அங்கே என்ன சத்தம்

நேற்று டைம்ஸ் நவ் சேனலில் பிரதமரின் கொரோனோ அறிவிப்புகளைக் குறித்து ஒரு விவாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு கேள்வி அன்றாடங்காய்ச்சிகளைக் குறித்து. இந்த ஊரடங்குக் காலத்தில் அவர்கள் எங்கு போவார்கள்? யார் சம்பளம் கொடுப்பது? யார் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது? மோடி அரசுக்கு அவர்கள் மீது எந்த பெரிய அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. மோடி பெரும் நிறுவனங்களிடம் தம் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுத்துப் பாதுகாக்குமாறு கேட்கிறது; வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு இந்த ஊழியர்களைக் கேட்கிறது. அவர்கள் பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம்கள் இயங்கும், அவர்கள் பொருள் வாங்குவதற்கு மளிகைக்கடைகள், மருந்துக்கடைகள் இயங்கும், இணையம் வழி அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வசதியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சத்தியம் செய்கிறது. இதெல்லாம் நல்லதுக்கே. நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த செயல்களுக்கெல்லாம் கையிருப்பில் பணம் வேண்டும். பணமில்லாதவர்கள் என்ன பண்ண வேண்டும் என்பது குறித்து மோடிக்கு பெரிய யோசனைகள் எதுவும் இல்லை.

ஆனால் அது குறித்து நமக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படக் கூடாது: இந்த அரசு மேல்மத்திய வர்க்கம், மேற்தட்டு மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக அமைந்த அரசு. அதனாலே அது இந்த நெருக்கடி நிலைமையிலும் வரித் தாக்கலுக்கான கால நீட்டிப்பு பற்றி மட்டும் பேசுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெருமளவில் மக்கள் மருத்துவமனைக்கு வந்தால் அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பது பற்றி எந்த அறிவிப்பையும் அது வழங்கவில்லை. அதற்கான தயாரிப்புகள், முன்னேற்பாடுகள் பற்றியும் பேசவில்லை. கோடானு கோடி ரூபாயை அகதிகள் முகாம்களை ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கும் பொருட்டு செலவிடத் தயங்காத இந்த அரசு வெறும் 15,000 கோடிகளை மருத்துவ ஏற்பாடுகளுக்காக ஒதுக்குகிறது என்பது வியப்பாக உள்ளது. ஆனால் அப்படி வியப்பதும் முட்டாள்தனமே – இந்த அரசு தனக்கு அடுத்த தேர்தலில் பலனளிக்காத எதற்காகவும் நிதியை “முதலீடு” செய்யாது.

ஆம், இந்த அரசு தனது நிதியை கட்சி நிதியாகத் தான் பார்க்கிறது.

நீங்கள் கேட்கலாம் இந்த கொரோனா பேராபத்துக் காலத்தில் மக்களை இந்த அரசு பத்திரமாகப் பார்த்துக் கொண்டால் மோடி மீதான மதிப்பு உயருமே என்று. ஆனால் மோடி என்பவர் பெயருக்குத் தான் பிரதமர். அவர் ஒரு நிழல் பிரதமர். இப்போதைக்கு அசல் பிரதமர் அமித் ஷா. அவரை அடுத்து வரப் போகும் தேர்தலில் பிரதமர் வாக்காளராக நிறுத்துவதற்கான தயாரிப்புகளைத் தான் இந்த அரசு அண்மைக்காலமாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, அயோத்யா தீர்ப்பு, குடியுரிமை திருத்த மசோதா என ஒவ்வொரு நடவடிக்கையாக ஒரு வலுவான முரட்டு சர்வாதிகாரத் தலைமையாக பாஜக தலைமை தன்னை சித்தரித்து வருவதைப் பார்க்கலாம். இந்த நடவடிக்கைகளின் போது அமித் ஷாவே “தலைவராக” முன்னிறுத்தப்பட்டார். மெல்ல மெல்ல கனிவான அமைதியான மோடியை விட மேலான கடுமையான தலைமையாக அமித் ஷாவை சித்தரித்து அதை வைத்து அவரை அடுத்து பிரதமர் ஆக்குவதே பாஜகவின் திட்டம். அதற்காக எத்தனை லட்சம் கோடிகளை அள்ளி இறைக்கவும் இந்த அரசு தயார்.

ஒட்டுமொத்த குடியுரிமை மசோதா, கணக்கெடுப்பின் பெயரில் தேசத்தை பிரிவினைக்குட்படுத்தி வன்முறையைத் தூண்டுவது தான் அவர்களின் வரும் ஆண்டுகளுக்கான திட்டம். இதன் நடுவே பாஜகவுக்கு நிறைய கெட்ட பெயர். குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதிலும் அவர்களின் பிம்பம் சரிந்து விட்டது. இப்போது கொரோனா வைரஸ் எதிர்பாராத திருப்பமாக நடுவே புகுந்து விட்டது. அதைக் கொண்டு இந்த மக்கள் கோபத்தை திசைமாற்றி விட மோடி களமிறங்குகிறார். ஆனால் இப்போது மக்கள் நல அரசு எனப் பெயர் வாங்குவது பாஜகவின் நோக்கம் அல்ல என நினைக்கிறேன்.

