5.புத்தகங்களைத் திருடுகிறவன்

புத்துயிர்ப்பு புதினத்திலிருந்து வெளியே வர முடியாமல் சிக்குண்ட நாட்களிலேய அந்த சின்னஞ்சிறு புத்தகமும் என்னை என்றென்றைக்கும் கட்டிபோட போகிற ஒன்றென எனக்குத் தெரியாது.

-முதல் ஆசிரியன் எழுதியது சிங்கிஸ் ஐத்மாத்தவ்..

100 பக்கங்களில் ஒரு உலக இலக்கியம் என்பதைவிடவும், இது உலகத்துக்கான இலக்கியம். அதைவிட மூன்றாம் உலக நாடுகளில் உள்ள ஒவ்வொரு இளைஞனும் வாசிக்க வேண்டிய அவசியமான புத்தகம். ரஷ்ய இலக்கியங்களுக்குள் என்னை இழுத்துக்கொண்ட புத்தக வரிசையில் இந்தப் புத்தகத்தின் பங்கு முக்கியமானது. வாசித்த ஒவ்வொருவரையும் ஆசிரியராக மட்டுமல்ல, மாணவராகவும் உணரவைக்கும் புதினம்.

ரஷ்ய இலக்கியங்களைக் குறைசொல்பவர்கள்கூட காதலோடு இலக்கியம் படைத்த சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவர்களின் படைப்புகளை ஏற்றுக்கொண்டாடுவார்கள். கலங்கமற்ற பேரன்பை பேசக்கூடிய படைப்புகள் அவருடையது. அவருடைய குல்சாரியை வாசித்தப்பிறகு மனிதரை மட்டுமல்ல ஒரு குதிரையின் பேரிலும் நீங்கள் பேரண்பை உணர்வீர்கள்.

மாஸ்கோவில் பணியிலிருக்கும் கல்வித்துறை அறிஞர் அல்டினாய்சுலைமனோவா அவர்களுக்கு அவரது சொந்த கிராமத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய பள்ளி கட்டிடத்தைத் திறக்க அழைப்புவருகிறது. தான் வாழ்ந்து வளர்ந்த அழகிய கிராமத்தில் சில நாட்களாவது தங்க வேண்டுமென்ற எண்ணத்தில் அவர் கிராமத்துக்குச் செல்கிறார்.

பல அதிகாரிகள், ஊர்மக்களுக்கு மத்தியில் அந்தப் புதிய பள்ளி கட்டட திறப்பு விழா நடந்துகொண்டிருக்கிறது. அப்போது கிராமத்து இளைஞன் ஒருவன் கை நிறைய பள்ளிக்கான வாழ்த்து தந்திகளைப் பள்ளியின் தலைமைஆசிரியரிடம் கொண்டு வந்து தர “இந்தத் தந்திகளைக் கொண்டுவந்தது பெரியவர் துய்ஷனா?” என்று கேட்கிறார்.

“ ஆமாம்… காலம் தவறாமல் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதால் குதிரையை வெகு தூரம் விரட்டிக்கொண்டு வந்திருக்கிறார் பாவம் களைத்து போயிருக்கிறார்” என்று சொல்கிறான் அந்த இளைஞன்.

“அவரை உள்ளே வர சொல்ல வேண்டியதுதானே.. அவரை அழையுங்கள்” என்று சொல்ல

“இல்லை அவர் நிறைய கடிதங்களைப் பட்டுவாடா செய்யவேண்டுமாம் அதனால் கிளம்பிவிட்டிருக்கிறார்” என்ற குரல் கேட்கிறது.

