பூலம்மா தென்னிந்தியாவில் தான் வசிக்கும் மலையடிவார சேரியிலிருந்து 250 படிகள் கவனமாக இறங்கி ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து அருகில் உள்ள மளிகைக் கடைக்கு  செல்ல வேண்டும்.

அவர் ஒன்பது மாத கர்ப்பிணி. மேலும் அவருக்கு உணவளிக்கவேண்டிய நான்கு குழந்தைகள் உள்ளனர், ஆனால் படிகளின் அடிவாரத்திலிருக்கும் மேலாதிக்க சாதியின் சமூகத் தலைவர்கள் பூலம்மாவை வெறுங்கையுடன் திரும்பிச் செல்லும்படி கட்டாயப்படுத்துகிறார்கள்.

மார்ச் 25 ம் தேதி கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள பூலம்மாவின் மலையடிவார கிராமத்தில் வசிக்கும் 57 குடும்பங்கள் மலையிலிருந்து     உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட கீழே இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த குடும்பங்கள் ஏனாதி சமூகத்தின் ஒரு பகுதியாகும்.  அவர்கள் முக்கியமாக கழிவுகளை எடுப்பவர்கள் மற்றும் வடிகால் துப்புரவாளர்களாக வேலை செய்கிறார்கள். கொரோனா வைரஸுக்கு முன்பே – தங்கள் சாதியின் காரணமாக ஒதுக்கப்பட்டவர்கள்.

“கைதிகளைப் போல நாங்கள் இங்கே பூட்டப்பட்டிருக்கிறோம் – நாங்கள் ஒரு பால் பண்ணைக்கு அருகில் வசிக்கிறோம், ஆனால் என் குழந்தைகளுக்கு குடிக்க ஒரு சொட்டு பால் கூட இல்லை. நாங்கள் அழுக்கானவர்கள் என்று அழைக்கப்படுகிறோம், நாங்கள் நோயைப் பரப்புகிறோம் என்கிறார்கள்,” என்று பூலாம்மா கூறினார்.

இந்தியாவின் சாதி அமைப்பு 1950 ல் அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது, ஆனால் பிறப்பால் மக்கள் மீது திணிக்கப்பட்ட 2,000 ஆண்டுகள் பழமையான சமூக வரிசைமுறை இன்னும் வாழ்க்கையின் பல அம்சங்களில் உள்ளது. சாதி அமைப்பு பிறக்கும்போதே இந்துக்களை வகைப்படுத்துகிறது, சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் இடம், அவர்கள் என்ன வேலைகள் செய்ய முடியும், யாரை திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை வரையறுக்கிறது.

பிராமணர்கள் (சாமியார்கள் மற்றும் ஆசிரியர்கள்), க்ஷத்திரியர்கள் (போர்வீரர்கள் மற்றும் ஆட்சியாளர்கள்), வைஷ்யர்கள் (வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள்) மற்றும் ஷுத்ராக்கள் (தொழிலாளர்கள்) ஆகிய நான்கு முக்கிய வகைகளாக வரிசைப்படுத்தியவர்கள் , நான்காவது வரிசையின் அடிப்பகுதியில் உள்ளவர்கள் ’தீண்டத்தகாதவர்கள்’ அல்லது ’தலித்துகள்’ என்று கருதப்படுகிறார்கள் .

 இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள்தொகையில் சுமார் 25%  மக்கள், அதாவது பல மில்லியன் கணக்கான மக்கள், பட்டியலிடப்பட்ட சாதிகள் (தலித்துகள்) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ஆதிவாசிகள்)  இந்திய அரசியலமைப்பின் கீழ் உள்ளனர். ஆதிவாசிகள் பல நூற்றாண்டுகளாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களும் நீண்ட காலமாக சமூகத் தனிமைப்படுத்தலைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன, ஆனால் கொரோனா வைரஸின் விரைவான பரவல் மற்றும் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அவர்களின்  தனிமைப்படுத்தலை இன்னும் மோசமாக்கியுள்ளன என்று அஞ்சப்படுகிறது.

தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் பல நூற்றாண்டுகளாக கட்டாயப்படுத்தப்பட்ட வேலைகள் – தூய்மைப் பணி, கையால் மலம் அள்ளுவது மற்றும் கழிவுகளை எடுப்பது – போன்ற  அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய வைரஸ் தாக்கக்கூடிய வேலைகளை செய்கிறார்கள்.

