மழை வேண்டி தமிழக கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

வளர்ந்து வரும் நவீன உலகில் சுற்றுப்புறச் சூழல் மாசடைந்துவருகிறது. இதன்காரணமாக காற்று மாசுபாடு, நிலம் மாசுபாடு, நிலத்தடி நீர் குறைவு போன்றவை நடைபெற்று வருகிறது. மரங்களை அதிகளவில் வளர்ப்பதால், காற்று மாசு குறையவும், மழை பொழியும் என்பது அனைவருக்கும் தெரியவந்த விஷயம்.  “மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்” என்னும் பழமொழி கூட நாம் அனைவரும் அறிந்தது.

இயற்கை வளங்களான காடுகளை, மரங்களை அழிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைந்து பருவநிலையில் மாறுப்படுகள் ஏற்படுகின்றன. பருவநிலை மாற்றத்தால், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாகங்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி. இதுதொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அவர் அனுப்பியுள்ளார். அதில், 2019 – 20ஆம் ஆண்டு ஸ்ரீவிகாரி வருடத்தில் நல்ல பருவ மழை பெய்து நாடு செழிக்க முக்கியத் திருக்கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல், அருள்மிகு நந்திப் பெருமானுக்கு நீர்த் தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல், நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் ஆனந்த பைரவி, கல்யாணி போன்ற ராகங்களை இசைத்து வழிபாடு செய்தல், சிவப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம், மகா விஷ்ணுவுக்கு சிறப்பு திருமஞ்சனம், வருண காயத்ரி மந்திர பாராயணம் உள்ளிட்ட அந்தந்த கோயில்களின் பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு யாகங்களை நடத்த வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது மண்டலத்தில் எந்தெந்த கோயில்களில் எந்த தேதியில் மழை வேண்டி யாகம் செய்யப்பட உள்ளது என்ற விவரப் பட்டியலை வரும் 2ஆம் தேதிக்குள் ஆணையர் அலுவலகத்துக்கு அனைத்து மண்டல இணை ஆணையர்களும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்து சிறப்பாக நிகழ்ச்சியை நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.