங்கும் இடம் மிக அழகாக இருக்கும்.

கண்களில் காதலின் முன்னோட்டம் பார்த்த பின்

இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்

மாலையில் சோலையில்

இளம் தென்றல் வேளையில் காண்போம் கற்போம்

என்றுனைக் கேட்டேன்….

தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை வைத்தே உருவாக்கப்பட்ட இந்தப் பாடல், ஒரு காலத்தில் வானொலியில் புகழ்பெற்ற பாடலாக ஒலித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1985ம் ஆண்டு முரளி, ஊர்வசி நடித்த படம்  “ஒரு மலரின் பயணம்”. முக்தா சீனிவாசன் இயக்கிய இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார்.  அதிரடி காட்டும் சந்திரபோஸ் அடக்கி வாசித்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் வாணி ஜெயராமுடன், ராஜ் சீத்தாராமன் இணைந்து பாடிய புகழ் பெற்ற பாடல்,

பிள்ளை மனம் வெள்ளைமனம்

உள்ளத்திலே உன் அன்பு சீதனம்…

இப்பாடலில் ராஜ் சீத்தாராமன்,

என்னை உன் நெஞ்சம் அறியும்

எதை தான்  நான் சொல்ல முடியும்…  எனப்பாடும் போது எம்எல்.ஸ்ரீகாந்த்தின் குரலோ என மழைச்சாரல் போல மனதிற்கு நினைவோடை ஒன்று ஓடும். ஒரு பாடகனின் குரல் எத்தனையோ பெயரை ஞாபகப்படுத்துகிறது என்பதற்கு ராஜ் சீத்தாராமனின் பாடல்களைக் கேட்டால் உங்களுக்குப் புரியும்.

 

தமிழில் ஒரு காலத்தில் டிஸ்கோ பாடல்கள் ஏராளமாக வந்தன. “தினம் தினம் உன் முகம்” பாடலில் “டிஸ்கோ டிஸ்கோ” என்றே வரிகளை டி.ராஜேந்தர் போட்டிருப்பார். “தாய் வீடு” படத்தில் “உன்னை அழைத்தது கண்” பாடலில் ரஜினியோடு, விஜயகுமார் டிஸ்கோ நடனமாடுகிறேன் என  பானை செய்வதற்கு மண்ணை போட்டு மிதிப்பது போல ஆடுவார். “பாடும் வானம்பாடி” படம் முழுவதும் டிஸ்கோவிற்காக உருவாக்கப்பட்டது.

ஆனால், தமிழில் டிஸ்கோ பாடல் என்றால் இளையராஜாவின் இந்தப் பாடலை அடித்துக் கொள்ள எந்தப் பாடலும் இல்லை என்றே சொல்லலாம். சில்க் ஸ்மிதாவின் அழகைக் கண் கொட்டாமல் இந்தப் பாடலில் நீங்கள் ரசிக்கலாம்.வாழ்க்கை படத்தில் இடம் பெற்ற,

மெல்ல மெல்ல என்னை தொட்டு 

மன்மதன் உன் வேலையை

காட்டு ஓ  உன் பாட்டு

ஆடு ஓ வந்தாடு …

சில்க் ஸ்மிதாவும், ரவீந்தரும் ஜிகுஜிகு உடையில் டிஸ்கோ நடனமாடும் இந்த பாடலின் மெட்டு ஆட வைப்பதற்குப் பதில்,  ஆழ்மனதில் ரசிக்க வைக்கும்.  ஒரு டிஸ்கோ பாடலுக்கு இப்படியான ராகத்தில் எப்படி இசைஞானி இசையமைத்தார் என யோசிக்க வைக்கும்.” ஓ” என்ற சொல் இந்த பாடலில் எத்தனை முறை ஒலிக்கிறது என குவிஸ் போட்டியே வைக்கலாம்.

