இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நடந்து முடிந்த இரு டெஸ்ட் ஆட்டத்தொடரை நியுசிலாந்து வென்றுள்ளது. டிம் சவுதி, ஜேமிசன் மட்டுமல்ல வழக்கமான தலைவர் வில்லியம்சன் கூட இல்லை. ஆனால் நியுசிலாந்து அவ்வளவு தன்னம்பிக்கையுடன் ஆடியது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இரண்டாவது டெஸ்டிலோ நியுசிலாந்து யாரும் எதிர்பாராதபடி சிறப்பாக ஆடி வென்று தொடரையும் கைப்பற்றியது.

காவே, வில் யங், பிரண்டல் போன்ற புதிய வீரர்கள் நியுசிலாந்துக்காக நேர்த்தியாக கவனமாக மட்டை ஆடினார்கள். 37 வயதான ராஸ் டெய்லர் அதிரிபுதிரியாக ஆடினார் – கொஞ்சம் குறைநீளத்தில் விழும் பந்தை அவர் backward point இல் பளாரென விளாசுவதெல்லாம் கண்கொள்ளாக் காட்சி. அதே போல தன்னுடைய பலவீனமான உள்வரும் பந்தை அவர் நேராக டைம் செய்து அடித்த போதே அபாரமான ஆட்டநிலையில் இருக்கிறார் எனத் தோன்றியது.

இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அவர் அடித்த 80 இங்கிலாந்து பந்து வீச்சை லாரி ஏறிய பெருச்சாளியைப் போல ஆக்கி விட்டது. முதலில் ஆடிய இங்கிலாந்து 303 அடித்தது. அது ஒரு நல்ல ஸ்கோர் தான். தொடர்ந்து நல்ல அழுத்தத்தை போட்டிருந்தால் அவர்களால் நியுசிலாந்தை 280-300க்குள் தூக்கியிருக்கலாம். ஆனால் நியுசிலாந்த் 200 ஐ தாண்டியதும் இங்கிலாந்து அணி ஆர்வத்தை இழந்து ஏதோ பழைய காதலியின் திருமணத்துக்கு வந்த காதலனைப் போல ஆடினார்கள். நியுசிலாந்து 85 ரன் லீட் பெற்றார்கள். அடுத்து ஆடிய இங்கிலாந்து 122க்கு நிலைகுலைந்தது என்னைப் பெரிதும் ஆச்சரியப்படுத்தவில்லை – அவர்கள் இரண்டாம் நாளில் இருந்தே முழுக்க ஆர்வமிழந்து நம்பிக்கையின்றி தோன்றினார்கள். 38 ரன்கள் இலக்கை நியுசிலாந்து இரு விக்கெட்டுகளை இழந்து விரட்டி அடைந்தார்கள். சொந்த மண்ணில், ஒரு சாதாரண அணிக்கு எதிராக நிகழ்ந்த இந்த டெஸ்ட் தொடர் இழப்பு செருப்பால் அடித்ததைப் போன்ற ஒரு அவமதிப்பாக இங்கிலாந்துக்கு இருக்கும்.

ஏன் இப்படியெல்லாம் ஆயிற்று? சென்னை 28இல் கடற்கரையில் சின்னப் பையன்களிடம் அடிவாங்குவார்களே அப்படி ஏன் இங்கு இங்கிலாந்து துரத்தி அடிக்கப்பட்டார்கள்?

1) இங்கிலாந்து வீரர்கள் இத்தொடரை சுலபத்தில் வென்று விடலாம் எனும் அசட்டையான மனநிலையில் வந்திருக்கலாம். நியுசிலாந்தின் இளைஞர்கள் இவ்வளவு கடுமையாக உக்கிரமாக போராடுவார்கள், பிசிறில்லாமல் ஆடுவார்கள் என அவர்கள் எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம்.