யுத்தத்தில் காயம்பட்டு மருத்துவமனையில் இருந்தவர்.. சொந்த கிராமத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இங்கே வந்து சேர்ந்தார், பாவம் ஏனோ கல்யாணம்கூட செய்துகொள்ளவில்லை அருமையான மனிதர். என்கிற பேச்சு அல்டினாய் காதில் விழுகிறது.. இதை கேட்டுக்கொண்டிருக்கும் நடுத்தர வயது தாண்டிய அல்டினாவுக்கு நெஞ்சு துடிக்கிறது, முகமே மாறிவிடுகிறது. கண்கள் கலங்குகின்றன, விருந்து கொண்டாட்டங்கள் முடிந்து மக்கள் கிளம்ப அல்டினாய் அந்தக் குன்றின் உச்சியிலிருக்கும் பாப்ளர் மரங்களைப் பார்த்தபடி “இந்தப் பள்ளி கட்டட திறப்பு விழாவுக்கு என்னைவிட அவர்தான் தகுதியானவர்… அட அவர் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்..” என்று முணுமுணுக்கிறார் அந்தப் பெண்மணி, ‘நான் வந்திருக்கிறேன் என்று அவருக்குத் தெரியும் ஆனாலும் அவருக்கு என் முன்னே வந்து கலக்கத்தை உண்டுபண்ண விருப்பமில்லை… ஆமாம் அவர் அப்படிபட்டவர்தானே… என்று அவர் உள்ளம் நினைத்திருக்க வேண்டும் எது எப்படியோ.. அவர் உயிரோடு இருக்கிறார்.’ அந்தப் பென்மணியின் நெஞ்சு முன் எந்தக் காலத்திலும் துடிக்காத வகையில் துடிக்கிறது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு மாஸ்கோவுக்கு உடனே கிளம்ப அவசரப்படுகிறாள். அவள் உள்ளத்தில் கடந்தகால நினைவுகள் புயலாக வீசுகிறது. ‘சில நாட்கள் கிராமத்தில் தங்கனும்ன்னு வந்தீங்க… பிறகேன் உடனே கிளம்புகிறீர்கள்’ என்று நண்பர்கள் கேட்கிறார்கள். அவரோ பிடிவாதமாக அன்று இரவே ரயில் பிடித்து மாஸ்கோவுக்குக் கிளம்பி போய்விடுகிறார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவரும் நகரத்தில் பணிபுரிகிறார். அவர்தான் ‘சில நாட்கள் தங்குவதாகச் சொல்லி ஏன் முதல் நாளே கிளம்பிவிட்டீர்கள்’ என்று கேள்வி கேட்டவருக்குப் பதிலாக நகருக்கு போனதும்…

தன் மனதில் வீசும் புயலை, ஏன் தன்னால் அந்த கிராமத்தில் இருக்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை ஒரு நீண்ட கடிதமாக எழுதி. கடிதத்தின் முடிவில், என் கிராம மக்களுக்குத் தரும் வாக்குமூலம், இதை அந்தக் கிராமத்து மக்களுக்குத் தெரியபடுத்திவிடவும் என்று அந்தக் கடிதம் முடியும். அதுதான் முதல் ஆசிரியன் என்கிற புதினம்.

1924ஆம் ஆண்டில் நடந்தது கல்வியறிவற்ற தற்குறிகள் நிறைந்த கிர்கீசிய மண்ணில் புரட்சியின் மக்களரசு முதல்முறையாக கல்வி, பள்ளி, ஆசிரியர், என எந்த வழக்கமுமற்ற கிர்கீசிய கிரமமான கர்க்குரீக்கு கற்பிக்கும் அடிப்படை அறிவுமற்ற ஒருவனை அனுப்புகிறது. ஒரு நிலமற்ற சொந்தமாக ஒரு ஆடுகூட இல்லாத ஏழை இளைஞன் துய்ஷேன்தான் அவன்.

மக்கள் கூட்டமாக நிற்க இந்த ஊரில் பள்ளி ஒன்று வேண்டுமென்பதற்கான அவசியத்தை இளைஞன் பேச.. அந்த ஒட்டுமொத்த மக்களும் சிரிக்கிறார்கள்.… “பள்ளியா எதற்கு நாம் விதைக்கப் போகிறோம், அறுக்கப் போகிறோம் உண்ணப்போகிறோம் அதற்கு எதற்குப் படிப்பு… ம் நல்ல கதை தான்” என்று சிரிக்கிறார்கள்.

