அங்கே என்ன சத்தம் – 11

“முதன்மையாக நாம், நண்பர்களாக, தனிமையின் நண்பர்கள், நாங்கள் உங்களை அழைக்கிறோம் எதைப் பகிரவே முடியாதோ அதைப் பகிர்வதற்காக: தனிமை. நாம் முழுக்க வேறுவிதமான நண்பர்கள், அணுக முடியாத நண்பர்கள், ஒப்பிட முடியாதவர்கள், எந்தப் பொதுவான கூறுகளும் இல்லை, பரிமாற்றம், சமத்துவமும் இல்லை என்பதாலே தனிமையில் இருக்கும் நண்பர்கள். ஆகையால் அடையாளம் கண்டுகொள்ளப்படும் வட்டத்தினுள் இல்லாதவர்கள். குடும்பப் பிணைப்பு, அருகாமை, சொந்தபந்தம் இல்லாதவர்கள்”

நட்பு குறித்து இங்கு மீண்டும் பேச நேர்வதற்கு ஒரு காரணம் உண்டு – சமூகமாக்கலில் விளைவாக மனிதன் இன்று மிக அதிகமாக பிறருடன் உரையாடுகிறான், கருத்துக்களை, உணர்ச்சிகளைப் பகிர்கிறான், ஆனால் இதுவே தான் தனிமை உக்கிரம் மிக மோசமாய் வாட்டுகிற காலகட்டமாகவும் உள்ளது. அண்மையில் எனது ‘நண்பர்’ ஒருவர் தன் வாழ்வின் துயரமான ஒரு கட்டத்தில் இருந்து வந்தார்; அவர் மனம் கடும் அழுத்தத்தில் இருந்தது. வழக்கமாய் எல்லாருடனும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பவர் இப்போதெல்லாம் தனிமையை நாடுகிறார். மகக்ளை அதிகமாய்ப் பார்ப்பது தனக்கு எரிச்சலூட்டுகிறது, களைப்பூட்டுகிறது என அவர் சொன்ன போது நான் வியந்தேன் – ‘மக்களுக்காக நான், மக்களுடன் நான்’ என கொள்கை கொண்டவரா இப்படி மாறி விட்டார்?
அன்றைய அரட்டையின் முடிவில் அவர் ஒன்று சொன்னார் – இங்கு தனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், ஆனால் ஒருத்தரிடமும் மனத்தில் இருப்பதை பகிர்ந்து கொள்ள முடியாது; ஒன்று அவர்கள் தன்னைப் புரிந்து கொள்ள மாட்டார்கள், அல்லது தன் ரகசியங்களை பாதுகாப்பார்கள் எனும் நம்பிக்கை அவர்களிடத்து தனக்கு இல்லை என்றார். அவருடைய நிலை எனக்கு உண்மையில் மிகுந்த வருத்தம் அளித்தது – இது நாம் இன்று அனைவரும் கிட்டத்தட்ட எதிர்கொள்ளும் முரண் – நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள், ஆனால் யாரும் ‘நம்முடன்’ இல்லை என்பது.
நம்மிடம் மனம் திறந்து பேச நம்பகமான ஆட்கள் இல்லை என்பதாலே ஏனோ இன்று அந்த இடத்தை, நண்பர்களின் இடத்தை, உளவியல் ஆலோசகர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆலோசகர்களின் தேவை அதிகமாகி வருகிறது. கல்விக்கூடங்களில் உளவியல் படிக்கிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இந்தப் பின்னணியில் தான் நட்பு குறித்த கண்ணோட்டத்தை சற்றே மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது. முக்கியமாக தனிமையை நாம் ‘கட்டுடைத்து’ வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொள்ளத் தேவையிருக்கிறது. அதாவது நாம் இனிமேல் நட்பைப் புரிந்து கொள்ள தனிமை குறித்த நமது மயக்கங்களை கலைத்திட வேண்டும். தனிமையை அறிந்தவனே நல்ல நண்பனாக முடியும் என்கிறார் தெரிதா. ஆம், நாம் மீண்டும் தெரிதாவுக்கு வருகிறோம்; அவருடைய நோக்கு இன்றைய நட்பின் சிக்கலை விளங்கிக் கொள்ளவும் அதற்கு தீர்வு காணவும் உதவக் கூடும்.

