ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) இன் ஒரு பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்களில் ஃபேஸ்புக் நிறுவனம்  ரூ .43,574 கோடியை ஆர்ஐஎல் உடைய 9.99% பங்குகளுக்காக முதலீடு செய்வதாக 23.04.2020 அன்று அறிவித்தது.

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஷூக்கர்பெர்க், வலைப்பூ செய்தி ஒன்றில் இந்த ஒப்பந்தம் இந்தியா நாட்டின் மீது ஃபேஸ்புக் நிறுவனத்தின் அர்ப்பணிப்பினை எடுத்துக் காட்டுகிறது என்றார். ’இது இப்போது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் சிறு வணிகங்கள் ஒவ்வொன்றும் ஒரு நாட்டுடைய பொருளாதாரத்தின் முக்கியமான மையம். அவர்களுக்கு எங்கள் ஆதரவும் தேவை’ என்றும் ஷூக்கர்பெர்க் கூறினார். ’இந்தியாவில் 60 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்கள் உள்ளன. மேலும் பல மில்லியன் கணக்கான மக்கள் அவர்களை வேலைக்காக நம்பியுள்ளனர். உலகப் பொருளாதாரம் மீண்டும் இயங்குவதில் ஃபேஸ்புக் முக்கிய பங்கு வகிக்கும்’ என்றார்.

ஃபேஸ்புக் நிறுவனம் 2004 ஆம் ஆண்டு ஷூக்கர்பெர்க் உள்ளிட்ட சிலரால் கேம்பிரிட்ஜ், மாசாசூசெட்ஸ்  என்னுமிடத்தில் துவக்கப்பட்டது.  அன்றுமுதல் சமூக வலைதள பக்கங்களின் ஜாம்பவனாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.கூகுள் நிறுவனத்தின் ஆர்குட் சமூக வலையமைப்புக்கு மூடுவிழா நடத்தியதில் ஃபேஸ்புக் முக்கிய பங்கு வகுக்கிறது. 2019 ஆம் ஆண்டின்படி நிறுவனத்தின் வருவாய் $70.697 பில்லியன். சொத்து மதிப்புகள் $133.376 பில்லியன். உலகம் முழுவதும் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எண்ணிக்கை 44,942. அந்த நிறுவனம் துவக்கப்பட்ட காலத்திலிருந்து  இன்றுவரை தொடர்ச்சியாக   இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட பல நிறுவனங்களை கையகப்படுத்தியிருக்கிறது.உலக அளவில் 2498மில்லியன் ஃபேஸ்புக் பயனாளிகள் கணக்கு இருக்கின்றது. கணினி, மொபைல் மற்றும் இணையம் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேவை வழங்கும் மைக்ரோசாப்ட், அமேசான், ஆப்பிள், கூகுள் வரிசையில் இருக்கும் ஐந்து நிறுவனங்களில் ஃபேஸ்புக் நிறுவனமும் ஒன்று.

உலகம் முழுவதும் மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 7.78 பில்லியன். இந்தியாவின் மக்கள்தொகை 1.38 பில்லியன். உலகம் முழுவதும் சமூக வலைதள பயனாளிகள் எண்ணிக்கை 2.95 பில்லியன். அதுவே இந்தியாவில்  326.1 மில்லியன். உலகம் முழுவதும் ஃபேஸ்புக் பயனாளிகள் எண்ணிக்கை 2498 மில்லியன். அதுவேஇந்தியாவில்  280 மில்லியன். உலகளவில்  ஃபேஸ்புக் பயன்பாட்டில் முதலிடத்தில் இந்தியா இருக்கிறது. அடுத்த படியாக தான் அமெரிக்கா இருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரதான வருவாய் விளம்பரங்கள் வழியாகவே பெறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் வழியாக 7 மில்லியன் விளம்பரதாரர்கள் தங்கள் நிறுவனங்களுக்காக விளம்பரங்களைச் செய்கின்றனர். ஒரு ஃபேஸ்புக் பயனாளி கணக்கு  மூலமாக வருடத்திற்கு $29.25 வருவாய் வருகிறது. அதுவே இந்தியாவை உள்ளடக்கிய ஆசிய கண்டப் பரப்புகளில் வருவாய் வருடத்திற்கு $3.57  அளவிலிருக்கிறது.

