எப்போதுதிரும்பும் என யூகிக்க முடியாத மின்வெட்டு, சார்ஜ் இல்லாமல் இயக்கத்தை நிறுத்தி கொண்ட செல்பேசி, நிர்கதியான தொலைதொடர்பு, பாழடைந்த பயிர்கள், நீரில் மிதக்கும் நம் கட்டில் சாமான்கள், தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டிருக்கும் செய்தி தொலைகாட்சிகள், முகாம்களை நோக்கி படையெடுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், அடுத்த நாள் இன்னும் எத்தனை வருடம் பின்னோக்கி தள்ளபடுவோம் என பீதியில் இருக்கும் விளிம்பு நிலை மக்கள், புயலுக்கு பின்னான நிவாரணம்நூற்றுக்கணக்கான மீட்பு குழுக்கள் என தமிழகம் மீண்டும் ஒரு புயலை நவம்பர் 25 ஆம் தேதி எதிர்கொண்டது.  புயலின் தன்மையாலும் முறையான முன்னேச்சரிக்கையாலும் பெருத்த உயிர்சேதங்களும் பொருட்சேதங்களும் எதுவுமின்றி இது கடந்து சென்றுவிட்டது. ஆனால் இவ்விடயம் இத்தோடு கடந்து செல்ல கூடியது இல்லை.  எப்போதாவது வரும் புயலும்பல ஆண்டுகளுக்கு ஒன்று என வரும் அதிதீவிர புயலும் இன்றுநிஷா, நாடா, நீளம், வர்ரதா, தானே, ஒக்கி, காஜா, மதி, ஜல்என மிகுந்த வழக்கமானதாக மாறி கொண்டு வருகின்றன. இது மெல்ல மெல்ல நடந்தேருவதால் நம் கண்ணில் பெரிதாக அகப்படுவதில்லை. ஆனால் புள்ளிவிவரங்கள் நம்மை அவ்வளவு எளிதானதாக இதை எடுத்துகொள்ள விடாது. இது தமிழகம் மட்டுமில்லாது இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுமைக்குமே பொருந்தும்.

இந்தியா இந்த வருடம் மட்டும் நிவருடன் சேர்த்து மூன்று அதிதீவிர புயலை சந்தித்துள்ளது. புயல்களின் எண்ணிக்கை வருடாவருடம் எகிறிக்கொண்டு இருக்கிறது. 2018, 2019 என இரண்டு வருடங்களிலும் ஏழு ஏழு புயல்களை இந்தியா சந்தித்துள்ளது. இது இவ்வாறு கடைசியாக 1985- இல் நடந்தது. இவற்றுள் 6 புயல்கள் அதிதீவிர புயல்கள்.கடந்த ஐந்து ஆண்டுகளாக  சாராசரியாக வருடத்திற்கு 5 புயல்களும் 3 அதிதீவிர புயல்களையும் இந்தியா சந்தித்துள்ளது. புயல்மட்டுமல்லாது கேரளா, மகாராஷ்டிரா, அஸ்ஸாம் முதலிய மாநிலங்கள் ஒவ்வொரு வருடமும் வெள்ளப் பெருக்கினால் தத்தளிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளாக புயல்களின் எண்ணிக்கை 11% அதிகரித்துள்ளது அதில் கடந்த ஐந்தாண்டுகளாக 32% அதிகரித்துள்ளது. 1950- இல் இருந்து இயற்க்கை பேரிடர்கள் மூன்று மடங்கு அதிகமாகி உள்ளது. புயல்களின் எண்ணிக்கை கூடவே அதன் தீவிர தன்மையும் கூடிகொண்டே செல்கிறது உலகம் முழுவதிலுமே கடந்த பத்தாண்டுகளில் மட்டும் புயல்களின் தீவிரத்தன்மை 8% அதிகரித்துள்ளது. புயல்கள் அதிகரிப்பது ஒருபக்கம் இருப்பினும் மொத்த பருவ மழையின் அளவு குறைந்து அதன் போக்கு என்பது கணிக்க இயலாததாய் மாறியுள்ளது. மழை பெய்யும் நாட்கள் குறைந்து அதன் தீவிரத்தன்மை அதிகரித்துள்ளது. இது மேலும் மேலும் அதிகரித்து கொண்டே செல்லும். 2050 க்குள் 5% அதிக மழை பெய்யவும் இந்த நூற்றாண்டுக்குள் 21% அதிகரிக்கவும் கூடும். இந்த மழையானது சமம் இல்லாததாக உருவெடுத்து சில இடங்களில் நிலை கொள்ள முடியாத மழையை தந்து பல இடங்களை காய்ந்த பூமி ஆக்கி விடுகிறது.  ஆதலால் வறண்ட நிலபகுதி ஒருபுறம் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. பெருத்த மழை ஒருபுறம் இருக்க அம்மழையை தொடர்ந்து வரும் வறட்சியும் ஒவ்வொரு வருடமும் கூடிகொண்டே செல்கிறது. 2015, 2016 என தொடர்ந்து மழைகாலத்தில் வெள்ளத்தில் மூழ்கிய சென்னை தொடர்ந்து வந்த கோடையில் எத்தகு தண்ணீர் தட்டுப்பாடை எதிர்கொண்டது என்பது நம் அனைவரும்அறிந்ததே.

