உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் ஓய்வுகுறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தோனி ராணுவ பயிற்சியில் ஈடுபட போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐயிடம் 2 மாதம் ஓய்வு கேட்ட தோனி, குறிப்பிட்ட அந்தக் காலத்தில் ராணுவத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாகவும் இதற்கு ராணுவமும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.
தோனியின் கோரிக்கைக்கு ராணுவ தளபதி பிபின் ராவத் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்து ஊடகத்திடம் பேசிய ராணுவ உயரதிகாரி ஒருவர், “தோனியின் கோரிக்கைக்கு ராணுவ தளபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். கௌரவ லெப்டினன்ட் கர்னலான தோனி பாராசூட் ரெஜிமெண்ட் படைப்பிரிவில் பயிற்சி பெறுவார்” என்றார்.
மேலும், இந்த பயிற்சி காஷ்மீரில் நடக்கவுள்ளதாகவும் கவுரவ பதவி வகிக்கும் தோனிக்கு நிச்சயமாக எந்த ஒரு ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் தோனியின் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணிக்கு ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துப் போட்டிகளுக்கும் ரிஷப் பன்ட் பிரதான விக்கெட் கீப்பராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.