டிக்டாக் செயலிமூலம் நாளுக்குநாள் பிரபலங்கள் உதயமாகிக்கொண்டே இருக்கிறார்கள், உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை வெளிகாட்டிக்கொள்ள டிக்டாக் மிகச் சிறந்த செயலியாக தற்காலத்தில் உருபெற்றுள்ளது.
இச் செயலி மூலம் நடிகர் நடிகைகள், சமையல்காரர்கள், திரைவிமர்சகர்கள், விளையாட்டுக்காரர்கள், சுய முன்னேற்ற ஆலோசகர்கள் என பலதுறையில் இருந்து பிரபலமாகியுள்ளனர். அந்த வரிசையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீபன் ஆஸ்டின் என்ற 81வயது முதியவர் டிக்டாக் பயனாளர்களை கவர்ந்து வருகிறார்.
தான் செய்யும் சுவைமிகுந்த உணவு வகைகளின் செய்முறைகளை நகைச்சுவை கலந்து சொல்வதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீடியோக்களிலும் வித்தியாசமான தோற்றம் மற்றும் வண்ண வண்ண தொப்பிகளுடன் உதயமாகிறார். உலகமெங்கும் நிறைய குட்டி ரசிகர்களின் ஃபேவரட் தாத்தாவாக ஸ்டீபன் ஆஸ்டின் டிக்டாக்கில் வலம்வருகிறார்.
கிட்டத்தட்ட 6 லட்சம் ஃபாலோவர்களை கொண்டுள்ள இவர் தான், பதிவிடும் ஒவ்வொரு விடியோவிற்கும் குறைந்தது 5 மில்லியன் லைக்குகளையும் அள்ளுகிறார்.
“எனக்கு பேரன் பேத்திகள் யாரும் இல்லையென்றாலும் இணையம் மூலம் எனக்கு நிறைய பேரன் பேத்திகள் கிடைத்துள்ளதாக” பெருமைபடுகிறார் ஸ்டீபன் ஆஸ்டின்.