தமிழ்நாட்டில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல்  5 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் எனத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் சுமார் 490 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 43 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்திலிருந்து வருடத்திற்கு ஒருமுறை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதம் கூடுதலாகக் கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 43 சுங்கச்சாவடிகளில் 20 சுங்கச்சாவடிகளுக்கு மட்டும் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கவரிக்கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மொத்தவிலை குறியீட்டின் அடிப்படையில் இந்த விலை மாற்றியமைக்கப்பட்டதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு அருகே உள்ளே பரனூர், ஸ்ரீபெரும்புதூர், சூரப்பட்டு, ஆத்தூர், பூதக்குடி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.   இதில், சென்னையிலிருந்து பெங்களூர், சேலம், மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 6 சுங்கச்சாவடிகளும் அடங்கும்.

சுங்கக்கட்டணம் உயருவதால், தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயரும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.