கொரோனோவைவிட கொடிய நோய்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று தீண்டாமை.
உத்திர பிரதேசத்தில் குஷினகர் மாவட்டம் புஜௌலி குர்த் என்னுமிடத்தில் கொரொனா பரவலை தவிர்க்கும் பொருட்டு தனிமைப்படுத்தல் வசதியை பள்ளிக்கூடத்தில் செய்துள்ளனர். அந்த பள்ளிக்கூடத்தில் 5 பேர் தங்கியுள்ளனர். அவர்கள் கடந்த மார்ச் 30 தேதி டெல்லியிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு சமையல் செய்து தரவேண்டியவர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமைக்க மறுத்துவிட்டார். வேறுவழியின்றி அங்கு பஞ்சாயத்து தலைவராக இருக்கும் லீலாவதி தேவி காலையும் மாலையும் சமையல் செய்து தருகிறார். மாஸ்கும் கிளவுஸும் அணிந்துகொண்டு சமையல் செய்து தருகிறார். எனினும் தனிமைப்படுத்தப்பட்ட இருவர் லீலாவதி தேவி சமைத்த உணவை சாப்பிட மறுத்து விதிகளை மீறி வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வருகின்றனர்.காரணம் சமையல் செய்துதரும் பஞ்சாயத்து தலைவர் லீலாவதி ஒரு தலித். அதே மாநிலத்தில் பஸ்தி மாவட்டத்தில் சிஸ்வா பருவர் கிராமத்தில் 10 பேர் உணவை உட்கொள்ள மறுத்துள்ளனர். காரணம் உணவு சமைத்த இருவர் தலித்துக்கள்.
மரிய விர்த் ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்டவர்.அறுபதுகளை கடந்த பெண்மணி. தனது சுட்டுரையில் இந்து மத தீண்டாமையையும் சமூக விலகலையும் சமமென தனது கருத்தை பதிவிடுகிறார். அவரது சுட்டுரை கணக்கினை இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும் பின் தொடர்கின்றனர்.
பழைய ஃபரிதாபாத்தில் கொரோனா காலங்களில் பணிபுரிகின்ற தூய்மைப் பணியாளர்கள் 40 பேருக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.
ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தின் தலைநகரம் பெர்ஹாம்பூர். இந்த ஊரில் வார்டு எண் 8க்கு தூய்மை பணியாளராக பொறுப்பில் இருப்பவர் ராணி. அந்த வார்டில் இருக்கும் மக்கள் அனைவரும் ராணி தனது வேலைகளை கொரோனா காலத்திலும் தடையின்றி சிறப்பாக செய்வதைக் கண்டு ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலை அணிவித்து பூக்களைத் தூவி மரியாதை செய்கின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் நபா ஒரு சிற்றூர். ஏறத்தாழ 70 ஆயிரம் மக்கள் தொகை கொண்டது. அங்குள்ள மக்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களது பணியினை சிறப்பிக்கும் விதமாக ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலைகள் அணிவித்து பூக்களைத் தூவி மரியாதை செய்ததை அந்த மாநிலத்தின் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் சிலாகித்து சுட்டுரையில் பதிவிடுகிறார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் லக்கீம்பூர் ஹேரி மாவட்டத்தின் ஃபரியா பிப்பாரியா கிராமத்தை சேர்ந்தவர் ரோசன் லால். ஹரியானாவில் உள்ள குருகிராமில் எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு தாமதமாகவே வந்து சேர்ந்தார். கொரோனா பரவல் காரணமாக ஊருக்கு வெளியிலுள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 7 பேர் தனிமை படுத்தப்பட்டனர். அவர்களுக்கு உணவு வழங்குவதற்கு ஒருவருமில்லை. எனவே அவர்களே வீட்டில் சென்று உணவருந்திவிட்டு பள்ளியில் வந்து தங்கியிருந்தனர். இந்நிலையில் ரோசன்லால் பசி காரணமாக வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டில் ரொட்டி மாவு இல்லை என்ற காரணத்தால் அருகிலிருந்த மில்லுக்கு சென்றிருக்கிறார். இதற்கிடையே பள்ளிக்கூடத்திற்கு வந்த காவலர் அனுப்குமார் சிங், ரோசன்லாலை காணாமல் அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கும் ரோசன் இல்லை என்பதால் மில்லுக்கு சென்றிருக்கிறார். அங்கு வைத்தே ரோசனை பயங்கரமாக தாக்கியிருக்கிறார். அதன் பிறகு ரோசனுக்கு மருத்துவ உதவிகள் ஏதும் செய்யாமல் அப்படியே சென்றிருக்கின்றனர். அன்றிரவு ரோசன் லால் தற்கொலை செய்து கொண்டார். காவலர் அனுப் குமார் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. ரோசன் லால் ஒரு தலித் இளைஞர்.
தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் மாநகராட்சி திருநெல்வேலி. அங்குள்ள காவல்துறையும் வருவாய் துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தூய்மைப் பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செய்கின்றனர். அணிவகுப்பு மரியாதை ஆட்சித் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு வழங்கக் கூடிய ஒன்று.
தமிழகத்தில் சென்னை மாவட்டத்தின் புறநகர் பகுதி ஒன்றில் பெண் தூய்மைப் பணியாளரை அந்த தெருவில் வசிக்கின்ற பெண் அடித்து சாக்கடையில் தள்ளிவிடுகின்றார். அந்த தூய்மைப் பணியாளர் காயங்களுடன் பேசும் காணொளி உலகம் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கிறது.
அறுபதுகளைக் கடந்த மனிதர் அவர், தலையெல்லாம் வெள்ளையாகிவிட்டது. காவி நிற வேட்டியை மடித்துக் கட்டியிருக்கிறார். கையில் அலைப்பேசி திறந்த நிலையில் இருக்கிறது.ஒருவேளை அவர் பேசுவதை அவரே பதிவு செய்து கொண்டிருக்கலாம்.அவரது இடது தோள்பட்டையின் குறுக்காக பூணூல் தரித்திருந்தார். எதிரிலிருக்கின்ற நபர் யாரென தெரியவில்லை.யாராக இருக்கக்கூடும் என்பது கன்னித்தீவு இரகசியமல்ல. எதிரிலிருக்கின்ற நபரை வயதான நபர் மிகவும் தரக்குறைவாக பேசுகிறார். பதிவு செய்யவேண்டும் என்பதால் சிலவற்றை எழுதுகிறேன்.
உன் ஊரா இது…எங்களால நீ சம்பாதிச்சிட்டு இருக்க..
நீ பீ எடுக்குறதுக்கு காரணமே நாங்க எல்லாம் இங்க வந்து கட்டுனதுனால..
எங்களோட பீ எடுத்துதாண்ட நீ சம்பாரிச்சு சாப்பிடுற…
நான் இப்பவும் சொல்றேன் நீ யார வேணா வர சொல்லு…
இப்படியே தொடர்கிறது.
ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கக்கூடிய அந்த வார்த்தைகளில் பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் சாதி-வர்க்க முரண்பாடுகள் தோன்றி மறைகின்றன.
உணவு சமைத்து வழங்குவதற்கு ஒருவரும் முன்வராத நிலையில் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பாதுகாப்பாக சமையல் செய்து தருகிறார்.ஆனால் கொரோனா காலங்களில் அதையும் ஏற்க மனமில்லாமல் புறக்கணிப்பது எத்தகைய மனது. பல இடங்களுக்கு வேலை காரணமாக செல்பவர்கள் ஹோட்டல்களில் தான் சாப்பிட முடியும்.அவ்வாறான இடங்களிலெல்லாம் சமைப்பவர்கள் எந்த சாதி என்பதை எப்படி இவர்களால் அறிந்து கொள்ள முடிகிறது என்பது எனக்கு ஆச்சர்யமானது தான். வேறுவழியே இல்லை என்னும் இடங்களில் நாம் பிழைப்பதற்கு எதுவென்றாலும் ஏற்றுக் கொள்கிற மனது தனது சொந்த ஊரில் ஏற்க மறுப்பதன் பின்னனியை என்னவென்று சொல்வது.
அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருப்பேன் என்ற உறுதியின் மேல் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திர மோதி அவர்கள் சுட்டுரையில் பின்தொடர்கின்ற நபர், தனது மனதில் ஒளிந்திருக்கும் தீண்டாமையை எப்படி பொதுவெளியில் பதிவு செய்ய முடிகிறது? எத்தனையோ சட்டங்களும் விதிகளும் இருக்கின்ற இந்த நாட்டில் வெளிநாட்டு நபர் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுகிறார். நடுநிலையாளர்கள் மட்டுமே கண்டிக்கிறார்கள்.
தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செய்வது, ரூபாய் நோட்டு மாலைகள் அணிவிப்பது அவர்கள் தனது துயரங்களை நினைக்காமலிருக்க தற்காலிகமாக உதவும். நாம் எந்த மாதிரியான மனநிலையில் இத்தகைய சிறப்புகளை செய்கிறோம்?