உலகம் முழுவதும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை 4.13பில்லியன். இந்தியாவில் 560 மில்லியன் இணைய பயனர்கள் இருக்கின்றனர்.  மொபைல் வழியாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மட்டும் 629.2மில்லியன்.  ரிலையன்ஸ் ஜியோ 388 மில்லியன் பயனாளிகள் இணைப்புகளை வைத்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய வணிகராக இருக்கும் முகேஷ் அம்பானி உடைய நிறுவனம். அரசின் பேரன்புக்கு பாத்திரமானவர்கள். அதனுடைய 2019 ஆம் ஆண்டு வருவாய் மதிப்பு ₹346.3 பில்லியன். அப்போது அதன் மொத்த  கடன் மதிப்பு ₹ 1479.4 பில்லியன். இந்தியாவில் மொபைல் சேவைகளில் மிகத் தாமதமாகவே ஜியோ காலடி வைத்தது. 2016 ஆம் ஆண்டு தான் மொபைல் உலகிற்கு வந்தது. ஆனால் இன்று இந்தியாவின், உலகின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க் ஜியோ நிறுவனம் தான் என்பதில் ஆச்சரியமானது எதுவுமில்லை. ஜியோவுடன் ஃபேஸ்புக் கைக் கோர்த்ததிலும் மிகப் பெரிய ஆச்சரியமில்லை. ஆனால் அந்த அறிவிப்பு கொரோனா பாதிப்பு காலங்களில் வெளிவருவது மிகவும் வியப்பை ஏற்படுத்துகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் ஆரம்ப காலம் தொட்டு பல்வேறு சச்சரவுகளுக்கு பெயர்பெற்ற நிறுவனம். நிறுவனம் தொடங்கியதே சச்சரவுகளுடன் தான் எனலாம். பிறகு நீதிமன்றம் வழக்குகள் என்று முடிவுக்கு வந்தன.  2018 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற  நிறுவனத்துக்கு ஃபேஸ்புக் பயனர்கள் தகவல் கொடுக்கப்பட்டன என்ற தகவல்கள் வெளிவந்து பரபரப்பை கிளப்பியது. அதே போன்று ஜியோ பயனர்களின் தகவல்களும் வெளிவந்து பரபரப்பு உருவாகியது. இந்த இரண்டு ஜாம்பவான்களும் இனிமேல் களத்தில் ஒரே அணியாக விளையாடுவார்கள் என்பது மிகப்பெரிய  வலிமை. ஆனால் பயனர்கள்/மக்கள் தான் உண்மையில் பாதிப்படைவார்கள்.

பயனர்களின் தனியுரிமை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதில் அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், நட்பு வட்டம், விருப்புகள், வெறுப்புகள், அரசியல் சார்புகள் எல்லாமே இருக்கும். ஆனால் இந்த தகவல்கள் அரசின் பேராதரவுடன் செயல்படும் ஒரு நிறுவனத்துடன்  இணைந்து செயல்படும் பிறிதொரு நிறுவனத்தால் சேமிக்கப்படுகிறது என்பது மிகவும் அச்சமூட்டுகிறது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையில்  562455 இந்திய ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்கள் பரிமாற்றம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி அரசால் கண்காணிக்கப்படும் பயனர்களின் தகவல்களை தருவதில் ஃபேஸ்புக் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. அவ்வாறு தகவல்களைப் பெறுவதில் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா (22684) இருக்கிறது. ஃபேஸ்புக் பயனர்கள் எண்ணிக்கையில் இந்தியாவும் அமெரிக்காவும் முதல் இரண்டு இடங்களில் இருக்கக்கூடிய நாடுகள்.

கண்காணிப்பில் இருப்பவர்கள் அனைவருமே குற்றவாளிகளாக இருக்கின்றபட்சத்தில் ஐயத்திற்கு இடமில்லை. அவ்வாறு இல்லையெனும்போது பயனர்களின் தனியுரிமை மீறப்படுவது அரசின், நிறுவனங்களின் தார்மீக நெறிகளை ஆய்வுக்கு உட்படுத்தும்.