இது இயற்கையாக நிகழ்வது, ஆயிரக்கணக்கான வருடங்களாக இயற்கை மாறி கொண்டு தான் இருக்கிறது அது போல் இதுவும் ஒன்று என இப்போதுசிறு குழந்தை கூட கூறாது. இதுமனிதன் ஏற்படுத்தியது என ஒருவராலும் மறுக்கவே முடியாது. புயல்கள் தீவிரம் அடைவதற்கு மிக முக்கிய காரணம் புவிவெப்பமயமாதல். கடல்மேல்மட்டவெப்பம் அதிகம் ஆவதே புயல்கள் சட்டென தீவிரம் அடைய மிக முக்கிய காரணம். 844 உயிர்களை (நமக்கு தெரிந்து) பலிவாங்கிய ஒக்கி புயல் தீவிரம் அடைய இது மிக முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேல்சொன்ன புள்ளிவிவரங்கள் அனைத்தும் வெறும் மழை தொடர்பானவை மட்டுமே இன்னும் வெப்ப நிலை, வறட்சி நிலை, காட்டுதீ, கடல்நீர்மட்டஉயர்வு என ஒவ்வொன்றையும் உற்று கவனித்தோமேயானால்நாம் நெருங்கி கொண்டிருக்கும் பேரழிவு நமக்கு விளங்கும். மனிதனால் இது உருவாக்கப்பட்டது என பொத்தம்பொதுவாக மனிதனை குற்றம் சாட்டும் இதே தருணத்தில் நாம் மிக மிக முக்கியமானதாக இன்னொன்றை அறிந்துகொள்வதும் விவாதிப்பதும் பேசுவதும்  இன்றைய அத்தியாவசியம் ஆகிறது அது‘climatic justice’ எனப்படும் காலநிலை நீதி.

Climatic justice என்பதைசுருங்ககூறினால், ‘நான் செய்யாத ஒரு விஷயத்துக்கு நான் ஏன் பொறுப்பேற்க வேண்டும்? நான் பொறுப்பாகாத ஒரு விஷயத்தினால் நான் ஏன் துன்பப்படவேண்டும்?’ இந்த கேள்விக்கான பதிலே காலநிலை நீதி ஆகும். உலகில் அனைவரும் காலநிலை நீதி குறித்து தொடர்ந்து பேசி கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்காக பேசி கொண்டிருக்கிறார்கள் என்பதில் தான் நம் கவனம் இருக்க வேண்டும். ஒவ்வொரு அனைத்து நாடுகள் காலநிலை உடன்படிக்கை கையெழுத்து ஆகும் பொது வளர்ந்து வரும் நாடுகள் தங்கள் நாட்டு தொழில் வளர்ச்சி பாதிக்காமல் இருக்க உருவாக்கிய சொல் இது அவர்கள் நாட்டு தொழிலதிபர்களுக்காக, அவர்கள் நாட்டு தொழிற்சாலைகளுக்காக இதைபேசுபொருள் ஆக்கிகொண்டார்கள். இது நாடுகளை வைத்து பேச கூடியது அல்ல.நாம் பேசும் காலநிலை நீதி என்பது சற்று நகர்ந்தாலும் கீழே விழும் விளிம்பு நிலை மக்களை பற்றியதாய் இருக்க வேண்டும், அந்த நீதி என்பதுவீட்டுக்குள் நீர் புகுந்து அடுத்த வேலை உணவு யார் தருவார்கள் என காத்திருப்பவர்களுக்காய் இருக்க வேண்டும், அந்த நீதி என்பது திடீர் மர்ம காய்ச்சலால் தன் மகளை இழந்த தந்தைக்கு உரியதாய் இருக்க வேண்டும், அந்த நீதி என்பது நிலசரிவில் புதையுண்ட தன் உறவினர்களது முகத்தை ஒரு தடவையாது பார்க்க முடியாதாஎன தவிக்கும் குடிசைவாசிக்கானதாய் இருக்க வேண்டும் அந்த நீதி என்பது உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பேச வேண்டும், அந்த நீதி கீழிருந்தே தொடங்க வேண்டும். அப்போது தான் அது நீதி ஆகும்.