 

சில்க் ஸ்மிதா என்றால்  எஸ்.ஜானகி தான் பாடுவார்  என்ற நினைப்பை பொய்யாக்கும் வகையில், இந்த பாடலை பி.சுசீலா  அற்புதமாக  பாடியிருப்பார்.  அவருடன் இணைந்து இந்த பாடலை பாடியவர் ராஜ் சீத்தாராமன் என்பது தான் முக்கியமான விஷயம். அவருக்கு தமிழில் சிறந்த பாடகர் என்ற அடையாளத்தை கொடுத்த பாடல் இது . இந்த பாடலில் அவரின்  குரலில் இருக்கும் ஏற்றம், இறக்கம் மிக மிக ரசிக்க வைக்கும்.

நீ தராததா நான் தொடாததா

சொல்லி தந்து அள்ளி கொள்ள

சொந்தமாகவில்லையே

தேகம் ஓ… உன் தேகம்

மோகம் ஓ..  உன் தாகம்….

என்ற அவரின் தேன் தடவிய குரலில் இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.   1985ம் ஆண்டு முரளி, இளவரசி நடித்த படம் “அந்தஸ்து”.ஆர்.தியாகராஜன் இயக்கிய இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசை. வாலி எழுதிய டூயட் பாடல்,

“ஆசை என்னை விரட்ட நான் உன்னை துரத்த” என ஒலிக்கும். இந்த பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து ராஜ் சீத்தாராமன் பாடியுள்ளார்.  இதே படத்தில் , “வாடி ஆண்டாளு நான் தான் உன் ஆளு”என்ற பாடலையும் ராஜ் சீத்தாராமன் பாடியுள்ளார்.

1984ம் ஆண்டு சிவசங்கர் இயக்கி தேவிஸ்ரீயுடன்  இணைந்து நடித்த படம்  “வாங்க மாப்பிள்ளை வாங்க”. இப்படத்திற்கு இசை சங்கர் கணேஷ். வாணி ஜெயராமுடன் இணைந்து ராஜ் சீத்தாராமன் பாடிய புகழ் பெற்ற பாடல் உண்டு.

பல நாளா ஆசை வச்சேன் தவித்திருந்தேன்

பாய் போட்டு இன்னைக்கு தான் அழைத்திருந்தேன்….

சங்கர் கணேஷ் இசையில் மிக அழகான டூயட் பாடல் இது.தபேலா இசை  இப்பாடலில்  மிக அழகாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.

1985ம் ஆண்டு கவுண்டமணி ஹீரோவாக நடித்த காலம்.  அவரை வைத்து  இயக்குநர் விஜயசிங்கம் ” பணம் பத்தும் செய்யும்”, “பிறந்தேன் வளர்ந்தேன்” படங்களை இயக்கினார். “பிறந்தேன் வளர்ந்தேன்” படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்தவர் ஜீவிதா.  இப்படத்தில்  சங்கர் கணேஷ் இசையில்,

இளசோ இளசு இது தான் வயசு

சமயம் கிடைச்சாச்சு 

சுகமோ சுகம் தான் 

மெதுவா தொட தான்

நினைவோர் கனல் ஆச்சு “

இந்த டூயட் பாடலில் கவுண்டமணிக்கு அச்சு அசலாக குரல் கொடுத்தவர்  மலேசியா வாசுதேவன்.  ஜீவிதாவிற்கு வாணி ஜெயராம் பாடியிருப்பார். இந்த பாடலில் மற்றொரு ஜோடி ராஜேஷ்,யாமினி ஆடுவார்கள். அவர்களுக்கு ராஜ் சீத்தாராமன், எஸ்.ஜானகி குரல் கொடுத்திருப்பார்கள்.