மோடி தனக்கு ஏற்கனவே உள்ள பிரபலத்தை இப்போது சற்றே பெருக்கிக் கொள்வார். ஆனால் அவர் ஓய்வு பெறும் நிலையில் உள்ள தலைவர் என்னும் அந்தஸ்தை இதை மாற்றப் போவதில்லை. அவர் மெல்ல மெல்ல ஆட்சி மேடையில் இருந்து விலகப் போகிறார் என்பதை இந்த கொரோனா காலத்தில் அவர் எந்த வலுவான காத்திரமான மக்கள் நல முடிவுகளையும் எடுக்காதது காட்டுகிறது. அவர் மக்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு “எங்கள் மாமாவாக” இருப்பார். “எங்க வீட்டுப்பிள்ளை” எம்.ஜி.ஆராக அமித் ஷா (அல்லது ஒருவேளை யோகி) விரைவில் களத்துக்கு சாட்டையுடன் திரும்பும் வரை அவர் உத்வேகமளிக்கும் மேடைப்பேச்சுகளை பேசி காலத்தை ஓட்டுவார். மேலும் ஒரு நவதாராளவாத முதலீட்டின் அரசு மக்கள் நலத் திட்டங்களுக்காக பெருமளவில் நிதியை செலவிடவே போவதில்லை. அவர்களை மக்கள் அதற்காக ஆட்சிக்கு கொண்டு வரவில்லை. பின் எதற்காக?

மோடிக்காக வாக்களித்த மத்திய, மேல்மத்திய வர்க்கத்தினருக்கு ஒரு மூடநம்பிக்கை உண்டு – சமூகம் மேம்பட, நாடு வளர ஒரு கார்ப்பரேட் தலைமையே அரியணை ஏற வேண்டும் என்பது அது. மக்கள் நலத்திட்டங்களுக்காக நிதியை “வீணடிக்காமல்” அதைக்கொண்டு பெருமுதலாளிகளை போஷித்தால் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து நாம் அமெரிக்கா, சிங்கப்பூர் போல ஆகி விடுவோம் என இந்த மக்கள் நினைக்கிறார்கள். அரசு என்பது (அமெரிக்காவில் போல) கண்ணுக்குப் புலப்படாத ஒரு சக்தியாக இருக்க வேண்டும். அனைத்து முடிவுகளும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக மட்டுமே எடுக்கப்பட வேண்டும். கார்ப்பரேட்டுகளின் லாபத்தின் ஒரு பகுதி திரும்ப சந்தைக்கு முதலீடாகத் திரும்ப அது பல நிலைகளைக் கடந்து மக்களை வந்தடையும், நாடு அதனால் செழிக்கும் என இவர்கள் கற்பனை பண்ணுகிறார்கள். ஆனால் வணிகம் வெற்றி பெற நுகர்வோரிடம் நிறைய பணம் இருக்க வேண்டும், வாங்கும் திறன் மேம்பட வேண்டும், அப்போதோ அது லாபமாகி முதலாளிகளிடம் வந்து தொடர்ந்து முதலீடு செய்யும் நம்பிக்கை ஏற்படும் எனும் எளிய பொருளாதாரம் கணக்கு இந்த அரசுக்கோ அதற்கு முட்டுக்கொடுக்கும் இந்த மத்திய, மேல்மத்திய வர்க்கத்துக்கோ சங்கிகளுக்கோ இன்னும் விளங்கவில்லை. பா.சிதம்பரம் கடந்த சில ஆண்டுகளாய் திரும்பத் திரும்ப வற்புறுத்துவதை இதையே தான்.