நம் ஊரில் காய்கறி கடை வைத்திருக்கும் முத்து அண்ணாவும் தெரு ஓரமாய் மீன் விற்கும் முனியம்மாவும் எப்படி ரிலையன்ஸ்தொழிலதிபரோடு சரிசமமாக பொறுப்பாளி ஆவார்கள் இல்லைநாளை மற்றுமொரு புயல் வீசுனால் பாதிப்பு என்பது யாருக்கானதாய் இருக்கும். இல்லையே இங்கு பொதுமக்களுக்குதான் கொஞ்சம் கூட பொறுப்புணர்வு என்பதே இல்லை. அவர்கள் குப்பைகளை முறையாக கொட்டாததால், வாகனம் அதிகமாக பயன்படுத்துவதால், மின்சாரம் அதிகமாக உபயோகபடுத்துவதால் தான் உலகம் வெப்பமயம் ஆகிறது என அனைவரும் நம்மிடம் மீண்டும் மீண்டும் கூறிபொறுப்பினையும் பழியையும் தட்டி கழிப்பார்கள். ஆனால் உண்மை நிலை அப்படி அல்ல மொத்த பொதுமக்கள் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைட்என்பது மொத்தத்தில் கடுகளவு கூட இராது

உலகின்10% வெளியீடைவெறும் 15 நிறுவனகள் செய்கின்றன. உலகின் 1/3 அளவு வெளியீடை வெறும் சொற்ப அளவிலான நிறுவனங்கள் செய்கின்றன. இந்தியாவை எடுத்து கொண்டோமானால் ரிலையன்ஸ், டவ் கெமிக்கல்ஸ், NTPC, ONGC, coal india, போர்ட் முதலான நிறுவனங்கள் முதலிடத்தில் வருகின்றன.இந்தியாவின் மொத்த வெளியீட்டில் 68% ஆற்றல் துறையிலும் 19% தொழிற்துறையிலும்8.71% விவசாயத்தாலும் 3.16% கழிவுகளில் இருந்தும் வருகிறது. டெல்லி, மும்பைமற்றும் சென்னை ஆகிய நகரங்களில் இருந்து மின்சாரம் மூலம் வெளியிடும் நச்சு காற்று முறையேதொழிற்சாலைகளினால் 5428.55Gg, 4049.85Gg, 2859.07Gg ஆகவும் பொதுமக்கள் மற்றும் வீடுகளினால் 2099.11Gg, 1291.49Gg, 624.18Gg ஆகவும் இருக்கின்றன. இவை இரண்டுக்கும் உள்ள இடைவெளி மிக அதிகம். டில்லி காற்று மாசுவிற்கு காரணம்விவசாயிகள்வைக்கோலை எரிப்பதனால் என்ற கருத்து மிக பரவலாக பேசப்பட்டது ஆனால் உண்மையில் அது வெறும் 2.68 Ggமுதல் 17.05Gg மட்டுமே. ஒப்பீட்டளவில் இந்த தொகை ஒன்றுமே இல்லை. உண்மை தரவுகள் இவ்வாறு இருக்க பொறுப்புகளையும் பழியையும் பாதிப்புகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து விட்டு இவை அனைத்தும் எப்பொழுதும் போல் இயங்கி கொண்டு இருக்கின்றன. இதை விட கிரீன், எக்கோ பிரீன்ட்லி என இதையே தங்கள் வியாபார உத்தியாகவும் மாற்றி கொண்டுவிட்டனர்.

இவை அனைத்தையும் கண்காணித்து மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி படுத்த வேண்டிய அரசின் செயல்பாடுகள் இதற்கு நேர்மாறானதாக இருக்கிறது. சுற்றுசுழல்அனுமதிநடைமுறைகளை எளிமையாக்குதல், சுற்றுசூழல்அமைப்புகள்அனைத்தின் சுய அதிகாரத்தையும்அழித்தல், சுற்றுசூழல் மற்றும் வனத்துறை சட்டங்களை நீர்த்து போக செய்தல், தங்கு தடையில்லா வர்த்தகத்தை அதிகரித்தல், EIA2020 போன்றசட்ட திருத்தங்கள் மேற்கொள்ளுதல், வனத்துறை ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாமல் இருத்தல் என ஒருபக்கம் இவை அனைத்தையும் செய்து கொண்டே மறுபக்கம்சுற்றுசுழலைகாக்க வேண்டும் என மக்களிடம் சொல்லிவேடிக்கை காட்டி கொண்டிருக்கிறார்கள். இந்த குற்றசாட்டு அனைத்திற்கும் இருக்கும் ரெடிமேட் பதில் ‘இவை தான் நாட்டை முன்னேற்றும்’ ‘நாடு வளர்ச்சி அடைய இவையெல்லாம் அவசியம்’ ‘உங்களால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியுமா? காரில் செல்லாமல் இருக்க முடியுமா? உங்களுக்காகத்தான் இவை அனைத்தும்’ என்பன.

