மகாமதுரக் கவிஞர் வீ. வே. முருகேச பாகவதர் (21-10-1897 – 21-10-1974), இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில், அதாவது சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், ஒரு மரபுக் கவிஞராகத் தமிழ்க் கவிதையுலகில் அறிமுகமாகிச் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்திலும் ஊக்கம் மங்கிவிடாமல் மக்கள் பாவலராகச் செயல்பட்டவராவார். பிறந்த தேதியிலேயே மறைந்த பெருமைக்குரிய பாகவதர், சைவ-வைணவ-பௌத்த மரபுகள் எதற்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல், வள்ளலாரின் வழியிலும் பெரியாரின் பகுத்தறிவுப் பாதையிலும் நடைபோட்டு, அடித்தட்டு மக்களின் ஆன்மாவைத் தம் மரபுக் கவிதைகளில் எழுச்சியுடன் சித்திரித்தவராவார். இவர் எழுதித் தொகுக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் சமூகச் சீர்திருத்தக்கீதங்கள் (1931), மதுவிலக்குக் கீர்த்தனம் (1932), அறிவானந்தக்கீதம் (1934), தமிழ்ச்சோலை(1946) ஆகிய நான்கு நூல்களைப் பேராசிரியர் க.ஜெயபாலன் பதிப்பித்துள்ளார். இதில் முதல் நூலிலுள்ள சில குறிப்பிடத்தக்க புதிய குரல்களைப் பற்றிய என் வியப்பும் மதிப்பீடுமே இக்கட்டுரையாகும்.
பண்டிதர் அயோத்திதாசரிடமிருந்து தொடங்கும் ஆதிதிராவிட மறுமலர்ச்சிக் கருத்தியலை உள்வாங்கியும், அதே நேரத்தில் பெரியாரின் பகுத்தறிவு உள்ளிட்ட முதன்மையான சமூக முன்னேற்றக் கருத்துகளோடு முரண்படாதும், காங்கிரஸ் பேரியக்கத்தில் காந்தி முன்வைத்த மதுவிலக்குக் கொள்கையோடு ஒன்றியும், பொதுவுடைமைக் கோட்பாட்டுக்கு முகங்கொடுத்தும் பாகவதர் இயங்கினார். இதுபோல் பல தளங்களில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பலரிடமும் காணப்படுவது போன்ற ஆணாதிக்க உணர்வு இவரிடம் காணப்படுவதில்லை என்பது மட்டுமன்றிப் பெண்ணியம் பற்றிய சரியான புரிதலுடனும் செயல்பட்டுள்ளார் என்பதை வியக்காமலிருக்க முடியவில்லை. அயோத்திதாசரின் தாக்கத்துடன், “ஆதியில் அரசர்களாயும் சகலகலா வல்லுநராயும் சித்துப் புருஷர்களாயும் சாத்திர நிபுணர்களாயும் தத்துவ ஞான சிரோமணிகளாயும் மேன்மையாய் விளங்கிவந்த பூர்வத் தமிழ்க்குடி மக்களாம்” ஆதிதிராவிடர்களின் சமூக முக்கியத்துவத்தையும் வரலாற்றுப் பங்களிப்பையும் நினைவுகூர்வதுடன், அவர்களுடைய நிகழ்கால நிலைமையையும் எதிர்கால வளத்தையும்கூடக் கணக்கில் கொண்டவையாகப் பாகவதரின் கவிதைகளை நாம் பார்க்க முடியும். ” சாத்திர பேதம், கோத்திர பேதம், சமய பேதம், மத பேதம், குலப் பேதம் முதலிய பல பேதங்களையும் தீண்டாமை, வேண்டாமை, தொடாமை, கொடாமை, பார்க்காமை, சேர்க்காமை, கேட்காமை, மீட்காமையாகிய பல மோச பேதங்களையெல்லாம் சாதித்துத் தருமத்தையோட்டி அதர்மத்தை நிலைநாட்டினார்கள்” – இடையில் குடியேறிய ஒரு சில அன்னிய நாடோடிகளும் சுயநலக்காரர்களும் என்கிறார் பாகவதர். இன்றைய நிலையில் நின்று காணும்போது, எவ்வளவு எழுத்தெண்ணிப் பாகவதர் எழுதுகின்றார் என்பதன் அம்முக்கியத்துவத்தைப் படிப்போர் உணராமலிருக்கவியலாது.
