பலதார மணம் (polyandry) போல பல-இணை காதலுறவு (polyamory) என ஒன்று உள்ளது. Cuffing Lounge என ஒரு கிளப்பில் இன்று அதைப் பற்றி நிறைய கறுப்பின ஆண்கள், சில கறுப்பின மற்றும் வெள்ளையின பெண்கள் சேர்ந்து புலம்பிக் கொண்டிருந்தனர். பெண்கள் அநேகமாய் அதை எதிர்த்தார்கள். ஆண்களில் கணிசமானோர் வெளிப்படையாக அதை ஆதரித்தார்கள். ஆண்கள் சொன்ன காரணம் பல பேரிடம் காதல் வருவது அல்லது குறைந்த பட்சம் ஒன்றுக்கு மேலானோரிடம் காதல் கொள்வது மனித இயல்பு. இன்றுள்ள ஒருதார முறையில் அப்படி ஒரு திருமணம் மீறிய உறவு தோன்றும் போது அதை மறைத்து வைக்க வேண்டி உள்ளது; அது அவமானமாக நெருக்கடியாக இருக்கிறது என்பதே. திருமண உறவை முறிக்கலாம் என்றால் அதற்கு விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது, சான்றுகள் சமர்ப்பித்து வழக்கு நடத்துவது என நரகமாகி விடுகிறது; வேறு வழியில்லாமல் இரட்டை முகத்துடன் வாழ வேண்டி இருக்கிறது என தம்மையே சபித்துக் கொண்டனர். இவர்கள் தமது தாத்தா, தந்தை ஆகியோர் எப்படி இரண்டு மனைவியருடன் நிறைய குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருந்தார்கள் என்று ஏக்கப்பெருமூச்சு விட்டன. இதை எதிர்த்த பெண்டிர் விவிலியத்தில் இது ஏற்கப்படவில்லை, கடவுள் முதலில் ஒரு ஆணை படைத்தவுடன் அவனுக்குத் துணையாக ஒரு பெண்ணை படைத்தாரே அன்றி இரண்டு மூன்று பெண்களை அல்ல என அபத்தமாக பரலோகப் பிதாவை எல்லாம் பஞ்சாயத்துக்கு இழுத்தார்கள்.

இந்த அரட்டையை கவனித்த போது  ஒன்று புரிந்தது: ஆண்கள் பல-இணை காதல் உறவை இன்பத்தை பெருக்கும் ஒரு வழியாக காண்கிறார்கள். அதிலுள்ள சுதந்திரமும் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. பெண்கள் இதை வெளிப்படையாக பேச விரும்பவில்லையா அல்லது அவர்கள் திருமண உறவை தம் பாதுகாப்புக்காக ஆதரிக்கிறார்களா எனத் தெரியவில்லை. அவர்கள் தமக்கு சமூகத்தில் உள்ள மதிப்பு, கற்பு, சம்பிரதாயம், மதம் எனும் வட்டத்துக்குள் நின்றபடி இதைப் பார்ப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். ஆண்களும் அப்படித்தான், ஆனால் கற்பு சார்ந்த நெருக்கடிகள் தமக்கில்லை என்பதால் ஒரே நேரத்தில் பல துணைகள் என்பது திறந்து கிடக்கும் மிட்டாய்க்கடை போல இருக்கும் என கற்பனை செய்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் யாருமே ஒரு பெண்ணின் தரப்பில் இருந்து பல-இணை காதல் உறவைப் பார்க்கவில்லை. ஒரு ஆண் தன் காதலிக்கு பல காதலர்கள் இருப்பதை, தன் வீட்டில் அவளுடன் பல ஆண்கள் வசிப்பதை விரும்புவானா? தன் காதலி தனக்கு அளிக்கும் நேரத்தை அவள் பலருடன் பகிர்ந்து கொள்வதை ஒப்புக்கொள்வானா? சந்தேகமே. ஆண்களின் இந்த “சுதந்திர தாகத்துக்குப்” பின்னால் ஒரு பாசாங்கு உள்ளது. அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள அவர்கள் தயாரில்லை.

 எது எப்படியோ, என் பார்வை என்ன?

 திருமணம் எனும் சட்டகத்தைக் கடந்து பல-இணை உறவு என்பது ஒரு அற்புதமான சாத்தியம் என சிலருக்குத் தோன்றலாம். ஆனால் எத்தனை இணையர் இருந்தாலும் அதனால் இன்பம் பல்கிப் பெருகாது என நினைக்கிறேன். பொறாமையும் மீயுடைமை உணர்வும் (possessiveness) உடல் சார்ந்த ஆண் பெண் உறவில் இருந்தே ஆகும். ஆக, சமூகப் பண்பாட்டு கட்டமைப்புகள் தோதாக இருக்கும் போது மட்டுமே சுதந்திரமான பாலுறவு, பல-இணைகளைக் கொண்ட காதல் சாத்தியமாகும். அப்படியான சமூகங்கள் நம் பழங்குடியினர் இடையே இருந்ததாக, அதுவே ஆதி ஆண்-பெண் உறவுத் தோற்றம் என ஏங்ல்ஸ் தனது “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இன்று அது சாத்தியமாகாது. மாறாக பலதார மணத்தையே இந்த ஆண்கள் மறைமுகமாக பல-இணை உறவின் பெயரில் விழைகிறார்கள் என நினைக்கிறேன்.

