அங்கே என்ன சத்தம்? – 10

இன்று என்னிடம் ஒரு புரோஜெக்டின் பொருட்டு பேட்டி எடுக்க சில மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களின் விவாதப்பொருள் மாற்றுத்திறனாளிகள் கல்விப்புலத்தில் ஏற்றுக்கொள்ளப் படுகிறார்களா, ஏதேனும் சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறதா, அதற்குத் தீர்வு என்ன என, பல சுவாரஸ்யமான கேள்விகள், ஒவ்வொன்றாய் ஆர்வமாய்ப் பதிலளித்து வந்தேன். கடைசியாக ஒரு கேள்வி மாற்றுத்திறனாளிகளைப் பார்த்து அடுத்தவர் இரக்கப்படுவதைப் பற்றியது. அதுவே ஆக சுவாரஸ்யமான கேள்வி என்பதால் நான் அதற்கு அளித்த பதிலை மட்டும் இங்கு சொல்கிறேன்

இரக்கம் என்பது அண்மையில் ரொம்ப மோசமான பெயரைப் பெற்றுவிட்ட ஒரு உணர்வு. மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்ல சாதி, மத, பால்நிலைரீதியாக ஒடுக்கப்படுவோர் கட இரக்கத்தை விரும்புவதில்லை. “இரக்கப்படாதீர்கள், வேண்டுமானால் புரிந்துகொள்ளுங்கள்” என்பது அவர்களின் கோரிக்கையின் அடிநாதம். “எங்களை சமமாக நடத்துங்கள்” என்பது மறைமுகமான வேண்டுதல். ஒருவரைச் சமமாக நடத்த வேண்டும் என்பது இன்றைய ஜனநாயக சூழலில் முக்கியமானத் தேவை என்பதை நான் மறுக்கவில்லை, ஆனால் மானுட உறவாடலில் அப்படி சமத்துவம் சாத்தியமா என்பதில் எனக்குப் பல கேள்விகள் உண்டு.

நண்பர்கள், காதலர்கள், கணவன்-மனைவி, சக பணியாளர்கள், குடும்ப உறுப்பினர், சகோதர்கள், சகோதரிகள் எல்லாரும் சமமாகவா இருக்கிறார்கள்? இல்லை. இந்த உறவுகள் ஆரோக்கியமாக இருக்கிறதென்றால் அங்கே சமத்துவம் இல்லை என்பதே பொருள். ஒரு உறவுக்குள் சமத்துவம் வந்ததும் அங்கு ஒரு இறுக்கமும் கசப்பும் வந்துவிடுகிறது. கணவன்-மனைவியிடையே சமத்துவம் வந்ததும் விவாகரத்துக்கு / பிரிவுக்கு விண்ணப்பிக்கிறார்கள். பிள்ளைகள் உங்கள் தோள் உயரத்துக்கு வளர்ந்ததும் மனதளவில் உங்களிடம் இருந்து விலகுகிறார்கள். நண்பர்கள் எல்லா விசயத்திலும் ஒத்திசைவு பெற்றதும் பரஸ்பரம் வெறுக்கத் தொடங்குகிறார்கள் – இவன் நானல்ல, இவன் நானல்லாது இருக்கக்கூடாதா என மறைமுகமாக ஏங்குகிறார்கள். அடுத்து கருத்தொற்றுமை இல்லை எனக் காரணம்காட்டி விலகுகிறார்கள். விலகி இருக்கும் காலத்தில் இருவரும் வேறு வேறு எனப் புரிந்ததும் மீண்டும் இணைகிறார்கள்.

அசோகமித்திரன் குறித்த இந்த ஜோக் முக்கியமானது – அவருக்கு உடல் நலமில்லை என செய்தி கசிகிறது. அவர் வயதானவர். ஆகையால் நண்பர்கள் பதற்றமாகிறார்கள். செய்தி பரவுகிறது. இரு நண்பர்கள் அவரைக் காண்பதற்காக அவரது வீட்டுக்குச் செல்கிறார்கள். கதவைத் தட்டுகிறார்கள். கதவு திறந்தால் அங்கு முன்னே நிற்பது சாட்சாத் அசோகமித்திரனேதான். இருவரும் திகைக்கிறார்கள்.

