இன்று காலை.

டம் டம் டம் டம்.டம் டம் டம் டம்.

இதனால் ஊர் மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்.. சோழ தேச வீர வேங்கை.கடாரம் கொண்ட மாமன்னர், சுந்தரரின் புதல்வர். அவர்களின் நல்லாசியுடனும். பாளைய மன்னர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.நிகழும் வருஷத்திய திரௌபதி அம்மன் கோவில் பெருவிழா மற்றும் ஊர் பள்ளிப்படை கோவில்களின் திருவிழாவினை வெகு விமர்சயாக நடத்த, ஊர் பொதுமக்கள் மற்றும்  முக்கியஸ்தார் எடுத்த முடிவின்படி.

மேச ஞாயிறு (சித்திரை) 5-லிருந்து ரிசப ஞாயிறு (வைகாசி)  15ஆம்  வரை வனக் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.

அதன் முதல் நாள் நிகழ்வாக வன எல்லை வெட்டுக் குழியில் அமைந்துள்ள பள்ளிப்படை ஆனையடியான் அய்யனார் கோவிலுக்கு இன்று அந்தி வேளையில் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால். பொதுமக்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து ஆனையடியான் அய்யனார் அருள் பெறும்படி முக்கியஸ்தர்கள் சார்பாகக்  கேட்டுக்கொள்கிறார்கள்…

அது சமயம் உள்ளூர் மக்கள் வெளியூர் சென்று இரவு தங்கவேண்டாமெனவும். காப்புக் கட்டும் அன்று வீட்டுக்குத் தூரம் உள்ள பெண்கள் ஊர் எல்லையை விட்டுச்  செல்லும் படியும் கோவில் தனாதிகாரிகள் சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்…

டம் டம் டம் டம் டம் என  வயிற்றில் கட்டிக்கொண்ட அரைசட்டி முரசொலியால் ஊர் முழுக்க வீதி வீதியாக வலம் வந்து முரசால்  ஒலிக்கப்பட்ட ஒலிக்கு எத்தனை வேகம் உண்டோ, அத்தனை வேகமாகப் பயணித்தது வன செய்தியாளன் ராமசாமி சொல்லிக்கொண்டு வந்த திருவிழா செய்தி ஊர் முழுவதும்.

அவனது பறை ஒலியோடு திருவிழா செய்தியை அறிவித்த அந்த இடத்தில் குழுமி இருந்த சிறுவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இன்பக்கூத்தாடி, இவன் பின்னாலேயே சுற்றி வந்து சந்தோஷத்தின் வெளிப்பாட்டைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
அடுத்த 40 நாட்களும் சொந்தம் பந்தம் என சுற்றம் சூழ மகிழ்ச்சிக்கடலில் திளைக்கப் போகும் நாளுக்காகச் சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்கள் வரை சந்தோசத்தின் பெருநாளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இவர்கள் மட்டுமில்லாது, இன்னும் ஒரு குடும்பமும் இந்த திருவிழாவின் மகிழ்ச்சியினால் வெகு நாட்களுக்குப் பிறகு தாங்களும் புதுத் துணி அணிந்து. வாய்க்கு ருசியாக சில நாட்கள் அரிசி சோறு சாப்பிடலாம் எனவும். கண்களுக்கு விருந்தாகப் பல கதைகளை கேட்டு விடலாம் எனவும். இரவிலும் மிளிரும் தீப்பந்த ஒளிகளை வீதியினில் காணலாம். அந்த ஒளிகளில் நாமும் நடக்கலாம் இன்னும்‌ இன்னும் பல அரச காரியங்களை காய் நகர்த்தவும். பாதுகாப்பிற்காக முனையதரையர்களும் வரக்கூடும். அப்படி அவர்கள் வரும்பட்சத்தில் நமது ரகசியம் மாமன்னருக்குத் தெரிந்திருக்க வேண்டும்‌. பொறுத்திருந்து பார்ப்போம் என இந்த திருவிழாவினை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர்.