இன்றைய தலைமுறையினர் தனிமையை ‘பௌதிகமாகத்’ தனிமையாக இருத்தல் எனப் புரிந்து கொள்கிறார்கள். மனிதன் ஒரு சமூகவிலங்கு ஆகையால் அவன் சக-மனிதர் சூழ, அவர்களின் அங்கீகாரத்துடன் இருக்கும் போதே மகிழ்ச்சியை அடைய முடியும் என நமது உளவியலாளர்கள் கூறியதை நாம் அப்படியே நம்பி விட்டோம். ஆகையால் இன்று மனிதர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாக “ஹலோ” மாறி விட்டது. “எப்படி இருக்கீங்க?” என சதா அடுத்தவரை நோக்கிக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். (அதற்கான பதில் வருமுன்னரே ஒன்று கடந்து விடுகிறோம் அல்லது நாம் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறோம்.) வேறெப்போதையும் விட இன்று சமூகமாக்கல் அதிகமாகி வருகிறது; இன்றைய மனிதன் சதா யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கிறான். ஆனால் பேசப் பேச அவன் தன் ‘தனிமையை’ மேலும் துல்லியமாக உணர்வதே நடக்கிறது. அவன் களைத்துப் போகிறான். அவன் சமூகவலைதளங்களில் தனக்கு லைக்குகள் வர வேண்டும் என ஏங்குகிறான். ஆனால் லைக்குகளின் வடிவில் அங்கீகாரம் அதிகமாக ஆக அவனது தனிமையும் அதிகமாகிறது. அப்போது அவனுக்கு இக்கேள்வி எழுகிறது – தனிமை என்றால் என்ன? அது சகபாடிகளுடன் இருப்பது, அவர்களின் கவனத்தையும் நன்மதிப்பையும் பெறுவது அல்லவா? ஒரு பேயைப் போல நம்மைப் நம்மைப் பீடித்திருக்கிற தனிமையை விரட்ட முடியாதா என்ன? முடியாது. தனிமை என்பது நாம் நினைப்பது போன்ற ஒரு சங்கதி அல்ல.

தெரிதா தனிமையை முழுக்க வேறு கோணத்தில் பார்க்கிறார் – தனிமை என்பது நாம் ‘நம்முடன்’ இருப்பது. நாம் சாகிற வரை ‘நம்முடனே’ இருந்தாக வேண்டும். வேறு வழியில்லை. நம்முடன் இருப்பதை நாம் மறப்பதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் அவை நம் காயத்தை மேலும் ஆழமாக்குமே ஒழிய குணப்படுத்தாது. இதற்கு வேறொரு தீர்வு உள்ளது. இதில் நாம் தனிமையை ஒழிக்க மாட்டோம். தனிமையைக் கொண்டாடுவோம், அதை ரசிப்போம். அதை மேலும் மேலும் ‘அழகுபடுத்துவோம்’. எப்படி?

நானும் தனிமையாக இருக்கிறேன், என் நண்பனும் தனிமையாக இருக்கிறான் (தனியாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் வேறு வேறு). நான் என் நண்பனுடன் சேர்ந்து கொண்டதும் தனிமையை இட்டு நிரப்ப முடியாது. இது எளிய கூட்டல் கணக்கு அல்ல. 1+1 = 2 என்பதைப் போல அல்ல. இது ஒரு வித்தியாசமான கணக்கு. ஒன்றை ஒன்றில் இருந்து கழித்தால் ஒன்றே வருகிற கணக்கு. உங்கள் நண்பனின் தனிமையை நீங்கள் அவன் இடத்தில் இருந்து அவனாகிக் கொண்டாட முடியும். அவன் உங்கள் தனிமையை தன் இடத்தில் நீங்களாகி இருந்தபடி ரசிக்க முடியும். அப்போது தனிமை என்பது ஒரு பேரனுபவமாக மாறி விடும்.