குன்றின் உச்சியில் உள்ள காலி கொட்டகை ஒன்றைச் சீர்படுத்தி அதில் பள்ளியை உருவாக்க மக்களின் உதவியைக் கேட்கிறான். “நீயே ஒரு ஆடும் சின்ன வீடும் கூட இல்லாத ஏழை உனக்கெதற்கு இந்த வேலை வழக்கமாக முல்லாக்கல்தானே படம் நடத்துவர்கள்” என்று கேலி பேசி… கீழ்படிய மறுப்பவர்களுக்கு எதிரே அரசு முத்திரை பதித்த உத்தரவு காகிதத்தை காட்டுகிறான். அரசு உத்திரவைப் பார்த்ததும்… “அதற்கென்ன அரசு உனக்கு பணம் தரும். பிறகு எங்கள் உதவி எதற்கு, நீ எதாவது செய்துக்கொள்” என்று கலைந்து போகிறார்கள்.. நிலத்தை அவர்களுக்கு அரசு உரிமையாக்கியபோது சிரித்த மக்கள் கல்வியையும் உரிமையாக்கா நினைத்தபோது அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

துய்ஷன் தன்னந்தனியனாக அந்த கைவிடப்பட்ட குதிரை கொட்டகையை சீர்படுத்தி ஒரு பாதுகாப்பான பள்ளியாக உருவாக்குகிறார். அப்படியான ஒரு நாளில் கனப்புக்குபோட காய்ந்த சாணி பொறுக்கும் சிறுவர்கள் அந்தப் பக்கம் வருகிறார்கள். அதில் அல்டினாயும் ஒருத்தி அவளே மற்றவர்களில் சற்று வளர்ந்தவள்… அட இவர் ஒருவரே எப்படி தன்னந்தனியனாக வேலை செய்கிறார் அவருக்கு உதவ அவள் மனம் ஏங்குகிறது.

அவளோ தாய் தந்தை இல்லாமல் உறவினர் வீட்டில் வளர்கிறவள் அவளை வளர்க்கும் மாமி கொடுமைக்காரி அவளது உழைப்பைச் சுரண்டிக்கொண்டு வயிற்றுக்கு வேண்டா வெறுப்பாக கஞ்சி ஊற்றுபவள்.

துய்ஷன் என்கிற அந்த ஆசிரியரின் முதல் கருணைமிக்க புன்னகையில் மனம் இளகியவள் தான் பொறுக்கி வந்த எரு குவியலை அவரது பள்ளியில் கொட்டி செல்கிறாள். பள்ளி நடக்கும்போது கனப்படுப்பில் போட பயன்படும் என்பதால்.
போகிற வழியில் கிடைத்தவற்றை பொறுக்கிக்கொண்டு வீட்டுக்குச் செல்ல மாமி திட்டுகிறாள்.

இப்போது பள்ளி தயாராகிவிட்டது. பிள்ளைகளை அழைத்துப்போக துய்ஷன் வருகிறார். பெற்றோர் அரசு உத்தரவு இருக்கிறது என்பதால் மனமற்று அனுப்புகிறார்கள். அல்டினாய் வீட்டில் போய் அவளை அழைக்க மாமி அவளை அனுப்ப மறுக்கிறாள். “அவளை வயிற்று சாப்பாடு போட்டு வைத்திருக்கிறோம் உங்களோடு அனுப்பிவிட்டால் எனக்குக்கூட ஒத்தாசை செய்வது யாராம்” என்று அவரை விரட்டுகிறாள். எப்படியோ பேசி அவளையும் அழைத்து வந்து பள்ளி செயல்பட துவங்குகிறது.

இதில் சிறப்பு என்னவென்றால் துய்ஷன் கற்று தேர்ந்த ஆசிரியர் அல்ல… போர் சேவையில் இருந்தபோது தன் தோழர்களால் ஓரளவு எழுத படிக்க பயின்றவன் என்பதைதவிர வேறு இல்லை. ஆனால் கிர்கீசிய மொழிக்கு வரிவடிவம்கூட உருவாகாத காலம் பள்ளி கல்வி வழக்கமற்ற மண்ணின் சின்ன கிராமத்தில் உனக்குத் தெரிந்ததை மக்களுக்குச் சொல்லிக்கொடு என்று புதிய புரட்சி அரசு அனுப்பியதை மனதில் கொண்டு தனக்குத் தெரிந்ததை அவர்களுக்குக் கற்றுத் தருகிறார். அந்தக் குன்றின் மீதுள்ள பள்ளிக்கு ஒரு சிறு ஓடையைக் கடந்தேபோக வேண்டும் குதிரையில் போகிற வசதி படைத்தவர்களுக்கும், பெரியவர்களுக்கும் சிரமமில்லை ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கடினம் அதைவிட பனிக்காலத்திலோ மிக கடினம். அகர வரிசை எழுத்துகளை அவர்கள் கற்றுக்கொண்டப்பிறகு முதன்முதலாக லெனின் என்ற பெயரை எழுதுகிறார்கள்.

