துறைமுகம், மண்ணடி, சூளை, காசிமேடு, பெரியமேடு, வண்ணாரப்பேட்டை, கிணத்துக்கடவு, ராயபுரம், யானைகவுனி, வியாசர்பாடி, ஏழுகிணறு, கொத்தவால் சாவடி மார்க்கெட், புளியந்தோப்பு, பெரம்பூர் முதலிய பல பகுதிகள் சேர்ந்த ஒரு முக்கியமான வட்டாரம் வடசென்னை. இது நன்கு வளர்ச்சியடைந்த தென்சென்னையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பின்தங்கிய ஒரு பகுதி. இங்கே பெரும்பாலும் உழைக்கும் மக்களே வாழ்கின்றனர். கூலித் தொழிலாளர்கள் அதிகமாய் வாழும் பகுதி என்பதால், விளிம்புநிலை வாழ்வியலின் (நடுத்தர வர்க்கத்திடமிருந்து) மிகவும் வேறுபட்ட பண்பாட்டம்சங்கள் வடசென்னையின் (North Madras) தனித்துவமாக உள்ளன. இங்குப் பல தசாப்தங்களாக (1990களின் தொடக்கம் வரையில்) நிலவிவந்த ஆங்கிலக் குத்துச்சண்டைக் கலாச்சாரத்தினைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ள சினிமாதான், இயக்குநர் பா.இரஞ்சித்தின் (மெட்ராஸ், ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா முதலிய புகழ்பெற்ற படங்களை இயக்கியவர்) ‘சார் பட்டா பரம்பரை’ என்ற படம். மத்திய சென்னையிலும் (Central Madras) ஆங்கிலக் குத்துச்சண்டைக்கு இடமுண்டு என்றாலும், இப்போட்டிக்கான உணர்வுபூர்வமான ஆதரவும் வரவேற்பும் அதிகமுள்ள பகுதி வடசென்னைதான் என்பதாலேயே, இப்பகுதியைக் களமாகக் கொண்டு இப்படத்தைப் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார் எனலாம்.

இப்படத்தில் ‘ஆர்யா’ நாயகனாக நடித்துள்ளார். தமிழின் முக்கியமான நவீன நாடக ஆசிரியராகிய அமரர் ந.முத்துசாமியின் ‘கூத்துப்பட்டறை’ என்ற நவீன நாடகக் குழுவில் பயிற்சி பெற்ற நடிகர் பசுபதி, ஒரு தத்ரூபமான குத்துச்சண்டை வாத்தியாராகவே இப்படத்தில் வாழ்ந்துள்ளார். இப்படம், ஒரு நீண்ட குத்துச்சண்டைப் பாரம்பரியத்தின் வரலாற்றுப் பின்னணியைக் கலைநயத்துடன் பதிவுசெய்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசித் தசாப்தங்களில், வடசென்னைப் பகுதிகளில் ஒரு மிக முக்கியமான சமூக நிகழ்வாகியிருந்த குத்துச்சண்டைப் போட்டிகள், 1970களில் அதன் உச்சத்திலிருந்தன. இக்காலமே இப்படம் நிகழும் காலமாகும். எமர்ஜென்சி காலப் பின்னணியில், எப்படிக் குத்துச்சண்டை வடசென்னை மக்களின் அன்றாட வாழ்வின் ரத்தநாளங்களில் ஒன்றிக் கலந்திருந்தது என்பதற்கான ஒரு பண்பாட்டு ஆவணமாக இப்படம் உருப்பெற்றுள்ளது.