2) கடந்த இந்திய சுற்றுப்பயணத்திலும் இங்கிலாந்து வீரர்கள் இப்படித்தான் அதிமுகவை பிடித்து விடுவேன் என சிறையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு பெரிய பாவ்லா காட்டி விட்டு, ஒன்றுமில்லாமல் ஓய்வுக்கு சென்ற சசிகலாவைப் போலத் தெரிந்தார்கள். முதல் டெஸ்ட் வெற்றிக்குப் பின், அடுத்தடுத்த டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் அடிமேல் அடி. 50, 20 ஓவர் போட்டிகளில் ஓரளவுக்கு நன்றாக போராடினார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். (இது வேறொரு விமர்சனத்துக்கு இங்கிலாந்து அணியை உள்ளாக்கியது. இதற்கு கடைசியாக வருகிறேன்.)

3) கடந்த இந்திய சுற்றுத்தொடரில் இங்கிலாந்துடைய சுழற்சி முறை தேர்வுக் கொள்கை பெரிதாக விமர்சிக்கப்பட்டது. முதல் டெஸ்டை வெல்லக் காரணமாக இருந்தவர்களை அடுத்த டெஸ்டில் ஓய்வு கொடுத்து ஊருக்கு அனுப்புவது ஒரு முட்டாள்தனம் என முன்னாள் வீரர்களூம் ஊடகங்களும் காறித் துப்பின. ஆனால் இங்கிலாந்தின் பயிற்சியாளர்களும், வாரியத் தலைமையும் புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தால், சீனியர்கள் இன்றியும் சிறப்பாக ஆடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்கள்.

ஆனால் புதிய வீரர்களுக்கு திறமை இருந்தாலும் முனைப்பு, மனக்குவிப்பு, பொறுமை, முதிர்ச்சி இருக்கவில்லை.

துவக்க வீரர்களான பர்ன்ஸ், சிப்லியால் ரன் அடிக்க முடியும், ஆனால் அவர்களுடைய தொழில்நுட்பம் நம்பிக்கை ஏற்படுத்தவில்லை. போப்புக்கும் லாரன்சுக்கும் திறமை உண்டு – ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு ஏற்றதாகவே அவர்களுடைய மனநிலை தெரிகிறது. கிராவ்லியைப் தவிர வேறு இளம் இறக்குமதிகள் அபாரமான திறமைகளாகத் தெரியவில்லை. ஆண்டர்ஸன், பிராடின் இடத்தில் அதே போன்ற திறமையும் புத்திசாலித்தனமும், திட்டத்துக்கு ஏற்ப பந்து வீசும் பொறுமையும் கொண்டவர்களாக யாரும் இன்னும் தோன்றவில்லை. மார்க் வுட், ஓலி ஸ்டோன் போன்றோருக்கு 140க்கு மேல் வீசும் திறமைக்கு அப்பால் பந்தை அபாரமாக ஸ்விங் செய்கிற, நேர்த்தியாக தொடர்ந்து வீசுகிற ஆற்றல் இருப்பதாகத் தெரியவில்லை. இதனாலே மிகவும் வயதான நிலையிலும் ஆண்டர்ஸனும் பிராடும் தொடர்ந்து பந்து வீசுகிறார்கள் – பிற வேக வீச்சாளர்களிடம் அணித்தலைவருக்கோ தேர்வாளர்களுக்கோ நம்பிக்கை வரவில்லை. இது ஒரு அவல நிலைமை.