தொற்றுநோய்களின் போது, ​​அவர்களின் வேலைகள் இந்திய அரசாங்கத்தால் அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படுகின்றன, ஆனால் பலர் கோவிட் -19 க்கு எதிராக தங்களைக் காப்பாற்றிக் கொள்ள போதுமான உபகரணங்கள் வழங்கப்பட்டவில்லை என கூறுகிறார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டால்,  இன்னும் ஆழமாக  வறுமை அடையாமல்  இருப்பதை உறுதி செய்ய எந்த சமூக பாதுகாப்பும் இல்லை.

சேவைகளுக்கான குறைந்த அணுகல் மற்றும் அதிக இறப்பு

1918 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்று இந்தியா முழுவதும் 17 மில்லியன் மக்களைக் கொன்றபோது, ​​யார் சுகாதாரப் பாதுகாப்பு பெற்றார்கள் – யார் இறந்தார்கள் என்பதை தீர்மானிப்பதில் சாதி முக்கிய பங்கு வகித்தது.

நெரிசலான சேரிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட சாதியினர் வைரஸ் காய்ச்சல் பரவுவதால் அதிகம் பாதிக்கப்பட்டனர்,  ஆனால் உணவு மற்றும் மருந்து அவர்களை குறைவாகவே சென்று சேர்ந்தது என்று வரலாற்றாசிரியர் டேவிட் அர்னால்ட் கூறுகிறார். இவர் இந்தியாவில் ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோய் குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார்.

“ரைடிங் தி டைகர்” இன் ஆசிரியர் வரலாற்றாசிரியர் அமித் கபூர் கூறுகையில், சமூகத்தில் ஒவ்வொரு 1,000 பேருக்கும் 61 தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்தனர். உயர் சாதி இந்துக்களுக்கு இது ஒவ்வொரு 1,000 க்கும் 19 ஆக இருந்தது, இந்தியாவில் வாழும் ஐரோப்பியர்களுக்கு இந்த எண்ணிக்கை இன்னும் குறைவாக இருந்தது.

எவ்வாறாயினும், 1918 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் விகிதாச்சாரமின்றி பாதிக்கப்பட்டனர். இப்போதைய நிலைமை வேறுபட்டது என்று கபூர் நம்புகிறார். “1918 ஆம் ஆண்டில் சாதி மிகவும் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய்களின் தாக்கம் சமூக வரிசைமுறையை விட பொருளாதார வரிசைமுறையுடன் தொடர்புடையது” என்று கபூர் கூறினார்.

ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (யுஎன்டிபி) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி (ஓபிஐஐ) இன் உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு (எம்.பி.ஐ) படி, பட்டியலிடப்பட்ட பழங்குடியினரில் பாதி பேர் 15% உயர் சாதிகளுடன் ஒப்பிடும்போது ஏழைகளாக கருதப்பட்டனர்.

தலித் பாகுபாட்டை எதிர்த்துப் போராடும் சர்வதேச மனித உரிமைக் குழுக்களின் வலையமைப்பான சர்வதேச தலித் ஒற்றுமை வலையமைப்பின் 2013 ஆம் ஆண்டின் ஆய்வின் படி, வறுமை மற்றும் அவசர காலங்கள் தாழ்த்தப்பட்டவர்களை மிகவும் பாதிக்கிறது.

உதாரணமாக, 2004 ஆசிய சுனாமிக்குப் பிறகு, தலித்துகள் மனித உடல்கள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர், ஊதியமும் மிகக் குறைவாகவே இருந்தது, மேலும் அவர்களுக்கு எந்த உளவியல் ஆதரவும் வழங்கப்படவில்லை. பைக்குகள் மற்றும் மீன்பிடி வலைகள் போன்ற தொலைந்து போன உடைமைகளுக்கு இழப்பீடுகளை முழுமையாக வழங்கவில்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் மீண்டும் இந்தியாவில் சமத்துவமின்மையை, ஏற்றத் தாழ்வுகளை வலுப்படுத்தும் என்று தலித் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

’’இந்தியாவில் 600,000 கிராமங்கள் உள்ளன, கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்தின்  ஒரு சிறிய பகுதி தலித்துகளுக்கானது ”என்று தலித் மனித உரிமைகள் தொடர்பான தேசிய பிரச்சாரத்தின் தலித் ஆர்வலர் பால் திவாகர் கூறினார்.

“இந்த பகுதிகள் சுகாதார நிலையங்கள், வங்கிகள், பள்ளிகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. கோவிட் -19 போன்ற காலங்களில், இந்த சிறிய பகுதிகளின் ஒரு முனையைக்  கூட  உதவிகள் முழுமையாக அடையாது.”

