2. இருண்ட காலத்தின் குறிப்புகள்

கடந்த பிப்ரவரி 5ஆம்தேதி நிழ்ந்த தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து பிறகு பெரும் விவாதமாக மாறி நீதிமன்றக் கதவுகளும் தட்டப்பட்டது. வழக்கம்போல வடமொழி ஆதரவுக் கும்பல் சமஸ்கிருதம் தேவபாஷை என்கிற பல்லவியைப் பாட தமிழ்ப் பொதுச்சமூகம் முகம் சுளித்தது. தனது எஜமான பார்ப்பன விசுவாசமா? தமிழ்ச் சமூகத்தின் நல்லெண்ணமா? என்கிற இடியாப்பச் சிக்கலில் சிக்கிய தமிழக அரசு இரு மொழிகளிலும் குடமுழுக்கை நடத்துவதாக ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல்செய்ய அதை ஏற்ற உயர்நீதிமன்றம் இது தொடர்பான மனுக்களை முடித்து வைத்தது.

இதில் குடமுழுக்கு சடங்குகளில் எந்தளவிற்குத் தமிழுக்கு இடமளிக்கப்பட்டது என்பது குறித்த மாறுபட்ட கருத்துகள் வந்தன என்றாலும் தமிழிலேயே குடமுழுக்கு நடந்தது போன்ற தோற்றத்தைத் தரவேண்டிய அழுத்தம் தமிழக அரசிற்கு இருந்ததை உணர முடிந்தது. இதையொட்டி ஆகமங்கள் என்பவை தமிழுக்கே உரியவை என்றும் குடமுழுக்கு என்கிற சடங்கே நீர்மைய சடங்கு. இது அக்னியை மையமாகக்கொண்ட வடமொழி வழிபாட்டிற்குத் தொடர்பற்றது என தமிழ் இறையியல் தரப்பினரின் வாதங்கள் இந்த விவாதத்தை கூர்மைப்படுத்தின. தமிழகத்தின் பொதுப் புத்தியில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த விவாதம் தமிழை முழுமையான வழிபாட்டு மொழியாக நிலைநிறுத்தும் முன்னெடுப்புகளில் சற்று உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும் தருமபுரம் மற்றும் குன்றக்குடி ஆதீனகர்த்தர்கள் பெருவுடையார் திருமேனிக்கு நீர் வார்த்து வழிபாடு செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உற்சாகமாகப் பகிரப்பட்டன. வைதீக பண்பாட்டு மேலாதிக்கத்தைத் துணைக்கழைத்து வர முற்படும் இந்துத்துவ அரசியலுக்கு அணைபோட தமிழ் வழிபாட்டை மையப்படுத்தும் அவைதீக பண்பாட்டு அடையாளங்களைத் துணைகொள்வது அவசியமானது. தமிழ் இறையியல் அதற்கு வலுசேர்க்கும் கருவி.

இந்தச் சாதகமான சூழலில் புதிய தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்ந பரமாச்சாரியார் கடந்த 7ஆம் தேதி ஒரு பர்னிச்சரை உடைத்தார்.

1953இல் மனிதர்கள் பல்லக்கில் சுமந்துவர பவனிவரும் பட்டினப்பிரவேசம் எனும் சடங்கை நவீன கால மனிதநேய விழுமியங்களுக்கு முரணானது என்று குன்றக்குடி ஆதீனம் தெய்வசிகாமணி அருணாச்சல தேசிக பரமாச்சாரியார் தவிர்த்ததைப் பின்பற்றி இந்தமுறை பெரும்பாலான ஆதீனங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.

இதைத்தான் மீண்டும் அரங்கேற்றி சரச்சைக்குள்ளானார் தருமபுர ஆதீனம். ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்கிற தமிழ் மெய்காண் மரபின் சாரத்திற்கு விரோதமான இந்தக் கைவிடப்பட்ட நடைமுறையை மீண்டும் துவங்குவது சமூகநீதி மற்றும் வர்ணாசிரமத்திற்கு எதிரான சமநோக்கு பார்வையை முன்வைக்கும் தமிழ் இறையியல் ஆதரவாளர்களுக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியது. ஜனநாயக விழுமியங்களுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு பரந்த நோக்கிலான தமிழ்ச் சமூகத்தின் பயணத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் முன்னோடிகளாகச் செயல்பட்ட குன்றக்குடி அடிகளார், பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் போன்றோரின் சீரிய முன்னைடுப்புகள் தமிழ் இறையியலையும் சமூகநீதி கருத்தியலையும் இணைத்துப் பயணிக்கும் பாதையை சமைத்தவை.

இன்று தனது பகாசுர கரங்களை விரித்துவரும் வைதீக இந்துத்துவ அரசியலுக்கெதிராக நாம் சாண் ஏற தருமபுர ஆதீனம் முழம் சறுக்க செய்திருக்கிறார்.

நமது இலக்கு மட்டுமல்ல பாதையும் கடினமானதுதான். நமது ஒவ்வொரு அடியும் கவனத்துடன் முன்வைக்கப்பட வேண்டும். நாம் செய்யும் ஈறு போன்ற தவறை பேனாகவும் பெருமாளாகவும் உருப்பெருக்கும் பிரச்சார எந்திரம் எதிரிகளுடையது என்பதை எப்போதும் நினைவில்கொள்ள வேண்டும்.

 

முந்தைய தொடர்கள்:

1. சிறப்பு வேளாண் மண்டலம் எனும் நாடகம் – https://bit.ly/2TZVRzg

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தூய்மைப்பணியாளர்கள் மீதான போலி நன்றியுணர்வு-இரா.முருகானந்தம்
  2. ஊரடங்கு நெருக்கடியும், உலகளாவிய நெருக்கடியும்- இரா.முருகானந்தம்
  3. அரசியல் நோயும்! நோயின் அரசியலும்! - இரா.முருகானந்தம்
  4. நிலை மாறும் உலகம் - இரா.முருகானந்தம்
  5. ஜனநாயகன் பிரேமச்சந்திரன் - இரா.முருகானந்தம்
  6. காதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்
  7. சிறப்பு வேளாண் மண்டலம் எனும் நாடகம் - இரா.முருகானந்தம்