தமிழில்: கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

கொரோனா வைரஸைப் பற்றி மக்கள் உறுதியான தகவல்களை தேடுகிறார்கள், ஆனால் உறுதியற்ற தகவல்கள் தான் விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கிறது.

வழக்கமான சுட்டுரை பயனராக, நாம் ஆன்லைனில் பின்தொடரும் நபர்களையும் நிறுவனங்களையும் மிகவும் கவனமாக தேர்வு செய்கிறோம். அதில் நமக்கொரு பிரச்சினை உள்ளது. சமூக ஊடகங்களில், நமது கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றவர்களுடன்  நாம் இணைவதற்கும் நம்புவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன, இதனால் நாம் ஏற்கனவே ஒப்புக்கொண்ட கருத்துக்களால் நிறைவுற்றவர்களாகி விடுகிறோம். இவற்றில் சில கருத்துக்கள் அரசியல் அல்லது மத சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டவை, மற்றவை மிகக்குறைந்த சான்றுகள் அல்லது மிக மேலோட்டமான, நம்பமுடியாத தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. முரண்பட்ட கருத்துக்கள் மற்றும் துருவப்படுத்தப்பட்ட பார்வைகளின் பின்னணியில்,  ஒருபோதும் இல்லாத அளவுக்கு அறிவியலையும் விஞ்ஞானிகளையும் நம்பும்படி சொல்கிறார்கள்.

கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது, ​​ஆன்லைனில் உள்ள அனைவருக்கும் “அறிவியல்” கருத்து இருப்பதாக தெரிகிறது. மாடலிங், தொற்று விகிதங்கள் மற்றும் ஆன்டிபாடி சோதனைகள் குறித்து நாம் அனைவரும் விவாதிக்கிறோம்; திடீரென்று, நாம் அனைவரும் தொற்றுநோய், நோயெதிர்ப்பு மற்றும் வைராலஜி ஆகியவற்றில் வல்லுநர்களாக மாறிவிடுகிறோம். புதிய விஞ்ஞான சான்றுகள் அரசாங்கக் கொள்கையில் திடீர் மாற்றத்தைத் ஏற்ப்படுத்தியிருப்பதாக பொதுமக்கள் கேள்வியுறும்போது, ​​விஞ்ஞானிகள்  என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது, எனவே அவர்களை நம்ப முடியாது என்று முடிவு செய்யும் மனப்பாங்கு மக்களிடையே இருக்கிறது. அரசியல்வாதிகள் தெளிவாகவும் வெளிப்படையாகவும் அறிவியல் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மோசமானவர்கள். அதே நேரத்தில் ஊடகவியலாளர்கள் விஞ்ஞானிகளைப் போன்று கேட்பதைவிட  அரசியல்வாதிகளைப் போன்ற கேள்விகளைக் கேட்பதில் மிகவும் திறமையானவர்களாக இருக்கின்றனர்.

விஞ்ஞான செயல்படுகளை அறிவிப்பது நீண்டகாலமாக முக்கியமாக இருந்ததில்லை. அரசியலில், தவறை ஒப்புக்கொள்வது பலவீனத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. ஆனால் அறிவியலில் இது முற்றிலும் நேர்மாறானது, அங்கு தவறுகளை செய்வது அறிந்து கொள்வதின் மிக முக்கியமான படி . பழைய கோட்பாடுகள் மற்றும் கருதுகோள்களை புதிய, மிகவும் துல்லியமானவற்றைக் கொண்டு மாற்றுவது ஒரு விஷயத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற அனுமதிக்கிறது. இதற்கிடையில், நாம் கணித மாதிரிகளை உருவாக்கி தரவு மற்றும் கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் கணிப்புகளைச் செய்கிறோம். இந்தக் கொரோனா வைரஸைப் போன்ற புதிய நோய்தொற்றைக் கொண்டு, குறைந்த அளவிலான அடிப்படை அறிவைக் கொண்டு தொடங்கினோம். நாம் புதிய தரவை சேர்த்துக் குவிக்கும்போது, ​​நமது மாதிரிகள் மற்றும் கணிப்புகள் தொடர்ந்து உருவாகி மேம்படும்.

விஞ்ஞான முறையின் இரண்டாவது முக்கியமான அம்சம் சந்தேகத்திற்குரிய மதிப்பைக் கணிப்பதாகும். சந்தேகம் என்ற கருத்தை ஆராய்வது மிகவும் முக்கியமானது .  சந்தேகத்தை ஆராய்வது குறித்து  இடைக்கால அறிவுசார் இயக்கத்தின் நபர்கள் குறிப்பாக இரண்டு நபர்கள் அரபு அறிஞர் இப்-அல்-ஹெய்தாம் (அல்ஹாசென்) மற்றும் பாரசீக அறிஞர் ராசி (ரேஸஸ்) ஆகியோரது கருத்துக்களின் மூலமாக நாம் அறிய முடியும். இந்த இயக்கம் அரபு மொழியில் அல்-ஷுகுக் என்று அழைக்கப்பட்டது (அதாவது “சந்தேகங்கள்” என்று பொருள்படும்). மேலும் இது வானியல் மற்றும் மருத்துவம் போன்ற பாடங்களில் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய கிரேக்க அறிஞர்களிடமிருந்து பெறப்பட்ட ஞானத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்கியது. விஞ்ஞான முறையின் ஆரம்பகாலத்தவரான அல்-ஹெய்தம், ஹெலெனிக் வானியலாளர் டோலமியின் எழுத்து குறித்து சந்தேகம் எழுப்பினார். மேலும் ஒருவர்  ஏற்கனவே இருக்கும் பிறருடைய அறிவை மட்டுமல்ல, ஒருவரின் சொந்த யோசனைகளையும் கேள்விகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்றும்,  முரண்பாடான சான்றுகள் இருக்கும் பட்சத்தில் தனது கருத்தை மாற்ற தயாராக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். நம் கண்கள் பொருள்களின் மீது ஒளி வீசுவதால், நாம் பொருட்களை காண்கிறோம் என்ற நூற்றாண்டுகள் பழமையான கருத்தை அவர் தூக்கி எறிந்தார், மேலும் பார்வை செயல்படும் விதம் குறித்த முதல் சரியான விளக்கத்தை அவர் அளித்தார்.