துய்ஷன் எழுத்துக்களை, வார்த்தைகளைவிடவும் உலகை அதன் பரந்த வடிவை அவர்களுக்குச் சொல்கிறார். இந்த உலகில் பல கடல்கள் இருக்கிறது, பெரியப்பெரிய நகரங்கள் இருக்கிறது, கடல்களில் பிரம்மாண்டமான கப்பல்கள் இருக்கின்றன என இன்னும் எவ்வவளவோ… அவர்கள் அவரிடம் தெரிந்துகொண்டார்கள் .

அல்டினாய்க்கு ஆசிரியர் மீது தனியான அன்பு பூக்கிறது. எப்போது கடின சொற்களுக்கு மத்தியில் பழகியவள் என்பதால் அவரது கருணைமிக்க அன்பான புன்னகை அவளை மலரச் செய்திருந்தது. துய்ஷன் குழந்தைகளுக்குத் தான் கற்று கொடுத்தது என்ன என்பதைப் பக்கத்தில் உள்ள நகர கமிட்டிக்கு அறிக்கை செய்யவும் அடுத்து என்ன கற்றுத்தர வேண்டும் என அறிந்துகொள்ள போய் வர மூன்று நாட்களாகும் அந்த நாட்கள் மிக ஏக்கமும் கவலையும் கொள்ளுமளவு அல்டினாய் ஆசிரியரை நேசிக்கிறாள். ஆசிரியர் என்றாலும் அவன் புத்திளம் இளைஞன்தான்.

இதோ பனிக்காலம்… வெண்ணிற உறை பனி பொழிகிறது…

ஓடையை கடந்து பள்ளியுள்ள குன்றுக்குச் செல்ல பிள்ளைகள் கடினமாக உணர்கிறார்கள். ஆசிரியர் குழந்தைகளுக்கு சின்ன, ஆனால் ஆபத்தான ஆற்றை கடக்க உதவுகிறார். அவருக்கே போதுமான பனியிலிருந்து தற்காத்துக்கொள்ளும் உடைகள் கிடையாது, இதில் அவர்படும் பாடுகளைப் பார்த்து பணக்கார கழிசடைகள் சிலர் சிரித்துக் கேலிபேசுகிறார்கள்

“அட இந்த துய்ஷன் எப்படி உழைக்கிறான் பாரேன்… முன்னமே தெரிந்திருந்தால் இவனை நான் இரண்டாந்தாரமாக கட்டியிருப்பேன்” என்று சிரிக்கிறார்கள்.

அவருக்கு உதவும் போது அல்டினாய் ஒருமுறை அவள் குளிர் ஓடையில் சிக்கிக்கொள்ள துய்ஷன் காப்பாற்றுகிறார், பிறகு அவரே முயன்று ஒரு பாலத்தை அமைக்கிறார்.

அல்டினாய் உண்மையில் மிக திறமையான மாணவியாக இருந்தாள். ஆசிரியர் ஒருநாள் அவளிடம் இப்படிச் சொல்கிறார்:

“ நீ மட்டும் நகரத்துக்குப் போனால் எவ்வளவு அற்புதமானவைகளைக் கற்றுக்கொள்வாய் தெரியுமா… அட நீ எப்படிப் பட்டவளாக வளர்ந்துவிடுவாய்” என்று சொல்ல அல்டினாய் நினைப்பாள்,

“நீ மட்டும் என் அண்ணணாய் இருந்திருந்தாள் உன்னைக் கட்டியணைத்து முத்தமிட்டிருப்பேன்… சே… ஆனால் பாழாய் போன வெட்கம் தடுக்கிறது” என்று ஏங்குகிறாள்.

