பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதை அறியாமல், ரூ.46000 சேமித்து வைத்திருந்த சகோதரிகள் இருவர் செய்வதறியாது உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமலூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் தங்கம்மாள் (78) மற்றும் ரங்கம்மாள்(75). இருவரது கணவரும் இறந்துவிட்டனர்.

இதனால் மகன்கள் வீட்டில் வாழ்ந்து வந்தனர்.தற்போது உடல்நிலை சரியில்லாததால், இருவரையும் மருத்துவமனைக்கு மகன்கள் அழைத்துச் சென்றனர். அப்போது மேல் சிகிச்சைக்காகப் பணம் வேண்டும் என மகன்கள் கேட்டபோது, இருவரும் பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் வீட்டில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளனர்.

ரங்கம்மாள் ரூ. 24000, தங்கம்மாள் ரூ.22000 என ரூ.46000 தந்துள்ளனர். அவை அனைத்தும் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் என்பதால், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாகச் சகோதரிகள் கூறியதாவது: எங்களுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்தது எங்களுக்குத் தெரியாது.போதிய படிப்பறிவும் இல்லை. இதனால்தான் இத்தனை நாட்கள் பத்திரமாக வைத்திருந்தோம். மகன்கள் சொல்லித்தான் இந்த நோட்டுகள் செல்லாது என்ற விவரம் தெரிந்தோம். தற்போது மருத்துவச் செலவுக்காகத்தான் இந்த தொகையை வெளியில் எடுத்தோம்.இல்லாவிட்டால் எங்களது பேரன் மற்றும் பேத்திகளுக்கு எதிர்காலத்தில் கொடுத்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தோம். தற்போது என்ன செய்வதென்று தெரிய வில்லை’ என்றனர்.இதுபோல் இந்த விபரம் தெரியாமல்  பலரும் இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் இதற்கான தீர்வை அரசு சொல்லவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.