 

இதே படத்தில்  அறிஞர் அண்ணா  குறித்து வில்லிசை பாடல் உள்ளது. கவுண்டமணி வில்லிசை செய்வது போல அமைக்கப்பட்ட “மாணிக்க வில்லெடுத்து  மணியான சொல்லெடுத்து” என்ற   பாடலை  சீத்தாராமன்,  சகாரி ஆகியோர் பாடியுள்ளனர். ராஜன் சர்மா இயக்கத்தில் 1985ம் ஆண்டு வெளியான படம் “யாரோ அழைக்கிறார்கள்”. சங்கர் கணேஷ் இசையில்,” தண்ணி போட்டா போதை என்று பொய் சொல்றா” என்ற மெல்லிசை பாடலை ராஜ் சீத்தாராமன் பாடியுள்ளார். அந்த காலத்தில் மெல்லிசை மேடைகளில் ஒலித்தது இந்த பாடல்.

ரவீந்தர், இளவரசி ஜோடியாக நடித்த படம் “வீரன்”. இப்படத்தில்  இடம் பெற்ற அழகிய பாடல்,

வாடி கண்ணே வெண்ணிலா

வானம் உந்தன் கண்ணிலா…  

இந்த பாடலை டிரம்ஸ் அதிர அதிர ராஜ் சீத்தாராமன் பாடியதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

இசைஞானி இசையில் “என் ஜீவன் பாடுது” படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற பாடல்  “எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்”. இந்த பாடலை லதா மங்கேஷ்கர், மனோ பாடியிருப்பார்கள்.தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத பாடல் இது. இந்த படம் தெலுங்கில் “ஆகர்ஷனா” என்ற பெயரில் டப் செய்யப்பட்டது.

இதே பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து சீத்தாராமன் அற்புதமாக பாடியுள்ளார். பல பக்தி இசை ஆல்பங்களை தமிழிலும் ராஜ் சீத்தாராமன் வெளியிட்டுள்ளார். நிறைவாக, ஒரு அற்புதமான பாடலோடு  இந்த கட்டுரையை நிறைவு செய்யலாம். ” மணம் மாறாத மல்லிகை” படத்தில் இசைஞானி இசையில் பி.சுசீலாவுடன் இணைந்து ராஜ் சீத்தாராமன் பாடிய, ” பூந்தென்றல் காற்றாக பூஞ்சோலை வண்டாக ” பாடலை அவர் பாடியுள்ளார். இவரது பாடல்களை யூடியூப்பிலும், raaga.com,  saregama.comல் கேட்டு மகிழலாம்.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மனதின் ஆசையை தூண்டிய குரல் - ப.கவிதா குமார்
  2. சிவாஜி, ரஜினியை இயக்கியும் தோல்வியடைந்த இயக்குநர்-- ப.கவிதா குமார்
  3.  ஏழு சுவரங்களில் எத்தனைப் பாடல்:வாணி ஜெயராம் - ப.கவிதா குமார்
  4. கோழிக்கறி கேட்டதற்காக சென்சார் செய்யப்பட்ட பாடல்- ப.கவிதா குமார்
  5. வித்தியாசமான பாடல்களின்முகவரி  வி.சீத்தாராமன்- - ப.கவிதா குமார்
  6. கண்மணி சுப்பு: கவியரசு வீட்டுக்கட்டுத்தறி- ப.கவிதா குமார்
  7. வித்வான் வே.லட்சுமணன்  ஜோசியக்காரர் மட்டும்தானா? - ப.கவிதா குமார்
  8. ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை: வங்கத்துக் குயில் எம்ஆர்.விஜயா - ப.கவிதா குமார்
  9. தென்னாட்டு தமிழ்க்குரல்  விஎன்.சுந்தரம்-ப.கவிதா குமார்
  10. ’புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே’ :கவி சீமான் கேபி. காமாட்சி- ப.கவிதா குமார்
  11. ''தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்'':யார் இந்த நேதாஜி? - ப.கவிதா குமார்
  12. மனோவின் முன்னோடி ...மறக்க முடியாத பாடகர் ரமேஷ்- ப.கவிதா குமார்