அசோகமித்திரன் உடனே “என்ன ஏமாற்றமாகிவிட்டதா?” என்று முகத்தை ரொம்ப சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்கிறார்.

“உங்களுக்கு உடல் நலமில்லை என்றார்களே? அதான் பார்க்க வந்தோம்.”

“உடல் நலமில்லைதான், ஆனால் படுத்த படுக்கையாக இல்லை என்கிறார் அ.மி.

ஒருவருக்கு உடல் நலமற்றுப் போகும்போது நாம் கவலைப்படும் அளவுக்கு உள்ளுக்குள் மகிழவும் செய்கிறோம். அப்போது அவரை ஒரு குழந்தையைப்போல நடத்த, “கவனிக்க” நமக்கு ஒரு வாய்ப்பு கிட்டுகிறது. முன்பிருந்த அந்த ஆள் இப்போது அங்கிருப்பதில்லை; பலவீனப்பட்ட ஒரு உடல் நம்முன் படுத்துக் கிடக்கிறது. நம் இரக்கம் கண்களில் நீராகி சொரிகிறது. அவருக்கு ஏதாவது செய்ய நாம் பரபரக்கிறோம். அவருக்கும் நமக்கும் ஜென்மப் பகை இருந்தால்கூட அதை ஒரு நொடி மறந்துவிட்டு அன்பு பாராட்டுகிறோம். ஏனென்றால் சமத்துவம் முழுக்க காலியாகி அங்கே அந்த நபரின் தன்னிலை இல்லாமல் ஆகிறது. பல நாட்களாக பேசாமல் கடும் குரோதத்துடன் திரியும் கணவன் மனையிடையே ஒருவர் நோயுற்று விழுந்துவிட்டால் உடனே நேசம் மீண்டும் துளிர்த்துவிடும்.

விழுந்து விழுந்து கவனிப்பார்கள். “ஜுரம் கிரம் வந்து நாலு நாள் படுத்துக்கிட்டா பரவாயில்லைன்னு படுது” என என்னிடம் ஏக்கமாகப் பேசும் தோழிகள் உண்டு. அவர்களின் ஆசையெல்லாம் யாரையாவது தாம் சில நாட்கள் எந்த நிபந்தனையுமற்று சார்ந்திருக்க வேண்டும் என்பது. அன்புக்கான ஏக்கம் பல சமயங்களில் சமத்துவமின்மைக்கான ஏக்கமே.

சமநிலைக் குலையும்போதே நாம் ஒருவரின் தேவையை உணர்கிறோம்; அவரது அருகாமைக்காக ஏங்குகிறோம். என் உடல் எனக்குப் போதாது, நாம் சமமற்று இருக்கிறேன் என்பதுதானே பாலியல் இச்சை ஆகிறது? சமநிலைக்குலைவுதானே நம்மை கண்ணீர்விட்டு அழச் செய்கிறது? அதுதானே மற்றொருவரை அணைத்து “நான் இருக்கிறேன்” என ஆறுதல் சொல்லச் செய்கிறது. அப்போது சமநிலை ஒரு நொடி மீண்டும் மீள்கிறது. அடுத்து குலைகிறது. நாம் தத்தளிக்கிறோம். நாம் தத்தளிக்கத் தத்தளிக்க நமது அன்பு, பாசம், காதல், அக்கறை, கனிவு எல்லாம் உயிர்ப்புடன் இருக்கிறது.

ஆனால் இன்னொரு பக்கம், மானிட உறவுகளில் சமத்துவம் தோன்றும்போது நம் உணர்ச்சிகள் மரத்துப் போகின்றன. நாம் சுய-பிரக்ஞையுடன் செயல்படத் தொடங்குகிறோம். மனம் கரைந்து நெகிழ்ந்து பேச முடியாது போகிறது. “என்னை இவன் / இவள் மதிக்கிறானா / ளா?” என்னும் கேள்வி நமக்குள் எழுகிறது. அங்கு மற்றொரு பிரச்சனை – எனக்கு எதிர்தரப்பு தனி மரியாதை தர வேண்டுமெனில் அங்கு ஒரு சமநிலைக்குலைவு ஏற்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் உறவுநிலையில், அந்தரங்கமான, அன்பான உறவுநிலையில், விலகி நின்று கைகூப்புவதல்ல சமநிலை. அங்கு சமநிலையின் பொருளே வேறு. சொல்லப் போனால் அந்தரங்க உறவுகள் ஒவ்வொன்றுமே சமத்துவமின்மையை நம்வசம் கோருகின்றன.