அப்படியெனில் இந்தியாவில் ஏன் இன்னும்56% பேர் அடிப்படை வசதி இல்லாமல் இருக்கிறார்கள்? ஏன் வெறும் 25% பேருக்கு மட்டுமே முறையான மருத்துவம் கிடைக்கிறது? ஏன் 240 மில்லியன்பேர் இன்னும் மின்சாரம் இன்றி வாழ்கிறார்கள்? 8.5 கோடி இந்திய குழந்தைகளால் பள்ளி செல்ல இயலவில்லையே ஏன்? வருடத்திற்கு 2.4 கோடி பேர் முறையான மருத்துவம் இன்றிஉயிரிழப்பது ஏன்? 7 இலட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் இறப்பது ஏன்? 7.32 இலட்சம் பேர் இன்னும் கழிப்பறை வசதி கூட இல்லாமல் இருப்பது ஏன்? 836 மில்லியன் பேர் ஒரு நாளில் வெறும் 20 ரூபாய்க்கும் குறைவான செலவுகளை செய்து கொண்டு வாழ்வது ஏன்? ஐந்தில் ஒருவருக்கு வேலை இல்லாமல் இருப்பது ஏன்? 81% பேர் எந்த சமூக பாதுகாப்பும் இல்லாத முறையற்ற வேலை செய்வது ஏன்? சமூக பாதுகாப்பின்றி லாக்டவுனில் 1கோடிக்கும் அதிகமான பேர் 1௦௦௦ கி.மீ. நடந்தே சென்றது ஏன்? விளிம்பு நிலையில் இருந்து வருடத்திற்கு 57 மில்லியன் பேர் வறுமைக்குள் இழுக்கபடுவதர்க்கு காரணம் என்ன? அப்படியெனில் இந்தியா வளர்ச்சி அடைய இவைஅனைத்தையும் பொறுத்து கொள்ள வேண்டும் என கூறுவது யாருடைய வளர்ச்சிக்காக யார் பொறுத்து கொள்ள வேண்டும்?

இந்தியாவில் சென்ற வருடம் மட்டும் 2.7 மில்லியன் பேர் சுற்றுசுழல் பிரச்சனைகளாலும், இயற்க்கை சீற்றங்களாலும் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து குடி பெயர்ந்து உள்ளனர். காடுகளைஅழித்தல், இயற்க்கை வளங்களை சூறையாடுதல், நாட்டின் வளங்களை வரம்பின்றி சந்தைக்கு திறந்து விடுதல் என இப்போது சென்று கொண்டிருக்கும் பாதை இன்னும் பல ஆயிரம் மக்களை வாழ்வாதாரம் இழந்து உள்நாட்டு அகதிகளாக்கும்.

வளர்ச்சி எனும் வார்த்தை வார்ப்பில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டு, உரிமை கொண்ட நல்ல வாழ்க்கைக்கானஅடிப்படை தேவைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, தங்களுக்கென கிடைக்கும் எங்காவது ஒரு கீறல் வெளிச்ச நம்பிக்கை கொண்டு உயிர் மட்டுமே கொண்டு வாழ்ந்து வரும் பெரும்பான்மையான மக்களை இருக்கும் கொஞ்ச நஞ்ச சுய மரியாதையையும் பறித்து, தங்களின்உயிர்த்தலுக்காக, மூச்சு விடுவதற்காக, இருத்தலுக்காகஏங்கி தவித்து அவர்கள் வாழ்வை நார் நாராய் கிழித்து தூக்கி எரிவது எத்தகு கொடுமையானது, அநீதியானது, அறத்திற்கு எதிரானது.அந்த பெரும்பான்மை என்பதில் நாம் அனைவரும் அடங்குவோம். ஆதலால் கீழிருந்து காலநிலை நீதியை பேச தொடங்கி பொறுப்பாளரான ஒவ்வொருவரையும் கேள்வி கேட்போம்.

‘How dare you?’ –Gretathunderberg.