முதல் நாள் திருவிழா அய்யனார் கோவிலிலிருந்து ஆரம்பிப்பது ஊராரின் தொன்றுதொட்ட வழக்கம். மூன்று நாட்கள் அய்யனார் கோவில் பூஜை. அதற்கு அடுத்த மூன்று நாட்கள் ஊர் எல்லையில் ஏரிக்கு அடுத்தாற்போல் கரையின்‌ இடதுபுறத்தில் வீற்றிருக்கும் பள்ளிப்படை அய்யனாரின் பரிவார தெய்வங்களில் ஒன்றான பள்ளிப்படை கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி,  நாய் உடன் ஊரை வலம் வந்து காவல் செய்வார்.

கருப்புசாமி கோவில் பூஜையும்.அதற்கு அடுத்த மூன்று நாள் வரலாற்றுப் பெருமை வாய்ந்த வந்தியத்தேவன்  என அழைக்கப்பட்ட  (குந்தவை தேவியின் கணவர்)வல்லவராயனால் புனரமைக்கப்பட்டு  ஏரிக்கு வடக்கே ஆலமரத்தோப்புக்கும் இலுப்பைத்தோப்பு குருகுலத்திற்கும் முன்னே வழிப்பாதையின் இடப்பக்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமாள் கோவில் பூஜையும். அதற்கு அடுத்த  மூன்று நாட்கள் ஊரின் நடுவில் உள்ள மாரியம்மன் கோவில் பூஜை. இறுதியாக அம்மன் கோவிலுக்கு அருகே வடக்குப்பக்கமாக குடிகொண்டுள்ள தீப்பாய்ந்த அம்மன்‌ என்றழைக்கப்படும் திரௌபதி அம்மன் பூஜை தொடர்ச்சியாக 28 நாட்கள் நடக்கும். அந்த 28 நாட்களும் ராமாயண  கதை சொல்லும்  பாரதம் எனும் இரவு நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக பாரத கலைஞர்களால் தினமும்  விடிய விடிய ராமாயணம் கதை நாடக வடிவில் வழங்கப்படும். 25ஆம் நாள் இரவில் வழுக்கு மரம் ஏறுவது 26ம் நாள் ராமன் வில்லை உடைப்பது 27ஆம் நாள் அரவான் பலி கொடுத்தல் என திருவிழாவின் இறுதி நாளுக்கு முந்தைய நாள் ஊராரின் இல்லத்தில் சுற்றம் சூழ வருகைதந்து மக்கள் வெள்ளத்தில் மிதந்து செல்லும். இறுதி நாளில் ஊர் முக்கியஸ்தர்கள் வழிகாட்டுதலின்படி காட்டிலிருந்து சேகரித்த வம்பரை, மா, வேம்பு போன்ற காய்ந்த மரக்கட்டைகளைச் சேகரித்து திரௌபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலின் வாயிலிற்கு எதிரே உள்ள மைதானத்தில்  சுமார் 25 அடி நீள 10அடி அகல 1அடி ஆழப்   பூக்குழி வெட்டப்படும். சேகரிக்கப்பட்ட  மரங்களை ஒருங்கே அடுக்கி முகடு போல அமைத்து அக்கினி குண்டம் திருவிழா நிகழ்ச்சிக்கு சில மணி நேரத்திற்கு முன்பாக அடுக்கி வைக்கப்பட்ட  மரங்களை ஆரத்தி எடுத்து கற்பூரங்களைக் கொண்டு தணல் மூட்டி எரியச் செய்வார்கள். சில மணித்துளிகளில் தீக்கனலில்  எரிந்து மரக்கட்டைகள் கனலாக மாறி  பின் விழாக் குழுவினரின் அங்கத்தினர் பச்சை மரக்கைப்பிடி கொண்டு எரிந்த கொள்ளிக்கட்டைகளைச்  சிறு சிறு துண்டுகளாக உடைத்து அந்த அக்கினி குண்டத்தில் சரிசமமாகப் பரப்புவார்கள். குண்டத்தின் முன்னும் பின்னும் அந்த பூக்குழியின் அகலத்திற்கு   ஒத்தபடி  10 அடி அகலம் 3அடி நீளம் 1 அடி ஆழம் எனச்சிறு குழிகள் அமைத்து அதில் தண்ணீரை ஊற்றி நிரப்பி வைப்பார்கள். ஏரியிலிருந்து தீர்த்தம் எடுத்துவரும் பக்தர்கள் பூக்குழியில் இறங்கப் பூசாரி அனுமதிக்கும் ஒவ்வொருவராக அந்த சிறிய குழியில் உள்ள தண்ணீரில் இறங்கி பின் அக்கினி யாத்திரை முடிக்கவேண்டும். பின்னர்  கடைசியாக  வெட்டப்பட்டுள்ள சிறு குழியில் உள்ள நீரில் பாதங்களை வைத்த பின்னரே வெளிவர வேண்டும். இதுதான் தீமிதி திருவிழாவில் சம்பிரதாய சடங்குகள்.

