டந்த வியாழனன்று ரீபப்ளிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லைவ் லா’ எனும் நிகழ்ச்சியில் கேரள மக்களை அவமானப்படுத்தியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், பத்திரிகையாளர் மற்றும் ரீபப்ளிக் தொலைக்காட்சியின் தலைவர் ஆர்னாப் கோஸ்வாமியை நேரில் ஆஜராகுமாறு கேரளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் சசி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதில் வெள்ள நிவாரணத்திற்காகக் கேரளாவுக்கு உதவி வழங்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தின் வாய்ப்பை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்ததா என்பது குறித்துக் கடந்த ஆண்டு விவாதம் நடைபெற்றபோது, கேரள மாநில மக்கள் “வெட்கமில்லாதவர்கள்” என்று ஆர்னாப் கோஸ்வாமி அழைத்தார். எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஜூன் 20 ம் தேதிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கண்ணூர் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“இந்த மாநில (கேரளா) மக்கள் வெட்கமில்லாதவர்கள், இந்தியாவில் நான் இதுவரை பார்த்திராத மிகவும் வெட்கங்கெட்ட குணாதிசயம் இது, அவர்கள் பொய்யை ஒரு மதம்போல பரப்பி வருகிறார்கள். இதற்காக அவர்கள் பணம் ஏதும் பெறுகிறார்களா? தங்கள் சொந்த நாட்டை துஷ்பிரயோகம் செய்வதால் அவர்களுக்கு அதிகமாகப் பணம் கிடைக்கிறதா? அவர்கள் ஏதேனும் ஒரு குழுவின் பகுதியாக இருக்கிறார்களா? யார் அவர்களுக்கு நிதியுதவி செய்வது? இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது இது இந்தியாவைக் கீழ்த்தரமாகக் காட்டுவதற்கான ஒரு சதியாகும்.” எனக் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மாத்ருபூமியில் விவாதம் நடைபெற்றபோது, கோஸ்வாமி இவ்வாறு மேற்கோள் காட்டியுள்ளார்.

நியூஸ்லாண்டிரி பத்திரிக்கை இதே மாதத்தில் கேரள மக்களை கோஸ்வாமி அவதூறாகப் பேசும் வீடியோ ஒன்றைப் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பாஜகவுக்கு ஆதரவான பேச்சும் இருக்கிறதாகத் தெரிவிக்கிறது.

“இதற்காக கோஸ்வாமி கேரள மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பும் முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் நன்கொடையும் வழங்கவேண்டும்” என்று இவ்வழக்கை தொடுத்த சசி கூறியுள்ளார்.

ஜனநாயகத்தில் ஒரு பத்திரிக்கையாளருக்கு அதீத பொறுப்புள்ளது. மக்களிடையே உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பெரும் பணியில் இருப்பவர். ஆனால் ஆர்னாப் கோஸ்வாமி போன்று அரைவேக்காடு பத்திரிக்கையாளர்கள் தேவையற்ற சர்ச்சைகள் மூலம்தான் மட்டுமே வெளிச்சத்திற்கு வரவேண்டும் என விரும்புகின்றனர்.