நெஞ்சின் ஆழத்தில் இடையறாத தேம்புதல்களை உருவாக்கும் துயரங்கள் கவிந்த நாட்களில் விழித்தெழும் காலைப் பொழுதுகளின் வெளிச்சமும் பறவைக் குரல்களும் எங்கோ வெகுதூரத் திற்கு விலகிச் சென்றுவிடுகின்றன. பனித்த கண்களின் நீர்த் திரையிட்ட காட்சிகள் நிரம்பிய நாட்கள். நீத்தார் கடன்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. ஒருபோதும் திருப்பிக் கொடுக்க இயலாத நினைவின் கடன்கள். அன்பின் கடன்கள். என் அம்மாவின் மரணத்திற்குப் பிந்தைய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. என் தங்கையுடனும் இரண்டு சகோதரர்களுடனும் தினமும் மணிக்கணக்கில் கேரம் விளையாடிக்கொண்டிருப்பேன். நாங்கள் அம்மாவைப் பற்றிய பேச்சுக்கள் தப்பித் தவறி வந்துவிடாமல் கவனமாகத் தவிர்ப்போம். அது ஒரு வலி நிறைந்த ரகசிய விளையாட்டு. நம்மை மனம் உடையச் செய்யும் ஒரே ஒரு அறையை மட்டும் திறந்துவிடாமல் விளையாடும் கண்ணாமூச்சி. ஆனால் அந்த அறையின் கதவுகள் தனது மர்மத்தின் வசீகரத்துடன் எங்கள் கனவுகளில் அசைந்துகொண்டேதான் இருந்தது.

சுஜாதா சாரின் இந்த மரணத்திற்குப் பிந்தைய நாட்களில் நாங்கள் அதைப்பற்றி பேசாதிருக்கவே விரும்புகிறோம். பேசக்கூடிய மரணம் அல்ல அது. நினைவுகூறக்கூடியதுமல்ல. அவருக்கு எழுதப்படும் ஒவ்வொரு அஞ்சலிக் குறிப்பும் மனோரீதியான அதிர்ச்சியைத் திரும்பத் திரும்பக் கொடுக்கிறது. என் வாழ்நாளெல்லாம் உண்மைகளிலிருந்து, கசப்பான உண்மைகளிலிருந்து தப்பி ஓடுபவனாகவே இருந்திருக்கிறேன். இந்த உண்மையிலிருந்தும் நான் தப்பிச் செல்லவே விரும்புகிறேன். அவருடன் சண்டை போட்டுக்கொண்டு பேசாமல் இருப்பதுபோல் இருந்துவிடலாம். அவர் இனி இல்லை என்ற உண்மையைத் திரும்பத் திரும்ப நிறுவுவதும் அதற்கான வார்த்தைக் கூட்டங்களை உருவாக்குவதும் மனம் கசங்கச் செய்கிறது.

அந்த மரணத்தை நிறுவும் பணியை எங்காவது நிறுத்த வேண்டும்போல் இருக்கிறது. என் வீட்டில் அத்தகைய ஒரு மரணம் நிகழ்ந்தால் வீட்டைவிட்டு ஓடிப் போய்விடலாம். ஆனால் ஒரு மொழியை விட்டு ஒரு கலாச்சார நீரோட்டத்தைவிட்டு எப்படி விலகிச் செல்வது? கடந்த 15 ஆண்டுகளில் நான் செய்த வேலைகள் அனைத்திலும் அவரது நிழல் படிந்திருக்கிறது. ஒரு எழுத்தாளனின் மரணத்தை நிறுவும் சக எழுத்தாளனின், பத்திரிகையாளனின் பணி அல்ல இது. இது முற்றிலும் வேறொரு மரணம். பேச முடியாத மரணம். பெயரிட முடியாத மரணம்.

‘சார்… நான் உங்கள் புத்தகங்களைப் படித்துக்கொண்டு, உங்கள் இருப்பின் குதூகலத்தோடு இருந்துவிட்டுப் போகிறேன். உங்கள் மரணம் தொடர்பான ஏற்பாடுகளிலிருந்து என்னை விடுவியுங்கள்’ என்று சுஜாதா சாரிடம் மானசீகமாகக் கெஞ்சினேன்.