மே ஞாயிறு (சித்திரை) தீமிதி திருவிழாவின் முதல்நாள் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி அய்யனார் கோவில் வாசலில் பந்தல் போட்டு  சீரும் சிறப்புமாக மக்கள் குழும மாலை வேளையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அண்டம் கிடுகிடுக்க உள்ளும் புறமும் உத்வேகமெடுக்க  தீமையையும் தீயவர்களையும் அழிக்க அடவெடுத்து ஆடும் ஆனையடியான் அய்யனார் கோவில்கள் முதலாம் ஆதித்தன் காலத்தில் வெகு சிறப்பாகப் போற்றிப் புகழப்பட்டன. சோழர் காலத்தில் சமணம்,பௌத்தம், சைவம், வைணவம் எனப் பல சமயங்கள் போற்றி வளர்க்கப்பட்டன என்பதற்கு ஆதாரமாக ஆர்ப்பரித்து அமைந்துள்ளது இந்த வனப்பகுதி சைவ வைணவ சித்தாந்த சார் மரபு கோவில். கிள்ளுக்கோட்டை அருகே நண்டம்பட்டியில் பராந்தக சோழர் காலத்தைய கற்றளிக்கோவில் அய்யனார் மண்ணில் புதைந்த நிலையில் இன்றும் உள்ளதை அறியலாம்.
“உரைசேரும் என்பத்து நான்கு

நூறாயிரமாம் யோனி பேதம்

நிரைசேரப் படைத்து அவற்றின்

உயிர்க்குயிராய் ஆங்காங்கே நின்றான் கோயில்”

என்பதற்கேற்ப சோழ மண்டலத்தில் காவிரியின் வடகரையிலும், தென்கரையிலும் ஏராளமான கோயில்களை அமைத்து அதன் மூலம் இறை பக்தியையும், சைவ சமயத்தையும் தழைத்தோங்கச் செய்த பெருமையைப் பல்லவ மற்றும் சோழ மன்னர்களுக்கே உரித்தாகும். பழந்தமிழர் நீர் நிலைகளை இலஞ்சி, வாவி, நளினி, கயம், கண்மாய், ஏரி, கோட்டகம், கேணி, குளம், மலங்கன், கிடங்கு, குட்டம், வட்டம், தடாகம், மடு, ஓடை, பொய்கை, சலந்தரம் என்று அழைத்தனர். அப்போது நீர் நிலைகளை உருவாக்குவது ஒரு மன்னனின் தலையாயக் கடமையாகக் கருதப்பட்டது. இதைத்தான் சோழர் காலத்தில் சுந்தரத்தமிழில் நீர் மேலாண்மை வெகுவாக வளர்க்கப்பட்டது.

