ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக தயாரிக்கப்படும் பொருளுக்கோ அல்லது தனித்துவமாக விலையும் பொருளுக்கோ மத்திய அரசு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்குவது வழக்கம். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாகவும் இது பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ஈரோடு மஞ்சள் உற்பத்தியாளர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்க்கோரி  விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதில் சங்க காலத்திலிருந்தே மஞ்சள் பயிரிடும் பழக்கம் தமிழகத்தில் இருந்து வருவதாகவும், மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் ஈரோடு மாவட்டத்தில் பெருவாரியாக விளைவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த விண்ணப்பத்தை ஏற்ற புவிசார் குறியீடு பதிவுத்துறை ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கி, ஈரோடு மஞ்சள் உற்பத்தியாளர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினரிடம் அதற்கான சான்றிதழை வழங்கியது. ஏற்கனவே மகாரஷ்ட்ராவின் வைகான் மஞ்சள், ஒடிசாவின் கந்தமால் மஞ்சள் போன்றவைக்கு புவிசார் குறியீடு வழங்கிய நிலையில் தற்போது ஈரோடு மஞ்சளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஈரோடு மஞ்சளைப்ப்போலவே பத்தமடைப் பாய், காஞ்சிபுரப் பட்டு உள்ளிட்ட 28 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.