‘காருண்யம் பொருந்திய இங்கிலீஷார் ஆளுகை’ என்றும் எழுதுவார். “சுதந்தர தாகம் மிகுந்த ஆதிதிராவிடச் சகோதர சகோதரிகள்” என்றும் எழுதுவார். இவ்விரண்டிற்கும் முரண்பாடுள்ளதாக நாம் கருதலாம். ‘சமூக விடுதலையுடன் இணைந்தது அரசியல் விடுதலை’என்ற பாகவதரின் பார்வையைச் சரியாக நாமும் உள்வாங்கினால்தான், இம்முரண்பாட்டின் முட்டறுக்கவியலும். “ஜாதியெனும் பெருங்காட்டைத் தானழித்துப் போட்டு, சமூகமெனும் நிலந்திருத்திச் சமரச சன்மார்க்க, நீதி சுயமரியாதை நெறி விதையையூன்றி, நீசப் புராதனப்பழக்க நெடும்பறவை ஓட்டி, ஆதரையிற் பேரன்பாம் அரும்புனலே பாய்ச்சி, அரிய பகுத்தறிவெனும் ஓர் அடர்வேலி நாட்டி, ஏதமிலா சாத்வீகக் காவலரால் காத்த, இனிய சுதந்தரக்கனியை எடுத்துண்ண வாரீர்” என்கிறார் பாகவதர். இங்குச் ‘சுதந்தரம்’ என்ற கருத்தியலை, அவர் காலத்து வழமையான மனோபாவத்திலிருந்து விடுபட்டு (ஆங்கிலேயர் வெளியேறினால் எல்லாம் சரியாகிவிடும்!), எவ்வளவு உயிர்த்துடிப்போடு பாகவதர் அணுகுகிறார் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். ‘சாதியெதிர்ப்பு, சமரச சன்மார்க்கம், நீதி, சுயமரியாதை, புராதனப் பழக்க மறுப்பு, அன்பு வழி, பகுத்தறிவு வேலி, சாத்வீகக் காவலர், இனிய சுதந்தரக் கனி’ ஆகிய இச்சொற்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கவியலாதவை என்பதை வலியுறுத்துவதில், இப்பாட்டிற்கு நிகராக இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிதையில், விரல்விட்டு எண்ணத்தக்க சில முயற்சிகளையே நாம் சுட்டிக்காட்ட முடியுமென்று தோன்றுகிறது.
தேய்வழக்காகிவிட்ட எளிய மொழி நடையென்ற சொல்லால் பாகவதரைச் சுருக்கிவிட முடியாது. பார்வைத் தெளிவின் அகண்டமாகப் பாகவதரின் மொழியைக் குறிப்பிட வேண்டும். “நந்தனார் பாணர்தன்னை நடுவில்வைத்துத் தொழுவார், அந்த வம்சத்தினரை அண்டவிடாது அழுவார்” எனப் படீலென்று உண்மையைப் போட்டுடைத்துவிடும் மொழித் தெறிப்புக் கூடியவை பாகவதரின் தொடர்கள். “கங்கையில் குளித்தென்ன கடவுளைப் பூஜித்தென்ன, சங்க நூல் படித்தென்ன சமத்துவம் இல்லாதவர்கள்” – இதைப் படித்துவிட்டு, உண்மையிலேயே நான் அரண்டுவிட்டேன். நண்பர் ஸ்டாலின் ராஜாங்கம் போன்றோர், வரிந்து வரிந்து உரிய சான்றாதாரங்களை எடுத்துக்காட்டிப் பக்கம் பக்கமாக எழுதி நிறுவ முனையும் வரலாற்றின் வஞ்சனையை எவ்வளவு ரத்தினச் சுருக்கமாகப் புலப்படுத்திவிடுகிறார் பாகவதர்! “பசுவின் பாலையெடுத்துப் பருகல்லில் ஊற்றிடுவார், சிசுவுக்கு அளிக்கமாட்டார் கண்மணி, சீ இவர் கெட்டாரடி – ஞானக்கண்மணி” என்கிறார். இதோடு விட்டாரா? “ஊரையே வஞ்சிப்பார் ஓயாபாவம் செய்வார், தேரையே சிங்காரிப்பார் கண்மணி, தெய்வத்தை ஏமாற்றுவார் – ஞானக்கண்மணி” என்று ‘யதார்த்தத்தை’யும் பேசிவிடுகிறார். “எச்சில் மொந்தையைக் கையாலெடுத்துக் கள்ளைக் குடிப்பார், மெச்சும் மேல்ஜாதி என்பார் கண்மணி, மேன்மையும் ஏதுக்கடி – ஞானக்கண்மணி” என்றுமெதுகிறார்.