‘நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோரம்ம இவண்தட் டோரே

தள்ளாதோர் இவண்தள்ளா தோரே’

என்று புறநானூறு 18ல் பாடியுள்ளனர். அதாவது, ‘எங்கெல்லாம் நிலம் பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் கரை அமைத்து நீர் நிலைகள் உருவாக்கிய மன்னர்களே இந்த உலகில் தங்களது பெயரை நிலை நிறுத்திக்கொள்வார்கள்’ என்கிறார் குடபுலவியனார். அதேபோல 10 வயது முதல் 80 வயது வரை குடிமராமத்துப் பணி செய்வது கடமையாகக் கருதப்பட்டது. இப்படியாக நீர் நிலைகளை உருவாக்குவதும் பராமரிப்பதும் சோழர் வாழ்வோடு ஒன்றியதாக இருந்தது.
அதன் பொருட்டே ஏரியின் உள்ளே அழகான வடிவமைப்பில் அமையப்பெற்றுள்ளது இந்த கோவில்.

அய்யனார் கோவில் பூசாரி தங்கராசு வகையறா நாட்டார்.  கிழக்கு பார்த்த கோவிலின் வாசல் வந்து, வலது கையில் சூடம் ஏற்றிய பித்தளை தட்டையும்.  கிளிங் கிளிங்  என்று கடார ஒலியிசைக்கும் மணியை இடது கையில் ஆட்டிக்கொண்டு முன்னிரண்டு படிக்கட்டுகளை அடி மேல் அடி வைத்து கீழே இறங்கி கோவிலின் முன் குழுமியிருக்கும் ஊர்க்காரர்களுக்கும் கோவிலின் முன்னே உள்ள கற்றளிப்படை கோபுரத்திற்கும் கற்பூர தீப ஆராதனை காட்டி திருவிழாவின் முதல்நாள் காப்புக் கட்டுதல் நிகழ்வினை, தெய்வீக சாந்தமான எண்ணங்களோடு பின்னிப்பிணைந்து கோவில் உள்ளிருக்கும் ஆனையடியான் அய்யனாரின் முறுக்கு மீசையுடைய கர்ப்பகிரகத்திற்க்ககு பூஜை புனஸ்காரங்கள் என பன்னிரு திருமுறைகள் ஓதிய தமிழ்ப் பாடல்களைப் பாடி  வெளியே நடப்பட்ட கொடிமரத்தின் மாவிலைத் தோரணங்களும் வேப்பிலை மாலைகளோடு மாலைக்காற்றில் மந்தாரம் பாட, காப்புக் கட்டும் நிகழ்ச்சிக்கான மரத்திற்கு ஆரத்தி காட்டப்பட்டது.


அகலமான பித்தளை தட்டு நடுவில் பெரிய வெங்காயத்தின் அளவில் வெள்ளை கற்பூரம் கொழுந்துவிட்டு எரிய சூடத்திற்கு அருகில். சிறு குன்று போல ஒருபக்கம் குங்கும குன்றும். மறுபக்கம் விபூதி குன்றும். தட்டைச் சுற்றி சில அரளி, ஆவாரம் பூக்கள் சிதறிக் கிடக்க. ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஆரத்தி காட்டி விபூதி இட்டு தீபாராதனையோடுவெளியில் குழுமியிருந்த அக்கிராம பக்தர்கள் அரோகரா, அரோகரா, வேல் வேல் வெற்றிவேல் என உரக்கக் கூறி முழங்கி பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.

எங்கும் நிறைந்தவனே

எல்லாம் அறிந்தவனே

வெள்ளக்குதிர கொண்டோனே

வெளியில் நின்று காப்போனே

ராப்பகலா எமை காத்து

பள்ளிப்படை கொண்டெழுந்த

பாதகமலச் சிறந்தோனே

நாடு செழிக்க வேணும்,

நல்ல மழை பெய்ய வேணும்,
ஊரு சிறக்க வேண்டும்,

ஒற்றுமையாய் இருக்க வேண்டும்,
மும்மாரி பெய்ய வேண்டும்,

ஏரி குளம் நிரம்ப வேண்டும்.
எங்களை நீ காத்திடய்யா.