மொபைல் வழியாக மட்டுமே சமூக வலைதளங்களை இணையத்தைப் பயன்படுத்துபவர்கள்  78%. கணினி வழியாக மட்டுமே சமூக வலைதளங்களை இணையத்தைப் பயன்படுத்துபவர்கள்  20%.  சமூக வலைத்தள நிறுவனமாக ஃபேஸ்புக் செயல்படும். ஜியோ மொபைல் வழியாக இணையத்தை வழங்கக்கூடியதாக இருக்கும். பெரும்பாலும் இனிமேல் இணையப் பயன்பாடுகளுக்கு ஜியோவும் ஃபேஸ்புக்கும் கண்டிப்பாக ஒன்றையொன்று சார்ந்தே தான் செயல்படும். ஜியோ இல்லாமல் ஃபேஸ்புக் இருக்காது. ஃபேஸ்புக் இல்லாமல் ஜியோ இருக்காது. ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றை  தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதுபோலவே ஜியோ நிறுவனம் ஏறக்குறைய முழுமையாக மொபைல் டேட்டாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சமூக வலைதளங்களில்  பரவிக் கிடக்கும் பயனர்கள் முழுமையாக இந்த இரண்டு ஜாம்பவான்களின் அடிமைகளாகவே இருக்கமுடியும்.

ஃபேஸ்புக் பக்கத்தில் நுழைவதற்கு ஒரு பயனர் பெயரும், ஒரு கடவுச் சொல்லும் தேவை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே.  ஒரு கணினி/மடிக்கணினி யில் இணையத்தின் வழியாக சமூக வலைதள ஃபேஸ்புக் பக்கத்தில்  நுழையும் போது குரோம் உள்ளிட்ட  சில பிரவுசர்களை பயன்படுத்துவோம்.  ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து   வெளியேறியதும்  லாக் அவுட் செய்துவிட்டு பிரவுசரை மூடிவிடுவோம்.கணினி/மடிக்கணினி யில் ஃபேஸ்புக் ஆப் பயன்படுத்தமாட்டோம்.ஆனால் அதுவே மொபைலில்  ஃபேஸ்புக் ஆப் தான்  பெரும்பாலும் பயன்படுத்தப்படும்.பிரவுசர் வழியாக ஃபேஸ்புக்கில் நுழைவது அரிதாகவே இருக்கும். மொபைலில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டால்  அல்லது மொபைல் மெதுவாக செயல்பட்டால் தேவையற்ற ஆப்களை நீக்கிவிடுவோம்.

மொபைல் ஃபோன்கள் தயாரிக்கும்பொழுதே இந்த மாதிரியான ஆப்கள் நிறுவப்படும். இதற்கு புளொட்வேர்/கிரெப்வேர் என்று பெயர்.ஆனால் சாம்சங் உள்ளிட்ட சில மொபைல் ஃபோன்களில் ஃபேஸ்புக் ஆப்பை நீக்க முடியாது.  அதற்கு பதிலாக ஃபேஸ்புக் ஆப்பை டிஸேபிள் செய்து கொள்ளலாம். டிஸேபிள் செய்தாலும் இதுமாதிரியான ஆப்கள் இடத்தை அடைத்துக் கொள்ளும்.

ஃபேஸ்புக் பயனர் பெயர்/கடவுச் சொல் இரண்டும் ஃபேஸ்புக்கில் நுழைவதற்கு பயன்படும். அதுமட்டுமின்றி சில இணைய தளங்களில் நுழைவதற்கும் ஃபேஸ்புக் பயனர் பெயர்/கடவுச் சொல் பயன்படுத்தலாம். நாம் அந்த இணைய தளத்திற்குள் நுழைந்த தகவல்கள் ஃபேஸ்புக் சர்வரில் சேமிக்கப்படும். அதனால் தான் ஏதேனும் பொருட்களை நாம் இணையத்தில் தேடியிருந்தால் அந்த பொருட்கள் குறித்த மேலதிக தகவல்களை பிறிதொரு காலத்தில் ஃபேஸ்புக் பக்கம் நமக்கு பரிந்துரை செய்யும்.  ஏனெனில் அந்த இணையதளத்தில் நுழையும்போது நீங்கள் உங்களுடைய ஃபேஸ்புக் பயனர் பெயர்/கடவுச் சொல் வழியாக அனுமதி வழங்கிவிடுகிறீர்கள்.