இப்போதும் கூட நமது நாட்டு மக்களில் கணிசமானோர் முறைசாரா தொழில்களில் உள்ளோர் மற்றும் உடலுழைப்பில் ஈடுபடுவோர். அவர்களுக்கு நூறு நாள் வேலைத்திட்டம், சாலை அமைத்தல், நீர்நிலைகளை சீர்படுத்தல் போன்ற திட்டங்களின் வழியே தொடர்ச்சியான வருமானம் அமைய வழிவகை செய்ய வேண்டியது ஒரு தர்ம நடவடிக்கை அல்ல, அது நம் பொருளாதாரத்துக்கு ஆக்ஸிஜன் வழங்கும் செயல். இதே அடித்தட்டு மக்களைத் தான் இப்போது மத்திய அரசு கொரோனா பேராபத்தின் போது கைவிடுகிறது. பெருமுதலாளிகளையும் அவர்களிடம் நேரடியாக கொடுக்கல் வாங்கலில் உள்ள அடுத்த நிலை தொழிலதிபர்களையும் அவர்களின் ஊழியர்களான மத்திய வர்க்கத்தையும் மட்டுமே காப்பாற்றினால் போதும் எனும் அதே கொள்கை தான் மோடி அரசின் இந்த பேராபத்துக் கால செயல்திட்டங்களையும் தீர்மானிக்கிறது என்பதே அவலம். இந்த அடித்தட்டு மக்கள் மேலும் நலிந்தால், அழிந்தால், தெருவுக்கு வந்தால் இந்திய பொருளாதாரம் ஐ.சி.யுவுக்கு சென்று விடும் என மோடிக்கோ நிர்மலா சீத்தாராமனுக்கோ புரியவில்லை. இதைத் தான் அண்மையில் சீத்தாராம் யெச்சூரி சாடியிருக்கிறார்.

இந்த “பெருமுதலாளிகளே நாட்டைக் காப்பாற்றுவார்கள்” எனும் மூடநம்பிக்கை எந்தளவுக்கு மக்கள் மத்தியில் பரவியிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட டி.வி விவாதத்தில் இருந்து தருகிறேன். பார்வையாளர்களில் ஒருவர் தொலைபேசி வழி மோடியின் ஊரடங்கு உத்தரவு குறித்த தன் கருத்தைக் கூறுகிறார். எளிய பாமர மக்களின் கதி என்னவாகும் என தொகுப்பாளர் கேட்கிறார். அதற்கு அந்த நபர் சொல்லும் பதில் ஷங்கர் தனது “முதல்வன்” படத்தில் முன்வைத்த சமூகத் தீர்வுகளை ஒத்திருந்தது – “ஒவ்வொரு மேல்மத்திய, மேல்தட்டு வீட்டுக்கும் பணி செய்ய வேலைக்காரர்கள், இஸ்திரி போடுபவர்கள், நாளிதழ் வினியோகிப்பவர்கள், தோட்டக்காரர்கள் என பல பணியாளர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு இந்த குடும்பத்தினர் ஒரு மாதம் விடுமுறை அளித்து சம்பளத்தையும் கொடுத்து விட்டால் போச்சு. ஒவ்வொரு தேவைக்கும் நாம் அரசை எதிர்பார்த்து இருப்பது தேவையில்லாத பாரத்தை அரசின் மீது சுமத்துவதாகும்.” இந்த கருத்தின் பின்னுள்ள அபாயமான ஜனநாயகத்துக்கு எதிரான நோக்கைப் புரிந்து கொள்ளாமல் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் பாராட்டுகிறார். இக்கருத்தில் என்ன தான் ஆபத்து?

ஒரு முதலாளி தன் ஊழியருக்கு இனாமாகக் கூலி கொடுப்பது அவரது பெருந்தன்மையைப் பொறுத்தது. அது அவரது கடமை அல்ல. ஒரு பேரழிவுக் காலத்தில் மக்களுக்கு நிவாரணங்கள் அளித்து அவர்களைப் பாதுகாப்பது அரசின் பெருந்தன்மை அல்ல கடமை. முதலாளி ஒருவர் தனது வீட்டில் பெருக்கும் தொழிலாளிக்கு இனாமாக சம்பளம் தர முடியாது என்று சொன்னால் யாரும் அவரைக் கேட்க முடியாது. ஆனால் ஒரு அரசு ஒப்புக்கொண்ட உதவியை பண்ண மறுத்தால் மக்கள் அந்த அரசைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் முடியும். பெருமுதலாளிகளின் பொறுப்பில் நாட்டின் பொருளாதாரத்தை ஒப்படைப்பதற்கு ஈடானதே ஏழைகளின் பாதுகாப்பை அவர்களின் வேலை பார்க்கும் குடும்பங்களின் கையில் ஒப்படைப்பது. இதை ஏற்றுக் கொண்டால் இந்த பாமர மக்களுக்கு இந்த அரசிடம் எதையும் கோர உரிமையுள்ள என ஆகி விடும்.

அரசு முழுக்க முழுக்க பெருமுதலாளிகள் மற்றும் மேற்தட்டினருக்கு மட்டும் பொறுப்பான ஒன்று, மீதமுள்ள பெரும்பான்மை மக்கள் மேற்தட்டினரின் அடிமைகள் எனும் அர்த்தம் ஏற்பட்டு விடும். அரசு மேற்தட்டினரை போஷித்தால் அவர்கள் கீழ்த்தட்டினருக்கு பிச்சை போடுவார்கள். கீழ்த்தட்டினரால் அரசிடம் நேரடியாக எந்த உரிமையையும், நிவாரணமும் கோர முடியாது. பாதுகாப்பாக சம்பள உத்தரவாதத்துடன் வேலை செய்யும் உரிமையை அவர்கள் அரசிடம் கோர முடியாது. ஏனென்றால் அரசுக்கு அவர்கள் மீது எந்த பொறுப்பும் இல்லை என இத்தகைய கருத்தாளர்கள் சொல்ல வருகிறார்கள். இந்த மனப்பான்மையில் நாம் காண்பது ஒருவித நவதாராளவாத paternalism. அதென்ன?

