இன்று (17 ஜூன் 2021) மறு ஒளிபரப்பான யாகவா முனிவர்-சிவசங்கர் பாபா குடுமிப்பிடி சண்டையை நான் என் பதின்வயதில் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு யாகவா முனிவர் மீது ஒரு மனச்சாய்வு இருந்தது. ஏதோ சக்தி படைத்தவரோ அல்லது குழப்புகிறாரோ, ஒருவேளை சித்தரோ என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அடுத்து என் அனுபவங்களும் ஓரளவுக்கு வாசிப்பும் அதெல்லாம் இல்லை, இவரும் ஒரு பொய்யர் எனக் காட்டிக் கொடுத்தது. ஏனென்றால் எந்த ஆன்மீகவாதியும் அடிப்படையில் பொய்யரே என்பது என் திடமான நம்பிக்கை. ஆன்மாவே பொய் எனும் போது ஆன்மீகவாதி என்பது எப்படி நிஜமாக இருக்க முடியும்?

நம்முடைய தேசமெங்கும் பரவியிருக்கும் அத்வைதம் இந்த பொய்யர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் நம்மைத் தடுக்கிறது. ஒருவன் பொதுவிடத்தில் ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டால் அவன் ஒரு பொறுக்கி என அந்த இடத்திலேயே முடிவு செய்து விடுவார்கள். அவன் என்னதான் உன்னதமான சிந்தனையாளன், பெரும் பணக்காரன், தியாகி, வள்ளல் என்றாலும் மக்களுக்கு இவ்விசயத்தில் குழப்பமே வராது. ஆனால் ஆன்மீகம் என்றதும் ஒரு குழப்பம் வந்து விடுகிறது – ஆன்மீகவாதி நான் அந்த ‘நோக்கத்தில்’ தொடவில்லை, ஒரு ஆசீர்வாதமாக, என்னுடள் நான் உணரும் ஆன்ம அதிர்வை கடத்திடவே அப்படி செய்தேன் என்றால் மக்களுக்கு ஒருவேளை இது உண்மையோ எனும் குழப்பம் வந்து விடும். இந்த குழப்பத்தை தான் சிவசங்கர் பாபாக்களும், நித்யானந்தாக்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த குழப்பமே நம் மண்ணில் எண்ணற்ற சாமியார்கள் தோன்றக் காரணமாகிறது. இவர்களுக்கும் மெய்யியல் தேடலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முழுக்க வேறொரு பிரச்சனை.

சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பழங்குடிகள் இறைவனை உருவாக்கிய போது அவனை தம் முன்னோர்களாக, செடி, கொடிகள், கற்களாகக் கண்டார்கள். அந்த இறைவன் நம்முடன் திரியும் மற்றொரு மனிதன், அதே நேரம் அவனுக்கு ஏதோ ஒரு சிறப்பியல்பும் உண்டு. சாமியாடிகள் நம் பூர்வப் பண்பாடுகளில், பழங்குடிகள் மத்தியில் இப்படியே தோன்றுகிறார்கள். வரலாற்றின் ஒரு கட்டத்தில் இவர்கள் பூசாரிகள், போதகர்கள் ஆகிறார்கள், மதம் ஒரு நிறுவனமாகிறது. தெய்வம் மனிதனில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு உச்சாணிக்கொம்பில் வைக்கப்படுகிறது. மறுபிறவி, பாவம், புண்ணியம் போன்ற சிந்தனைகள் தோன்றி, நிலப்பிபுத்துவ சூழலின் ஏற்றத்தாழ்வுகளின் கொடுமைகள் மக்களுக்கு புலப்படாத படி மறைத்திட உதவுகிறது. தொழில்மயமாக்கலும், காலனிய ஆதிக்கமும், பின்னர் ஜனநாயகமும் தோன்றிய காலங்களில் மக்களிடம் பரவலாக மதத்தைக் கொண்டு போவது, மத விசுவாசிகளின், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது ஆதிக்கவாதிகளுக்கு, அதிகாரவர்க்கத்துக்கு அவசியமாகிறது.

