1943 ஜூன் 22இல் பிரிட்டன் தனது RAF போர் விமானங்களை அனுப்பி ஜெர்மனிய நகரமான கிரேபெல்ட்டின் மீது குண்டுகளைப் பொழிந்தது; இதில் 136 ஜெர்மானியர் கொல்லப்பட்டனர். பிரிட்டனின் இந்த விமானத் தாக்குதலின் நோக்கம் ஜெர்மானிய குடிமக்களிடம் அச்சத்தை தோற்றுவித்து ஹிட்லரை பலவீனப்படுத்தி, அவருடைய மக்கள் ஆதரவை நிலைகுலையச் செய்வது; அதுவரையில் வலுவான உருக்கு மனிதராகத் தோன்றியவரை கையாலாகாதவராகக் காட்டினால் ஜெர்மானிய குடிமக்கள் அவரை வெறுக்கத் தொடங்குவார்கள் என பிரிட்டன் கணக்குப் போட்டது. ஆனால் நடந்ததோ வேறு. இந்த குண்டு பொழிவு மக்களிடம் பீதியை, பதற்றத்தை உருவாக்கி அது தேசபக்தியின் எழுச்சியாக தடம் மாறி விரைவில் இதே மக்கள் பெரும் திரளாக ஹிட்லர் பின்பு அணிவகுத்தனர். மக்கள் ஆதரவு ஹிட்லருக்கு இன்னும் அதிகமானது. அதாவது இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜிப்படையினர் முழுமையாக அழியும் வரையில் ஜெர்மனியர் முழுமையாக ஹிட்லரை இப்படி நம்பியபடித் தான் இருந்தனர். இப்போது அப்படியே “சந்திரமுகி” படத்துக்கு வருவோம்:

செந்தில் மற்றும் கங்கா வேட்டையபுரம் அரண்மனையில் வந்து தங்குகிறார்கள். அங்கு பேய் இருப்பதாக ஊர்மக்கள் நம்புகிறார்கள். குறிப்பாக சந்திர்முகியின் நகைகள் வைக்கப்பட்டுள்ள அறையை எல்லாரும் அஞ்சுகிறார்கள். ஆனால் சந்திரமுகியின் கதையைக் கேட்கும் கங்காவின் எதிர்வினை மட்டும் வித்தியாசமாக இருக்கிறது – அவள் பரவசமாகிறாள், அறையைத் திறந்து அந்த நகைகளை எடுத்தணிகிறாள். தன்னை சந்திர்முகியாக உணர்கிறாள். (மிச்ச கதைக்கு பின்னர் வருகிறேன்.) ஏன் ஒரு பேயைக் கண்டு ஊரே நடுங்க கங்கா மட்டும் பயப்படவில்லை? இதற்கான பதில் கதையின் பிற்பகுதியில் வருகிறது – கங்கா இளம் வயதில் இருந்தே மனப்பிரச்சனைகளால் உடைந்து போனவள். அவளது மனநோயே அவளை தன்னை வெறுக்க, உலகைக் கண்டு அஞ்சிட வைக்கிறது. அந்த அச்சத்தை உள்ளே அடக்கி வெளியே இயல்பாக தன்னைக் காட்டிக் கொள்கிறாள். இதுவே பின்னர் அவள் ‘சந்திரமுகியாக’ காரணமாகிறது. ஒடுக்கப்பட்டவளாய் தன்னை கருதும் அவள் ஆண்களைப் பழிவாங்கும் பேய்வடிவாய் தன்னை பின்னர் உருவகிக்கிறாள். அச்சமும் வன்மமும் கைகோர்க்கிறது. வலதுசாரி மனநிலை என்பது இப்படியான ஒரு சந்திரமுகி பேய். அது பெரும்பான்மை மக்கள் தொகையிடம் பொருளாதார ஸ்திரமின்மை குறித்த பாதுகாப்பின்மை, அச்சம், எதிர்காலம் குறித்த அச்சம் பூதாகரமாகும் போது பூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியே வரும்.

