ஓராண்டாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு எதிர்வினையாக அவர்கள்மீது “கார் தாக்குதல்” நடத்திக் கொலை செய்கிறது பாஜக அரசு.

ஒருபுறம் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகள், சமையல் வாயு விலை உயர்வு. அதுவே கொடுமை. ஒரு கொடுமையை மக்கள் மனத்திலிருந்து மறைக்க அல்லது திருப்ப அதைவிடப் பெருங்கொடுமை மற்றொன்றை நிகழ்த்துவது பாஜக பாணி. அப்போது மக்கள் கேஸ் விலை உயர்வு பற்றியெல்லாம் பேச மாட்டார்கள் இல்லையா?

நியாயமற்ற விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருகிறது. உ.பி.யில் ஆளும் பா.ஜ.க. அரசின் அமைச்சர் மகன் தன் காரைவிட்டுத் தாறுமாறாக விவசாயிகள் கூட்டத்தில் புகுந்து பலபேரைக் கொல்லுகிறார். (என்ன செய்வது, “ர்” விகுதி அளிக்கத் தகுதி அற்ற பலருக்கும் நாம் நாகரிகம் கருதி மரியாதை அளிக்க வேண்டியிருக்கிறது. இவர்களைவிட நம் காட்டில் திரியும் ஆட்கொல்லிப் புலி எவ்வளவோ உயர்ந்தது! அது பசிக்காகத் தானே கொல்கிறது!)

கொடுமை இத்துடன் நிற்கவில்லை. இந்நிகழ்வைப் படம் எடுத்த செய்தியாளரையும் கொல்கிறார்கள். கொலை செய்த நபர்களை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பார்க்க வரும் ஒரு அரசியல் தலைவியைச் சிறை செய்கிறார்கள்.

நாம் ஜனநாயக நாட்டிலா வாழ்கிறோம்?

மூர்க்கனுக்கு புத்திசொன்னால், நல்ல விளைவு ஏற்படாது. அவன் மூர்க்கத்தனம்தான் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.

அமெரிக்காவில் ஜனநாயக மாண்புகள் பற்றி நல்லதொரு பாடம் ஒரு மூர்க்கனுக்கு அதன் தலைவர்களால் புகட்டப்பட்டது. அதன் விளைவு, மேலும் ஜனநாயகத் தன்மைகள் அழிக்கப்படும் நிலை. பல பேர் பலியாகும் நிலை.

இதற்கெல்லாம் அப்பால், இந்த நிகழ்வுகளில் உச்சநீதி மன்றம் காட்டும் வெறுப்பும் கருணையின்மையும். “யாரை எதிர்த்துப் போராடுகிறீர்கள்?” என்று சவால் விடுகிறது இந்நாட்டின் மிக உயர்ந்த நீதியமைப்பு.

2022க்குள் நாம் வல்லரசாக இருக்கிறோமோ இல்லையோ, “கொல்லரசாக” மாறிப் போனோம்.

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்? ஓஹோ, இதற்குப் பெயர்தான் ராம ராஜ்யமோ?