 இந்தியாவில் அத்வைதம் இன்னொரு மாயத்தை நிகழ்த்துகிறது – தெய்வீகம், ஆன்மீகம், பிரம்மம் போன்றவை எல்லாரிடமும், எங்கும் உள்ளவையே, ஆனால் அது சாராணமானது அல்ல, அசாதாரணமானது, அதை உணர ஒரு மனநிலை, வாழ்க்கைமுறை வேண்டும் என்கிறது. இது அடிப்படையில் முரணான ஒரு பார்வை – மனிதனைப் படைத்தவன் கடவுள் என்றால், அனைத்துக்கும் அப்பாலானது பிரம்மம் என்றால், அந்த பண்புகள் ஏதுமில்லாத மனிதனுக்கு அத்தெய்வம் எப்படி தன்னை புலப்படுத்தவோ, மனித வாழ்வில் தன்னை வெளிப்படுத்தவோ முடியும்? (அத்வைதத்துக்கு எதிரான நாகார்ஜுனரின் முக்கியமான கேள்வி இது) ஆனால் இந்த முரணை தத்துவார்த்தமாக சரியாக நிறுவாமலே மக்களை நம்ப வைத்து விட்டார்கள். இதை வைத்து தான் இன்று பாபாக்களால் மிக கழிசடையானவர்களாக, அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தை பதுக்குகிறவர்களாக, பல நூறு பெண்களை, குழந்தைகளை தம் தேவைக்காக துன்புறுத்துகிறவர்களாக, மக்களின் சொத்துக்களை மிரட்டிப் பிடுங்குகிறவர்களாக இருந்தபடி தம்மை அனைத்தையும் கடந்த பிரம்மம், தெய்வப்பிறவி எனக் கூறி ஏமாற்ற முடிகிறது. “ஆம் நான் ஒரு பெண்ணை என் படுக்கைக்கு வற்புறுத்தி கொண்டு சென்றேன், அது ஏன் என்றால் நான் அவளுக்கு கிருஷ்ணனின் அவதாரத்தைக் காட்டிக் கொடுத்தேன்” என்று சிவசங்கர் பாபா கூறுவது எனக்கும் உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கலாம், ஆனால் பக்தர்களுக்கு அது உண்மையென்றே தோன்றும். ஏனென்றால் அத்வைதத்தின் அடிப்படையே பணம் சேர்ப்பது, வன்முறையில் ஈடுபடுவது, காமத்தை வெளிப்படுத்துவது போன்றவற்றை பிரம்மத்தை உணர்ந்தவன் செய்யும் போது அவை கீழ்மையாக இருக்காது என்பதே. இது ஆன்மீகவாதிகளை அனைத்து மதிப்பீடுகளுக்கும் அப்பாலானவர்களாக மாற்றி விடுகிறது. இது அவர்களை தண்டனைகளுக்கு அப்பாலானவர்களாகவும் ஆக்குகிறது.

