6. அங்கே என்ன சத்தம்

தெரிதா தனது The Politics of Friendship (நட்பின் அரசியல்) என்ற புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டிலின் ஒரு மேற்கோளைப் பற்றி வெகுசுவாரஸ்யமாக பேசுகிறார்: அரிஸ்டாட்டில் தன் நண்பர்களிடத்து இவ்வாறு ஒருமுறை சொல்லுகிறார்: “ஓ நண்பர்களே, நண்பர்கள் என யாருமே இல்லை”. இந்த மேற்கோளின் சுயமுரண் வெளிப்படையானது – நண்பர்களே இல்லையென்றால் அரிஸ்டாட்டில் இங்கு “நண்பர்களே” என அழைத்துப் பகிர்ந்துகொள்ளும் அந்த நபர்கள் எல்லாம் யார்? அரிஸ்டாட்டில் என்னதான் சொல்ல வருகிறார்? தெரிதா இவ்வாறு விளக்குகிறார் – நட்பு என்பது யாரெல்லாம் நமது நண்பர் அல்ல என நாம் வகுத்துக்கொண்ட பின்னர் தோன்றுகிறது. நீ எனது நண்பன், ஏனெனில் அவன் எனது விரோதி, அவன் எனது விரோதி எனில் அவனுக்கு அடுத்திருப்பவன் எனக்கு நண்பன், அவன் எனக்கு நண்பன் எனில் என் விரோதிக்கு அவனும் விரோதி, அவனுக்கு அடுத்திருப்பவன் எனக்கு விரோதி, ஏனெனில் அவன் என் நண்பனுக்கு நண்பன் அல்ல, இன்னும் ஒருவன் எனக்கு நண்பனோ விரோதியோ அல்ல, அவனை இரண்டு வகைமைக்குள்ளும் அடைக்க முடியவில்லை, அவன் “துரோகியாக” இருக்க வேண்டும், அவனுக்கு எதிர் இருக்கையில் இருப்பவன் அவனுக்கு விரோதி என அறிவேன், ஆனால் அதற்காக அவன் எனக்கு நண்பன் ஆக முடியாது, ஏனெனில் ஒரு துரோகியின் விரோதியும் விரோதியின் விரோதியும் ஒன்றல்லன்.

நீங்கள் கேட்கலாம், நமது நண்பர்களை எல்லாம் இவ்வாறான இருமைக்குள்ளா வகுத்துக் கொண்டிருக்கிறோம் என. “நண்பன்” எனும் கோரல் எப்போதும் இருமையை வலியுறுத்துகிறது, ஆனால் நட்பனுபவத்தில் இருமை இருப்பதில்லை. (அதற்கு பின்னால் வருகிறேன்.) நட்பு மிக அந்தரங்கமான உறவு – நீங்கள் உங்களுக்கு பரிச்சயமானவர்களின் வட்டத்தில் இருக்கும்போது ஒருவரை மட்டும் கட்டியணைத்து “இவன் என் நண்பன்” எனச் சொல்வது பரவலான சங்கடத்தை ஏற்படுத்தும்; மற்றவர்கள் தாம் புறக்கணிப்படுவதாய் ஒரு கணம் உணர்வர். ஆகையால் நாம் இப்படி அடையாளப்படுத்தாமல் அனைவரையும் சமமாக நடத்த அப்போது முயல்வோம்.

நமது நட்பு இவ்விடத்தில் அதுவரை நாம் நினைத்திருந்ததைப்போல “சாதாரணமானது” அல்ல, அது அசாதாரணமானது என உள்ளுணர்வில் அறிந்து கொள்வோம். பரிச்சயக்காரர்களின் அசௌகர்யத்தின் மௌனத்தில்தான் அந்த மனத்திறப்பு நமக்குக் கிட்டும். ஒருவர் தனது நட்பைப் பிரகடனம் செய்யும் போதெல்லாம் அது ஒரு அந்தரங்க ஒளிவட்டத்தைப் பெற்றுவிடுவது இதனாலே – இப்படியான பிரகடன நிலையை நட்பின் சமூகமாக்கம் எனலாம். ஆனால் பிரகடனம் செய்யத் தேவையிராமல் நண்பர்கள் பரஸ்பரம் சந்தித்து மனங்கள் ஒன்றுடன் ஒன்று ‘செம்புலப்பெயல் நீர்’போல் கலக்கையில் அங்கு சங்கடங்கள், அந்தரங்கம், அதுகுறித்த பிரக்ஞை ஏதும் இராது. நட்பனுபவம் என அதை நாம் வரையறுத்துக் கொள்வோம்.