சில இடங்களில் ரேக்ளா ரேஸ், சில இடங்களில் கால்பந்துப் போட்டிகள், சில இடங்களில் ஜல்லிக்கட்டு, சில இடங்களில் கோழிச் சண்டை, சில இடங்களில் கபடி, சில இடங்களில் படகுப் போட்டிகள், சில இடங்களில் கம்புச் சண்டைகள் என்று வட்டாரத்திற்கு வட்டாரம் பல பிரத்யேகமான கலாச்சார அடையாளங்களைக் காண்கிறோம். அப்படியோர் அடையாளமாக, வடசென்னையின் பெருமிதமாகப் பார்க்கப்பட்டதுதான் குத்துச்சண்டை. இதில் ஆங்கிலோ இந்தியர்கள், மீனவர்கள், நாயக்கர்கள், வன்னியர்கள், செட்டியார்கள், தலித்கள், நாடார்கள், இஸ்லாமியர்கள், பிற உழைக்கும் சாதிகள் எனப் பலரும் ஈடுபட்டதற்கான வரலாற்றுச் சான்றாதாரங்கள் உள்ளன. எனினும், இப்படத்தில் விளிம்புநிலை மக்களைப் பிரதானப்படுத்தியே குத்துச்சண்டை சித்திரிக்கப்பட்டுள்ளது. இதைக் குறையாகக் கருத வேண்டியதில்லை. ஆகக் கூடுதலான சமூக ஒடுக்குமுறையைச் சந்தித்த ஒரு சமுதாயக் குழுவின் காத்திரமான எதிர்வினைக்குக் குத்துச்சண்டை உதவிய விதத்தின் தீவிரமான களச் சித்திரிப்பு என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்தியச் சூழலில் புனையப்படும் ஒவ்வொரு கலைப் படைப்பிலும் (அது நாவலோ, நாடகமோ, சினிமாவோ எதுவாக இருந்தாலும்கூட) ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளம் அழுத்தமாக மேலெழுவதே இயல்பாயிருப்பதைப் பார்க்கிறோம். அதற்காகக் கலைஞனைச் சாதியவாதியாகச் சுருக்கத் தேவையில்லை. தனக்கு நன்கு பழக்கமான ஒரு வாழ்வியலைச் சித்திரிப்பதன் மூலமாகவே, ஒரு குறிப்பிட்ட வட்டாரப் பின்னணியைக் களமாகக் கலைஞன் கொள்ளும்போதே, அவன் படைப்பு நம்பகத்தன்மையைப் பெறுகிறது. பிராமணச் சமூகத்தில் பிறந்த ஒரு எழுத்தாளர் பிராமணச் சமூகத்தினர் பற்றி விரிவாக எழுதுவதைப்போலவும், கிறிஸ்தவ அல்லது இஸ்லாமியச் சமூகத்தில் பிறந்த ஒரு கலைஞர் தத்தம் மக்களைப் பற்றிப் பிரதானமாக எழுதுவதைப் போலவும்தான், தலித் சமூகத்தில் சந்தர்ப்பவசமாகப் பிறந்த ஒரு படைப்பாளியும் தம் மக்களை அடையாளப்படுத்தி எழுதுகிறார். பிறர் எழுதும்போது, அதைக் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் சமூக மனம், தலித்தாகப் பிறந்துவிட்ட காரணத்தாலேயே அந்த உரிமையைத் தலித் படைப்பாளிகளுக்கு வழங்க மறுப்பது ஏற்கத்தக்கதில்லை. இதைப் புறந்தள்ளிவிட்டுப் படத்துக்குள் இனிப் போவோம்.

பகத் பாசிலின் ‘மாலிக்’ சினிமாவில் எப்படிக் காங்கிரஸ் கட்சியின் அடையாளங்கள் வெளிப்படையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவோ அப்படித்தான் இத்திரைப்படத்திலும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் அடையாளங்களும் வெளிப்படையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன என்று சினிமா பார்வையாளர்கள் கூறுகின்றனர்.  சார்பட்டா பரம்பரையின் பழைய சாம்பியனாக வரும் ரங்கன் வாத்தியார் (நடிகர் பசுபதி), தி.மு.க. கரைவேட்டியுடன் வருவது மட்டுமல்லாமல், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியைப் படிப்பவராகவும், எமர்ஜென்சியை விமர்சித்துத் தலைவர் கலைஞருக்கு ஆதரவு தெரிவிப்பவராகவும் படத்தில் காட்டப்படுகிறார். எழுபதுகளில் புதிதாகக் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆரைக் கிண்டலாக அணுகும் சில வசனங்களும் படத்தில் இருக்கின்றன. ஆனால், ஒருபாற்கோடலுடன் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளாக இவையில்லை; அன்றைக்கு வாத்தியார் ரங்கனைப் போன்ற பலர் வடசென்னைப் பகுதிகளில் வாழ்ந்தார்கள் என்பதன் நிஜமான காட்சிப் பிரதிபலிப்புகளாகவே (factual representations) உள்ளன.

