இருண்ட காலத்தின் குறிப்புகள்

கடந்த 22ம் தேதி ஒருநாள் மக்கள் ஊரடங்கு நடத்தவும் அன்று மாலை 5 மணிக்கு மருத்துவத்துறையினர், காவல்துறையினர் மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு கைதட்டி மணியடித்து நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுக்க நாட்டின் பொறுப்புள்ள குடிமக்கள் கையை மட்டுமல்ல,  தட்டு சேகன்டி கரண்டி தகரம் என சகலத்தையும் தட்டி பாராட்டி பொழிந்து விட்டார்கள். திடீரென இப்பட்டியலில் தங்களுக்கு இடம் கிடைத்தது பற்றி,  இந்தக் காணாத கரிசனம் பற்றி, தூய்மைப்பணியாளர்களும் வியப்புற்றிருக்கக்கூடும். எப்போதும் ராணுவவீரர்களுக்கு மட்டுமே கிடக்கும் ஸ்பெசல் மரியாதையல்லவா.?

கைதட்டி மரியாதை செய்வது தட்டுக்களும் தகரங்களும் சிதைந்துபோகுமளவிற்கு  ஒரு கூத்தடிப்பாக மாறிப்போனது. சமூகக்கூடுகைக்கு எதிரான ஊரடங்கு மாலையில் தெருவில் இறங்கி தாண்டியா ஆடுமளவிற்கு கேலிக்கூத்தானது.

இந்தியாவின் நடுத்தரவர்க்க பொதுப்புத்திக்கு  தூய்மைப்பணியாளர்களை எப்போதும் பொருட்படுத்தி கவனித்ததேயில்லை. அவர்களைக்கண்டால் ஒரு அசூசையை வெளிப்படுத்தாமல் கடந்ததுமில்லை.

இப்போதைய நோய்ப்பரவல் நெருக்கடியில் அவர்களை பாராட்டுவதும் நன்றிதெரிவிப்பதுமாக நெகிழ்ந்துபோய்க்கிடக்கிறது.

இந்தியாவில் சென்ற ஆண்டு நடந்த மலக்குழி மரணங்களில் முதலிடத்திலிருக்கிறது தமிழகம். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வந்தனா சவான் எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரவழங்கல் துறை அளித்த பதிலில் 2016 முதல் 2019 நவம்பர் வரை நிகழ்ந்த தூய்மைப்பணியாளர்களின் மரணங்கள் 282. 2019ல் மட்டும் நிகழ்ந்தவை 110. இதில் தமிழகத்தில் மட்டும் 40 ஹரியானாவில் 31 ம் குஜராத் மற்றும் டெல்லியில் தலா 30 ம் நிகழ்ந்திருக்கின்றன. கழிவுநீர்த்தொட்டிகளிலும் பாதாள சாக்கடைகளிலும் மலக்குழிகளிலும் இறங்கி இறந்துபோன போதும் அவர்கள் சமூகத்தின் நலனுக்காகத்தான் இறந்தார்கள் என நமது பொதுப்புத்தி உணர்ந்ததேயில்லை. அந்தச் செய்திகளை பொருட்படுத்தியதுமில்லை. மனசாட்சியை அசைத்ததுமில்லை.  2019 ஜனவரி 31 வரை இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில் 48,345 பேர் மனிதக்கழிவகற்றும் பணியிலுள்ளதாக அரசு கண்டறிந்துள்ளது என்றாலும் இது மிகக்குறைந்த எண்ணிக்கை. உண்மையில் இந்த எண்ணிக்கை பலமடங்கு கூடுதலாகவே இருக்கும் என்கிறார் மகசேசே விருதுபெற்ற சமூகப்பணியாளரும், ‘சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்’ நிறுவனருமான பெஜவாடா வில்சன், மனிதக்கழிவை மனிதன் அகற்றுவது குற்றம் என்று மனிதக்கழிவகற்றல் ஒழிப்பு மற்றும் அத்தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுச்சட்டம் 2013 சொல்கிறது. ஆனால் ரயில்வே உள்ளிட்ட அரசுத்துறைகள் உள்ளாட்சி அமைப்புகளே இச்சட்டத்திற்கு புறம்பாக இப்பணிகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்துகின்றன.

அப்படியே இந்தியாவின் பொதுப்புத்தியை பிரதிபலிக்கிறது இந்த நடவடிக்கைகள்.

பேரிடர் கால நெருக்கடியில் வெளிப்படும் நடுத்தரவர்க்க கருணையும் நன்றியும் அதுதீர்ந்த அடுத்தநொடி காணாமலாகிவிடும். வேலைமுடிந்ததும் விளக்கிற்குள் ஓடிவிடும் அலாவுதீனின் பூதம் போல.

இந்த நெருக்கடி ஒருநாள் தீரும். ஆனால் அப்போதும் இந்தியாவின் மலக்குழிகளும் பாதாள சாக்கடைகளும் எப்போதும் தூய்மைப்பணியாளர்களை காவுவாங்கக் காத்திருக்கும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. ஊரடங்கு நெருக்கடியும், உலகளாவிய நெருக்கடியும்- இரா.முருகானந்தம்
  2. அரசியல் நோயும்! நோயின் அரசியலும்! - இரா.முருகானந்தம்
  3. நிலை மாறும் உலகம் - இரா.முருகானந்தம்
  4. ஜனநாயகன் பிரேமச்சந்திரன் - இரா.முருகானந்தம்
  5. காதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்
  6. சாண் ஏறிய தமிழும்..! முழம் சறுக்கிய ஆதீனமும்..! - இரா.முருகானந்தம்
  7. சிறப்பு வேளாண் மண்டலம் எனும் நாடகம் - இரா.முருகானந்தம்