இந்தக் காட்சியை நான் பல பத்துமுறை படித்திருப்பேன்… அதைவிட இப்போது நெஞ்சு விம்முகிறது.

ஒரு நாள் துய்ஷன் இரண்டு பாப்ளர் மர கன்றுகளைக் கொண்டுவருகிறார். அவற்றை இருவரும் நடுகிறார்கள். இந்த மரம்போல மாணவர்களாகிய நீங்களும் வளர்ந்து இந்தச் சமூகத்துக்குப் பயன்படுவீர்கள். என்று முணுமுணுக்கிறார்.

ஜனவரி மாத கடைசி நாளில் வழக்கத்துக்கு முன்பே ஊரிலுள்ள குழந்தைகளை அழைத்துப்போக ஆசிரியர் வருகிறார், அவரது முகம் எப்போதுமில்லாதளவு துயரமாக இருப்பதை அல்டினாய் பார்க்கிறாள்.

வகுப்பறை போய் சேர்ந்ததும் எல்லோரும் தொப்பிகளைக் கழற்றி வையுங்கள் குழந்தைகளே! என்று சொல்லும்போது ஆசிரியரின் கண்கள் கலங்குகிறது. தனது குல்லாவையைக் கழற்றி வைக்கிறார். பின்புற சுவரில் மாட்டியுள்ள படத்தை காட்டி நம் தோழர் லெனின் இறந்துவிட்டார் அவருக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம். அவர் கண்கள் கலங்குகிறது. இந்த உலகமே மவுனத்தில், துயரத்தில் ஆழ்ந்ததுபோல அந்த சின்னஞ்சிறு பள்ளியும்.

பனி பொழிவுமிக்க அந்த நாளில் கட்சியில் சேர ஆசிரியர் நகரத்துக்குப் போகிறார்… அந்த நாட்கள் அல்டினாய் மிக துன்புறுகிறாள்… அவளது மாமி அந்தக் கடும் பனியும் ஊதல் காற்றும் வீசும் சூழலில் அந்தக் கிராமத்தின் மூலையில் இருக்கும் சாய்க்கால் பாட்டிக்குத் தரவேண்டிய சாக்குப்பை ஒன்றை தந்துவிட்டு வரசொல்கிறாள். முடிந்தால் இந்த இரவு அங்கேயே தங்கிவிட சொல்கிறாள்.
இந்த சனியன் எப்படியாவது ஒழிந்தால் சரியென நினைத்தாளோ என்னவோ… துன்பத்திலும் ஒரு மகிழ்ச்சியென அல்டினாய் துள்ளிக்கொண்டு பனியில் சேற்றில் தத்தி ஓடுகிறாள் காரணம் துய்ஷன் அங்குதான் தங்கியிருக்கிறார்.

நகருக்குப் போன ஆசிரியர் அன்று திரும்பிவர வேண்டிய நாள்.. பனிப்புயல் வீசுகிறது நேரம் கடந்த சூழலில் தூரத்தில் ஓநாய்கள் எதையோ சூழ்ந்துகொண்டு ஊளையிடும் பயங்கர ஒலி… துய்ஷன் கதை முடிந்தது என்று சாய்கால் கிழவியின் கிழவர் உள்ளத்தில் நினைக்க யாரோ வாசலை நெருங்க துய்ஷன் பனி அப்பிய மனிதனாக வருகிறான் அவனது குதிரையை ஓநாய்கள் கடித்துக் குதற அவன் மட்டும் தப்பி வந்திருக்கிறான்.

அந்தக் கொடும் இரவில் ஆசிரியரும், அவளும் சந்தித்துக்கொள்கிறார்கள். இந்தச் சூழலில் மாமி அல்டினாயை தன் பணக்கார போக்கிரி உறவினனுக்கு இரண்டாம் தாரமாக ஒப்டைக்க முடிவெடுக்கிறாள். இது ஆசிரியருக்குத் தெரிய அவளைக் காப்பாற்ற தன் பள்ளியிலேயே தங்கவைத்துக் கொள்கிறார்.