ஜெர்மனியில் முப்பதுகள், நாற்பதுகளில் பெரும் பொருளாதார சரிவு ஏற்படுகிறது. அங்கு ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மறைமுகமாய் உலவி வந்த யூதவெறுப்பு இனவாத பேய் இப்போது நகைகளை எடுத்தணிந்து சந்திரமுகியாக முச்சந்திக்கு வருகிறது. ஹிட்லரின் நாஜிக் கட்சியினரின் வெறுப்பு பிரச்சாரம் இந்த சமூக அச்சம், பதற்றத்துக்கு வடிகாலாகிறது. பொருளாதாரத்தைப் பற்றின பயம் ஒரு பெரும்பான்மை சமூகத்தின் தன்னிருப்பு குறித்த அச்சமாக, வெறுப்பாக உருக்கொள்கிறது. இந்த காலகட்டத்தில் ஹிட்லர் தொடர்ந்து உலக அரங்கில் ஜெர்மானிய மக்களை அழிப்பதற்காக யூதர்கள் அயல்நாட்டு சக்திகளுடன் கைகோர்த்து சதித்திட்டம் தீட்டுவதாய் பேசுகிறார்; அவரது ஆதரவாளர்கள் இது குறித்து மிகப்பெரிய பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். யூதர்களுக்குத் தெரியும் தாம் அந்தளவுக்கு எல்லாம் வொர்த்தில்லை என. ஆனால் பெரும்பான்மையான, வலுவான ஆரிய சமூகமோ இந்த பொய்ப்பிரச்சாரத்தை நம்பத் தலைpபடுகிறார்கள். யூதர்கள் ஒன்று திரண்டு உலக நாடுகளின் துணையுடன் தம்மை அழிக்கத் தலைப்படுவதாய் சுலபத்தில் நம்புகிறார்கள். இது ஒரு பெரும் தேசியவாத அலை உருவாகக் காரணமாகிறது. அதில் நீந்தி வெற்றிக்கொடியை ஏந்தி அசைத்தவாறு மேலெழுந்து வந்தது ஹிட்லரின் நாஜிக் கட்சி. ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட இங்கிலாந்தின் விமானப்படை தாக்குதல் நிகழ்ந்த போது, குண்டுகள் வெடித்து வாழிடங்கள் அழிந்த போது ஜெர்மானியர்களில் மிதவாதிகள் கூட ஹிட்லர் சொன்னது நிச்சயமாய் உண்மைதான் என நம்பத் தொடங்கினார்கள். அவர்கள் மொத்தமாய் ஹிட்லரின் காலடியில் தலைவணங்கித் தம்மை ஒப்படைத்தார்கள். ஜெர்மனி முழுக்க யூதர்கள் கொத்துக் கொத்தாய் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்ட போது அந்த கொடுஞ்செயல்திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களும் முன்வந்தார்கள். அவர்கள் ஹிட்லரின் மக்கள் படை ஆனார்கள் (ஆர்.எஸ்.எஸ்ஸின் குண்டர் படையைப் போல). இதை நான் ஒரு சந்திரமுகி அலை என்பேன்.

இந்த அலையில் யாரெல்லாம் நிலையற்று உணர்கிறார்களோ அவர்களெல்லாம் அடித்து செல்லப்படுவார்கள். கடந்த பத்தாண்டுகளில் வலதுசாரி தலைமைகள் உலகமெங்கும் பெற்றுள்ள பெரும் எழுச்சி இப்படியான சந்திரமுகி அலையினால் தோன்றியதே. இதில் சுவாரஸ்யம் என்னவெனில் ஒரு அதிகாரமிக்க மக்கள் தொகுப்பு தம்மை ஒடுக்கப்பட்டவர்களாக, ஆபத்தின் விளிம்பில் இருப்பவர்களாக கற்பனை பண்ணிக் கொள்வது தான்.