‘மாஞ்சா கண்ணன்’ என்ற பாத்திரத்தில், எம்.ஜி.ஆர். போன்ற ஒப்பனையுடன், அ.தி.மு.க. பிரமுகராகப் படம் முழுக்க நடிகர் மாறன் (அண்மையில் கரோனாவுக்குப் பலியாகிவிட்டார்!) வருகிறார். தி.மு.க.வின் எமர்ஜென்சி எதிர்ப்பும், அ.தி.மு.க.வின் இந்திராகாந்தி ஆதரவும் படத்தில் கோடி காட்டப்பட்டுள்ளன. ஆங்கிலோ இந்தியராக வரும் ஜான் விஜயும், டான்சிங் ரோஸாக வரும் ஷபீரும், ஹீரோயின் மாரியம்மாளாக வரும் துஷாரா விஜயனும் படத்திற்கு விறுவிறுப்பூட்டுகிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவின் வழக்கம்போல், இப்படத்திலும் பெண் பாத்திரங்களுக்கான முக்கியத்துவம் குறைந்தேயிருக்கிறது. ஆண்களைத் தட்டிக் கேட்கிறவர்களாகச் சித்திரிக்கப்பட்டிருந்தாலும், பெரிதும் ஆண்களைச் சார்ந்து வாழ்பவர்களாகவே இவர்கள் காட்டப்பட்டுள்ளனர். கேமரா, உடல் மொழி, எடிட்டிங், இயக்கம், சண்டைக் காட்சிகள், பின்னணி இசை, காட்சி நுட்பங்கள் எனப் பலவும் இப்படத்தில் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கின்றன. சாதி, மதம் போன்ற அடிப்படைவாதங்களையும் பொறாமை, பூசல், வன்முறை, தூண்டிவிடல், பழிவாங்கல்  போன்றவற்றையும் குத்துச்சண்டைப் போட்டிகள் எப்படிக் காலி செய்துவிடுகின்றன என்பதையும் ‘சார்பட்டா பரம்பரை’ அழுத்தமாக முன்வைக்கிறது.