நட்பனுவத்தில் நண்பன் என்பவன் நண்பன் அல்லாமல் ஆகிறான் என்கிறார் தெரிதா (அதுவே அரிஸ்டாட்டிலின் மேற்கோளின் பொருள்). அப்போது நண்பன்-விரோதி எனும் இருமை பனிப்புகைபோல மறைந்து விடுகிறது. அதனால்தான் அரிஸ்டாட்டில் நண்பர்களே! நண்பர்கள் யாருமில்லை என்கிறார், நண்பர்களே நண்பர்கள் அனைவரும் எதிரிகள் என அவர் சொல்லவில்லை. இந்த நுணுக்கமான வித்தியாசம் முக்கியமானது. ஒருவன் நமது விரோதி அல்லாமல் ஆகும்போதே நண்பன் ஆகிறான், ஆனால் அவன் நண்பன் ஆனபின் அவன் நமது நண்பனும் அல்லாமல் ஆகிறான், அவன் நாமாகவே ஆகிறான், நாம் அவனாகவே ஆகிறோம். இதை நட்பின் பூரணநிலை எனலாம். (நட்பின் சம்போகம்!)

அரிஸ்டாட்டில் நண்பர்களை பொதுவாக மூன்றாக பிரித்துக்கொள்கிறார்

– 1) ஒரு நோக்கத்தின், ஒரு பொதுவான தேவையின் பொருட்டு சேர்ந்திருக்கும் நண்பர்கள் (ஒரே துறையில் பணியாற்றுபவர்கள், சக படைப்பாளிகள், ஒரே கட்சிக்காரர்கள், ஒரே லட்சியம் கொண்டவர்கள்);

2) பரஸ்பரம் அளிக்கும் இன்பத்தின் பொருட்டு நட்பாகிறவர்கள் (சுவாரஸ்யமாகப் பேசுகிறவர்கள், பணம் செலவழிக்கிறவர்கள், இனிமையான சுபாவம் கொண்டவர்கள், வசீகரமான ஆளுமை கொண்டவர்கள்) – இலக்கியத்தில் நாம் காணும் குரு-சிஷ்ய நண்பர்களையும் இவ்வகைமையில் சேர்க்கலாம் என நினைக்கிறேன்.

3) நண்பனின் நலனில் மகிழ்ச்சியியும் நிறைவும் காண்கிறவர்கள் – இவர்கள் தான் வள்ளுவர் சொல்லும் “உடுக்கை இழந்தவன் கை” வகையினர். தான் எப்படி இருக்க முடியாதோ, எப்படி இருக்க விரும்பவில்லையோ அப்படி தன் நண்பன் இருப்பதால் அதை ஊக்கப்படுத்துவார்கள்; நண்பனின் மகிழ்ச்சியும் எழுச்சியும் தன்னுடையது என நம்பத் தலைப்படுகிறவர்கள்; நண்பனும் இவர்களை அப்படியே காண்பதால் இவர்கள் ஈருடல் ஓருயிராக வாழ்வார்கள் – ஒருவனுக்கு இரு வாழ்க்கைகள் என கற்பனை பண்ணிப் பாருங்கள். இது பாரமாக அல்ல தனி மகிழ்ச்சியாக இருக்கும் என்பதே கவனிக்கத்தக்கது. இந்த நிலை படைப்பாக்கத்துக்கு இணையானது – நண்பனுக்கு ஒரு தனிப்பட்ட பிரச்சனை வருகிறது, கடும் துன்பத்தில் விழுகிறான், நீங்கள் அவனுக்காக வருந்துகிறீர்கள், ஆனால் அந்த வருத்தம் நீங்கள் உங்களுக்காக வருந்துவதைப் போன்றதல்ல. இந்த வருத்தத்தில் ஒரு மனவிடுதலை இருக்கிறது. நீங்கள் களைத்துப் போகிறீர்கள், மனம் புண்படுகிறீர்கள், கண்ணீர் சிந்துகிறீர்கள், ஆனால் அதன் முடிவில் உங்களை ஒரு சிறிய பரவசம் வந்து ஆட்கொள்கிறது. நண்பனின் வெற்றியைக் கொண்டாடுவதும் இப்படியே.

சொல்லப் போனால் நண்பனின் வாழ்வில் ஒரு துன்பம் நேர்கையில் நீங்கள் நண்பனை விட அதிகமாய் அல்லல்படுகிறீர்கள், அவன் வாழ்வில் ஒரு மகிழ்ச்சி வருகையில் அவனை விட அதிகமாய் அதைக் கொண்டாடுகிறீர்கள், இரண்டின் போது உங்களுடையது அல்லாத ஒன்றில் மனம் தோய்கிறீர்கள். அது ஒரு நாடகத்தில் ஒரு பாத்திரம் அழுவதைப் போன்றது, சிரித்து ஆட்டம் போடுவதைப் போன்றது, ஆனால் உங்கள் உணர்ச்சிகள் நடிப்பல்ல. இந்த மூன்றாவது வகை நண்பர்களையே அரிஸ்டாட்டில் உன்னதமானவர்கள், ஆனால் இவர்கள் அரிதானவர்கள் என்றார்.

முந்தைய தொடர்கள்:

5.ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?https://bit.ly/2U1ZmW0

4.நிழல் நிஜமாகிறதுhttps://bit.ly/3a3P9xM

3.பாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்https://bit.ly/2QuC09r

2.தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர்https://bit.ly/2Qsg1jn

1.யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன்https://bit.ly/33AmePx