வெப்ப சலனம் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது. சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து குளிர் காற்றால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் கோடைவெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த நிலையில், பல்வேறு இடங்களில் தண்ணீர் பஞ்சமும் ஏற்பட்டிருந்தது. வெயிலின் அளவு அதிகரித்துக்கொண்டே போனதால், நீர்நிலைகள் பல இடங்களில் வறண்டு கிடக்கின்றது இந்நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இன்று பிற்பகலுக்குப் பிறகு பரவலான மழை பெய்துள்ளது. பரவலான மழை பெய்துள்ள நிலையில், வாட்டிவதைத்த வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று காலை வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த நிலையில், பிற்பகலுக்குப் பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தற்போது அனல் காற்று வீசிக்கொண்டிருந்த நிலையில், குளிர் காற்று வீசுவதால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் போன்ற வடக்கு உள் தமிழக மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், திம்பம், ஆசனூர், தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்துள்ளது. இதேபோன்று, திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை, திருவூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழையும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பரவலாக மழை பொழிந்துள்ளது.