இது என்ன அபத்தம் எனத் தான் யோசிக்கிறீர்கள்? இல்லை, இது அபத்தம் அல்ல, இது தான் அசலான உண்மை. நண்பனுடன் அளவளாவும் போது கிடைக்கும் மனத்திளைப்பு அவனாக நீங்கள் மாற முடிவதனால் தான். ஆனால் அப்போது அவனும் நீங்களும் ஒன்றாவதில்லை என்கிறார் தெரிதா. அப்படி ஆவது மனிதனுக்கு சாத்தியமே இல்லை. இதை ஒப்பாரி வைக்கும் கலையுடன் ஒப்பிடலாம். ஒப்பாரி வைப்பதே இழப்பும் தனிமையை கூட்டாக அனுபவிக்கத் தான். நீங்கள் ஒரு இழவு வீட்டில் இருந்து அழும் போது பொங்கும் துன்பமும் அவலமும் வேறு யாரோ ஒருவருடையது. அது உங்கள் துக்கமல்ல. அது இரவல் துக்கம். இரவல் துக்கம் தனிமையைக் கொண்டாட ஒரு சிறந்த வழி. இழவு வீட்டில் உள்ளதைப் போன்ற கூட்டத்தையும் தனிமையையும் நீங்கள் வேறெங்குமே காண முடியாது. ஆனால் அங்கு தான் தனிமையும் தனிமையின்மையும் கைகோர்த்து அமைதியாக உள்ளது. அங்கு யாரும் தனிமையைக் குறித்து பதற்றம் கொண்டு உளவியல் ஆலோசகரிடம் ஓடுவதில்லை. (அங்கு நாம் தனிமையை பண்பாட்டு ரீதியாக கூட்டு அழுகையாக மாற்றிக் கொண்டுள்ளோம் எனலாம்.)

சுருக்கமாக சொல்வதானால் நட்புறவாடல் என்பது தனிமையை பகிர்வதல்ல, தனிமையை இட்டு நிரப்புவதல்ல, தனிமையை கைமாறிக் கொள்வது.

முந்தைய தொடர்கள்:

10.ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?https://bit.ly/2QqQx63

9.பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்https://bit.ly/3a2CSJT

8.அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்https://bit.ly/392trZQ

7.காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்https://bit.ly/33tiHCB

6.எனது நண்பன் எனது நண்பன் அல்லhttps://bit.ly/2xTmygJ

5.ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?https://bit.ly/2U1ZmW0

4.நிழல் நிஜமாகிறதுhttps://bit.ly/3a3P9xM

3.பாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்https://bit.ly/2QuC09r

2.தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர்https://bit.ly/2Qsg1jn

1.யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன்https://bit.ly/33AmePx

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. திரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்
 2. கிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும்? - மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை - ஆர். அபிலாஷ்
 3. ’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை - ஆர். அபிலாஷ் (பெங்களூர்)
 4. கொரோனோ பயங்கரமும் பா.ஜ.க அரசின் கார்பரேட் பயங்கரவாதமும் - ஆர். அபிலாஷ் 
 5. முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது?- ஆர். அபிலாஷ்
 6. காட்ஃபாதர் முதல் முள்ளும் மலரும் வரை: கதைக்குள் இருக்கும் கதை- ஆர். அபிலாஷ்
 7. சினிமாவில் போதனை இருக்கலாமா?- ஆர். அபிலாஷ்
 8. பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் - ஆர். அபிலாஷ்
 9. ‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்
 10. ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?- ஆர். அபிலாஷ்
 11. பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- ஆர். அபிலாஷ்
 12. அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- ஆர். அபிலாஷ்
 13. காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- ஆர். அபிலாஷ்
 14. எனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்
 15. ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?- ஆர். அபிலாஷ்
 16. நிழல் நிஜமாகிறது - ஆர்.அபிலாஷ்
 17. சத்யன் அந்திக்காடு: தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர் - ஆர். அபிலாஷ்
 18. யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன் - ஆர்.அபிலாஷ்