பொதுவாகக் கீழ்ச்சாதிக் கள்குடியர்களைத் திருத்தும் பாட்டுகளே இங்கு மதுவிலக்குப் பிரச்சாரங்களாகப் பாடப்பட்டுள்ளன. ஏன், மேல்சாதியினர் யாரும் குடிப்பதேயில்லையா! இங்குப் பாகவதர், மேல்சாதிக் குடியர்களைத் திருத்தப் பாடுகின்றார். விளிம்பின் அறம் என்பது இதுதான். அடித்தட்டினரை விடவும் பெரிய கள்குடியர்கள் மேல்தட்டில் இருப்பதைத் துணிவாகச் சொல்லும் பாடலிது. “ஜாதிமதப் பேய்க்குச் சாவுமணி அடித்துவிட்டார், பாதக மதுப் பேய்க்குக் கண்மணி, படுகுழி தோண்டிவிட்டார் – ஞானக்கண்மணி; ஜய இங்கிலீஷ் கொடி வாழ்க ஜாதிப்பேய் கீழ்தாழ்க, சுயமரியாதை சூழ்க கண்மணி, சுதந்தரம் பெருகுமடி-ஞானக்கண்மணி” என்கிறார் பாகவதர். ‘இங்கிலீஷ் கொடி வாழ்க’ என்று வாழ்த்திவிட்டுச் ‘சுதந்தரம் பெருகுமடி’ என்றும் பாடும் தத்துவக் கூர்மையைப் பாகவதரின் தனித்துவமாகக் காணலாம். அதாவது, பிரிட்டிஷாரை விடவும் சமதர்மம் பேணும் சனநாயகவாதிகள் தோன்றாதவரையில் இங்கிலீஷ் கொடியே வாழட்டும் என்கிறார்.
சுதந்திரத்தின் பொருளைச் ‘சமவாய்ப்புள்ள சமூகம்’ என்ற பொருளில் புரிந்துகொண்டுள்ள எவரும் பாகவதரின் கருத்துடன் முரண்பட வழியில்லை. இதன் நீட்சியாகவே, “தாழ்த்தப்பட்டாரில்லாமல் பாங்கி – பெருந் தனபாக்யம் பிறர்க்கேது பாங்கி, வாழ்ந்தோர்கள் முடிவிலே பாங்கி-கூட, வாரிக்கொண்டு போனதென்ன பாங்கி” என்றும் கேட்கிறார். “பள்ளியில் படித்திடவும் சேர்க்கார் – பொதுப் பாதையில் நடக்கவும் பார்க்கார், உள்ளக்குறிப்பறிய மாட்டார் – சும்மா ஓதுவார் வேதம் வெகுநீட்டாய்” என்று பாகவதர் எழுதுவதில், ‘உள்ளக் குறிப்பறிய மாட்டார்’ என்ற தொடரைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். வேறொரு பாடலில், “கையில் குடையும் பிடிக்கக் கூடாதாம், காலில் பாதரட்சை போடக் கூடாதாம், ஐயோ இதனால் இவர்க்கென்ன தீதாம்” எனக் கேட்கின்றார். முரட்டெதிர்ப்பில்லை; பகுத்தறிவுப் பார்வையுடன் கூடிய மிக நியாயமான கேள்விகளையே பாகவதர் முன்னெடுக்கிறார். எதிர்த்தரப்புடன் இடைவிடாமல் உரையாடல் நிகழ்த்துபவர் என்பதையே, பாகவதரின் பெருஞ்சிறப்பாகக் குறிப்பிடுவேன்.