ஆனால் இந்த மரணம் ஒரு கனத்த இருள் போர்வையென எங்கள் மேல் விழுந்துவிட்டது. சுஜாதா மறைந்த கணத்தில் இருந்து அந்தப் போர்வையின் அடர்த்தியால் அவரோடு சம்பந்தப்பட்ட எல்லோருமே சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டோம். என்ன செய்வது இந்த மரணத்தை? நாங்கள் அதை நிறுவும் பணியை ஆரம்பித்தோம். சுஜாதா சார் தகனம் செய்யப்பட்ட பிப்ரவரி 29ஆம் தேதி பார்த்திபன், கனிமொழி, இயக்குனர் வசந்த், தமிழச்சி ஆகியோருடன் நானும் சேர்ந்து சுஜாதா சாருக்கு ஒரு அஞ்சலிக் கூட்டம் நடத்த விரும்பினோம். பார்த்திபன் அவருக்கே உரிய இயல்போடு அதை உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்பினார். பிப்ரவரி இரண்டாம் தேதி அந்த ஞாயிற்றுக் கிழமையே நடத்த ஏற்பாடு செய்தோம். இரண்டே நாளில் சென்னையில் ஒரு அரங்கைப் பதிவுசெய்து அந்தக் கூட்டம் பற்றிய தகவலை எப்படிக் கொண்டுசேர்ப்பது? பல அரங்குகளுக்கு முயற்சி செய்தோம். கடைசியில் கனிமொழியின் வேண்டுகோளுக்கு இணங்க நல்லி குப்புசாமி செட்டியார், நாரதகான சபாவை ஏற்பாடு செய்தார். பிப்ரவரி 29ஆம்தேதி மாலை போஸ்டர் மற்றும் அழைப்பிதழ்கள் வடிவமைத்தேன். அரங்கிற்காக பார்த்திபனின் குழுவினர் சுஜாதாவின் படங்களைத் தயார்செய்யும் பணியில் தீவிரமாக இறங்கினர்.

அன்று இரவே போஸ்டர்களும் அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டன. மறுநாள் சனிக்கிழமை மதியம் ஏ.நடராஜன் அவர்களிடம் அழைப்பிதழ்களின் ஒரு பகுதியைக் கொடுத்து ஞாயிறு மதியம் கிடைக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டேன். அதற்கான ஒரு விசேஷமான ஏற்பாட்டை அவர் செய்ததுடன் அச்சிட்டுக் கொடுத்த போஸ்டர்களையும் அன்று இரவே நகரம் முழுக்க ஒட்டவும் ஏற்பாடு செய்தார். நடராஜன் சுஜாதாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தார். அழைப்பிதழின் இன்னொரு பகுதியை அன்றிரவே விநியோகிக்கும் பொறுப்பை கமல்ஹாசனின் செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன் ஏற்றுக்கொண்டார். நண்பர் மனோஜ் சனிக்கிழமை மாலை தமிழ் முரசில் அடுத்த நாள் நடை பெறவிருக்கும் அஞ்சலிக் கூட்டம் பற்றிய ஒரு விரிவான செய்தியை வெளியிட்டார். இரா.முருகனிடமும் ஹரன் பிரசன்னாவிடமும் இந்தக் கூட்டம் பற்றிய செய்தியினை குழுமங்களிலும் வலைப் பதிவுகளிலும் உடனே இடம்பெறச் செய்யுங்கள் என்று வேண்டினேன்.

அவர்கள் அந்தப் பணியை செவ்வனே செய்தனர். நண்பன் வா. மணிகண்டன் இந்தக் கூட்டம் பற்றி நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் அனுப்பினான். எஸ்.எம்.எஸ். செய்திகள் அனுப்பப் பட்டு அவை forward செய்யப்பட்டன. ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மிகக் குறைந்த கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்படும் ஒரு கூட்டத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்கள் எண்ணிக்கை குறித்து பதட்டத்தில் இருந்தோம். சுஜாதா என்ற ஒரு பெயர் மட்டுமே நம்பிக்கைக்கு உரியதாக இருந்தது.