அல்டினாய்க்கு இதுபற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஆசிரியர் எதோ காரணத்துக்காக மட்டுமே அப்படி நடந்துகொள்கிறார் என்று புரிகிறது.

இரண்டொரு நாட்கள் கழிகிறது.

பண்பற்றமுறையில் யாரோ பள்ளியை நோக்கி குதிரையில் வருகிறார்கள். கதவை உடைத்து அல்டினாயைக் கடத்துகிறார்கள். இதை எதிர் பார்த்தவர்போல, ஆசிரியர் தடுக்கிறார்… அவர் மண்டையை, கையை உடைத்து அவளைத் தூக்கிச் செல்கிறார்கள். கையறுநிலையில் காயம்பட்ட ஆசிரியர் தனது இயலாமைக்காக கதறியழுகிறார். அதனால் என்ன? இது புரட்சிகர அரசு அல்லவா கழிசடைகள் ஆட்டம் செல்லுபடியாகுமா என்ன? வேறெதற்கு புரட்சி நடந்ததாம்.

அல்டினாய் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஒரு உறுதியான கூடாரத்தில் அடைத்து அதற்கு தன் முதல் மனைவியையே காவலுக்கு வைத்திருக்கிறான் அந்த கயவன். அங்கிருந்து அல்டினாய் தப்பியோட முயல்கிறாள். அடிபட்டு வீழ்ந்து கிடந்த தன் ஆசிரியர் நினைவுக்கு வருகிறார்.
அந்த நேரம் தன்னை நாசம் செய்தவனின் குறட்டை ஒலி கேட்கிறது. அவள் தங்கியிருக்கும் கூடாரங்கள் பிரிக்கபட்டு வேறிடம் போக தயாராகிறார்கள். அல்டினாய் குமுறி அழுகிறாள் செய்ய வேறொன்றும் இல்லை.

அப்போது அவர்களை நோக்கி மூன்று பேர் குதிரையில் வருகிறார்கள்.
ஒன்றில் கை, தலை இவற்றில் கட்டுகளுடன் துய்ஷேன், பின்னே இருவர் பட்டாளத்து தொப்பி அணிந்து சிவப்பு பட்டை தோள்களில் பளிச்சிட… அடடா… என் ஆசிரியர் உயிருடன் இருக்கிறார். அதோ வருகிறார்
அவள் கூச்சலிட்டாள்..

அல்டினாயை நாசம் செய்த கயவன் தன் பழைய பாசிச வெறியுடன் துய்ஷேன்மீது பாய, துள்ளி எழ அவனுக்கு எதிரே படை வீரர்களின் இரு குழல் துப்பாக்கி நீள்கிறது.

குற்றவாளி போகவேண்டிய இடத்துக்குப் போவதை தவிர வேறுவழி…

“நீ நகரத்துக்குப் போக வேண்டும் பள்ளி படிப்பை மேற்கொண்டு படிக்க” என்று துய்ஷேன் சொல்கிறார்.

அல்டினாய் கண் கலங்குகிறாள். ஆனாலும் ஆசிரியர் வார்த்தைகளை அவளால் தட்ட முடியவில்லை. துய்ஷேன் தன்னுடன் கொண்டு வந்த சோப்பு கட்டியை தந்து வழியில் தென்பட்ட ஓடையில் குளிக்கச் சொல்கிறார்…

“அன்பே நான் உன்னை எப்படி நேசிக்கிறேன் தெரியுமா…? என்னால் ஆகுமென்றால் உன்னை எங்கும் போகவிடமாட்டேன் ஆனால் எல்லாவற்றையும்விட நீ பயில வேண்டும். உன்னைப்போன்ற திறமையானவர்கள் இந்த நாட்டுக்கு நிறைய தேவைப்படுகிறார்கள்… உன் வழியில் நான் நிற்க விரும்பவில்லை… ச்…”

தாஷ்கண்டுக்குப் போக ரயிலேற… ரயில் கிளம்புகிறது… ரயிலின் பின்னே ஓடுகிறார்.

“அல்டினாய்…” துய்ஷேன் கத்துகிறார்.