சமூக விலகல் பற்றிய பல அறிவுரைகள், வடக்கு நகரமான பரேலியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது  கிருமிநாசினியால் ப்ளீச் செய்தது போன்ற  நடத்தைகளை ஊக்குவிப்பதாக  அவர் கூறினார்.

“கோவிட் -19 இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் சுகாதாரம் மற்றும் சமூக விலகல் என்ற பெயரில் நியாயப்படுத்துகிறது” என்று திவாகர் கூறினார்.

அத்தியாவசிய தொழிலாளர்கள்

தூய்மைப் பணி, கையால் மலம் அள்ளுவது, கழிவுகளை எடுப்பது செங்கல் சூளைகளில் வேலை செய்தல் மற்றும் தோல் கைவினை போன்ற  வேலைகளை, உயர் சாதி சமூகங்களுக்கு “இழிந்த” அல்லது “நேர்மையற்றதாக” கருதப்படும் தொழில்களை தலித்துகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தூய்மைப் பணிகளுக்காக முறையாக மற்றும் முறைசாரா முறையில் 5 மில்லியன் மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர், அவர்களில் 90% பேர் மிகவும் கீழ் நிலையிலுள்ள  தலித் துணை சாதியினரைச் சேர்ந்தவர்கள் என்று இந்தியா முழுவதும் துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்து தி கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன், 2017 ஆம் ஆண்டில் டால்பெர்க் ஆலோசகர்களால்,  (மேம்பாட்டுக் கொள்கை மற்றும் மூலோபாய நிறுவனம்),  மேற்கொள்ளப்பட்ட ஐந்து மாத ஆய்வின்படி கண்டறியப்பட்டது.

இந்திய அரசாங்கம் தூய்மைப் பணிகளை அத்தியாவசிய சேவைகளாக கருதுகிறது, இது ஊரடங்கு காலத்திலும் தொடர வேண்டும் என்கிறது. மருத்துவமனைகள் மற்றும் பிற இடங்களில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களுக்கு N95 முகமூடிகள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) வழங்கப்பட வேண்டும் என்று இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

துப்புரவுத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் மருத்துவமனைகளை சுத்தம் செய்கிறார்கள், ஆனால் பலர் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று கூறுகிறார்கள் என மும்பையில் உள்ள தலித் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சூர்யபிரகாஷ் சோலங்கே கூறியுள்ளார்.

“பல ஆண்டுகளாக அவர்கள் மருத்துவமனைகள், குடியிருப்பு வளாகங்கள், வீதிகள் மற்றும் ரயில் நிலையங்களை சுத்தம் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்குவதற்கும், அவர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கும் பதிலாக, மக்கள் அவர்களை ஒதுக்கிவைக்கின்றனர். வேலை பார்க்கும்பொழுது சிலருக்கு குடிக்க தண்ணீர் கூட மறுக்கப்படுகிறது, ” எனசோலங்கே கூறினார்.

வனிதா பாஸ்கர் சால்வி தானே மும்பை மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிகிறார். தனக்கும் தனது சகாக்களுக்கும் வேலை செய்யும் போது வைரஸிலிருந்து பாதுகாக்க ஒற்றை அடுக்கு துணி முகமூடிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறுகிறார்.

“நாங்கள் தாழ்த்தப்பட்ட மனிதர்கள். நாங்கள் முழு வார்டையும் சுத்தம் செய்து கழுவுகிறோம். நோயாளிகள் தங்கள் ஆடைகளை மண்ணாக்கும்போது, ​​அவற்றை சுத்தம் செய்கிறோம். அனைத்தும் மாதத்திற்கு 8,500 ரூபாய்($ 115) சம்பளத்திற்காக. இப்போது   அனைத்து கழிவுகளையும் தொட்டு சுத்தம் செய்யும் போது, ​​எங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் மேலும் நோய்க்கான ஆபத்து உள்ளது “என்றும் அவர் கூறினார்.

சால்வி வைரஸ் பாதிப்புக்கு பயப்படுவதாகவும், வேலைக்குச் செல்ல விரும்புவதில்லை என்றும் கூறுகிறார், ஆனால் அவரது குடும்பத்தில் அவர் ஒருவர் மட்டும் வேலையில் இருப்பதால், அவருக்கு வேறு வழியில்லை.

மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரி கிரண் திகாவ்கர் கூறினார்: “துப்புரவு பணியாளர்களுக்கு போதுமான கருவிகள், முகமூடிகள், கையுறைகள் அனைத்தும் எங்களிடம் உள்ளன.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு போதுமான பிபிஇ வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து சி.என்.என் ,சுகாதார மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் அதிகாரிகளை அணுகியது, ஆனால் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.

தலித்துகள் செய்யும் வேலை அவர்களை மற்றொரு ஆபத்துக்குள்ளாக்குகிறது: பாகுபாடு.

ஊரடங்கு விதிக்கப்படுவதற்கு முன்னர் பீகாரில் உள்ள போத் கயாவிற்கு அருகிலுள்ள தனது கிராமத்திற்குத் திரும்புவதற்காக சனோஜ் குமார் தமிழ்நாட்டில் ஒரு செங்கல் சூளையில் தனது வேலையை விட்டுவிட்டார். அவர் ரயிலில் இருந்து இறங்கியவுடன் புறக்கணிப்பை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.

“ரயில் நிலையத்தில் திரும்பி வருபவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கத் தொடங்கினர். அவர்கள் மக்களை சீரற்ற முறையில் தடுத்து நிறுத்தினர். நன்கு உடையணிந்து, உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மேலாதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் போல் தெரிபவர்களை தடுக்கவில்லை, என்னைப் போன்ற மற்றவர்கள் தடுத்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர், ”என்றார்.

அவரது சோதனைக்குப் பிறகு, குமார் வீட்டிற்கு அனுப்பப்பட்டு 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிட்டார்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுகாதார ஊழியர்கள் அவரைப் பரிசோதிக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். வைரஸை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை அவர் புரிந்துகொள்வதால் அவர் கடமைப்படுகிறார், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் பார்வையிடும்போது, ​​அது அவரது குடும்பத்தின் சமூக களங்கத்தை அதிகரிக்கிறது.

“இதைச் செய்வதற்கான சிறந்த மற்றும் அதிக உணர்திறன் வழியை அவர்கள் கொண்டு வர வேண்டும்” என்று குமார் கூறினார்.

அடையாள அட்டைகள் இல்லாத முறைசாரா தொழிலாளர்கள்

கீழ் சாதி இந்தியர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிகமாக உள்ளாவது, களங்கத்தை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், அவர்கள் அரசாங்க மானியங்களிலிருந்தும் கை விடப்படுகிறார்கள்.

மார்ச் 26 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் மூன்று மாதங்களுக்கு சுகாதார காப்பீட்டின் கீழ் வருவார் என்றும், சுகாதாரத் தொழிலாளர்கள் சிறப்பு காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள் என்றும் அறிவித்தார். ரூ .50 லட்சம்  வழங்கும் நடவடிக்கை அரசாங்கத்தின் 22.5 பில்லியன் ரூபாய் நிதி உதவி தொகுப்பின் ஒரு பகுதியாகும்.

ஆனால் அதைக் கோருவதற்கு, தொழிலாளர்களுக்கு தூய்மை பணியாளர்கள் என்ற நிலையை உறுதிப்படுத்தும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை தேவை. பல துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அது இல்லை.

தலித் பகுஜன் வள மையத்தின் கணக்கெடுப்பின்படிபடி, 22% தூய்மை பணியாளர்களுக்கு  மற்றும் கழிவுகளை எடுப்பவர்களுக்கு 12 இலக்க, பயோமெட்ரிக் தேசிய அடையாள எண், ஆதார் அட்டை  இல்லை.  33%  தூய்மை பணியாளர்களுக்கு பொது விநியோக முறை மூலம் மானிய உணவுப் பொருட்களைப் பெற ரேஷன் கார்டுகளை இல்லை.மானியங்கள் மற்றும் நேரடி பணப்பரிமாற்றங்கள், மற்றும் பிரதமரின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சுகாதார காப்பீடு, அத்துடன் வங்கிக் கணக்கைத் திறப்பது உள்ளிட்ட பல அரசு திட்டங்களை அணுக தனிப்பட்ட தேசிய அடையாள எண், ஆதார் எண் தேவைப்படுகிறது.