பெண்களைப் பற்றிய உண்மையான கரிசனத்துடன் எழுதியவர் என்பது, பாகவதரின் இன்னொரு பரிமாணமாகும். “பெண்களுக்குச் சொத்துரிமை சுதந்திரம், பெரிதும் தரவேண்டுமா – உள்ளக், கண்கெட்டு அடிமையைப்போல் நடத்தியவர், கனம் குறைக்க வேண்டுமா” என்றும், “பெண்ணுக்கு மாத்திரம் கற்பை எக்காலும், பெரிதும் சுமத்த வேண்டுமா”- “இந்த, மண்ணினில் ஆணெல்லாம் கட்டுத்திட்டமின்றி, மனம்போல் நடக்க வேண்டுமா” என்றும், “பத்துவயதுள்ள பெண்ணைக் கிழவனுக்குப், பரிணயம் செய வேண்டுமா – வயதில், ஒத்துக் காதல்மிகும் உண்மைத் திருமண, உரிமை தர வேண்டுமா” எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டுப் பெண்ணியம் சார்ந்து நின்றவர் பாகவதர். இன்னுமொறு சான்று பாருங்கள். “விதவைகளை மூலைவீட்டில் அடைத்துவைத்து, வீண்பழி பெறவேண்டுமா- அவர்க்கிதமாக, மணம் செய்து பழிப்புக்கிடமின்றி, இன்பம் பெறவேண்டுமா” என்றும், “கூசாது பேயாடும் பெண்ணுக்குப் பிரம்படி, கொடுத்தோட்டி விடவேண்டுமா – ஐயா, பூசாரிகள் செய்யும் அக்ரமங்களுக்கின்னும், பொறுத்திருக்க வேண்டுமா” என்றும் ‘உள்ளக்கண்’ கெடாதிருக்கப் பாகவதர் வழிகாட்டுகிறார். “உள்ளதை முருகேசன் உரைத்தான் அதைக்கண்டு, உண்மையறிய வேண்டுமா – அன்றிக், கள்ளத்தனமாகப் புறங்கூறச் சீறியே, கவிழ்ந்துவிழ வேண்டுமா” எனப் பாகவதரைப் படிக்கும் வாசகர்கள்தாம் முடிவுசெய்துகொள்ள வேண்டும். ‘யதார்த்தவாதி வெகுஜன விரோதி’ என்ற பழமொழியைப் பாகவதரைப் பொறுத்தமட்டில், ‘யதார்த்தவாதி வெகுஜன நண்பன்’ என்று உருமாற்றியே புரிந்துகொள்கிறேன். இதற்கும் ஓர் உதாரணம் காட்டலாம். “கருமாதி கலியாணம் திதி முதலாகிய, காலத்தில் புரோகிதமேன் ஏன்-அங்கே, வரும் பார்ப்பான் வள்ளுவன் பண்டாரம் தாதன்தன், வயிற்றுப் பிழைப்புக்குத்தான் தான்” என்று பார்ப்பானுடன் வள்ளுவனையும் பண்டாரத்தையும்கூடச் சேர்த்துவைத்தே பாகவதர் விமர்சிக்கிறாரே! இந்த நேர்மை மிகவும் அரியது. ‘பெருந்தெய்வம் தீது; சிறுதெய்வம் இனிது’ என்ற குரல் மேலோங்கியுள்ள இன்றைய சூழலில், பாரதிபோல் ‘உண்மையை மனமாரப் புரட்டாதவர் பாகவதர்’ என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
ஆதிதிராவிடர் சுயமரியாதைப்பாடல், சமரச சன்மார்க்க கீதம், ஞானரசக் கீர்த்தனை, பெரம்பூர் ரெயில்வே தொழிற்சாலைச் சிறப்புச் சிந்து, பிரிட்டிஷ் ஆட்சியின் சிறப்புக்கோவை, மதுவிலக்குப் பாடல், ஆதிதிராவிடர் சமூக சீர்த்திருத்தக் கீதம், சமதர்மக் கோலாட்டக் கீர்த்தனை எனப் பாகவதர் வகைவகையாய் எழுதியிருக்கிறார். “தீங்கின்றி ஒருஆணை நாங்கள் நோக்கிடில் கற்பு சென்றது என்பீர் மேலும், நாங்கள் தானிருக்கினும் இறக்கினும் மறுமணம் நாடியே செய்துகொள்வீர், நீங்கள் தானிறந்திடில் எமை கைமையாக்கியே நெடுமூலைதனில் அடைப்பீர், ஓங்குநல் இயற்கையின் உணர்ச்சியைத் தடுப்பீர்கள் ஓரவஞ்சனையே செய்வீர்” என்றெழுதும் பாகவதரின் பெண் விடுதலைப் பாடல்கள், பாரதியும் பாரதிதாசனும் எழுதியவைக்கு ஒப்பானவை என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை. ஆனால், பாகவதரின் பெயர், தமிழ் மரபுக் கவிதையுலகில் ஏன் அழுத்தமாகப் பேசப்படவில்லை? இக்கேள்விக்குப் பதில் ஒன்றுதான். ஒரு சாதியச் சமூகத்தில், பாகவதர் போன்றோரை எப்படிப் பேசுவார்கள், நம் விமர்சனப் பெருந்தகைகள்!