அமெரிக்காவில் நிறைய வெள்ளையர்கள் இப்படி இந்தியர்கள், கறுப்பர்கள், லத்தீன் அமெரிக்கர்கள், குடியேறிகள், ‘அந்நியர்களால்’ தாம் முற்றுகை இடப்பட்டுள்ளதாய், தம் வாழ்வாதாரத்தை, அதிகாரத்தை, மரியாதையை இவர்களிடத்து இழக்க நேர்வதாய், ஒருநாள் சொந்த நாட்டிலேயே தாம் ஒழிக்கப்படுவோம் என நம்புகிறார்கள். கிறுத்துவர்களில் பலர் தமது சம்பிரதாயங்கள் சீரழிக்கப்படுவதாய் அஞ்சுகிறார்கள். அதனாலே தமிழக பாஸ்டர்கள் சிலரே டிரம்புக்கு ஆதரவு தெரிவித்ததைப் பார்த்தோம். இவர்கள் ஒட்டுமொத்தமாய் ‘வேட்டைய ராஜாவைக்’ கொன்றால் தம் பிரச்சனை சரியாகி விடும் என நினைக்கிறார்கள். இம்முறை தேர்தலில் பைடன் வெற்றிபெற்றாலும் அவருக்கு எதிராக ஒரு பெரும் தரப்பு வெள்ளையின மேலாதிக்கத்துக்காக டிரம்புக்கும் கணிசமான வாக்குகளை அளித்துள்ளது. இவர்கள் கொடுக்கும் நம்பிக்கையில் தான் டிரம்ப் இப்போதும் தானே வென்றதாய் கோருகிறார். வெள்ளை மாளிகைக்குள் சந்திரமுகியாய் உலவுகிறார். உண்மையான பிரச்சனை அமெரிக்க ஏகாதிபத்யத்தின் நவமுதலாளித்துவ கட்டமைப்பின் சரிவில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பண வீக்கம் அதிகமாகி உள்ளதில் ஒரு பக்கம் பெரும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிட, மத்திய வர்க்கம் கடும் அழுத்தத்தில் கடன் சுமை மிக்கவர்களாக ஆகி உள்ளனர். இந்த கொரோனா காலத்தில் அமெரிக்காவில் அடிப்படை சிகிச்சைக்கே வழிவகை இல்லாமல் மக்கள் தவித்தனர். இந்த பொருளாதார அழுத்தத்தின் தாக்கத்தை நேரடியாக அல்ல, கலாச்சார, சமூக உளவியல் ரீதியாகவே மக்கள் பொதுவாக உணர்கிறார்கள் என்பது வினோதம். அதாவது மக்கள் பொருளாதார கட்டமைப்புகள் குறித்து விவாதிக்குமளவுக்கு முதிர்ச்சி பெற்றவர்கள் அல்ல. அவர்கள் தமது கடும் அழுத்தத்துக்கான காரணமாக ஒரு மற்றமையை மனதளவில் கட்டமைக்கிறார்கள்; இதை வலதுசாரி தலைமை ஊதி வளர்க்கிறது. ஒரு லத்தீன் அமெரிக்கர், கறுப்பரைக் காட்டி இவர்களால் தான் உங்கள் வாழ்க்கை அலங்கோலமாகி விட்டது எனச் சொன்னால் அவர்களின் பழங்குடி மனது அதை உடனடியாய் ஏற்றுக் கொள்கிறது. இப்படித் தான் ஒருவிதத்தில் வலதுசாரி தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் எழுச்சி பெற்று தலைமைப் பொறுப்பை அடைகிறார்கள்.

பத்தொன்பதாவது நூற்றாண்டில் காலனிய மனோபாவம் இங்கிலாந்தில் உச்சத்தில் இருந்தபோது தான் அங்கு ஏற்றத்தாழ்வுகளும் மிகக்கொடுமையாக இருந்தன. எந்த அளவுக்கு என்றால் கடனைத் திரும்ப செலுத்த முடியாத பலரும் சிறைக்கு செல்வார்கள். அவர்களின் பிள்ளைகள் பள்ளிக்குப் போக முடியாமல், சோற்றுக்காக புகைபோக்கிகளுக்குள் நுழைந்து சுத்தம் செய்யும் பணிகளை செய்தனர். (சார்லஸ் டிக்கன்ஸ் தனது பல நாவல்களில் இந்த சூழலை வர்ணிக்கிறார்.) இதே கட்டத்தில் தான் காலனிகளில் அடிமைகளாக உள்ள மக்களைக் காட்டி இனவாத ஆதிக்க அதிகாரத் தரப்பினர் இம்மக்களிடம் தற்பெருமையை, தாம் மேலானவர் என ஒரு உயர்வு மதிப்பான்மையை உண்டு பண்ணினர். சொந்த சமூகத்தில் உள்ள கடும் ஏற்றத்தாழ்வை காணாமல் இருக்க காலனி ஆதிக்கப் பெருமை அந்த கால ஆங்கிலேயர்களுக்கு உதவியது. இது இனப்பெருமையின் அடிப்படையிலான மற்றொரு சந்திரமுகி அலை. இம்மக்களுக்கு வேட்டைய ராஜா நம்மைப் போன்ற காலனியின் பிரஜைகள் தாம். இன்று இதே இனவெறுப்பு தான் மற்றொரு வடிவை மேற்கில் எடுக்கிறது.