“பெரும்பாலான தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள், இந்த அரசாங்க அடையாள அட்டைகளை … அல்லது ரேஷன் கார்டுகளைப் பெறுவது கடினமாக இருக்கிறது. ஒன்று தகவல் அவர்களுக்கு எட்டவில்லை, அல்லது பயோமெட்ரிக் ஐடிகளைப் பெறுவதற்கான பதிவு முகாம்கள் ஒருபோதும் அவர்கள்  கிராமங்களில் அமைக்கப்படவில்லை  மற்றும் பெரும்பாலும் அவர்கள் இந்த அடையாள அட்டைகளை பெறுவதற்கு பெரும் தொகை லஞ்சம் கொடுக்குமாறு கேட்கப்படுகிறார்கள், ”என்று தலித் பகுஜன் வள மையத்தின் நிர்வாக செயலாளர் அல்லாடி தேவகுமார் கூறினார்.

முறைசாரா தொழிலாளர்களாக பணிபுரியும் பல துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டைகள் கூட இல்லை. சால்வி கூறுகையில், அவர் பணிபுரியும் மருத்துவமனையின் டீனை அணுக முயன்றார், அது ஒரு வேலைவாய்ப்பு அடையாள அட்டையை கேட்க, அது அவருக்கு சுகாதார காப்பீட்டு சலுகைகளை கோரவும், ஊரடங்கின் போது மும்பையில் அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்காக ஓடும் சில பேருந்துகளில் ஏறவும் உதவும்.

அடையாள அட்டை இல்லாமல், அவள் பஸ்ஸில் ஏற முடியாது, வேலைக்கு ஒவ்வொரு வழியிலும் 90 நிமிடங்கள் நடக்க வேண்டும். ஆனால் அவர் அலுவலகத்தை அணுகியபோது, ​​டீன்(பெண்)  காவலர்களை வருமாறு கூச்சலிட்டார் என்று அவர் கூறுகிறார்.

“அவர்(டீன் ) என்னை மிரட்டினார், நீ உள்ளே வர வேண்டாம் என்று சொன்னார், என்னை அழைத்துச் செல்ல காவலரை அழைத்தார். நாங்கள் குப்பை என்று அவர் நினைக்கிறாள், இப்போது எங்களை குப்பைத்தொட்டியாகக் கருதுவதற்கு அவருக்கு அதிக காரணம் இருக்கிறது” என்று சால்வி கூறுகிறார். சி.என்.என் டீனை தொடர்பு கொண்டபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

வங்கி கணக்குகளுக்கு வழி இல்லை

எஸ்தெரம்மா தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தென் மாநிலமான ஆந்திராவின் குண்டூரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குப்பைக்கிடங்கின் அருகில் வசித்து வருகிறார். அவள் ஒரு ஆதிவாசி பெண். கழிவுகளிலிருந்து  குப்பைகளிலிருந்து பொருட்களை சேகரித்து, பிரித்து விற்பனை செய்வதன் மூலம் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளும் அவளுடைய சமூகமும் குப்பைக்கிடங்கிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அருகில் ரேஷன் கடை இல்லை,  எந்த சுகாதார வசதிகளும் இல்லை.

பல தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளைப் போலவே, எஸ்தெரம்மா வுக்கு செயல்படும் வங்கி கணக்கு அல்லது தேசிய அடையாள அட்டை இல்லை – அரசாங்கத்தின் நேரடி பணப் பரிமாற்றங்களை அணுக தேவையான இரண்டுமே அடிப்படை தேவைகள்.

இது இல்லாமல் அரசாங்கத்தின் நிதி சேர்க்கும் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்பவர்களான பெண்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ரூ .500 ($ 7) ஐ அவளால் கோர முடியாது.

“கணக்குகள் இல்லாத மக்கள், குறிப்பாக தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் பலர் உள்ளனர், பின்னர் கணக்குகள் உள்ளவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவற்றை இயக்க முடியவில்லை, ஏனெனில் அதன் கட்டுப்பாடு வேறு ஒருவரிடம் உள்ளது, அவர்களுடைய உயர் சாதி படித்த நில உரிமையாளர் அல்லது ரேஷன் கடைக்காரர் , “கிராமப்புற இந்தியாவிலிருந்து கதைகளை காப்பகப்படுத்தும் டிஜிட்டல் பத்திரிகை தளமான பீப்பிள்ஸ் காப்பகத்தின் நிறுவன ஆசிரியர் பி. சாய்நாத் கூறுகிறார்.

பல வங்கி கணக்குகள் மொபைல் போன் கணக்குகளுடன் பிணைக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் கடைக்காரர்கள் பல கல்வியறிவற்ற தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் தங்கள் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுகிறார்கள்.