ஃபேஸ்புக் மொபைல் ஆப் பயன்படுத்தும் போது இது முற்றிலும் வேறுவிதமாக செயல்படுகிறது. உங்களுடைய மொபைலில் ஃபேஸ்புக் ஆப் நிறுவப்பட்டிருக்கிறது என வைத்துக் கொள்வோம். நீங்கள் ஃபேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். தற்போது வேறுசில ஆப்களை உங்களுடைய மொபைலில் நிறுவுகிறீர்கள். அந்த ஆப் உங்களிடம் அடிப்படை அனுமதியைத் தவிர வேறு எந்த அனுமதியும் பெறவில்லை. உங்களுக்கு வேறெந்த தகவல்களும்  அந்த ஆப் தரவில்லை. நீங்கள்  புதிதாக நிறுவிய ஆப்கள் குறித்த தகவல்கள் உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கிற்கு  அனுப்பப்படுகிறது. கூகுள் ஆப் தவிர்த்து ஏனைய  பிற ஆப்  தகவல்களை ஃபேஸ்புக் கணக்கில் பார்க்கமுடிகிறது.  ஃபேஸ்புக் கணக்கில்

Off-Facebook Activity தெரிந்துகொள்ள கீழ்க்கண்டவாறு செய்த பிறகு.

Login to Facebook

Go to Settings & Privacy > Settings

Go to Your Facebook Information

Press Off-Facebook Activity

கண்டதெல்லாம்  மொபைலில்  பிரவுஸ் செய்த சில இணையதளங்கள் மற்றும்  நிறுவிய சில ஆப்கள்.பேரதிர்ச்சியுடன் சில சோதனைகளை செய்து பார்த்தபொழுது ஃபேஸ்புக்கின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரிய வகையில் தான் இருந்தது.

ஃபேஸ்புக்கில் நாம் செய்கின்ற ஒவ்வொரு கிளிக்/பிரஸ் சேகரிக்கப்படுவது நமக்கு தெரிந்ததுதான் என்றாலும் ஃபேஸ்புக்கிற்கு வெளியே அதனுடைய பயனர் பெயர்/கடவுச்சொல் இன்றி மொபைலில் செய்கின்ற பிரவுசிங் உள்ளிட்ட அனைத்தும் சேமிக்கப்படுவது அச்சமூட்டுகிறது. ஒரு ஆப் நிறுவனம்  அதனை நிறுவிய மொபைல் பயனரின் அனுமதியின்றி அவரது தகவல்களை எப்படி பிறிதொரு நிறுவனத்திற்கு வழங்கலாம் என்பது நீதிமன்றங்களில் தீர்வு செய்யப்படவேண்டிய ஒன்றல்லவா?

ஒரு சில்லறையாக மளிகைப் பொருட்களை விற்கின்ற கடைக்காரர் ஒருவர் கண்டிப்பாக தனது வாடிக்கையாளரின் விவரங்களை எக்காரணம் கொண்டும் இன்னொரு மளிகை கடைக்காரருக்கு வழங்கமாட்டார். அதற்காக பெரிய அளவில்  பணம்/ பொருள் பரிமாற்றங்கள் இருந்தாலொழிய தகவல்களை தரமாட்டார்கள். ஆனால் ஒரு ஆப் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை மிகப்பெரிய நிறுவனம் ஒன்றுக்கு நட்புரீதியாக மட்டுமே வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

ஃபேஸ்புக் போன்ற பெரு நிறுவனங்கள் இந்த தகவல்களை எந்தவிதமான பயன்பாடுமின்றி, பொழுது போக்கிற்காக சேகரிப்பதில்லை. அதுபோலவே அந்த நிறுவனங்கள் பெறுகின்ற சேகரிக்கின்ற தகவல்கள் யாவும் தேவையற்ற,  தள்ளிவிடக்கூடிய, பயனற்ற  தகவல்கள் இல்லை. அந்த தகவல்களின் முக்கியத்துவத்தை ஃபேஸ்புக்கும், ஜியோவும் அரசும் நன்றாக தெரிந்து வைத்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம். இந்தியா போன்ற நாடுகளில் இணையம்/ மொபைல் உபகரணங்களின் பாதுகாப்பு/தனியுரிமை குறித்து இருக்கின்ற சட்டங்கள் எந்த அளவுக்கு வலிமையானவை என்பதும் அவற்றை எப்படி செயல்பட வைப்பது என்பதும் மார்க் ஷூக்கர்பெர்க் மற்றும் முகேஷ் அம்பானி போன்றவர்களுக்கு நன்கு தெரியும்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் புதிய ஆப்களை  மொபைலில் நிறுவும் பொழுது ஒப்பந்த விதிமுறைகளில் தனியுரிமை பாதுகாப்பு குறித்து இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். அரசாங்கம் முடிந்தால் ஒப்பந்த விதிமுறைகளை ஆப்களில் தமிழில் நிறுவிடச் செய்யவேண்டும். மேலும்  மொபைலில் ஃபேஸ்புக் ஆப்களை டிஸேபிள் செய்யாமல் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட வல்லுனர்கள் நீதிமன்றங்களின் மூலமாக சில நடவடிக்கைகளை எடுக்கலாம். எதிர்வரும் காலங்களில் ஜியோ மொபைல்கள் எல்லாவற்றிலும் கண்டிப்பாக ஃபேஸ்புக் இடம்பெறும். மொபைல் ஆப்களை நிறுவும் போது கவனமாக இருக்க வேண்டும். மக்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டும்.