ஆங்கிலேயர்களின் மூலம் பாக்சிங் வடசென்னை மக்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம். ஆனால், இந்த விளையாட்டை, இந்தப் பகுதியின் சாதாரண மக்கள், தம்முடைய சமூகப் பெருமிதத்தின் அடையாளமாகக் கருதி வாழ்ந்ததைப் படம் நுட்பமாகவும் கொண்டாட்டமாகவும் காட்டுகிறது.  (எல்லப்ப செட்டியாரின் பரம்பரையையும் உட்செரித்துக் கொண்ட) இடியாப்பப் பரம்பரையிடம் தோற்ற (சுண்ணாம்புப் பரம்பரையையும் உள்ளீர்த்துக்கொண்ட) சதுர்சூர்ய சார்பட்டா பரம்பரையினர்,  மீண்டுவந்து இழந்த தம் தன்மானத்தை மீட்டெடுக்கப் போராடுவதுதான் இப்படத்தின் கதை. சார்பட்டா பரம்பரைக்கு வாத்தியார் ரங்கன் என்றால், இடியாப்பப் பரம்பரைக்குத் துரைக்கண்ணு வாத்தியார். முடிசூடா மன்னனாகத் திகழும் இடியாப்பப் பரம்பரையின் வேம்புலியைப் பத்துப் பதினொரு சண்டைகளில்  தம் அணியைச் சேர்ந்த பலரும் தோற்றபிறகு இறுதித் தேர்வாகக் களமிறங்கும் கபிலன் தன் முயற்சியில் வெல்லப் போகிறான். அத்தருணத்தில் அது ஒரு மாபெரும் நிகழ்வாக வெடிக்கப்போகிறது.  ஆனால், யாருமே எதிர்பாராதவிதமாகக் கபிலனின் வெற்றிக்குச் சற்று முன்பாக மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் எமர்ஜென்சி அறிவிப்பால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திச் சில எதிரிகள் செய்யும் வன்முறைகளால், குத்தச்சண்டைப் போட்டி முடிவடையாமல் கடைசித் தருணத்தில் நின்றுபோய்விடுகிறது. சார்பட்டா வாத்தியார் ரங்கன், தி.மு.க.வின் தீவிர உறுப்பினர் என்பதால் சிறையில் தள்ளப்படுகிறார். இக்காட்சியமைப்பு, எளிய மனிதர்களின் அன்றாட வாழ்விலும் அரசியல் எப்படி வலிமையாகக் குறுக்கிடுகிறது என்பதற்கான சான்றாகிறது.

பின் எமர்ஜென்சிக்குப் பிறகு வந்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் – சற்றே மாறிய ஒரு சமூகச் சூழலில் – நிறுத்தப்பட்ட குத்துச்சண்டை மீண்டும் நடந்து முடிவதாகக் காட்சிச் சித்திரிப்புள்ளது.இங்கிலீஷ் குத்துச்சண்டையின் பாரம்பரிய மதிப்புகளை உள்ளூர் மக்கள் எவ்வாறு பேணித் தங்கள் சுய அடையாளங்களுள் ஒன்றாக அதை மாற்றிக்கொள்கிறார்கள் என்ற பரிணாம வளர்ச்சியைத் தன் தொனியாக இக்கதை கொண்டுள்ளது என்றும் இப்படத்தைப் பார்க்க முடியும். பாக்ஸிங் ரிங்குக்குள்ளும் வெளியிலும் பின்னப்பட்ட சதி வலைகளினூடாகக் காட்சிகள் அரங்கேறிப் பார்ப்பவர்களைக் கதைக்குள் கவர்ந்திழுக்கின்றன. கதாநாயகனுக்குக் கபிலன் என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குநர். இது அடித்தட்டு மக்களிடம் காலம் காலமாகப் புழங்கிவரும் ஒரு பெயர் என்பதுடன், புகழ்பெற்ற சங்ககாலப் புலவரான (குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர்) கபிலரின் பெயருமாகும். இப்படத்தின் முதல்பாதியைப் பாக்ஸிங் ரிங் ஆக்கிரமிக்கிறது என்றால், இரண்டாம் பாதியைச் சாராயமும்  அது தொடர்பான வன்முறை வெறியாட்டங்களும் ஆக்கிரமிக்கின்றன. எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் முற்பகுதியிலும் சாராயம் தமிழ்நாட்டு இளைஞர்களைச் சூறையாடிய சமூக அவலத்தின் சாட்சியமாகப் படத்தின் இரண்டாம் பாதியிருக்கிறது. இவற்றுக்கிடையில்தான் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் போராட்டக்குரலாகப் படம் ஒலிக்க முனைகிறது என்று கருதுகிறேன். பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நின்று ஒரு சினிமா பேசும்போது, அதைப் பார்க்கும் ஒரு சமூகத்தின் சாதாரண மனிதர்களுக்கு அது எவ்வளவு பெரிய ஆத்ம பலத்தைத் தருகிறது என்பதற்கும் இப்படம் வகைமாதிரியாகிறது.