சமநிலைக்குலைவுக்கும் சமத்துவத்துக்கும் இடையில் தோன்றும் பிரத்யேக உணர்ச்சிதான் இரக்கம். இரக்கமே நம்மை தன்னைத் தாழ்த்திக் கொள்கிறவரை நோக்கி இரு கைகளை நீட்டி அவரணைக்கத் தூண்டுகிறது. இரக்கமே நம்மைப் பதிலுக்கு கண்ணீர்விடச் செய்கிறது. இரக்கமே “இவருக்கு எதாவது பண்ண வேண்டும்” என ஆவேசத்தை அளிக்கிறது. நமக்கு ஒரு குழந்தையைப் பார்த்ததும் அள்ளிக்கொண்டு கொஞ்சத் தோன்றுகிறதே ஏன்? அது பலவீனமாக தம் உதவியை நாடும் நிரந்தரநிலையில் இருப்பதால். நீங்கள் அள்ளிக்கொண்டு கொஞ்சி திணறடித்தப் பிறகு குழந்தை அழுகையை நிறுத்தி உங்கள் தோளில் இருந்து இறங்கிவிடத் துடிக்கிறதே ஏன்? அது இப்போது பலவீனமாக இல்லை, இப்போது அது (தற்காலிகமாக) சமமாகிவிட்டது என்பதால், நம்மால் அதை ஏற்க முடிவதில்லை. நாம் அதை மீண்டும் அள்ளியெடுக்க நினைக்கிறோமே ஏன்? நம்மால் அது சமமாகிவிட்டதை நம்ப முடியாததால்.

தெருவில் இறங்கிப் போராடுகிறவர்களுக்கு குண்டாந்தடிகளால் அடிபடும்போதுதான் நாம் அவர்களுடன் சேர்ந்து நிற்க நினைக்கிறோம். ஒருவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொண்டு சாகும்போதுதான் மொத்த சமூகமும் அவர்களுக்காகக் கொதித்துப்போய் குரல் கொடுக்கிறோம். எனக்குச் சாப்பிடனும் காசு கொடு என்று ஒருவர் கேட்டால் முறைத்துவிட்டு கடந்து விடுவோம். ஆனால் பசிக்கிறது என அவர் கேட்டால் நம்மால் அப்படிக் கடந்துவிட முடியாது. ஒரு தலைவர் ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டம் பண்ணினால் சிக்கலில்லை. ஆனால் காலவரையற்ற போராட்டமாக அது சில நாட்கள் நீடித்தால் மொத்த மாநிலமும் அவருக்காகப் பதறிப் போகும்.

தன்னை பல விதங்களிலும் தாழ்த்திக் கொண்டு, சிறுக சிறுக அழித்து உடலை துன்புறுத்திக்கொண்டு அதை ஒரு போராட்ட மார்க்கமாகவே மாற்றி மொத்த தேசத்தையும் தன் பக்கம் ஈர்த்து, பின்னர் மகாத்மாவாகி சமநிலைக்குலைவை மக்கள் பக்கமாய் திருப்பி அவர்களையும் தன்னைப்போல “பலவீனப்பட்டர்களாக்கினார்” ஒருவர். அதற்கு அஹிம்சை எனப் பெயரிட்டார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு அதுவரையில் தான், தொடர்ந்து பயன்படுத்தி பாதிக்கப்பட்ட, அடிவாங்குகிற தரப்பை காந்தி இழந்தார். அதன்பிறகு, குறிப்பாக பிரிவினையின்போது, அவரது அரசியல் மக்களில் ஒரு சாராருக்கு கொதிப்பையும் கோபத்தையும் அவர் பால் ஏற்படுத்தியது, மறுசாராருக்கு அவர்மீதான ஈர்ப்பும் அக்கறையும் குறைய ஆரம்பித்தது. மக்களால் காந்திமீது இரக்கப்படவோ தன்னை காந்தியால் இரக்கப்படத்தக்கவர்களாக ஆக்கவோ இல்லை. ஒரு பொது எதிரி மறைந்திருந்தான். அப்போது கோட்ஸேயின் வடிவில் காந்திக்கு ஒரு “தீர்வு” கிடைத்தது; கோட்ஸேவின் துப்பாக்கி காந்தியை மீண்டும் ஒருமுறை அழித்தது, அவர்மீது தீராத இரக்கமும் இழப்புணர்வும் தேசம் முழுக்க அலையென எழ உதவியது. “சிலுவையில் ஏற்றப்பட்ட” அந்தத் தருணம் காந்தியை நிரந்தரமாக நாம் இரங்கி மனம் கசிய வணங்கும் நாயகனாக்கியது. தனது இன்மையே தன்னை மக்களிடத்து இணக்கமாக்கும், தன் சேதியை உணர்வுவேகத்துடன் கொண்டு சேர்க்கும் என அந்த மகான் அறிந்திருந்தார். அதனாலே மரண வாசனையை உணர்ந்தும்கூட அவர் அதற்காக பிர்லா மந்திரில் காத்திருந்தார்.

