முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல்

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதிபெறும்.

தொடக்க லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

காவிரி நதிநீர் பிரச்சினை போராட்டம் காரணமாக கடந்த ஆண்டில் சென்னையில் ஒரு ஆட்டம் மட்டுமே நடந்தது என்பதால் இந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் சென்னையில் நடக்கும் போட்டிகளுக்கு பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.