பாஜகவைப் போன்ற ஒரு கார்ப்பரேட் அரசு தோன்றியதும் அது முதலீட்டியம் செழிப்பதற்கான கொள்கை முடிவுகளை மட்டுமே எடுக்கும். அது தனக்கு வாக்களித்த மக்களை நெறிப்படுத்தி, பாதுகாத்து, மேம்படுத்தும் பொறுப்பை முதலாளிகளிடம் ஒப்படைக்கும். இந்த முதலாளிகளோ மக்களை தந்தை தன் பிள்ளைகளை ஒடுக்கி கட்டுப்படுத்துவதைப் போன்றே கையாளும், அப்படி செய்வதே தன் பிள்ளைகளின் நலனுக்கு அவசியம் என முதலாளிகள் நம்புவார்கள். பிள்ளைகளின் கருத்தை இத்தந்தைகள் கேட்டு முடிவெடுக்க மாட்டார்கள். பிள்ளைகள் வருந்தினாலும் புலம்பினாலும் அது அவர்களின் நன்மைக்கே என்பதால் அவர்கள் பொறுத்தே ஆக வேண்டும். அப்படி நம்புவதே paternalism. ஒரு மக்கள் நல அரசு நலிந்த மக்களுக்கு அளிக்கும் நிவாரணங்களை ஒரு நவதாராளவாத paternalistic அரசு அவசியமற்ற செலவாகக் காணும். அது நிவாரணங்களைக் கோரும் உரிமை நலிந்தோருக்கு இல்லை என நினைக்கும். ஏனெனில் முதலீட்டிய சந்தைக்கு பங்களிக்காதவர்களுக்கு எதற்கு நிவாரணம்? மாறாக நிவாரணத்தை ஒரு கருணை அடிப்படையிலான செயலாக அது காணும். அத்தகைய கருணையைத் தான் எளியோரிடம் இந்த அரசை ஆதரிக்கும் மேற்தட்டினர் (அரசு அல்ல) இப்போது காட்ட வேண்டும் என மேற்சொன்ன கருத்தாளர் எதிர்பார்க்கிறார். ஒரே கருத்து மூலம் எளியோர், நலிந்தோரை ஒட்டுமொத்தமாக அவர் பிச்சைக்காரர்களாக மாற்றி விட்டார். மேற்தட்டினரை பெருமுதலாளிகளின் முகவர்களாகவும், அரசை அவசியமற்ற ஒரு பர்னிச்சராகவும் மாற்றி விட்டார். இப்படி நினைப்பது இவர்களுக்கு ஒரு போலியான அதிகார மமதையும் அளிக்கும். இந்த கொரோனா ஊரடங்கு காலம் ஏழைகளின் தட்டில் பிச்சையிடுவதன் மூலம் தம்மை சர்வாதிகாரத் தலைமையாக கருதும் மத்திய வர்க்க மனநிலை நமக்கு கடுமையான மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.

வர்க்கபேதமற்ற கொரோனாவோ இவர்களுக்கெல்லாம் மேல்!

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. திரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்
 2. கிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும்? - மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை - ஆர். அபிலாஷ்
 3. ’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை - ஆர். அபிலாஷ் (பெங்களூர்)
 4. முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது?- ஆர். அபிலாஷ்
 5. காட்ஃபாதர் முதல் முள்ளும் மலரும் வரை: கதைக்குள் இருக்கும் கதை- ஆர். அபிலாஷ்
 6. சினிமாவில் போதனை இருக்கலாமா?- ஆர். அபிலாஷ்
 7. பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் - ஆர். அபிலாஷ்
 8. ‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்
 9. தனிமையின் காதலே நட்பு- ஆர். அபிலாஷ்
 10. ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?- ஆர். அபிலாஷ்
 11. பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- ஆர். அபிலாஷ்
 12. அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- ஆர். அபிலாஷ்
 13. காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- ஆர். அபிலாஷ்
 14. எனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்
 15. ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?- ஆர். அபிலாஷ்
 16. நிழல் நிஜமாகிறது - ஆர்.அபிலாஷ்
 17. சத்யன் அந்திக்காடு: தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர் - ஆர். அபிலாஷ்
 18. யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன் - ஆர்.அபிலாஷ்