சமநிலைக்குலைவைப் போன்றே இரக்கமும் நாடகத்தனமானதுதான். சமநிலையின்மை ஒரு போலியான மனநிலை என்பதைப் போன்றே இரக்கமும் ஒரு செயற்கையான உணர்ச்சிதான். ஆனால் இந்த இரண்டும் இன்றி நம்மால் ஒரு உறவுக்குள் உயிர்த்திருக்க சாத்தியமாவதில்லை. இந்த இரண்டும் இல்லாதபோது ஒரு தரப்பு மற்றதை நோக்கி “இதயமற்றவன்” என்கிறது; மற்றது இதை நோக்கி “என்னை உனக்குப் புரியவில்லை”. இரண்டு தரப்புமே கடலில் மிதக்கும் இரு பனிப்பாறைகளாகி மெல்ல மெல்ல விலகிச் செல்கின்றன.

மகிழ்ச்சியின்போது என்னவாகிறது? இதேதான் – நான் மிகுதியான மகிழ்ச்சியில் இருக்கிறேன், எனக்குப் போதவில்லை, நீயும் என்னுடன் சேர்ந்து கொள்கிறாயா, என்னை நிரப்புகிறாயா என நாம் வேண்டுதல் விடுக்கிறோம். உண்மையில் நாம் மகிழ்ச்சியை யாருடனும் பகிர்வதில்லை. மகிழ்ச்சியை ஒரு துணையுடன் சேர்ந்து பன்மடங்காக்குகிறோம். ஒரு நிறைவின்மையை நிறைவாக்குகிறோம். மகிழ்ச்சியின் மையத்தில் உள்ள துயரமும் இதுவே. மிகுந்த மகிழ்ச்சியின்போதுதான் மனிதன் தன் தனிமையை சட்டென தொட்டறிகிறான். கொண்டாட்டம் என்பதே இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது தானோ! கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்கிறவன் – “மகிழ்ச்சிக்குக்” காரணமனவன் – “நான் மகிழ்ச்சியாக இல்லை, நான் மகிழ்ச்சியாக இல்லை” என பிரகடனம் செய்கிறான். ஆட்கள் தன்னைச் சுற்றி கத்தி ஆர்ப்பரிக்கத் தொடங்கியதும்தான் தனியாக இருப்பதாக அவனுக்கு ஒரு கணம் தோன்றுகிறது; அவர்களுடன் போய் இணைந்து கொண்டதும் அவனது மகிழ்ச்சி மீள்கிறது. அவன் மகிழ்ச்சியானவன் என்றாலும் மகிழ்ச்சியற்ற தன் நண்பர்களிடம் அவன் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான். அவர்கள் பூரிப்புடன் அவன்மீது “இரக்கம்” காட்டுகிறார்கள். தாழ்வில் இருந்து மேட்டுக்கு அவனை கைப்பிடித்து ஏற்றிவிடுகிறார்கள்.