கொரோனா தொற்று முடிந்த பிறகும் நாம் அவர்களுக்கு சிறப்பு செய்வோமா? இந்த வேலைகள் அவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? இன்னும் பல காலங்களுக்கு அவர்கள் இந்த வேலைகளை செய்வதற்காக நாம் சிறப்பு செய்கிறோமா? ஏன் இந்த வேலைகளை மாற்று சாதியினர் செய்ய முன்வருவதில்லை.அவர்களுக்கும் இந்த பாராட்டுகள் கிடைக்கும் தானே. இந்த வேலைகளை செய்கின்றவர்களுக்கு உயர்ரக பாதுகாப்பு உபகரணங்களை ஏன் வழங்குவதில்லை? வெளிநாடுகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை ஏன் இந்திய அரசுகள் வழங்குவதில்லை? இவையெல்லாம் நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று.
தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட ரோசன் லால் உயிர் பிழைக்கவே உணவு தேடி வீட்டிற்கு வருகிறார்.காவல்துறை அவரது கைகளை உடைத்து , மிதிப்பது எந்தவகையில் நியாயமானது.மருத்துவ உதவிகள் வழங்க மறுப்பது எத்தகைய நியாயம்.
உயர் அதிகாரிகளுக்கும் தலைவர்களுக்கும் வழங்கப்படும் அணிவகுப்பு மரியாதையை தூய்மைப் பணியாளர்களை சிறப்பிக்க வழங்குவது ஒரு புறம் இருக்கட்டும். எத்தனை தற்காலிக தூய்மைப் பணியாளர்களை இந்திய அரசு நிரந்தரம் செய்து இருக்கின்றது?. எத்தனை தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் முறையாக செல்கிறது? மாற்று சமூக பணியாளர்கள் எத்தனை பேர் தூய்மை பணியாளராக இருந்து கொண்டு தங்களது வேலைகளை பிற தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு செய்து வருகின்றனர்?
தூய்மைப் பணியாளர்களை திட்டுவதற்கும், அடிப்பதற்கும் வெகுஜன மக்களுக்கு அதிகாரம் எங்கிருந்து வருகிறது. இந்திய சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் கடந்த பிறகும் அறுபதுகளை கடந்த வயதானவர் சக மனிதனை எப்படி வரைமுறைகள் ஏதுமின்றி, தயவு தாட்சண்யமின்றி, சிறிதளவு கூட கண்ணியமின்றி, கொஞ்சமும் அன்பில்லாமல், மனிதநேயம் இல்லாமல் பேச முடிகிறது. ஊர் என்பது அனைவருக்கும் பொதுவானது தானே. உலகம் முழுவதும் ஒருவரிடமிருந்து பொருளீட்டுதல் பிறிதொருவர் செய்வதுதானே. ஆதரவற்ற மனிதர்களுக்கு , மேல்மட்ட தொடர்புகள் இல்லாத எளிய மனிதர்களுக்கு யார் துணைக்கு வருவார்கள். மனிதர்களுக்கான வாய்ப்புகளை, ஊதியங்களை முழுமையாக வழங்காமல் சுரண்டி கொழுத்தவர்கள் தானே சாதி-வர்க்க முரண்களை உருவாக்குகிறார்கள்.
பொது சமூகத்தில் மனிதன் தனது உழைப்பில் முழுமையாக ஈடுபட்டு அதற்குரிய ஊதியத்தை முறையாக பெறுகின்றபோது அவனது தலைமுறையினை அடுத்த நிலைக்கு உயர்த்தும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. அங்கே வர்க்க வேறுபாடுகள் சிதைந்து விடுகின்றன. வர்க்க வேறுபாடுகள் சிதைக்கப்படாத இடங்களில் சாதிய வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. தலித்துக்கள் எத்தனை பாடுபட்டு வர்க்க வேறுபாடுகளை சிதைத்தாலும், அவர்களது சாதிய வேறுபாடுகள் சிதையாமல் சமூக கட்டமைப்புகளால் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன.
கொரோனா நோய் தொற்று பரவலின் கடுமையான காலம், ஊரடங்கு, வேலை இழப்பு, ஊதியமில்லை, பசி , உயிர்வாழ்வதில் நிலவும் நிச்சயமற்ற தன்மை போன்றவை இருக்கின்ற போதும் மனிதர்களால் எவ்வாறு சாதியை சார்ந்து நிற்க முடிகிறது. கொரோனாவைவிட மிகவும் கொடியது இந்தப் பிரிவினைகள்.
தீண்டாமை ஒரு பாவச் செயல் இல்லையா?