அந்தக் கத்தலின் பொருளை அல்டினாயின் இதயதால் பன்மடங்கு உணர்ந்திருக்க முடியும்… “அய்யோ பாவம்…” ஆமாம் பிறகு ஒருநாளும் அவர்கள் சந்தித்துக்கொள்ளவில்லை.

அல்டினாய் படித்துப் பட்டம்பெற்று பணிக்குப் போகிறாள். அவளுக்கு ஆசிரியர்மீதான அன்பு பெருகி, “நீங்கள் நினைத்ததை நான் சாதித்துவிட்டேன் இனி நம் வழியில் தடையாக நிற்க எதுவும் எதுவுமில்லை. இதோ உங்களைச் சந்திக்க வருகிறேன் உங்களைக் கட்டியணைத்து, அன்பையும், மகிழ்ச்சியையும் சொல்லப் போகிறேன்.” என்று ஒருவேளை அல்டினாய் நினைத்திருக்கலாம்.

அது போர் காலம். ரயில் நிலையத்திலிருந்து கிராமத்துக்குப் போகும் வழியிலேயே ஆசிரியருடன் சேர்ந்து தான்நட்ட குன்றின்மீது தெரியும் நெடிந்துயர்ந்து வளர்ந்த இரண்டு பாப்பளர் மரங்களைப் பார்க்கிறாள்… அது அவளைப் பேரன்புடன் அசைந்தாடி, “வா… வா” என வர வேற்கிறது. ஆனால் அவளுக்குக் கிராமத்தை நெருங்கும் முன்பே அவ்வளவு உவப்பற்ற தகவல் கிடைக்கிறது… ஆமாம் ‘துய்ஷேன் ஊரில் இல்லை… போரில் நாட்டைக் காக்க செம்படையில் சேர்ந்துவிட்டார்…’

அல்டினாய் ஏமாற்றத்துடன் திரும்புகிறாள். ‘இந்தக் கிராமத்தில் அவரை சந்திப்பதைத்தவிர வேறு என்ன இருக்கிறது… ம்….’ அவள் தனக்குள் துயரத்துடன் முணுமுணுத்தபடி திரும்பிவிடுகிறாள்.

போர் முடிவுற தன் கிராமத்திலிருந்து வரும் ஆட்களிடம் துய்ஷேன் பற்றி விசாரிக்க போரில் அவர் காணாமல் போனதாகவும், அதை அரசு முறைப்படி கிராமத்துக்கு அறிவித்ததாகவும் சொல்கிறார்கள்.

கண்ணீர் பெருகுகிறது… அது ஒன்றுதானே வழி…

“அய்யோ என்… என்… அன்பான ஆசிரிரை, பேரன்பு காட்டிய அந்த கடமை உணர்ச்சிமிக்க மனிதனை, கடைசியாகக் கூவியழைத்த அந்தக் குரலுக்கு சொந்தக்காரனை, இனி காண முடியுமா? முடியாதா? ஏங்குகிறாள்… ”

ஒருமுறை கல்வி பணிக்காக அல்டினாய் நெடுந்தோலைவு சைபீரியா வழியாக பயணித்துக்கொண்டிருக்கிறாள். அப்போது ஒரு ரயில் நிறுத்தத்தில் நடைமேடையில் அவளுடைய துய்ஷேன் நின்றுகொண்டிருக்கிறார்.

“அட… வண்டி கிளம்பிவிட்டது” என்ன செய்வது அவசரத்திற்கு வண்டியை நிறுத்தும் சங்கிலியைப் பிடித்திழுக்கிறாள் நின்ற வண்டியிலிருந்து கத்திக்கொண்டு, துய்ஷனை நோக்கி… “துய்ஷேன்….” என்று முதல்முறையாக அவரது பெயர் சொல்லி அழைத்தபடி கைகளை விரித்துக்கொண்டு ஓடுகிறாள்…

அவரும் அப்படியே… அவர் ஏனோ சட்டென தயங்கி நின்று விட இவளுக்கும் புரிகிறது. அது துய்ஷேன் போல ஒருவர்…. துய்ஷேன் அல்ல.