இனி இந்தியாவுக்கு வருவோம்:

இந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பு கதையாடலை உற்பத்தி பண்ணி பிரச்சாரம் செய்ததில் ஜெர்மானியர், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் உள்ளிட்ட இந்தியவியல் (Indolology) வரலாற்றாசிரியர்கள், கோட்பாட்டாளர்களுக்கு முக்கிய பங்குண்டு. காலனிய ஆதிக்கவாதிகளை காலனி மக்களின் மீட்பர்களாக கட்டமைக்க இது உதவியது. வெள்ளையர்கள் இந்தியாவில் தொடர்ந்து இந்து-முஸ்லீம் பிரிவினை நீறுபூத்திருக்கும்படி பல ஆட்சி முடிவுகளை எடுத்தார்கள். இஸ்லாமியர் இந்தியாவில் படையெடுத்து வந்து பல அழிவுகளை ஏற்படுத்தி, இந்துக்களை கொடுமைப்படுத்தி கோயில்களை இடித்தார்கள், பின்னர் வந்த வெள்ளையர்களோ முகலாய ஆதிக்கத்தில் இருந்து இந்தியர்களை மீட்டனர் என இன்று இந்துத்துவர் பேசும் கதையாடலை உருவாக்கி உலவ விட்டது இந்த காலனியாதிக்க இந்தியவியல் வரலாற்றாசிரியர்களே. உருது இஸ்லாமியரின் மொழி, இந்தி இந்துக்களின் மொழி என ஒரு கதையாடலை சுதந்திரத்துக்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வெள்ளை ஆட்சியாளர்கள் உண்டு பண்ணினார்கள். இதே வெள்ளையர்கள் தம் காலத்தில் பாபர் மசூதி பிரச்சனையை இரு தரப்புக்கும் சாதகமில்லாத வகையில் இரு நூற்றாண்டுகளாக தக்க வைத்தார்கள். இறுதியாக இந்தியா-பாக் பிரிவினையை தோற்றுவித்தார்கள். அரசியலில் இருந்து விலகி இங்கிலாந்துக்கு சென்றிருந்த ஜின்னாவை திரும்ப அழைத்து வந்து முஸ்லீம் லீக்கை வலுப்படுத்தி காங்கிரஸுக்கு மாற்று அலை ஒன்றை இஸ்லாமியர்கள் இடத்து உருவாக்க முயன்றார்கள். இதுவே இந்து மகாசபையினருக்கு சாதகமாய் ஒரு சூழலை இங்கு உருவாக்கியது. நீங்கள் இரண்டு விசயங்களை இங்கு கவனிக்கலாம்:

1) சுதந்திரத்துக்கு முன்பான சில பத்தாண்டுகளில் மிகப்பெரிய சமூக நிலை மாற்றங்கள் (அதிகார கட்டமைப்பில், படிநிலையில், பொருளாதாரத்தில், கலாச்சாரத்தில்) இந்தியாவில் நிகழ்ந்தன. உலகப் போர், ஆட்சி மாற்றம் குறித்த பதற்றம் ஒரு சுனாமி அலையாய் இங்கு அடித்தது. இதன் உச்சமே பிரிவினையின் போதான கடும் வன்முறை, மக்களின் கூட்டுக்கொலைகள், பெண்கள் மீதான பலாத்காரங்கள், நிலங்களை இழந்து மக்கள் இடம்பெயர்ந்து பிச்சைக்காரர்களாக முகாம்களில் இருக்கும் நிலை. இஸ்லாமியருக்கான ஒரு தேசம் தோன்றியதாய் உணர்ந்த பெரும்பான்மை இந்துக்கள் தாம் ஒரு பேரழிவின் விளிம்பில் இருப்பதாய் உணர்ந்தனர். இஸ்லாமிய வெறுப்பலை இங்கு தீவிரமாய் எழுந்த காலமானது இங்கு தடுமாற்றங்கள், அச்சம், குழப்பம் அதிகமாய் விளைந்த ஒரு காலம் என்பதை கவனிக்க வேண்டும். இந்த கொந்தளிப்புகள் ஒரு கூட்டு மனநோயாகின்றன. அந்த மனநோயின் அறிகுறியே வலதுசாரி எழுச்சி.