ஒரு உதாரணத்துக்கு நீங்கள் பகவத் கீதையில் கண்ணன் தன்னை தேரோட்டியாகவும், யுத்த தந்திரங்களை வகுப்பவராகவும், பாண்டவர்களுக்கு உறவுக்காரராகவும், மந்திர வித்தை செய்கிறவராகவும், தசாவதார காட்சி அளிப்பவராகவும் இருந்ததை கவனியுங்கள். நீ யார் என கண்ணனைக் கேட்டால் “நான் புல்லும் அல்ல பூண்டும் அல்ல, கல்லும் அல்ல, மலையும் அல்ல” என ஒவ்வொன்றாக கழித்தபடி செல்வார். அர்ஜுனன் கண்ணனிடம் நான் யாரென்றால் “பார்த்தா, நீ இப்போது என்ன செய்கிறாயோ அதுவே நீ. உன் அறம் இப்போது நீ கொல்ல வேண்டும் எனச் சொன்னால் அதை நீ செய்ய வேண்டும். உன் உறவினர்கள், நண்பர்கள் இப்போது இந்த இடத்தில் உன் உறவினர்களோ, நண்பர்களோ அல்ல. அது அவர்கள் சுமக்கிற உடலெனும் கூடு மட்டுமே. மனிதன் தன் ஆன்மாவை தன் செயலில் மட்டுமே உணர்கிறான், அடையாளங்களிலோ உறவுமுறைகளிலோ அல்ல.” என அவர் ஒரு வாதத்தை கட்டமைப்பார். இதிலுள்ள முரண்: நான் “என்னை” உணர்கிற செயலில் என்னவாக இருக்கிறேன், ஆன்மாவாகத் தானே? செயலில் தோன்றி செயலில் மறைகிற ஆன்மா எப்படித் தோன்றுகிறது? இன்மையில் இருந்து “நான்” தோன்றவே முடியாது. தோன்றிய ஒன்று காணாமல் மறையவும் முடியாது. அதே போல செயலில் ஒன்று தானாக தோன்றவும் முடியாது. இது பௌத்தம் தரும் மறுப்பு. பௌத்தம் ஆன்மாவுக்கு எதிராக வைத்த மறுப்புகளை எதிர்கொள்ள இயலாமல், வைதீகவாதிகள் உருவாக்கிய குழப்பமான, உள்முரண் கொண்ட ஒரு தத்துவப் பிரதியே பகவத் கீதை. அதன் தாக்கத்தை நாம் நீண்ட காலமாக உணர்ந்து வருகிறோம்.

சிவசங்கர் பாபா ஒரு பொய்யர் என தொடர்ந்து பெரியார் தாசன் நிறுவ முயன்ற போது அவரது கேள்விகள் எவற்றுக்கும் பதிலளிக்காமல் “என்னிடம் பெரியார் தாசன் வந்து என் தரிசனத்தை உணர்ந்து கொண்டால் நான் கடவுள் என ஏற்றுக் கொள்வார்” என பதிலளித்தார் சிவசங்கர் பாபா. அதை எப்படி உணர்ந்து கொள்வது? உணரவே முடியாது. ஆனால் அப்படி கற்பனை தான் பண்ண முடியும். உணரும் வரை உங்களுக்கு ஆன்ம முதிர்ச்சி இல்லை என மறைமுகமாக உங்களை மிரட்டுவார்கள். ஒரு கட்டத்தில் நீங்கள் ஒத்துக்கொள்ளவோ அல்லது வாயை மூடிக்கொள்ளவே செய்வீர்கள். நிர்வாண ஆடை அணிந்த மன்னரின் கதை தான்.

 நான் நாளை திருட்டு வழக்கில் கைதானால் என்னை என் நண்பர்கள் கூட வந்து பார்க்க மாட்டார்கள். ஆனால் நான் ஒரு சாமியாராக இருந்து கொலை வழக்கில், பல பெண்களை பலாத்கார செய்த வழக்கில் கைதானாலும், என் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் என்னைப் பார்ப்பதற்காக திரளுவார்கள். பக்தர்களின் இந்த பயங்கர குழப்பத்துக்கு காரணம் முழுக்க முழுக்க அத்வைத சிந்தனையே.