அடுத்து, நிறைய பேரிடத்து மனம் இச்சை கொள்வது இயல்பே. நம் உடல் அவ்வாறே படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது குறைவான மக்கள் ஒரு பகுதியில் வாழ்ந்த வனாந்திர சூழலில் ஒரு சிறிய இனக்குழுக்குள் ஒரு ஆண் தேர்வு செய்யக்கூடிய பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் சிக்கல் இராது (இதை நீங்கள் ஒரு தெருவில் அல்லது ஒன்றிரண்டு தெருக்கள் இணைந்த பகுதியில் வாழும் நாய்கள் இடையே உள்ள உறவைக் கொண்ட கணிக்கலாம். எந்த நாயும் ஆயிரம் ரெண்டாயிரம் விடுங்க நூறு இருநூறு இணைகளைக் கொண்டிருப்பதில்லை.) தொழில்நுட்ப, பயண வசதிகள் அதிகமாகிய உலகமே ஒரு கிராமமாக சுருங்கிய இன்றைய உலகில் மனிதனை இது முடிவற்ற தேடலுக்கும், தீராத நெருக்கடிக்கும் ஆளாக்கும் என நினைக்கிறேன்.

நான் காதலை உடல் வேட்கையை தணிப்பதற்கும் உறவுக்குள் அர்த்தத்தை நாடும் முயற்சியாகவுமே பார்க்கிறேன். பணம், உடல்நிலை, சமூக ஆதரவு, அதிகாரம் என பல சங்கதிகளை சார்ந்து தோன்றும் உறவு இது. ஆகையாலே இது நிரந்தரமானது அல்ல. இதை மகத்துவப்படுத்தாமல், ரொமாண்டிசைஸ் பண்ணாமல் இயல்பாக எடுத்துக் கொள்வது மன ஆரோக்கியத்துக்கு நல்லது என இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒருவரை மிதமிஞ்சி விரும்புகிறோம், அவரைக் குறித்து அடிக்கடி நினைத்துக் கொள்கிறோம் என்றால் மிகப்பெரிய துயரத்துக்குள் அது நம்மை விரைவில் தள்ளப் போகிறது எனப் பொருள். புக்காவஸ்கி தன் நாவல்களில் சொல்வதைப் போல பெண்ணுடல் வெறும் ஒரு உடல் தான். ஆளுமையாகவும் பெண்கள் எல்லா மனிதர்களையும் போலத் தான். எந்த பிரத்யேக முக்கியத்துமும் அளிக்காமல் ஒரு பெண்ணை நடத்தும் போதே அவளுக்கு மரியாதை அளிக்கவும், சமத்துவமாக அவளை நடத்தவும் முடியும்; நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆனால் ஆண்களால் இது எப்போதும் முடிவதில்லை.

 ஆண்கள் பலவீனமாக உணரும் போதெல்லாம் ஒரு ஊன்றுகோல் போல பெண்ணை பயன்படுத்துகிறார்கள். அதற்காக காதலிக்க தொடங்குகிறார்கள். அப்போது இன்னும் பதற்றமாகி தன்னை நியாயப்படுத்த, தம் ஈகோவைக் காப்பாற்ற நிறைய பொய்களை கட்டமைக்கிறார்கள். ஒரு பெண் அவனை ஏற்கும் போது அவன் நிதானமாகிறான். தன்னம்பிக்கை பெறுகிறான். அப்போது “அட இவள் வெறும் பெண் தானே” என அவனுக்குத் தோன்றுகிறது. உடனே அவன் திருந்தினால் பிரச்சனை இல்லை. ஆனால் அதன் பிறகு தான் அவன் தனது இந்த ஏமாற்றத்தை மறைக்கும் வேலைகளில் ஈடுபடுவான். அதனால் தான் காதல் பலவீனத்தின் வெளிப்பாடாக, அநீதியின், ஏற்றத்தாழ்வின் நிகழ்த்து களமாக இருக்கிறது. அதனாலே காதலின் பெயரில் ஆண்களும் பெண்களும் எலும்புத் துண்டுக்கு அலையும் நாயாக, மிட்டாய் கொடுத்து ஏமாற்றும் குழந்தையாக பரஸ்பரம் நடத்துகிறோம். நாம் அந்த ஏற்றத்தாழ்வை, அடிமைத்தனத்தை, பொய்களைக் கூட ரொமாண்டிசைஸ் பண்ணுகிறோம். அதனாலே வலுவான ஆண்கள் காதலிப்பதில்லை என புக்காவஸ்கி சொல்கிறார். எனக்கென்னவோ சமத்துவத்தை விரும்புகிறவர்கள் காதலிக்கக் கூடாது எனத் தோன்றுகிறது. ஒரு பெண்ணை காதலிப்பதே இவ்வளவு பிரச்சனைகளைத் தரும் எனும் போது பலரை ஒரே நேரத்தில் காதலிப்பது (polyamory) நம்மை துன்பம் கடலில் ஆழ்த்தி விடும். இன்னும் சொல்லப் போனால் காதலின் போதாமையை உணரும் ஆண்களே மேலும் மேலும் பலவீனமாகி ஒரே நேரத்தில் பல உளவியல் ஊன்றுகோல்களை நாடுகிறார்கள். ஒரு பெண்ணை ஊன்றி நிற்க முடியாதவன் பல பெண்கள் மீது சாய்ந்து மட்டும் நின்று விடவா போகிறான்?