பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையிலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையிலும் இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும்  திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள் சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த 13ஆம் தேதியன்று இதனை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக, கடந்த 16ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார் வழக்கறிஞர் புகழேந்தி. அதில், சிபிஐ நடத்தும் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், சிபிஐக்கு மாற்றிப் பிறப்பித்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டது, மற்ற பெண்களைப் புகார் அளிக்காமல் தடுக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமானி, நீதிபதி துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது, மிகவும் முக்கியமான இந்த வழக்கின் விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரையில் சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதுதொடர்பாக, வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு மற்றும் சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ் உள்ளிட்ட நான்கு பேரின் நீதிமன்ற காவலை வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.