படத்தின் ஹீரோவாக வரும் குத்துச்சண்டையின் பெருங்காதலன் ஆர்யாவுக்கும், குத்துச்சண்டையைக் கட்டோடு வெறுக்கும் ஆர்யாவின் அம்மாவாக வரும் (வன்முறைக்குக் கணவனைப் பலிகொடுத்த) அனுபமா குமாருக்கும் இடையிலான காட்சிகளில் பாசமும் இறுக்கமும் ஒருசேர மிளிரக் காண்கிறோம். படத்தின் பின்பாதியில், மகனாகவும் காதலனாகவும் சீடனாகவும் தான் தோற்றுவிட்டதாகக் குடித்துவிட்டு ஆர்யா புலம்பும்போது, உன்னை மீட்டெடுக்கக் குத்துச்சண்டை வீரனாக நீ மறுபடியும் மாறுவதுதான் ஒரே வழி என்கிறார் அம்மா. இதேபோல், “உனக்கு நான் இருக்கிறேன் மாமா” என்று சொல்லி மனைவி மாரியம்மாளும் ஆர்யாவுக்குப் பக்கபலமாக நிற்கிறாள். அடித்தட்டு மக்களுக்குக் குடும்பத்தினரே பெரிய ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் இந்தக் காட்சியமைப்பைப் பார்க்கலாம்.

கபிலனும் ரங்கன் வாத்தியாரும் மட்டுமல்லாமல், டான்சிங் ரோஸ், கபிலனுடன் மோதித் தோற்கும் ராமன், அவனின் மாமன், எதிரணி வீரன் வேம்புலியாக வரும் ஜான் கொக்கேன், டான்சிங் ரோஸாக வரும் ஷபீர் கல்லரக்கல், இடியாப்பப் பரம்பரையின் வாத்தியாராக வரும் ஜி.எம். சுந்தர், குத்துச்சண்டை போட்டிகளின் அமைப்பாளராக வரும் காளி வெங்கட், சார்பட்டா பரம்பரை வாத்தியாரின் மகனாக வரும் வெற்றிச்செல்வன், ஆர்யாவின் மனைவியாக வரும் மாரியம்மாள், ஆர்யாவின் தாய், பீடி ராயப்பன் எனப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். இவர்களின் நடிப்பு, படத்தின் கனத்தைக் கூட்டுகிறது.

மனக்குமுறலைக்கூடப் பிரதிபலித்துவிடும் சந்தோஷ் நாராயணனின்  பின்னணி இசையும், ஜி.முரளியின் இயற்கைப் பின்னணியிலான கண்ணுறுத்தாத ஒளிப்பதிவும் படத்திற்கு வலிமை சேர்க்கின்றன. கதையின் முக்கியமான நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையைக் கலைநுட்பங்கள் மூலம் இயக்குநர் சாதித்திருக்கிறார். இப்படத்தில் ஹீரோ × வில்லன் என்ற வழமையான இருமை எதிர்மை கைவிடப்பட்டுள்ளது. இங்குக் கபிலனும் வேம்புலியும் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதில்லை. இவர்களைச் சுற்றி இயங்கும் பல துணைநடிகர்களும்கூட முக்கியத்துவம் பெற்றுள்ளார்கள். மிகத் தரமான படங்களிலேயே நாலைந்து வலுவான கதாபாத்திரச் சித்தரிப்புகள் இடம்பெறுவதுதான் வழக்கம். இப்படத்திலோ, பத்துப் பன்னிரண்டு வலுவான கதாபாத்திரங்களை உருவாக்கி ஒன்றோடொன்றைத் தீவிரமாக மோதவிட்டும் பிணைத்தும் உணர்வு ஜாலம் காட்டியுள்ளார் இயக்குநர். படம் முழுவதும் மனிதர்களின் கூட்டம் இருந்துகொண்டேயிருக்கிறது. இதையும் ஒரு முக்கியமான அம்சமாகவே நான் காண்கிறேன். பெரிய கூட்டத்தைப் பல காட்சிகளில் அமைத்துப் படம் பண்ணுவது சுலபமான காரியமில்லை. சினிமாவை மக்கள்வயப்படுத்துவது என்பது பல்வேறு மனிதர்களையும் கூட்டமாகச் சேர்த்து மிக இயல்பாகச் சினிமாவுக்குள் நடமாடவிடுவதும்தான் என்று உறுதியாக நினைக்கிறேன். நாயக வழிபாட்டைத் தாண்டித் தமிழ் சினிமா நகர்கிறது என்பதற்கான உறுதியான தடயமாக இப்படத்தைச் சொல்லலாம்.