அய்யனார கருப்புசாமி.
ஈழம் வென்ற எங்க மன்னர்

சோழ தேசம் காத்திடனும்
என  அய்யனாரின் அழகை
வர்ணித்து பண்ணிசை பாடினார் நாட்டார்.

பூஜை சங்கீத சம்பாஷனைகளால் இறைவனுக்கு வேண்டுகோள் விடுத்து. இறைத் தூதராகப் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார் கோவில் பூசாரி தங்கராசு.

மேலும் சற்று உரத்த குரலில் கூடியிருந்த பக்தர்கள் பார்த்து கர்ஜனை குரலில் உரக்கப் பேசினார். என் அருமை‌ கழுகுவன மக்களே.. கடந்த  நான்கைந்து  வருடங்களாக நடைபெற்று வந்த தஞ்சாவூர்   பெரிய கோவில் திருக்குடமுழுக்கு கும்பாபிஷேகம். நாளை மறுநாள் மேச ஞாயிறு 22/04/1010 அன்று தஞ்சையில் ஆன்றோர் சான்றோர் மற்றும் சோழ மண்டல சுற்றத்தார் முன்னிலையில் வெகு விமரிசையாக நமது அரசர் செயங்கொண்டசோழன். சோழகுலசுந்தரன்.  சிங்களாந்தகன். வானவன் மாதேவி, சுந்தரச் சோழரின் அருமைப் புதல்வர்
ஸ்ரீலஸ்ரீ மாமன்னர் அருள்மொழிவர்மர் ராசேந்திரச்சோழர் தலைமையில் நடைபெற இருக்கிறது. அதேநாள்  நம் அய்யனார் கோவிலின் மூன்றாம் நாள் திருவிழாவும் நடைபெற இருப்பதால்., தஞ்சாவூர் பெரிய கோவிலின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு இலங்கையை வெற்றி கொண்ட சோழ மரபினருக்கு பொற்காலத்தைக்  கொடுத்த மாமன்னர் ஸ்ரீலஸ்ரீ அருள்மொழிவர்மன் அவர்களின் அரும் பெரும் சாதனைகளைப் போற்றும் வண்ணமாக நம் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி சதய விழாவை மேன்மேலும் போற்றி கொண்டாடுவோம். ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமை நல்கி ஒன்றுகூடி வாருங்கள்.  நம்மை இங்கே வாழ வைத்து. எந்தவொரு குறையுமில்லாது நமைக் காப்பாற்றி வரும் முற்கபுரி மகாராஜா. காஞ்சீப்புரவலன். தில்லைக்கடவுள் திருவருளால் பாவிலருந்தமிழைப் பாராட்டிச் சீராட்டி வளர்க்கும் யுவரங்கபூபதி.  ரங்கப்ப. நல்லப்ப. ஸ்ரீலஸ்ரீ வேங்கடப்ப உடையார் அவர்களின் வாழ்த்துக்களோடும். மாமன்னருக்காகத் தன்னுயிரையே துச்சமெனக் கொடுக்கத் துணிந்த முனையதரையர்களின் பக்கபலத்தோடு, மக்கள் அனைவரும் இங்கே கூடி ஆனந்தக் களிப்போடு  பள்ளிப்படை அய்யனாரைக்‌ கொண்டாடுவோம் என வந்திருந்த பக்தர்களுக்கு அன்பான அழைப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்.

இவ்வாறு கோவில் பூசாரி பேசிக்கொண்டிருக்கும் போது. கோவிலின் எதிரே நின்று கொண்டிருந்த இளைஞன் ஆழ்ந்த சிந்தனையிலும் ஆர்ப்பரிக்கும் உற்சாகத்துடனும் வந்து போகும் மக்களை உற்று நோக்கி விழிகளால் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.