இம்மாதிரியான சுரண்டல்கள், ஏமாற்றுகள் கிறித்துவத்தில், இஸ்லாத்தில் இல்லையா என்றால் சாராம்சவாதத்தை ஏற்கிற எல்லா மதங்களிலும் ஏமாற்று இருக்கவே செய்யும் என்பேன். கிறித்துவத்தை பொறுத்தவரையில் அதுவும் ஆன்மாவை ஏற்கிற மதம் தானே. இஸ்லாமும் அல்லா எனும் ஒரு சாராம்சமான சக்தியை முன்வைக்கிறது. அல்லாவின் கீழே அனைத்து மனிதரும் இருப்பதாக எனும் படிநிலையை உண்டுபண்ணுகிறது. புனிதமாக்கல் இதனால் தோன்றுகிறது. அதே நேரம் கிறித்துவமும், இஸ்லாமும் நிறுவனமயமான மதங்கள் என்பதால் இந்த தில்லுமுல்லுகள் ஓரளவுக்கு கட்டுப்படுத்த வாய்ப்புண்டு. தப்பு நடந்தால் அந்த நிறுவனங்கள் அதற்கு பதில் கூற வேண்டும் எனும் சூழல் உண்டு. இந்து மதம் அப்படியான கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத ஒரு திறந்த வீடு. ஆகையால் புற்றீசல் போல டுபாக்கூர் சாமியார்கள் புறப்பட்டு வந்தபடியே இருக்கிறார்கள். கூடவே சாமியார்களின் ஆசிரம சொத்துக்கு, நிதி பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாதபடி நம் சட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்விஸ் வங்கியில் வைத்திருப்பதை விட இவர்களிடம் கொடுத்து வைப்பது சுலபம் என்பதால் பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாகவும் கணக்கற்ற அரசியல் செல்வாக்கு கொண்டவராகவும் ஒரு சாமியார் சில வருடங்களிலேயே இங்கு மாற முடிகிறது.

இந்த விசயத்தில் யாகவா முனிவர் ஒரு பெட்டிக்கடை நடத்தினால், தன்னை ஒரு சாமான்ய மனிதனாக கண்டு ஒரு சித்தனாக கற்பனை பண்ணினால், பாபா ஒரு கார்ப்பரேட் கம்பனி நடத்தி தன்னை வைதீக அவதாரமாக கற்பனை பண்ணிக் கொண்டார். லாபம் சம்பாதிப்பதில் சிவசங்கர் பாபாவுக்கு கூடுதலாக பேராசையும் கனவுகளும் இருந்தன. யாகவா முனிவருக்கு ரஜினிகாந்த் போன்ற சில நட்சத்திர பக்தர்கள், ஊடகப் புகழ், கூடவே சாமான்ய மக்களின் ஆதரவு போதுமாக இருந்தது. இருவருமே ஒரே வியாபாரத்தில் இருந்ததால் பரஸ்பரம் என்னென்ன தில்லுமுல்லுகள் செய்கிறார்கள் எனும் உள்விவகாரங்களை தெரிந்து வைத்திருந்தார்கள். சன் டிவி பேட்டியில் இதையே போட்டுடைத்தார்கள். சிவசங்கர் பாபா பெண்களை பாலியல் சுரண்டல் செய்கிறார் என்பதை யாகவா முனிவர் தன் நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டதாகவே பேட்டியில் சொல்கிறார். ஆகையால் ஒருநாள் சிவசங்கர் பாபா கைதாவார் என அவர் கணித்தது ஒன்றும் பெரிய தீர்க்கதரிசனம் அல்ல. ஒரு திருடனைப் பார்த்தால் ஒருநாள் மாட்டிக்கொள்வாய் எனக் கூற ஆறாவது அறிவு எல்லாம் தேவையில்லை. யாகவா முனிவர் கொலை செய்தவர், அபின் பயன்படுத்துகிறவர், கடத்தல்காரர் என சிவசங்கர் பாபா கூறியதும் ஊரில் அப்போது இருந்த கிசுகிசுக்களே. இதில் அபின் விசயத்தில் உண்மை இருக்கலாம் – ஏனென்றால் ஆன்மீக ஆர்வலர்கள் போதை வஸ்துக்களை பயன்படுத்துவது நம் மரபிலேயே நீண்ட காலமாக இருக்கிறது. (கொலை, கடத்தல் எல்லாம் உண்மையா எனத் தெரியவில்லை.)