என்னுடைய கவலையெல்லாம் சமூக வலைதளத்திலிருந்து வெளியேறுவது குறித்து தான். நமது தனியுரிமை பாதிக்கப்படும் பொழுது வெளியேறுவதுதான் மிகச் சரியாக இருக்கும்.  ஃபேஸ்புக் பயனர் கணக்கு  மிகவும் முக்கியமானது. ஏறத்தாழ 10 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். தொலைந்து போன பால்ய கால பள்ளிக்கூட நண்பர்களை, உறவுகளை, ஊர்க்காரர்களை,  இங்குதான் கண்டுகொண்டேன். பல நண்பர்களின் பிறந்த நாட்களை ஃபேஸ்புக் தான் நினைவு படுத்தியது. கருத்து வேறுபாடுகளில் பிரிந்து போனவர்கள்/களை மிகவும் மூர்க்கமாக பதிவிட்டு அவமதிப்பு செய்ததும் ஃபேஸ்புக் நாளொன்றில் தான். மாற்றுக் கருத்தாளர்களிடமும் நட்பு பாராட்டிக் கொண்டிருப்பது ஃபேஸ்புக் பக்கங்களில் தான். மிகப் பெரிய உதவிகளை செய்துவிட்டு எந்தவிதமான எதிர்பார்ப்புகளுமின்றி அமைதியாக இருப்பவர்களையும் ஃபேஸ்புக்கில் தான் சந்திக்கிறேன்.  வாழ்க்கையை மீளுருவாக்கம் செய்யும் முயற்சிகளில் தோற்றுப்போனதும் ஃபேஸ்புக் பயனர் கணக்கில் தான். ஃபேஸ்புக் பயனர் கணக்கில் தான் வாழ்க்கையின் அர்த்தச் செறிவொன்றை கண்டுகொண்டதும். நீட் தேர்வில் தோல்வியுற்று தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் மரணமும், ரோகித் வெமூலாவின் மரணமும் ஃபேஸ்புக் பக்கங்களின் வழியாகவே அறிந்தேன். ஃபேஸ்புக் பக்கங்களில் தங்கள் மரணத்தை நேரலை செய்தவர்கள் குறித்தும் ஃபேஸ்புக் பக்கங்களில் தான் தெரிந்து கொண்டேன். கதாநாயகனாக கதாநாயகியாக வில்லனாக கோமாளியாக பலர் உருண்டு புரளுவதும், பலரை உருட்டி புரட்டுவதும் ஃபேஸ்புக் பக்கங்களில் தான். இந்த ஃபேஸ்புக் கணக்குதான் கொரோனா காலத்தின் மிகப்பெரிய ஆறுதல் பலருக்கு. ஒரு டைரியை போல பலருடைய வாழ்க்கையை உண்மையும் பொய்யுமாக ஃபேஸ்புக் பதிவு செய்து  வைத்திருக்கிறது.

ஃபேஸ்புக்கும் ஜியோவும் 60 மில்லியன் சில்லறை வணிகங்களை குறிவைத்திருப்பது தெளிவாக தெரிகிறது. அவர்களின் வழியாக நடக்க இருக்கும் வணிகம் தான் தூண்டில் இரை. மீன்களாக சிக்க இருக்கும் மக்கள் தான் பாவம்.நியோலிபரலிசத்தில் சந்தையின் மீதான கட்டுப்பாடுகள் இருக்காது என்பார்கள். ஆனால் கார்ப்பரேட்களின் சந்தை மக்களின் மீது வைக்கின்ற கட்டுப்பாடுகள் அதன் கொடூரமான முகத்தை ஒருநாள் காட்டும். மக்களும் ஒருநாள் தங்கள் முகத்தை காட்டுவார்கள். அதுவரை பலரின் முகமாக இருக்குமிந்த முகநூலின் அத்துமீறலை என்ன செய்வது?