தமிழகம் முழுவதும் 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் பங்கேற்ற 3,562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த பணிக்கான முதல் நிலைத் தேர்வு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்றமும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் இணைந்து நடத்திய தேர்வில், சிவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என மொத்தம் 3,562 பேர் பங்கேற்றனர்.

முதல்நிலைத் தேர்வு மற்றும் பிரதானத் தேர்வை சேர்த்து மொத்தம் 300 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும். இதில் முதல்நிலைத் தேர்வில், பொதுப்பிரிவினருக்கு 60 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 52.5 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 45 மதிப்பெண்களும், தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (மே 1) இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் உள்பட ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், நடைபெறவுள்ள பிரதானத் தேர்வில், ஒருவர் கூட பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்குக் கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டதாலும், ஒருவர் கூட தேர்ச்சி பெறமுடியவில்லை என்று கூறப்படுகிறது.