இந்தியாவில் முதல் வலதுசாரி பேரலை தோன்றிய போது இரு தேசியங்கள் (இந்தியா-பாகிஸ்தான்) உருக்கொண்டன; இதில் ஒரு தேசியத்திற்கு இரு தலைவர்கள் – ஒருவர் பல கோடி பேரால் அங்கீகரிக்கப்பட்ட காந்தியார். மற்றொர் தன் காலத்தில் பல கோடி பேரால் புறக்கணிக்கப்பட்ட சாவர்க்கர் என ஆஷிஸ் நந்தி சொல்கிறார். இந்த கட்டத்தில், பிரிவினையின் போது முதலில் மக்கள் பரஸ்பரம் கொன்று தணிந்தனர். இறுதியாக காந்தியின் படுகொலை நடந்தது. காங்கிரசுக்குள் வல்லபாய் பட்டேல் வலதுசாரிகளுக்கு ஆதரவான, ஆறுதலான ஒரு செயல்பாட்டாளராக திகழ்ந்தார். ஆர்.எஸ்.எஸ் தற்காலிகமாய் தடை செய்யப்பட்டது. காந்தியின் படுகொலையை உண்மையாக விசாரித்து அசலான குற்றவாளிகளை அடையாளம் காண்பதை காங்கிரஸ் தலைமை தவிர்த்தது. ஏனென்றால் அவர்கள் மத்தியிலும் காந்தியின் அழிவை விரும்பியவர்கள் இருந்தனர். அவரது ரத்த பலி என்பது அந்த காலகட்டத்தின் வேட்டைய ராஜாவை குருதிக்கொடை கொடுக்க அவசியப்பட்டது. அடுத்து ஒரு நீண்ட கால அமைதி நிலவியது. ஆனால் நவபொருளாதார சந்தை இங்கு தோன்றி அதனால் பொருளாதார எழுச்சி ஏற்பட்டது ஒரு வலதுசாரி-சாதக சூழல் இந்தியாவில் தோன்ற காரணமாகியது என்கிறார் ஆஷிஸ் நந்தி தனது A Disowned Father of the Nation: Vinayak Damodar Savarkar and the Demonic and the Seductive in Indian Nationalism எனும் நீள்கட்டுரையில். தொண்ணூறுகளில் காங்கிரஸ் கொண்டு வந்த நவதாராளவாத பொருளாதார அலை ஒரு பக்கம், மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவது மற்றொரு பக்கம் என இந்திய சமூகத் தட்டுகளில் பெரும் படிநிலை மாற்றங்கள் ஏற்பட்டன, பொருளாதார எழுச்சியுடன் அடுத்தடுத்து தோன்றிய வீழ்ச்சி, நிலையற்ற தன்மை, கூட்டுப்பதற்றம், கூட்டுப் பொறாமை, ஸ்திரமின்மை இங்கு சாதிக் கட்சிகள் வலுப்பெற்று ஆட்சி அதிகாரம் பெற, மதவாத அரசியல் எழுச்சி பெற உதவின. தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரின் எழுச்சி அரசியல் களத்தில் தோன்றிட ராமதாஸ் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பெரும்பான்மை சாதிகள் ‘ஒடுக்கப்பட்டோரால்’ ஒடுக்கப்படுவதாய் ஒரு கதையாடலை முன்னெடுத்தார்கள். இதன் ஒரு நீட்சியாக தமிழ் சினிமாவில் “சின்ன கவுண்டர்”, “எஜமான்”, “தேவர் மகன்” போன்ற படங்கள் ஒடுக்கப்படும், அழிக்கப்படும் பெரும்பான்மை சாதிகளின் ஆதரவாக, தன்னிரக்க உணர்வை தோற்றுவித்தது நினைவிருக்கும்; மற்றொரு பக்கம் அத்வானியின் ரத யாத்திரை, காங்கிரஸின் புதிய வல்லபாய் பட்டேலான நரசிம்ம ராவின் உதவியுடன் நடந்த பாபர் மசூதி இடிப்பு, அதை ஒட்டிய கலவரங்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், நகரங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் என அடுத்த வலதுசாரி அலை தோன்றியது. மீண்டும் கங்கா சந்திரமுகியின் சலங்கையை எடுத்தணிந்தாள்.

இந்த அலையானது, அடுத்தடுத்த பத்தாண்டுகளில் ஒரு பக்கம் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் அம்பலமாகியது, மற்றொரு பக்கம் உலக அரங்கில் தோன்றிய பொருளாதார வீக்கம் இந்திய பொருளாதாரத்தை சரிவை நோக்கித் தள்ளியது, இதன் விளைவாக கொதிப்பு நிலை இங்கு ஒரு உச்சத்துக்கு சென்றது. நம் பிரச்சனைகளுக்கு ஒட்டுமொத்த காரணம் சிறுபான்மையினருக்கு வருடிக் கொடுக்கும் முற்போக்கு அரசியல் என்றும், சிறுபான்மையினர் எதிரி தேசங்களுக்கு துணை போய் இந்திய தேசத்தை அழிக்க, இந்துக்களை ஒழிக்க முனைகிறார்கள் என்றும் ஒரு கதையாடல் பிரச்சாரம் செய்யப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மோடி ஜி தன் நாஜிப்படையினருடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். அதாவது பத்தொன்பதாவது நூற்றாண்டில் இறுதியில் இருந்து இருபதாம் நூற்றாண்டில் முதல் சில பத்தாண்டுகள் வரை ஆங்கிலேய காலனிய அரசு உருவாக்கி பரப்பிய அதே இஸ்லாமியர்-படையெடுப்பாளர்கள்-இந்து விரோதிகள் கதையாடல் இப்போது இந்துத்துவர்களால் பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு புதிய மோஸ்தரில் மக்கள் அரங்கில் வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

