ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சென்னையில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விநியோகத்தைத் துவங்கியது. சென்னையில் ஏத்தர் 450 விநியோகம் சமீபத்தில் துவங்கி அதற்குள் 100 வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் 450 என்ற பெயரிலான முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டுமே முதல்கட்டமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

வாகன விநியோகம் மட்டுமின்றி சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களைக் கட்டமைப்பதிலும் ஏத்தர் எனர்ஜி தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.

சென்னை முழுக்க ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களைக் கட்டமைக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சாய் கிங்ஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதன்மூலம் நகர் முழுக்க இயங்கி வரும் 30 விற்பனை மையங்களில் சார்ஜிங் மையங்களைக் கட்டமைக்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போரூர் மற்றும் ஈக்காட்டுதாங்கலில் உள்ள சாய் கிங்ஸ் விற்பனையகங்களில் ஏத்தர் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் கட்டமைக்கப்பட்டுவிட்டது. இத்துடன் நீலாங்கரையிலுள்ள ஈஸ்ட் கோஸ்ட் அட் மெட்ராஸ் ஸ்கொயர் ரெஸ்டாரண்ட், அமைந்தகரையிலுள்ள அம்பா ஸ்கைவாக் மால், சவுத் போக் சாலையிலுள்ள நேச்சுரல்ஸ் சலூன், துரைப்பாக்கத்திலுள்ள கிரியேட்ஸ் ரிசார்ட், நுங்கம்பாக்கத்திலுள்ள ஏத்தர் ஸ்பேஸ் ஆகிய இடங்களில் ஏத்தர் க்ரிட் சார்ஜ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் அதிவேகம் மணிக்கு 80 கிலோமீட்டர் எனவும்.3.9 நொடியில் 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன் விலை 1,22,000 இருக்குமென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான வரவேற்பு எப்படியிருக்குமென வருங்காலங்களில் தான் தெரியும்.