திருவிழாக்கள், பண்டிகைக் கொண்டாட்டங்கள், பண்பாட்டுத் தொடர்ச்சியிலான பல்வேறு சமூக  நிகழ்வுகள், வெகுசன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் உள்ளூர்த்தன்மையை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட விளையாட்டுகள் முதலிய இவை ஒரு சமூகத்திற்கு ஏன் தேவைப்படுகின்றன? இவையே ஒரு சமூகத்தை உயிர்த்துடிப்புடன் இயங்க வைக்கின்றன. இவையில்லாமல் போனால், சமூகத்தில் குடியும் லாட்டரியும் பிற சூதாட்டங்களும்தான் பெருகிப் போகும். இப்பிரக்ஞையைப் படத்தின் பின்பகுதியால் தெள்ளத் தெளிவாக உணர்ந்துகொள்கிறோம்.

சாலைத்தெருச் சுவர்களில் எழுபதுகளில் பிரபலமான பல தமிழ் சினிமாக்களின் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள். கோபால் பல்பொடி, ரோஜா பாக்கு விளம்பரங்கள் காணப்படுகின்றன. இளைஞர்கள் பலரும் தொளதொளப்பான பேண்ட்கள் போட்டு, இன் பண்ணிக்கொண்டு, ஸ்டெப் கட்டிங்குடன் இருக்கிறார்கள். சிவப்புக் கலரில் பல்லவன் எனப் பெயரிட்டு அரசு பஸ் ஓடுகிறது. சென்னைத் துறைமுகம் மற்றும் எண்ணூர் அனல் மின்நிலையப் பின்னணியில் பல காட்சிகள் பின்னப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் சொல்கிறார்கள். குத்துச்சண்டை உள்ளரங்கம், உலகளாவிய விளையாட்டு போட்டிகளில் இருப்பதுபோல் தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எழுபதுகளின் வடசென்னைப் பகுதிகளின் புறத்தோற்றத்தையும், அங்கு வாழ்ந்த எளிய மக்களின் ஆசாபாசங்களையும் பிரத்யேகக் குணச்சித்திரங்களையும் நம்பகத்தன்மையுடன் திரைமொழிக்குள் திறமையாகக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள்.

நான்கு எண்ணி முடிப்பதற்குள் எதிராளியை நாக் அவுட் செய்வது என்பதால், ‘சார்’ என்ற இந்திச் சொல்லுடன் பொருத்தி, ‘சார்பட்டா’ என்பதற்குப் பொருள் சொல்கிறார்கள். இடிபோல் தாக்குபவர்கள் என்பதால், இடியாப்பப் (நாயக்கர்) பரம்பரையினர் எனப்படுகின்றனர். இவ்விரு குழுக்களுக்கும் சில தலைமுறைகளாகத் தொடரும் குத்துச்சண்டைப் போட்டியாக, ‘சார்பட்டா பரம்பரை’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லப்ப செட்டியார் பரம்பரை, சுண்ணாம்புப் பரம்பரை என்ற வேறு இரண்டு குத்துச்சண்டைக் குழுக்களும் வடசென்னையில் இருந்திருக்கின்றன என்றாலும், எழுபதுகளில் ‘சார்பட்டா’ பரம்பரைக்கும் ‘இடியாப்ப’ப் பரம்பரைக்கும்தான் பெரும் போட்டி நடந்திருக்கிறது. இதில், விளிம்புநிலை வாழ்வியலிலிருந்து உருவாகிவரும் ஓர் இளைஞனின் மூலமாகச் ‘சார்பட்டா பரம்பரையின்’ தன்மானம் மீட்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும் வடசென்னையின் ‘பண்பாட்டு ஆவணம்’தான் இப்படம்.