மேலிருந்து கீழாக நான்கு விரல்கள் இணைத்து வைத்தால் வரக்கூடிய அளவிற்குக் குறுகிய நெற்றி.  பிரகாசமான விழிகள் மேலுள்ள புருவங்கள் இரண்டும் இடையில் பிரிவு இல்லாது நேர்க்கோடாகப் பயணித்து மூக்குக்கு மேலே சிறிதளவு பள்ளங்களை உண்டு பண்ணி முழு முடியோடு காட்சி தரும் கருமையான புருவங்கள். உச்சந்தலை பாதம் முதல் உச்சி வெயில் பட்டதனால் செம்மையான தேகம் கூட கருமை படர்ந்து வெயில் அடித்து வெந்துபோன. எதையும் தாங்கும் செம்மரம் போல. தேக்கு மர  ஆஜானுபாகுவான தேகம். வலிமை படைத்த அரசனின் நெஞ்சமுடையவனாக வீறுகொண்டவன் பெயர். ரெங்கமஞ்ச ஆதித்தன்.

இருபது வயதிருக்கும். பெயருக்கு ஏற்றார் போல கட்டுமஸ்து தேகம். ஆறடி உயரம். அரும்பு விடும் மீசை. வலுவான தேக ஒருங்கிணைப்பு கொண்டவனாகவும், நெடுந்தூரப்பயணம் செய்யக்கூடிய போர்ப்படை வீரன் போல தோற்றமும். கடும் சூழல்களைச் சந்திக்கக்கூடிய சாதூர்யமும், அதிக வலிமை கொண்டவனாகவும், ஓடும் பாம்பையும் மிதிக்கும் வயதில் உள்ள இள ரத்தத்தோடு கம்பீரமான குரலும் பார்ப்பவர் சிறிது பயம் கொள்ளும் பார்வை கொண்டவனாக வந்து செல்வோரை வரைமுறைப்படுத்தி தன் இமைகளால் அளவெடுத்துக் கொண்டிருக்க.

தங்கராசு  பூசாரி அய்யனார் கோவிலில் தீபாராதனையை அங்குக் குழுமி இருப்பவர்களுக்குத்  தாம்பாளத் தட்டில் காட்டி ஆரத்தி அபிஷேகத்தோடு அன்றைய தின சிறப்புப் பூஜைகளை நடத்தி கிழக்கு நோக்கி கையை உயர்த்தி இரு விரல்களை உயர்த்தி மேலும் கீழும் ஆட்ட.

கோவிலின் வாசலுக்கு மேற்கே ஏரியின் கரையில் அமர்ந்திருந்த ரெங்கமஞ்சன் மற்றும் அவனின் சிறு குழுவினர். அந்த பூசாரியின் சம்பாஷனைகளை உள்வாங்கி துரிதமாக எழுந்து கையில் வைத்திருந்த தனது ஆயுதங்களை உடனடியாக கழுத்தில் மாட்டி,   சோழர் வாழ்வோடு இணைந்திருந்த முப்பது வகையான தோற்கருவிகளான  குடமுழம், சிறுபறை, ஆமந்தரிகை, அரைசட்டி, தம்பட்டம்,  நாளிகைப்பறை, யாழ், தடாரி, சங்கு, வீணை போன்ற மங்கலக்கருவிகளை இசைத்தனர்.

 

மேன்மேலும் டண்டனக்கா, டண்டனக்கா, டனக்குனக்கா, டனக்குனக்கா. டம் டம் டம் என தங்கள்  குடமுழாவை பேரொளியாக ஒலிக்கச் செய்தனர்.  குடமுழா. இது யாழோடும், குழலோடும் இணைந்து ஒலித்து பக்திப் பரவசமூட்டி முக்திப்பெறச்செய்யும் முற்கால பண்ணிசை வாத்தியங்களாகும்.

