அத்திவரதர் தரிசனத்தை நீடிக்கக்கோரி தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுவது வழக்கம். இதைதொடர்ந்து, 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அத்திரவரதரை தரிசனம் செய்ய முடியும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆதலால், லட்சக்கணக்கான பக்தர்கள் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று கடைசி நாள் என்பதால் காலை 11.30 வரை 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், மேலும் 2 லட்சம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். விஐபி தரிசனம் நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டது. கடந்த 46 நாட்களில் ஒரு கோடியே 4 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி அத்திவரதர் 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பக்தர்களுக்குக் காட்சி தருவார். அதன்படி நாளை மாலை அல்லது இரவு அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண்டபத்தில் அத்திவரதர் வைக்கப்பட உள்ளார். அதன் பிறகு 2059ஆம் ஆண்டுதான் மீண்டும் அத்திவரதரை காண முடியும். நாளை அதிகாலை சிறப்புப் பூஜைகள் செய்து அத்திவரதரை குளத்துக்கு எடுத்துச்செல்வதற்கான பூர்வாங்க பூஜைகள், ஆகமவிதிப்படி நடைபெறும் என்றும், இதில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அத்திவரதர் தரிசன நாட்களை மேலும் 48 நாட்கள் நீட்டிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 16) விசாரணைக்கு வந்தது.

அப்போது, எந்தவித ஆகம விதிகளும் இல்லாததால் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதைதொடர்ந்து, அரசு தரப்பில் மத வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என வாதிடப்பட்டது. அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், அத்திவரதர் வைபத்தை மேலும் நீட்டிக்கக் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.