‘காஷியஸ் க்ளே’ என்கிற ‘முகமது அலி’ புகழின் உச்சிக்கேறிய காலமும் எழுபதுகளின் நடுப்பகுதிதான். இப்படத்தின் கடைசிக் காட்சியில், சென்னைக்கு முகமது அலியை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அழைத்துவந்து பெருமைப்படுத்திய நிகழ்வும் காட்டப்படுகிறது. அடித்தட்டு மக்களின் வெற்றியைத் தடுக்க முனையும் இடைநிலைச் சாதிகளின் சாதிய மனோபாவங்களும் இப்படத்தில் நுட்பமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. சார்பட்டா வாத்தியார் ரங்கனின் மகன், இடியாப்பப் பரம்பரையின் வாத்தியார் துரைக்கண்ணு, அவரின் சீடன் வேம்புலி, வேம்புலியை எதிர்க்க முதலில் ரங்கன் வாத்தியார் தேர்ந்தெடுக்கும் ராமன், அவனின் மாமன் எனப் பலராலும் கபிலன் (ஆர்யா) இகழப்படுகிறான். அதற்குச் சாதிய மனோபாவமே முக்கியக் காரணமாகிறது என்பதைப் படம் மறைக்கவில்லை. அதனால்தான் இறுதியில் கபிலன் வெற்றி பெறும்போது, அது ஏதோ ஒருவகையில் ஒரு குத்துச்சண்டை வீரனின் தனிப்பட்ட வெற்றியாக இல்லாமல், விளிம்புநிலை மக்கள்திரளின் கூட்டுவெற்றியாகக் கொண்டாடப்படுமிடத்திற்குப் படம் உயர்கிறது. இறுதியில் முகமது அலி எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஒரு விழா மேடையில் தோன்றுவதுகூட, அவர் கறுப்பின மக்களின் முக்கியப் பிரதிநிதி என்ற அவ்வகையில், எம்.ஜி.ஆரின் கவர்ச்சி அரசியலுக்கும் அப்பாற்பட்டுப் படத்தில் வரும் கபிலனின் வெற்றியோடு ஒன்றிணையும் ஒரு வலுவான சமூகப் பதிவாகிவிடுகிறது. இதில் ஐம்பதாண்டுக்காலத் தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு துருவ அரசியலில் தி.மு.க. சார்பு நிலையைப் படம் எடுத்திருப்பதுபோல் ஒரு காட்சி மயக்கமிருந்தாலும், கேரளத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என்று வரும்போது கம்யூனிஸ்ட்களுக்கு எப்படிக் கருத்தியல் தளத்தில் ஒரு கூடுதல் மதிப்புச் சாய்விருக்கிறதோ, அப்படித்தான் தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கும் ஒரு கூடுதல் மதிப்புச் சாய்விருக்கிறது என்றும் நாம் அவதானிக்கலாம். வெகுமக்களிடம் எம்.ஜி.ஆருக்குக் கவர்ச்சியுண்டு என்பதற்கான சிறிய தடயங்களும் படத்தில் இருக்கவே செய்கின்றன. இவ்விரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கிடையில்தான் இன்றுவரை விளிம்புநிலையினர் ஊசலாட வேண்டியுள்ளது என்பதையும் படம் இந்தியக் குடியரசுக் கட்சி, அம்பேத்கர் படம் காட்டப்படுதல், நீல நிறம் போன்ற குறியீடுகள் மூலம் சூசமாகச் சொல்லிவிடுகிறது.