குழல் வழி நின்றது யாழே –  யாழ்வழித்

தண்ணுமை நின்றது தகவே – தண்ணுமைப்

பின்வழி நின்றது முழவே, முழவொடு

கூடிநின்றிசைந்த தாமந்திரிகை….” என பண்ணிசையின் பெருமையை மதுரைக் காஞ்சி புறநானூற்றில் விளக்குகிறார் சிலப்பதிகார நாயகன் இளங்கோவடிகள்.

அய்யனார் சாமி தானே

ஆட்சி செய்யும் சாமி தானே

பள்ளிப்படை சாமி தானே

புரவிக்கொண்ட சாமி தானே

வண்ணான்,
வினைஞன்,
செம்மான்,
குயவன்,
கொத்தன்,
கொல்லன்,
கன்னான்,
தட்டான்,
தச்சன்,
கற்றச்சன்,
செக்கான்,
கைக்கோளன்,
பூக்காரன்,
கிணையன்,
பாணன்,
கூத்தன்,
வள்ளுவன்,
மருத்துவன்
என பதினெண் தொழிலாளரும்,

உழவனுக்குப் பக்கத்துணையாயிருந்து

தூது நல்கி வந்திடுவாய்.

நீடுலகீர் போய்வருவோம்.

மாமதுரத் தமிழாலே

மன்னவனே வணங்குகிறோம்.

எங்க பூஜை ஏத்துக்கணும்.

எங்களை நீ காத்திட வேண்டும்.

டன்டனக்கா டன்டனக்கா.  டனக்குனக்கா டனக்குனக்கா. டன்டன்டன். என‌ குழுமியிருந்தோர் காதுகளில் ஒலியும், இறையும், பதியும் அளவிற்குக் குடமுழா முழங்கத்    திருவிழாவின் மங்கள நாதஸ்வரமாக  அய்யனார் கோவில் தீப ஆராதனை பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.

பூஜைக்கு வந்த உள்ளூர் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த அபிஷேகப் பொருட்களான மந்தாரை மலர்கள். ஆவாரம் பூக்கள், செம்பருத்திப் பூக்களை அய்யனாருக்குப் புஷ்ப அபிஷேகத்தினை புரிந்து அவல், இடித்த கம்பின் மாவிளக்கினை பெற்றுக் கொண்டு தத்தம் இல்லங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

வாசலுக்கு வெளியே நின்றிருந்த ரெங்கமஞ்ச ஆதித்தன் குழுவினரின் சிறு கூட்டத்தினர், பூஜை முடிந்து கலைந்து செல்லும் மக்களைக்  கண்கொட்டாமல் பார்த்து.  அவர்கள் செல்ல ஏதுவாக ஒதுங்கி நின்று, கரைக்கு அருகில் காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்கி தீமூட்டி தங்கள் தோல் இசைக்கருவிகளைச் சூடாக்கிக் கொண்டிருந்தனர்.

சின்னத்தம்பி. வைத்தி.  தலையாரி.  என தன் உடன்பிறப்புக்கள் சகிதமோடு அன்றைய தினம் பூஜையில் கிடைத்த சோளக்கம்பு மாவிளக்கு உருண்டைகளை வாங்கி தின்று கொண்டு  அரைச்சட்டி பறையைச் சூடாக்கிக் கொண்டு ஊர் பற்றிய சகவாசமாகச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

அந்தி மலர்ந்த கதிரவன் காலையில் காட்டாத வர்ண ஜாலங்களை  அஸ்தமன அந்தியில் மேற்கு பக்கம் கீழ் வானத்தில் மறையலாமா வேண்டாமா என்ற மந்திரத்தோடு மெதுவாக நகர்ந்து நகர்ந்து கீழிறங்கிச் சென்றுகொண்டிருந்தது…..

-தொடரும்…