“சில நேரங்களில், யாரோ ஒருவர் மொபைல் இணைப்பை வாங்கும்போது வங்கிக் கணக்குகள் தானாகவே திறக்கப்படும், மேலும் இந்த வங்கிக் கணக்கு இருப்பதை அந்த நபர் கூட அறிந்திருக்க மாட்டார். மேலும் அரசாங்கத்தின் கூற்றுப்படி, அனைத்து நேரடி பணப் பரிமாற்றங்களும் பயனாளியின் புதிய வங்கிக் கணக்கிற்கு வருகின்றன, எனவே சில நேரங்களில் அவர்கள் பணம் பெற்றார்கள் என்பதற்கான துப்பு, கூட எதுவும் இல்லை “என்று சாய்நாத் கூறுகிறார்.

எஸ்தெரம்மாவுக்கு ஒரு ரேஷன் கார்டு உள்ளது, மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு 5 கிலோகிராம் கோதுமை அல்லது அரிசி மற்றும் 1 கிலோகிராம் விருப்பமான பருப்பு வகைகளை இலவசமாகப் பெற தகுதியுடையவர், ஆனால் அவர் ரேஷன் கடைக்குச் செல்ல முடியாது, ஏனெனில் கடை மேலாதிக்க சாதியினரால்.  நடத்தப்படுகிறது. கோவிட் -19 ஐ மேற்கோள் காட்டி, அவர்கள் அவளை உள்ளே வர விடுவதில்லை. தொண்டு நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் சிறிய உணவு பாக்கெட்டுகளில் வாழ்கிறார் என்று அவர் கூறுகிறார்.

“நிவாரணப் பொதிகளை ஆதார் போன்ற பயோமெட்ரிக் ஐடிகளுடன் இணைக்கவோ மையப்படுத்தவோ  கூடாது” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் மையத்தின் தலைவர் பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் கூறினார்.

“இது பலரை நிவாரணத்திலிருந்து வெளியேற்றும். இது மாநில அரசுகள் மூலமாக செய்யப்பட வேண்டும், அங்கு அவர்கள் இந்த சலுகைகளை வேலைவாய்ப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிற பயனாளிகளின் கணக்குகள் மூலம் ஒப்படைக்கிறார்கள்.”

இந்தியாவில் 11,900 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 390 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றது.

1.3 பில்லியன் மக்கள் கொண்ட ஒரு நாட்டில் இந்த பாதிப்பு ஒரு சிறிய எண்ணிக்கையாகும். இந்திய அரசாங்கம் மே 3 க்கு அப்பால் நாடு தழுவிய ஊரடங்கை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் நாட்டின் ஏழ்மையானவர்கள் மீதான நோயின் இறுதி தாக்கத்தை தற்போதே அளவிடுவது சரியாக இராது .

பூலம்மா, சால்வி மற்றும் குமார் போன்றவர்கள் தங்களுக்கு இன்னுன் அதிக பாதுகாப்பு வழங்கப்படும் என்று நம்புகிறார்கள், ஆனால் அது இதுவரையிலும் வரவில்லை.

இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர், தலித் ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காவல்துறையினர் தலையிட்டதால், பூலம்மா கடைசியாக மளிகை கடையை அணுக முடிந்தது. ஆனால் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களை பரிசோதிக்க எந்த சுகாதார ஊழியர்களும் தனது சமூகத்திற்கு வருவதில்லை என்று அவர் கூறினார்.

சால்வி ஒவ்வொரு நாளும் வலி நிவாரணி மருந்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு நடந்து சென்று சுத்தம் செய்து தனது வேலையை எந்த பாதுகாப்பு கருவியும் இல்லாமல் செய்கிறார். ஊரடங்கு  உத்தரவுக்கு இணங்க – மற்றும் துஷ்பிரயோகத்தைத் தவிர்ப்பதற்காக குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள்ளேயேஏ தங்கியுள்ளனர்.

“நான் வெளியேறும் ஒவ்வொரு முறையும், மக்கள் ‘கொரோனா, கொரோனா’ என்று கத்த ஆரம்பிக்கிறார்கள்,” என்று அவர் கூறினார். “முன்னதாக அவர்கள் நான் ஒரு தலித் என்பதால் தூரத்தில்  விலகி நடப்பார்கள், ஆனால் இப்போது அவர்கள் என்னை நோய் என்று அழைக்கிறார்கள்.”

ஏப்ரல் 16, 2020

தமிழில் : கோகுல கிருஷ்ணன் கந்தசாமி

https://www.cnn.com/2020/04/15/asia/india-coronavirus-lower-castes-hnk-intl/index.html

Under India’s caste system, Dalits are considered untouchable. The coronavirus is intensifying that slur

By Priyali Sur, CNN