போரில் ஓவ்வொரு வீடும் ஒரு இழப்பைட் சந்நித்துள்ளது. எனவே அவளைட் சகப்பயணிகள் புரிந்துகொள்கிறார்கள்…. பயணத்தில் இடைஞ்சல் செய்ததற்காக ரயில் அதிகாரி தண்டணை பணம் கட்டச்சொல்ல அவளோடு பயணிக்கும் சக ராணுவ வீரர் அதைக் கட்டி அவளது துயரைப் பகிர்ந்துகொள்கிறார்… அல்டினாய் இனி என்றென்றும் தன் அன்பனை, ஆசிரியனைப் பார்க்கப் போவதில்லை… என்கிற எண்ணத்தில் வயது கடந்த பின் மணம் செய்துகொள்கிறார்.

வெகுகாலம் கடந்தபின் ஒரு கட்டட திறப்பு விழாவு சம்பந்தமாக அவள் கிராமத்திற்குப் போகிறாள்… அதே ஊரில் துய்ஷேன் இருக்கிறார்… கடமை தவறாத தபால்காரராக… கல்யாணமற்ற வாழ்வு வாழ்ந்தபடி… ரயிலுக்கு ஓடி வந்து எழுப்பிய அன்பின் குரல் இப்போதும் கேட்கிறது…

ஆனால் என்ன செய்ய? அய்யோவென அரற்றுகிற என் நெஞ்சே என்ன செய்ய?

தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அல்டினாய் கிராமத்தாருக்கும், உலகுக்கும் சொல்ல விரும்பும் வாக்குமூலத்தை ஒளிவுமறைவற்று கடிதமாக நண்பருக்கு அனுப்புகிறாள்.

அந்த கிராமம் மட்டுமல்ல ரஷ்யாவின் பல கிராமங்கள் இப்போது கிர்கீசிய மொழிக்கான சொந்த வரிவடிவத்தில் எழுதுகிறது. இலக்கியங்கள் படைக்கிறது… கல்வியில் இப்போது முன்வரிசையில் இருக்க… இதுபோன்ற ஆசிரியர்கள்தானே காரணம்…

முதல் ஆசிரியனை வாசித்துப்பாருங்கள். ஆனால் நல்ல மொழிப்பெயர்ப்பில் வாசிக்க வேண்டும்.

பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ஒன்று விலை மலிவாக இருந்தது. ரஷ்ய பதிப்பு அது. இப்போது ஏடுஏடாக பிய்ந்துவிட்டது.

அதனால் என்ன துய்ஷேன் என் நெஞ்சில் தங்கிவிட்டார்… எனக்கும்கூட எப்படிக் கற்றுக்கொள்வது, எப்படிக் கற்றுத் தருவது என்று புரியவைத்தார்…
அடுத்து… இந்தப் புத்தகமும் நான் திருடிவந்த புத்தகம்தான் உறுதியளிக்கிறேன்.

முந்தைய தொடர்கள்:

4. லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு – https://bit.ly/2xRVWN0
3.நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல – https://bit.ly/3b7r09O
2.லெனினுக்கு மரணமில்லை – https://bit.ly/2IXJU79
1.புத்தகங்களைத் திருடுகிறவன் – https://bit.ly/3baGDNO

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சகோதரிகள் : கரன் கார்க்கி
  2. சிங்கிஸ் ஐத்மாத்வ் : ஜமீலாவின் ‘’கிச்சினே பாலே ’’ -கரன் கார்க்கி
  3. அலெக்சாந்தர் புஷ்கினின் ’கேப்டன் மகள்’- கரன் கார்க்கி
  4. ‘’தாக்குங்கள்.. பெத்யூன் நம்முடன் இருக்கிறார்’’: ஒரு மருத்துவப் போராளியின் கதை- கரன் கார்க்கி
  5. உண்மை மனிதனின் கதை |  பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி
  6. ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம்: ‘உலகை குலுக்கிய பத்து  நாட்கள்’ - கரன் கார்க்கி
  7. லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.
  8. நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல, வாசிப்பது எனக்கு மண்ணில் நடப்பதுபோல - கரன்கார்க்கி
  9. லெனினுக்கு மரணமில்லை - கரன்கார்க்கி
  10. 1. புத்தகங்களைத் திருடுகிறவன்