எப்போது எந்தக் கேள்வியைக் கேட்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகளுக்கு. “முதல்வரே, 500 வாக்குறுதிகள் கொடுத்தீர்களே, நிறைவேற்றி விட்டீர்களா” என்று கேட்கிறார்கள்.

எப்போது கேட்கிறார்கள்? மக்கள் அவருக்கு அளித்த ஐந்தாண்டுகள் முடிவிலா? இல்லை, நான்காண்டுகள் முடிவிலா? அல்லது குறைந்தது மூன்றாண்டுகள் ஆயிற்றே, இன்னும் தொடங்கவில்லையே வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ற ஆதங்கத்திலா?

ஏனய்யா, பதவி ஏற்றுக்கொண்ட ஐந்து மாதத்தில், அதுவும் இந்த கொரோனா இரண்டாம் அலைக் காலத்தில் எவனய்யா 202… வாக்குறுதிகளை  நிறைவேற்ற முடியும்? (202 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பார் என்று நம்புகிறேன்).

சரி, கேள்வி கேட்கிறாரே எடப்பாடி, அவர் தான் பதவியிலிருந்த நான்காண்டுகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி முடித்தார்?

போகட்டும், அவராவது பதட்டத்தில் ஏதோ உளறுகிறார் என்று விட்டுவிடலாம். நமது பாஜக பெரியோர்கள் கூடச் சேர்ந்து கும்மியடிக்கிறார்களே, அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி.

உங்கள் தலைவர் மோடிஜீ எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் பதினைந்து லட்சம் கொடுப்பதாகச் சொல்லி எத்தனை வருஷம் ஆயிற்று? அதைக் கேட்கவே மாட்டீர்களா? அதெல்லாம் வாக்குறுதி இல்லீங்களா?

அது போகட்டும், ஸ்விஸ் பேங்க் கணக்குகளை எல்லாம் வெளிப்படுத்தி எல்லாப் பணத்தையும் இந்தியாவுக்குக் கொண்டுவருவேன் என்று சொன்னாரே, அதை நிறைவேற்றினாரா? அதற்கு பதிலாக பிஎம் கேர்ஸ் (பிஎம் என்றால் பிரைம் மினிஸ்டர்-தானே? அதுகூட இல்லையா?) என்பது தனியார் நிறுவனம், அதன் கணக்குகளைக் காட்டவே முடியாது என்று சொல்லிவிட்டாரே, இதுதான் உங்கள் வாக்குறுதி நிறைவேற்றலா? தனியார் நிறுவனம் என்றால் பிஎம் என்ற பெயர் எதற்காக? அதற்கு நான்கு ஒன்றிய அமைச்சர்கள் அறங்காவலர்களாக இருந்தார்களே, அது எதற்காக? உங்கள் அரசாங்க உள்துறைச் செயலர் அதில் நிர்வாகியாக இருந்தாரே அது எதற்காக?

சரி, அதுவும் போகட்டும்… டிமானிடைசேஷன் செய்து கருப்புப் பணத்தை எல்லாம் வெளியே கொண்டு வருகிறேன் என்றாரே செய்தாரா? ஒரு பதினைந்து நாட்கள் கொடுங்கள், இல்லாவிட்டால் தண்டியுங்கள் என்றாரே, செய்தாரா?

ஐயன்மார்களே, நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள், ஆனால் யாராவது செயல்பட்டால் எகத்தாளமாகக் கேள்வி மட்டும் கேட்பீர்கள், அப்படித்தானே?

போங்க சார், மூடிக்கொண்டு.