டந்த மாதம்(பிப்ரவரி) பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்ப இந்திய அரசு தடை விதித்ததையடுத்து, நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டி பாகிஸ்தானில் ஒளிபரப்பப்படாது என பாகிஸ்தான் மத்திய மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஃபேவாட் அகமது தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் சூப்பர் லீக்(பி.எஸ்.எல்) நடைப்பெறும்போது  அதனை இந்தியாவில் ஒளிபரப்ப இந்திய அரசு தடைவிதித்தது. 2019 ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டி நாளை தொடங்கவிருக்கும் நிலையில், இத்தொடரை பாகிஸ்தானில் ஒளிப்பரப்ப தடை விதித்துள்ளது பாகிஸ்தான் அரசு. இதுகுறித்து தகவல் தெரிவித்த அமைச்சர் ஃபேவாட் அகமது கூறுகையில்”. இந்திய நிறுவனங்களும், அரசும் பி.எஸ்.எல்-ஐ பாகிஸ்தானின் கிரிக்கெட் என பிரித்துப்பார்த்தன. நாங்கள் அரசியலையும் கிரிக்கெட்டையும் பிரித்துப்பார்க்கிறோம், ஆனால் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும்போது ராணுவ தொப்பியுடன் விளையாடினர். அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியிறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சர்வதேச அளவில் நாங்கள் சூப்பராகதான் கிரிக்கெட் விளையாடி வருகிறோம். எனவே ஐ.பி.எல் தொடரை பாகிஸ்தானில் ஒளிபரப்பவில்லை என்றால், அது ஐ.பி.எல்-க்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் இழப்பு என நான் நினைக்கிறேன்” என தெரிவித்தார்.