மூன்றரை மணிக்கு நான் நாரதகான சபாவில் நுழைந்தபோது 1500 இருக்கைகள் கொண்ட அந்த அரங்கு கிட்டத்தட்ட நிறைந்து வழிந்தது. அன்பும் பதட்டமும் நெகிழ்ச்சியும் துயரமும் நிறைந்த அந்த மாலையில் ஒவ்வொரு முகமும் தங்கள் கனவுகளை அரை நூற்றாண்டுக் காலம் நிறைத்த கலைஞனின் நினைவுகளால் ததும்பின. எந்த ஒரு தமிழ் எழுத்தாளனுக்கும் இதுவரை கூடியிராத பெரும் திரள் அது. அந்த துக்கத்தின், அந்த நினைவுகளின் பௌதீக வடிவம் தடுமாறச் செய்வதாக இருந்தது. சுஜாதா சாரின் அட்டைப் படத்துடன் வெளிவந்திருந்த உயிர்மை இதழ் அப்போதுதான் கைக்குக் கிடைத்தது.

அந்த முகப்பு வாசகம் ‘நம் காலத்து நாயகன்’ என்பதை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். அந்தக் கூட்டம் அதை உறுதி செய்தது. விழா மேடைக்குப் பின்னே பேச்சுக்களை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த என்னிடம் பார்த்திபன் ‘அஞ்சலிக் கூட்டத்தின் மரபிற்கு ஏற்ப யாரும் கைதட்ட வேண்டாம் என்று அறிவிக்கலாமா’ என்று கேட்டார். ‘தனது வாழ்நாள் முழுக்க கொண்டாட்டங்களை உருவாக்கிய கலைஞனுக்கு அது நாம் செய்யும் துரோகமாகிவிடும். அது சுஜாதா சாருக்கு ஏற்புடையதாக இருக்காது’ என்றேன். கூட்டத்தின் துவக்கம் முதல் சுஜாதாவின் வரிகள் மேற்கோள் காட்டப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் கரவொலிகளும் சிரிப்பலைகளும் துயரத்தின் இறுக்கத்தை சற்றே நெகிழச் செய்தன.

பார்த்திபன் அந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்து வழி நடத்தும் பணியை வெகுசிறப்பாகச் செய்தார். 1500 பேருக்கு மேல் கூடி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் என சுமார் நாற்பது பேர் உரையாற்றிய இந்த மாபெரும் அரங்கின் ஆழமான உணர்வுகளை திருமதி. சுஜாதாவும் சுஜாதாவின் இரண்டு மகன்கள் ரங்க பிரசாத் தும் கேசவபிரசாத்தும் வந்திருந்து பகிர்ந்துகொண்டனர். ஓவியர் ஸ்ரீதர் வரைந்த சுஜாதாவின் நேர்த்தியான ஓவியத்தை கமல்ஹாசனிடமிருந்து ரங்கபிரசாத்தும் கேசவபிரசாத்தும் பெற்றுக் கொண்டனர். அரங்கு முழுக்க பார்த்திபனின் குழுவினர் வடிவமைத்த சுஜாதாவின் கலை நேர்த்தி மிகுந்த படங்களும் கையெழுத்துகளும் நிறைந்திருந்தன.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான சுஜாதாவின் நேர்காணல் கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது. பார்த்திபன், கனிமொழி, வசந்த், தமிழச்சி தங்கபாண்டியன். ஏ. நடரஜன், நிகில் முருகன் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் காட்டிய இதயபூர்வமான பங்கேற்பே சுஜாதா நினைவுகள் குறித்த இந்தக் கூட்டத்தை மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாற்றியது.

கூட்டம் முடிந்து நாங்கள் வீடு திரும்பும்போது ‘சுஜாதா சார் இறந்துட்டாரா என்ன?’ என்ற அதே வினோத கேள்விதான் மிஞ்சியது. இதோ அவருக்கான இந்தச் சிறப்பிதழுக்காக அந்த அஞ்சலிக் கூட்டம் பற்றிய பதிவுகளைத் தொகுக்கும்போதும் அவரைப் பற்றி எழுத்தாளர்கள், நண்பர்களின் கட்டுரைகளை வாங்கி இந்த சிறப் பிதழில் பதிவு செய்யும்போதும் அந்தக் கேள்வி அப்படியேதான் இருக்கிறது. ஒருபோதும் நிறுவ முடியாத மரணம் அது.

உயிர்மை
ஏப்ரல் 2008