இக்கட்டுரையை முடிக்கும் முன்பாகச் சுவையான சம்பவமொன்றைப் பகிர எண்ணுகிறேன். அமரர் ஞானக்கூத்தனுடன் (எம்.ஜி.சுரேஷின் நூலொன்றை வெளியிட்டு எழும்பூர் இக்சா மையத்தில் அவர் பேசிய கூட்டமொன்றில்), ஒருமுறை சில நிமிடங்கள் வாதிட வேண்டிவந்தது. பாரதியார் கவிதையில் ரயில் இல்லை; அதனால் அவர் நவீனக் கவிஞர் கிடையாது என்றார் ஞானக்கூத்தன். ‘ரயில்வே ஸ்தானம்’ என்று கதை எழுதியிருக்கிறாரே; மீனம்பாக்கத்தில் ஆகாய விமானம் கட்டுவது பற்றி எழுதியிருக்கிறாரே என்றேன். கவிதையில் எழுதவில்லையே என்றார். “மூன்றுலகும் சூழ்ந்தே, நன்று திரியும் விமானத்தைப் போலொரு நல்ல மனம் படைத்தோம்” என்றெழுதியிருக்கிறாரே என்றேன். அது புராண விமானம்; நவீன விமானமில்லையே என்றார். சரி. உங்கள் கவிதைகளில்கூடத்தான் ‘கணினி’ பற்றிய குறிப்பேயில்லை. அப்படியானால் நீங்களும் நவீனக் கவிஞர் கிடையாதா என்று கேட்டேன். அவர் பதில் சொல்லவில்லை. என் தோளில் தட்டிவிட்டுச் சிரித்துக்கொண்டே போய்விட்டார். இங்கே, இந்தக் கதை எதற்காக?
பாரதியார் பற்றிப் பாகவதர், “இகம் வியக்கும் தீர்க்கதரிசனக் கண் பெற்றார்” என்றும், “தெளிந்துவிட்டார் அவர் பாட்டால் தமிழரெல்லாம்” என்றும் வியந்திருக்கிறார். பாரதிதாசன்போல் பாரதியாரை மிகச்சரியாக மதிப்பிட்டவர் பாகவதர் என்பதுடன், ஞானக்கூத்தன் கோரும் சமகாலத்தின் பிரதிபலிப்பும் பாகவதரிடம் மிகுந்திருந்தது. “கப்பலிலோ ரெயிலிலோ கனமோட்டார் சைக்கிளிலோ, கடினபஸ் லாரிதனிலோ, செப்பு மின்சாரத்திலோ டிராம் காரிலோ, செயற்கரிய ஏரோப்ளேனிலோ, ஒப்பும் தொழிற்சாலைகளில் ஓடும் யந்த்ரங்களிலோ, உயரிய சப்மரினிலோ, உப்பரிகை லிப்ட்டிலோ பொன்சுரங்கத்திலோ, மக்களுயிர் போகுமன்றோ” எனப் பாடியுள்ளாரே பாகவதர்! இவ்வளவையும் பாடிய பாகவதரின் ‘நவீன உணர்வு’ பற்றித் தமிழ்ச் சமூகம் நினைவுகூர்ந்ததாகத் தெரியவில்லை. போகட்டும். உறுதியாகச் சொல்கிறேன். வீ.வே. முருகேச பாகவதர் மீளக்கண்டுபிடிக்கப்படும் காலம் தொலைவிலில்லை. ‘இதுவோ பக்தி’ என்ற பாகவதரின் கவிதை, என்னளவில் ந.பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாரணன்’ கவிதைக்கு நிகரானது. (பெட்டிக்கடை நாரணனிலிருந்துதான் புதுக்கவிதை பீடு நடை போடத் தொடங்குகிறது எனச் சுந்தரராமசாமி குறிப்பிட்டிருக்கிறார்). மரபுக்கவிஞராகவே அறியப்பட்டாலும்கூடப் பாகவதரின் ‘இதுவோ பக்தி’, புதுக்கவிதையின் முன்விதைகளில் முக்கியமான ஒன்று என்பதே, என் மதிப்பீடாகும்.