இது போன்ற தில்லுமுல்லுப் பேர்வழிகளை ஒழிப்பதற்கு முதல் வழி ஆன்மா என ஒன்றில்லை எனும் கருத்தை மக்களிடம் பரவலாக கொண்டு சேர்ப்பது மட்டுமே. அடுத்தது, கார்ப்பரேட் சாமியார்கள் தம் வரவு செலவுகளுக்கு அரசிடம் கணக்கு சமர்ப்பித்து, அதற்கான சான்றுகளையும் காட்டி தம்மிடம் சேரும் பணம் சட்டபூர்வமானது என நிரூபிக்கும்படி சட்டத்தை மாற்ற வேண்டும். இப்போதுள்ள ஓட்டையை வைத்து மிகப்பெரிய அளவில் கறுப்புப்பணத்தை கைமாற்றி விடும் ‘ஆன்மீக வங்கிகளாக’ இவர்கள் செயல்படுகிறார்கள். சத்ய சாயி பாபா இறக்கும் போது அவருடைய சொத்து மதிப்பு 64,000 கோடிகள். ஜக்கி வாசுதேவின் சொத்து மதிப்பு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள். நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு 10,000 கோடிகள்.  ஸ்ரீஸ்ரீயின் மதிப்பு 5 லட்சம் டாலர்கள். சிவசங்கர் பாபா ஒரு சின்ன மீனே – அவருடைய மதிப்பு   5 மில்லியன் டாலர்கள். இந்த ஆன்மீக வங்கிகள் ஒரு சில வருடங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை மிரட்டியும், பணம் கொடுத்தும் வாங்கி பிரம்மாண்டமாக கோயிலளை அமைத்து, அங்கும் வியாபாரம் பார்க்கிறார்கள். ஹெலிகாப்டர், சொந்த விமானங்கள், பிரம்மாண்டமான பங்களாக்கள் என சொகுசாக இருக்கிறார்கள். இந்த சாமியார்கள் எதை செய்தாலும் அதை ஒரு கணக்குவழக்குக்கு உட்பட்டு செய்ய வேண்டும், வெளிப்படையாக இருக்க வேண்டும், முக்கியமாக அது ‘வெள்ளைப் பணமாக’, சொந்தப் பணமாக இருக்க வேண்டும். கேட்டால் இது எங்கள் பணமல்ல, பக்தர்களின் பணம் என கைவிரித்து விடுவார்கள். யாரந்த பக்தர்கள், கணக்கு காட்டு என்றால் அமைதியாகி விடுவார்கள். நாங்கள் இந்து மதத்தை பரப்புகிறோம் (ஜக்கி) அல்லது மக்களுக்கு தொண்டு செய்கிறோம் (சிவசங்கர் பாபா) என சப்பைக்கட்டு கட்டுவார்கள். இதற்கும் முடிவு கட்ட வேண்டும்.

பின்குறிப்பு: அனைத்து மத அறக்கட்டளைகளுக்கும் பொருந்தும்படி இச்சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் இந்துமதம் மட்டும் தாக்கப்படுகிறது எனக் கூக்குரலிட்டு அதன் பின்னால் போய் ஒளிந்து கொள்வார்கள். அத்தோடு, சிறுபான்மை மத நிறுவனங்களும் தொண்டு எனும் பெயரில் வணிகத்தில் ஈடுபட்டு தம்மை அசைக்க முடியாத பொருளாதார, அரசியல் சக்திகளாக உருமாற்றிக் கொள்கிறார்கள். மக்களாட்சியில் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகிறார்கள். இது சமூகத்தை ஒரு போதும் விடுபட முடியாத சகதியில் தள்ளி விடுகிறது. மதம் என்பது மதமாக மட்டுமே இருப்பது, ஒரு மெய்யியல் விசாரணைக்கான இயக்கமாக மட்டுமே இருப்பது தான் ஆரோக்கியமானது.