இது இயற்கையின் நியதி. இரக்கம் என்பது இந்த வாழ்க்கை நமக்கு அளித்த கொடை எனத் தோன்றுகிறது. இரக்கத்தைத் தனியாகப் பார்க்கும்போது, அதை உறையவைத்து “நம்மை இப்படி மதிப்பிடுகிறார்களே” என “இரங்கும்”போதுதான் நமக்கு வெறுப்பும் கோபமும் இரங்குபவர்மீது வருகிறது. நான் இரங்கத்தக்கவன் அல்ல, என கூவத் தோன்றுகிறது. ஆனால் இந்த உலகில் ஒவ்வொருவரும் இரங்கத்தக்கவரே எனப் புரிந்துகொண்டால் இத்தகைய சிக்கல்கள் இராது. மாற்றுத்திறனாளியாக நான் காட்சிபூர்வமாகவே மக்களின் இரக்கத்தைத் தூண்டுகிறேன். என்னை நோக்கி “இரங்கும்படி” நான் யாரையும் கைப்பிடித்து இழுக்கத் தேவையில்லை. அவர்களாகவே என்னை நோக்கி வருகிறார்கள். நான் ஒரு இரக்கக் “காந்தம்”. எங்களிடையே ஒரு உறவாடல் துவங்கும்போது அந்த இரக்கம் மறைந்து அது அன்பாகப் பரிமளிக்கிறது. தொலைவில் இருந்து வெறித்துப் பார்க்கிறவர்கள் மட்டுமே என்னை ஒரு மற்றமையாக்குகிறார்கள், அவர்கள் என்னை எரிச்சலூட்டுகிறார்கள்.

தற்போது பணி செய்யும் இடத்தில் நான் வந்ததுமே, முதல் ஐந்து நிமிடங்களிலேயே, நான்கு நண்பர்கள் அமைந்துவிட்டார்கள். இது எனக்கு முன்பு நிகழ்ந்ததில்லை. ஏனெனில் முன்பு நான் சக்கர நாற்காலி பயன்படுத்தியிருக்கவில்லை. சக்கர நாற்காலி இரு மனிதர்களுக்கு இடையில் தோன்றுகிற ஈகோ எனும் கோட்டை சுவரைத் தகர்த்துவிடுகிறது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் நான் அவர்களை இரக்கப்பட அனுமதிக்கிறேன், அவர்கள் என்னை நிரப்பிட தயக்கமின்றி வருகிறார்கள். ஒரு மனிதனின் ஊனம் வெறும் ஊனம் இல்லை. அது அடுத்தவரின் இதயத்துக்குள் நுழைய அவன் வைத்திருக்கும் சாவி. அதுவேதான் என் ஊனத்தை அழிக்கும் சாவியும்.

நம் சமூகத்தில் மாற்றுத்திறனாளி எனும் சொல் துவங்கி பல்வேறு விதங்களில் மற்றமைகள் (பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர்) தொடர்ந்து அரசியல்வயப்படுவதை, அரசியல் சரித்தன்மைக்குள் போய் மாட்டிக்கொள்வதைக் காண்கிறோம். இது இரக்கத்தை ஒழித்து அந்த இடத்தில் ஒரு போலியான எந்திரத்தனமான மரியாதையைக் கொண்டுவருகிறது. வெளியே சாதி ஒழிய வேண்டும் என்றுவிட்டு மற்றொரு பக்கம் இன்னும் கெட்டியாக சாதியைப் பற்றிக்கொள்ளச் செய்கிறது; பெண் சமத்துவத்துக்காக விழுந்து விழுந்து பேசிவிட்டு முடிந்தவரையில் அவர்களைக் கீழாகவே நடத்த செய்கிறது. இந்த எந்திரத்தனம் நமது ஆன்மாவையே அரித்துவிட்டது. எதிர்காலத்தில் இந்த எந்திரத்தனம் மாற்றுத்திறனாளிகளிடத்தும் வந்துவிடக் கூடாது என விரும்புகிறேன். நான் இந்த மரியாதையைத்தான் நான் வெறுக்கிறேன். நான் மரியாதையின் இடத்தில் என்றுமே இரக்கத்தை எடுத்துக்கொள்வேன்.

முந்தைய தொடர்கள்:

9.பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்https://bit.ly/3a2CSJT

8.அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்https://bit.ly/392trZQ

7.காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்https://bit.ly/33tiHCB

6.எனது நண்பன் எனது நண்பன் அல்லhttps://bit.ly/2xTmygJ

5.ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?https://bit.ly/2U1ZmW0

4.நிழல் நிஜமாகிறதுhttps://bit.ly/3a3P9xM

3.பாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்https://bit.ly/2QuC09r

2.தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர்https://bit.ly/2Qsg1jn

1.யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன்https://bit.ly/33AmePx