எந்திரன் கதைத் திருட்டு வழக்கில், இயக்குநர் ஷங்கர் கதையைத் திருடினார் என்ற புகாருக்கு முகாந்திரம் உள்ளது என்று மதுரை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்திருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில் ஏகப்பட்ட பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு 2010-ல் வெளியான படம்தான் எந்திரன். இது உலக அளவில் வசூலில் சாதனை படைத்த திரைப்படமாகும்.

இந்தப் படம், நக்கீரன் குழும வெளியீடான ‘இனிய உதயதம்’ இதழில் 96 ஏப்ரலில், தான் எழுதிய ‘ஜூகிபா’ என்ற ரோபாட் தொடர்பான கதையைத் திருடி எடுக்கப்பட்ட படம் என்று மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

கடந்த 9 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த கிரிமினல் வழக்கிற்கு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கியது. தடைக்கான கெடுக்காலம் முடிவடைந்ததும், எந்திரன் கதை திருட்டுக் கதையல்ல. தமிழ்நாடனின் கதைக்கும் எந்திரன் படக்கதைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அதனால் வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று இயக்குநர் தரப்பும் தயாரிப்பாளர் தரப்பும் வாதாடியது. இந்நிலையில் மதுரை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புகழேந்தி 6ஆம் தேதி அதிரடித் தீர்ப்பை அறிவித்தார். அதில், எந்திரன் திரைப்படம் எடுப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடனால் எழுதப்பட்ட ஜூகிபா கதைக்கும், எந்திரன் திரைப்படத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. எனவே ஷங்கர் மீதான கதைத் திருட்டுப் புகாருக்கு முகாந்திரம் இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடப்படிருக்கிறது. கூடவே தயாரிப்பாளராக மட்டுமே இருந்த கலாநிதி மாறனை இந்த வழக்கில் சேர்த்தது செல்லாது என்றும் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

பிரபலமான காபிரைட் வழக்கான எந்திரன் வழக்கில், கதாசிரியருக்கு சாதகமாகக் கிடைத்திருக்கும் இந்தத் தீர்ப்பு, திரைப்புள்ளிகளிடம் கதையைப் பறிகொடுத்த எழுத்தாளர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும், இந்தக் கதைத்திருட்டு வழக்கு 9 வருடமாக நடந்தும், ஒரு நாள்கூட இயக்குனர் ஷங்கர் இதுவரை நீதிமன்றத்தில் ஏன் ஆஜராகவில்லை என்பது கேள்விக்குறி?