முதல் பாதியின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைந்திருக்கிறது என்பதையும், மறைந்த கபிலனின் தந்தையின் (ஒரு தகராறில் கொல்லப்படுகிறார்) நண்பரான மீனவர் பீடி ராயப்பனின் பயிற்சியின் மூலம் ஒரே பாடலில் குடிக்கு அடிமையான கபிலன் மீண்டும் உடல் வலுப்பெற்றுக் குத்துச்சண்டை வீரனாக முழுத்தகுதி பெற்றுவிடுவதாகக் காட்டுவதையும் படத்தின் சிறிய குறைகளாகச் சொல்லலாம். ஆனால், இப்படம் மிக வேகமாக நகர்வதால், இக்குறைகள் எதுவும் நம் மனதில் ஒட்டுவதில்லை. மேலும், கபிலனின் வெற்றிக்கு, மீனவரான பீடி ராயப்பனிடம் அவன் பெறும் புதிய பயிற்சியும் முக்கியக் காரணம் என்ற நுண்கோணத்திலிருந்து நோக்கும்போது, இப்படத்தின் குத்துச்சண்டைப் போட்டிகளில் மீனவர்களின் பங்களிப்பு சரியாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற விமர்சனமும் வலுவிழந்துவிடுகிறதல்லவா! இங்கு யார் ஒருவருடைய நடிப்பையும் லேசாகச் சொல்லிவிட முடியாது என்பதுதான் இப்படத்தின் பெரிய பலம். வசனங்களை நம்பியிராமல் காட்சி ரூபமாகப் படம் சினிமா ரசிகர்களைக் கவர்ந்துவிடுகிறது. ஆனால், வசனங்களும்கூடச் சோடை போவதில்லை. கோமாமிசத்துக்குத் தடைபோடும் இந்துத்துவ அரசியல் சூழலின் பின்னணியில், மாட்டுக்கறி பிரியாணியை வாங்கியுண்பது பற்றிப் பெருமிதத்துடன் மாரியம்மாள் பேசுவதை, எதிர்ப்பரசியலின் குறியீடாகப் பார்க்கத் தவறிவிடக்கூடாது. “வீசும்போதெல்லாம் வலையில் மீன் விழுந்துவிடாது. மீன் விழுவதற்காக நாம்தான் காத்திருக்கணும்” என்பது போன்ற வசனங்களில், இயக்குநரின் புத்திசாலித்தனம் நன்றாகவே பளிச்சிடுகிறது.

அடித்தட்டு மக்களின் அரசியல் பிரதியாகச் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தைப் பார்க்க முடியும். அதேவேளையில், அரசியல் விழிப்பற்ற சாதாரண மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு யதார்த்த வாழ்வியல் படமாகவும் இதை ரசிக்க முடியும். ‘குத்துச்சண்டை’ என்ற விளையாட்டை மையமாக வைத்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் ஆன்மாவை அதன் அனைத்துச் சாத்தியமான கோணங்களிலிருந்தும் காட்டிவிடும் ஒரு படம் இது என்று தயக்கமின்றிச் சொல்லலாம். வழக்கமாகச் சமூகப் பிரச்சினைகளைக் குறிப்பாக விளிம்புநிலையினரின் எதிர்ப்பரசியலைச் சித்திரிக்க முனையும் சினிமா உள்ளிட்ட கலையிலக்கியப் பிரதிகளின் மீது பிரச்சார முத்திரையைக் குத்திவிட அதிகார வர்க்கத்தினர் துடிப்பர். ஆனால், அவர்களும் வாய்திறக்கவே முடியாத வகையில்,  விளிம்புநிலையினரின் வலிமையான எதிர்ப்பரசியலைக் கலைநுட்பங்களுடன் கூடிய அழகியல்ரீதியிலான திருப்தியைச் சகலதரப்புப் பார்வையாளர்களுக்கும் நிகழனுபவமாக்கும் அருமையான காட்சிப்படங்களாகத் தொடர்ந்து பா.இரஞ்சித் உருவாக்கிவருகிறார். அதன் இன்னொரு காத்திரமான வெளிப்பாடே இப்படமும் எனலாம்.