அந்த சந்தர்பத்தில் இந்திய கூட்டு மனத்துக்கு ஏற்பட்ட கடும் மன அழுத்தம், மனப்பிளவுக்கு ஒரு ஆறுதல் தேவைப்பட்டது. ஒரு வேட்டைய ராஜா தேவைப்பட்டார். அவர் அரை நூற்றாண்டுக்கு முன்பு இங்கு ஒரு பெட்டியில் வைத்து பூட்டப்பட்டிருந்தவரே. ஆனால் ரெண்டாயிரத்துடன் அப்பெட்டி திறக்கப்பட்டு சந்திரமுகியின் பேய் வெளிப்பட்டு அது வேட்டைய ராஜாவைக் காட்டி ஆடிப்பாடத் தொடங்கியது. முதலில் அத்வானி, அடுத்து மோடி-ஷா கூட்டணி என ஒவ்வொருவராக சந்திரமுகியின் அறையைத் திறந்து பேயை விடுவித்தனர். அப்படித் தான் இந்திய வலதுசாரி அரசியலின் இரண்டாம் அலை, இரண்டாவது “ரா ரா சரசுக்க ராரா” ஆட்டம் நிகழ்ந்தது.

2) இந்த கட்டத்தில் முற்போக்கு அரசியல் சிந்தனையாளர்களும் அரசியல்கட்சிகளும் செய்த தவறு இதை ஒரு நோய்மை எனப் புரிந்து கொள்ளாமல், அதை குணமாக்க முயலாமல், ஆறுதல்படுத்த எத்தனிக்காமல், பிரபுவைப் போல “என்ன கொடுமை சார்” என புலம்ப ஆரம்பித்ததே. தாம் வேட்டைய ராஜாவுக்கு ஆதரவாக இருப்பதாய் ஒரு சித்தரத்தை வலதுசாரிகள், இந்துத்துவாதிகள் ஏற்படுத்தி பலனடைந்தார்கள். 2014, 2019 இல் காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த போது நாம் கண்ட ஒரு உண்மை மோடி எதிர்ப்பு எப்படி அவருக்கு சாதகமாக முடிந்தது என்பது. ராகுல் காந்தி பணமதிப்பிழப்பு, எல்லைப் பாதுகாப்பு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து மோடியை விமர்சிக்கும் போதெல்லாம் அது மோடி அரசுக்கு சாதகமாய் மாறியதைப் பார்த்தோம். ராகுல் தலைமையிலான காங்கிரஸ் அரசு இது ஒரு நோய்மை எனப் புரிந்து கொள்ளாததன் விளைவு இது. பெரும்பான்மை மக்கள் அமைதியற்று தவிக்கும் போது அவர்களுக்கு நேர்மறையாகப் பேசி ஆறுதல் அளிக்க வேண்டும். வேறெப்படியெல்லாம் பொருளாதாரத்தை வகுத்து வழிநடத்தி மக்களை தம்மால் காப்பாற்ற முடியும் எனப் பேச வேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்வதே தம் அரசியல் எனக் காட்ட வேண்டும். வலதுசாரி-இடதுசாரி எனும் இருமையைக் கடந்து செல்ல வேண்டும். மோடியுடையது ஒரு வெகுஜன சிறுபான்மை வெறுப்பரசியல் மட்டுமல்ல, அதைக் கொண்டு பெரும்பான்மை இந்துக்களுக்கு தற்காலிக ஆறுதல்களை அளிக்கும் ஒரு அரசியலும் தான். ஆகையால் இந்த “ரா ரா” புனைவரசியலுக்குள் செல்லாமலே அதற்கு மாற்றாக தம்மை காங்கிரஸார் முன்வைக்க வேண்டும்.