 4)இந்த சிக்கல்களுக்கு மத்தியில் இங்கிலாந்து அணியில் உளவியல் சார்ந்த ஒரு சில பிரச்சனைகள் தோன்றி உள்ளன. அதை அவர்கள் வெளியே சொல்லத் தயாராகவில்லை. என் ஊகம் என்னவென்றால் கணிசமான வீரர்கள் இந்த லாக் டவுனுக்குப் பிறகு பயணம் மேற்கொண்டு சர்வதேசப் போட்டிகளில் ஆடும் துணிச்சலைப் பெறவில்லை. இன்னொரு பக்கம், ஏற்கனவே பல வீரர்களுக்கு அகப்பிரச்சனைகள் இருக்க வேண்டும். இதனாலே மனக்களைப்பை சரி செய்ய வீரர்களை தொடர்ந்து ஆடி பயணங்களில் இருக்கும்படியாக அல்லாமல், கூடுதல் நேரத்தை குடும்பத்துடன் செலவிடும் நோக்கில் அவர்கள் தொடர்ந்து இரண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆட வாய்ப்பு தர வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த குழப்பமாக rotation கொள்கை எல்லார் மீதும் ஒரே போல திணிக்கப்பட்டது இன்னும் சிக்கலுக்கு வழிவகுத்தது. உ.தா., அணியில் நிரந்தர இடம் பிடிக்காத மோயின் அலி போன்ற வீரர்கள் இந்த ஓய்வை விரும்பவில்லை. ஆகையால் சர்ச்சைகள் எழுந்தன. காயமுற்றிருந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்திய தொடரில் அநேகமாக எல்லா ஆட்டங்களையும் ஆடியதுடன், ஐ.பி.எல் கூட ஆடி, அதனால் காயம்பட்டு இப்போது ஓய்வில் இருக்கிறார். தொடர்ந்து சில டெஸ்டுகள் ஆடினால் தப்பு, அதனால் உளவியல் பாதிப்பு ஏற்படும், ஆனால் அதே வீரர்கள் இந்தியாவிலே தங்கி ஐ.பி.எல் போட்டிகளில் ஆடினால் பிரச்சனை வராதா? இப்படி ஒரு முரண்பாடு. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல்லில் தமது வீரர்கள் ஆடுவது அடுத்த டி-20 உலகக்கோப்பை இந்தியாவில் நடப்பதால் வீரர்களுக்கு சூழல் பழகுவதற்கு, அனுபவம் பெறுவதற்கு உதவும் என சப்பைக்கட்டு கட்டினர். (ஆனால் டி-20 உலகக்கோப்பை இந்தியாவில் நடக்காது எனும் நிலையே உள்ளது.)

5) ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இங்கிலாந்து வீரர்கள் ஒருநாள், டி-20 போட்டிகளில் காட்டும் அக்கறையை டெஸ்ட் போட்டிகளை ஆட காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் சுழற்சி கொள்கையானது டெஸ்ட் போட்டிகள் அளவுக்கு ஒருநாள், டி-20 போட்டிகளில் கராறாக பின்பற்றப்படுவதில்லை. ஒரு வடிவத்தை பட்டினி போடும் மனநிலை இங்கிலாந்தின் வாரியத்திடம் கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளது; இங்கிலாந்தில் 2019இல் நடந்து முடிந்த 50 ஓவர் உலக்கோப்பையை வெல்வதற்காக மிதமிஞ்சிய அக்கறையை அந்த வடிவம் மீது காட்டினார்கள், அப்படியே மகத்தான வெற்றியையும் பெற்று உலக சாம்பியன் ஆனார்கள், அதன் எதிர்விளைவாக ஒரு மோசமான டெஸ்ட் அணியாக மாறி விட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