இந்த அணுகுமுறை இன்றும் நாம் விஞ்ஞானத்தை எவ்வாறு கடைப்பிடிக்கிறோம் என்பதை தெரிவிக்கிறது. உண்மையில், விஞ்ஞான முறை  கோட்பாடுகள் சூழ்ச்சி அல்லது சதி கோட்பாடுகளின் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.விஞ்ஞானிகளைப் போலவே, அவர்களும் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் மற்றும் ஆதாரங்களின் முக்கியத்துவத்தை மதிக்கும் சந்தேகவாதிகள் என்று சதிவாதிகள் வாதிடுவார்கள். ஆனால் அறிவியலில், உலகத்தைப் பற்றிய நமது கோட்பாடுகள் மற்றும் விளக்கங்கள் சரியானவை என்று நாம் நம்பலாம் என்றாலும், நாம் ஒருபோதும் முழுமையாக உறுதியாக இருக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு அவதானிப்பு அல்லது புதிய சோதனை முடிவு வந்து, ஏற்கனவே உள்ள கோட்பாட்டுடன் முரண்பட்டால், நம்முடைய பழைய முடிவுகளை நாம் கைவிட வேண்டும். சதி கோட்பாட்டாளர்கள்  அறிவியல் விஞ்ஞானிகளின் கோட்பாடுகளுக்கு அப்படியே எதிர்துருவ கருத்துக்களை கொண்டவர்கள்; அவர்கள் தங்கள் அடிப்படை நம்பிக்கைகளுக்கு முரணான ஆதாரங்களை ஒருங்கிணைக்கிறார்கள், மேலும் இந்த ஆதாரங்களை நிராகரிப்பதை விட உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆதாரங்களை விளக்குகிறார்கள்.

பெரும்பாலும், இத்தகைய கருத்தியல் நம்பிக்கைகளின் விஷயத்தில், “அறிவாற்றல் ஒத்திசைவு மறுப்பு” என்ற வார்த்தையை நாம் கேட்கிறோம், இதன் மூலம் யாரோ ஒருவர் தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு முரணான ஆதாரங்களை எதிர்கொள்ளும் போது உண்மையான மன அசவுகரியத்தை உணர்கிறார்கள். முன்பே இருக்கும் நம்பிக்கைகளை வலுப்படுத்த இது உதவும்.

இதையே ஒரு சதி கோட்பாட்டாளரிடம் கேளுங்கள்: அவர்கள் மனதை மாற்றிக்கொள்ள என்ன ஆகும்? அவர்களின் பதில், அவர்கள் தங்கள் பார்வைக்கு முற்றிலும் உறுதியுடன் இருப்பதால், எதுவும் மாற்றம் செய்யமுடியாது என்பார்கள். எவ்வாறாயினும், அறிவியலில், நம்முடைய தவறுகளை ஒப்புக்கொள்ளவும், உலகத்தைப் பற்றிய புதிய ஆதாரங்களுக்காக நம் மனதை மாற்றவும் கற்றுக்கொள்கிறோம்.

தற்போதைய தொற்றுநோய்களில் இது முக்கியமானது. நடவடிக்கை எடுப்பதற்கு முன், வைரஸைப் பற்றி எல்லாவற்றையும் அறிய உலகம் காத்திருக்க முடியாது என்பது தெளிவாகிறது; அதே நேரத்தில், புதிய ஆதாரங்கள் இருந்தபோதிலும் ஒரு குறிப்பிட்ட மூலோபாயத்தை பிடிவாதமாக கடைப்பிடிப்பது பேரழிவு தரும். அதிகமான தரவு குவிந்து, நமது மாதிரி கணிப்புகள் மிகவும் நம்பகமானதாக இருப்பதால் நமது அணுகுமுறையை மாற்ற நாம் தயாராக இருக்க வேண்டும். அதுவே வலிமை, அது அறிவியல் முறையின் பலவீனம் அல்ல.

விஞ்ஞான ரீதியாக கல்வியறிவு பெற்ற சமூகம் இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எனது வாழ்க்கையை கழித்திருக்கிறேன். எல்லோரும் அண்டவியல் அல்லது குவாண்டம் இயற்பியலில் நன்கு அறிந்திருக்க வேண்டும் அல்லது ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ இடையேயான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் பாக்டீரியாவிற்கும் வைரஸ்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அனைவரும் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும். அதைவிட முக்கியமாக, இந்த நெருக்கடியை நாம்  முடிவுக்கு கொண்டு வரவேண்டுமானால், விஞ்ஞானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய அடிப்படை புரிதலை நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டும் – இது போன்ற ஒரு நெருக்கடியின் போது, ​​சந்தேகத்தை ஒப்புக்கொள்வது, சந்தேகமில்லா உறுதியுடன் நடிப்பதை விட, வலிமையின் ஆதாரமாக இருக்கக்கூடும்.

நன்றி:

https://www.theguardian.com/commentisfree/2020/apr/21/doubt-essential-science-politicians-coronavirus