மாறாக நீங்கள் சிறுபான்மை ஆதரவு அரசியலை எடுத்தால் நீங்கள் வேட்டைய ராஜாவுக்கு ஆதரவாக இருப்பதாய் காட்டி சந்திரமுகியை கோபமடைய வைக்க இந்திய வலதுசாரிகளால் முடியும். சீன ராணுவம் எல்லைக் கடந்து வந்து இந்தியாவை ஆக்கிரமிக்கிறது, இந்திய அரசு கையாலாகாதது எனப் பேசினால் நீங்கள் சீனாவுக்கு (வேட்டைய ராஜாவுக்கு) ஆதரவாகப் பேசுவதாய் மக்களுக்குத் தோன்றும். மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சிப்பது, அவரை திருடர் என அழைப்பது, அவர் கொரோனா டாக் டவுனின் போது மக்களை வதைத்து கொன்றார் எனக் கூறினால் மக்களுக்கோ மோடியை அல்ல நீங்கள் இந்திய தேசியத்தை அவமதிப்பதாகவே தோன்றும். அதற்குப் பதிலாக நேர்மறையான மாற்றம், வளர்ச்சி, ஒற்றுமையை முன்னெடுக்கும் பிரச்சாரங்களை மேற்கொள்வது, மக்களை தொடர்ந்து ஆறுதல்படுத்துவது, ஒரு மாற்று அரசியலைக் காண்பிப்பதே எதிர்க்கட்சியினர் இப்போது செய்ய வேண்டியது. இன்னொன்று, அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஒரு குழந்தைக்கு மனநலம் பாதிக்கப்பட்டால் நீங்கள் அவரை விமர்சிப்பதில், கண்டிப்பதில், நோயைப் பழிப்பதனால் பலனில்லை (அந்த வேலையை விமர்சகர்களிடம் விட்டு விடுங்கள்). மருந்தை கொடுப்பது, அமைதிப்படுத்துவது, கூட இருந்து மென்மையாக கவனித்துக் கொள்வது, மருந்து வேலை செய்து நோய் நீங்கும் வரை காத்திருப்பது தான் பலனளிக்கும். அதே போல சந்திரமுகியை பின்பற்றி மற்றொரு “ரா ரா” நடனத்தை ஆடவும் நீங்கள் முயலக் கூடாது. அதாவது மோடியைப் போலச் செய்யவும் கூடாது.

இப்போது காங்கிரஸுக்குத் தேவை ஒரு மாற்று அரசியல், வலதுசாரி, இந்துத்துவ எதிர்ப்பரசியல் அல்ல.

இந்த உத்தியை இம்முறை அமெரிக்க தேர்தலின் போது பைடனின் ஜனநாயகக் கட்சி சிறப்பாக செயல்படுத்தியது – அவர்கள் அமெரிக்க தேசியவாதத்துக்கு ஆதரவாளர்களாக, அதே சமயம் பெரும்பான்மை இனத்தவர் vs சிறுபான்மை இனத்தவர் எனும் கதையாடலுக்குள் பங்கெடுக்காதவர்களாக, அதைக் கடந்த மாற்றம், நம்பிக்கை, சமத்துவம், முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறவர்களாக தம்மைக் காட்டிக் கொண்டனர். அதனாலே பைடனால் டிரம்பை முறியடித்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக முடிந்தது. ஆனால் இது ஒரு சமூகக் கூட்டு நோய்மை என்பதால் அதை மெல்ல மெல்லவே அவரால் குணப்படுத்த முடியும். டிரம்பின் ஆதரவாளர்கள் அதிகமாகி உள்ளதும், மிக மோசமான நிர்வாகத்தை வழங்கிய பின்னரும் டிரம்புக்கு வெள்ளையின பெரும்பான்மையினரிடம் பெரும் ஆதரவு இப்போதும் உள்ளதும், தேர்தலில் பைடன் 76,343, 332 வாக்குகளைப் பெற்றிருந்தால், டிரம்போ 71,444, 567 வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்பதும் வலதுசாரி அரசியல் அமெரிக்காவில் இப்போதைக்கு மிகச் சற்று மட்டுமே பின்வாங்கி உள்ளது என்பதைக் காட்டுகிறது. கூட்டு மனநோய் குணமாக இன்னும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். (தற்காலிகமாகத் தான். மற்றொரு வரலாற்றுச் சூழலில் மீண்டும் அது தலையெடுக்கலாம்.)