தொண்ணூறுகளிலும் ஓரளவுக்கு ரெண்டாயிரத்தின் பெரும்பகுதியிலும், இங்கிலாந்து ஒருநாள், டி-20 வடிவை பொருட்படுத்தாத அணியாகவே இருந்து வந்தது. ஐயன் மோர்கன் ஒருநாள் அணித்தலைவராகி, டிரவர் பெய்லிஸ் பயிற்சியாளராகி, ஆண்டிரூ ஸ்டுராஸ் கிரிக்கெட் வாரிய இயக்குநரான 2015க்குப் பின்னரே இங்கிலாந்தின் ஒருநாள் ஆட்டத்தில் ஒரு புரட்சி நிகழ்ந்தது. 400 இலக்கை நிர்ணயிக்கும் விதத்தில் 50 ஓவர்கள் முழுக்கவே ஆக்ரோசமாக ஆடுவது, தோல்வி பயமின்றி சிக்ஸர்கள் விளாசுவதில் மட்டும் கவனம் செலுத்துவது, அணியில் ஜோ ரூட் போன்ற நிதானமான ஆனால் திறமையான மட்டையாளர்களுக்கு கூட இடமளிக்காமல், அதிரடி வீரர்களால் மட்டையாட்ட வரிசையை நிறைப்பது, ஆல்ரவுண்டர்களுக்கு அதிக இடமளித்து, பந்து வீச்சை பலவீனமாக்கியது என முழுக்க வித்தியாசமான அணுகுமுறையை இங்கிலாந்து மேற்கொண்டது. இந்த ஆட்டக்கொள்கைக்கு ஏற்ப ஐந்தாண்டுகளில் இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளில் கூட தட்டையான ஆடுதளங்களே தயாரிக்கப்பட்டன. அதிரடியான மட்டையாளர்களே எங்கும் ஊக்குவிக்கப்பட்டனர். அப்படித் தான் இங்கிலாந்து ஒரு சூறாவளியாக அனைவரையும் தன் வழியில் சாய்த்து விட்டு கோப்பைகளை வென்றது. சிறிது அதிர்ஷ்டத்துடன் அது உலகக்கோப்பை இறுதிப் போட்டியையும் நியுசிலாந்தை வீழ்த்தி தூக்கியது. ஆனால் அதன் பிறகு டெஸ்ட் ஆட்டம் மீது கவனம் திரும்பிய போது அது சவலைப்பிள்ளை ஆகி இருந்தது. இங்கிலாந்தின் டெஸ்ட் மட்டையாளர்கள் கூட ரகசியமாக ஒருநாள், டி-20 போட்டிகளில் ஜொலிக்கவே ஆசைப்படுவதாகத் தெரிகிறது. டெஸ்ட் ஆட்டத்தை கூட ஆஸ்திரேலியாவைப் போல அதிரடியாக ஆடலாம் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அதற்கான திறமையும், ஆட்டச்சூழலும் இங்கிலாந்தில் உள்ளதாகத் தெரியவில்லை.

விளைவாக, இங்கிலாந்தின் டெஸ்ட் அணி வீரர்கள் ஏதோ ஓடிப்போன மாப்பிள்ளைக்குப் பதில் தாலி கட்ட வந்தவர்களைப் போல திருதிருவென விழித்தபடி குழப்பமாகத் தெரிகிறார்கள். திட்டமிடல், நிர்வாகம், தவறான தேர்வுக் கொள்கைகள், மிதமிஞ்சி ஒரு வடிவத்துக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது, வீரர்களின் திறன் போதாமை என பல விசயங்கள் இந்த நிலைக்கு காரணமாக உள்ளன.

மாறாக நியுசிலாந்துக்கு திறமை குறைவென்றாலும் ஒற்றை அணியாக போராடுவதால் அவர்களுக்கு கவனச்சிதறலோ, குழப்பமோ இல்லை. எப்படி பத்து வாயில்கள் கொண்ட ஒரு மாளிகையை பாதுகாப்பதை விட ஒற்றை வாயில் கொண்ட வீட்டை நிர்வகித்து பாதுகாப்பது எளிதோ அப்படியே நியுசிலாந்தின் அணி நிர்வாகமும் நேர்த்தியாக சிக்கலின்றி உள்ளது. இதை அவர்களின் சிறப்பான ஆட்டமும் பெற்று வரும் தொடர் வெற்றிகளும், டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை அவர்கள் அடைந்துள்ளதும் காட்டுகின்றன. இந்திய அணியைப் பொறுத்தவரையில் டெஸ்ட் அணி ஒருநாள் அணியை விட வலுவாக உள்ளது, டி-20 அணி இப்போது தான் உருப்பெற்று வருகிறது என்றாலும், ஒப்பிடுகையில் மூன்று வடிவங்களிலும் ஓரளவுக்கு சமநிலையான வளர்ச்சியை நாம் கடந்த ஐந்தாண்டுகளில் பெற்றுள்ளோம். இந்தியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டித் தொடர் இங்கிலாந்துக்கு பெரும் சவாலாக இருக்கும் என இப்போதைய நிலையைப் பார்த்தால் தோன்றுகிறது. நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்தியாவால் சுலபத்தில் வெல்ல முடியாது என்றும் தோன்றுகிறது.

நியுசிலாந்திடம் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம் – கூடி வாழ்ந்தால் கோடி நன்மை! அதையே சமநிலையுடன் செய்தால் இன்னும் நன்மை!