இந்தியாவில் ஜியின் மிக மோசமான நிர்வாக முடிவுகள், கருணையற்ற நிர்வாகம் எப்படி கொரோனா காலத்தில் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது, சிறுதொழிகளை, ஏழைகளின் வாழ்வுரிமைகளை முழுக்க அழித்தது என்பதைப் பார்த்தோம். ஆனால் இப்போதும் இங்கு மோடி அலை ஓயவில்லை. தற்போது நடந்துள்ள பீகார் தேர்தலில் பாஜக கணிசமான இடங்களை வென்றுள்ளது. இத்தனைக்கும் பீகாரி புலம்பெயர் தொழிலாளர்களே பல ஆயிரம் கிலோமீட்டர்கள் நடந்து உணவின்றி, போக்குவரத்து வசதி இன்றி அதிகமாய் துன்புற்றார்கள். ஆனால் இப்படியான பெரும் துன்பம் ஒரு மக்கள் பரப்பை நிலைகுலைய வைக்கும் போதே வலதுசாரிகளுக்கான ஆதரவும் வினோதமாய் பெருகுவதைப் பார்க்கிறோம். ஏனென்றால் உலகம் முழுக்க எப்போதுமே வலதுசாரிகள் சமூக வீழ்ச்சியின் மீது வளரும் காளான்களே. அது தமது ஆட்சியினால் ஏற்படும் சீர்குலைவாக இருந்தாலும், அதற்குக் காரணம் தமது தேசியத்துக்கு எதிரான பாகிஸ்தான், சீனப் படையெடுப்புகளும், சிறுபான்மை சாதியினரின் மதங்களும் ஒன்று சேர்ந்து உள்ளுக்குள் தொடுக்கும் படையெடுப்புமே என ஒரு வேட்டைய ராஜாவை கட்டமைத்து அவர்கள் அரசியல் லாபத்தை கொய்வார்கள். பீகார் மட்டுமல்ல, உத்தரபிரதேசம், வடகிழக்கு போன்று பொருளாதாரம் வலுவாக இல்லாத எல்லா இடங்களிலும் இந்த “ரா ரா” பாடல் பெரும் வெற்றி பெறும். மோடியை வீழ்த்த்த எதிர்க்கட்சியினர் செய்ய வேண்டியது சந்திரமுகியை கிண்டலடிக்காமல், கண்டிக்காமல், விமர்சிக்காமல் அவளுக்கான தீர்வு தம்மிடம் உள்ளது, அது இந்துத்துவர்களின் வன்முறையான, பிற்போக்கான தீர்வை விட மேலான நியாயமான ஒன்று எனப் புரிய வைப்பதே; அப்படி பேசும் போது கங்காவிடம் அவளது அச்சங்கள் மிகையானவை, அவளுடைய பிரச்சனைக்கு நேர்மறையான தீர்வுகள் உண்டு எனக் கூறி, தான் சந்திரமுகி அல்ல கங்கா என மெல்ல மெல்ல நினைவுபடுத்துவதே. அமெரிக்காவில் பைடனைப் போன்றே  பீகார் தேர்தலில் ஆர்.ஜெ.டியின் தேஜஸ்வி யாதவ் கூட “ரா ரா” பாடலுக்குள் புகுந்து கூட ஆடாமல், வளர்ச்சி, மாற்றம் குறித்த ஒரு நேர்மறையான பிரச்சாரத்தை மேற்கொண்டார், அதன் விளைவாக அவரது கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றதை, அவரது மகாகத்பந்தன் கூட்டணி 110 இடங்களைப் பெற்றதைப் பார்த்தோம். தோல்விதான் என்றாலும் ஒரு நம்பிக்கையூட்டும் தோல்வியாக இது இருக்கிறது. (தபால் ஓட்டுகளை எண்ணுவதில், சில மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்காதிருந்தால் பாஜக கூட்டணிக்கு இன்னும் நெருக்கமாய் கூடுதல் இடங்களை மகாகத்பந்தன் பெற்றிருக்கும் என்றும் சில விமர்சகர்கள் கூறுகிறார்கள்.)

தமிழகம் போன்ற பொருளாதார ஸ்திரத்தன்மை கொண்ட, பதற்றமில்லாத ஒரு மாநிலத்தில் சந்திரமுகியை பாஜகவால் தட்டியெழுப்புவது மிகவும் சிரமம், ஆனால் சாத்தியமில்லாதது அல்ல. எந்த மாநிலமும் ஒருநாள் நோய் வாய்ப்படும், அப்போது பேய்பிடிக்கும். ஆனால் எது மருந்து என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை, நோய்மையை ஒரேயடியாய் குணப்படுத்த முடியாது என்பதை இந்த இரு தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன.

பொறுமை, கனிவு, நம்பிக்கையின் பாற்பட்டதாய் இனி வலதுசாரி எதிர்ப்பரசியல் அமையட்டும்!