2. புத்தகங்களைத் திருடுகிறவன்

அந்த அண்ணன் தந்த புத்தகத்தை முதலில் பேசுவோம் பிறகு திருடி வந்த புத்தகம் பற்றி…

மரியா பிரிலெழாயெவா அவர்கள் எழுதிய புத்தகம் லெனினுக்கு மரணமில்லை அப்போது சரியாக எனக்கு 16 வயது பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்த முடிவுக்காகக் காத்திருந்த நாட்களில்தான் அது நடந்தது. விளாந்திமிர் இல்யிச் உல்யானவ் என்கிற லெனினை அறிந்துக்கொண்ட காலம், அதற்குமுன் அப்படி ஒரு பெயரை நான் கேள்விபட்டதில்லை… அது மிக நல்லதாய் போனது. அந்தப் புத்தகம் ராதுகா பதிப்பகத்தால் மாஸ்க்கோவில் பதிப்பிக்கப்பட்டிருந்தது.

அட பாரேன்… நான் எவ்வளவு பெரிய வாசகனாகிவிட்டேன்… இந்தப் புத்தகத்தைப் பெறுவதற்கு முன்பாக எனக்குப் புத்தக அலமாரி எதுவும் கிடையாது புத்தகங்களே கிடையாது பிறகெப்படி அலமாரி? புத்தகத்தின் பெயர் லெனினுக்கு மரனமில்லை
புத்தகத்தின் முதல் பக்கத்திலே ஓவியர் அ.கெராஸிமல் வரைந்த குத்தீட்டிகளின் முனைகளையுடைய கொம்புகளில் பறக்கும் செங்கொடிகள் நெருப்பைபோல பின்னோக்கி பறக்க தோழர் லெனின் தனது வலது கரத்தால் காற்றில் பறக்கும் கோட்டை பற்றியபடி உத்வேகத்துடன் உழைப்பாளர்கள் மத்தியில் உறையாற்றுகிறார். அந்த ஓவியம் என்நெஞ்சிலே அப்படியே பதிந்துவிட்டது. அவரது இடது கையில் தொப்பி. அந்தப் புத்தகம் முழுதும் மிகச்சிறப்பான ஓவியங்களும், புகைப்படங்களும் நிரம்பியிருக்கும் இப்போதைய பதிப்புகளில் அப்படியிருக்க வாய்ப்பில்லை.

அமைதி நிறைந்த ஸிம்பீர்ஸ்க் நகருக்கு மேலே மகிழ்வுடன் இசைத்தன வானம்பாடிகள்.
வோல்கா நதிக்கரையில் உள்ள இந்த நகரில்தான் (அங்குதான் விளாந்திமிர் இல்யீச் உல்யானவ் என்கிற லெனின் பிறந்தார்.)

இதை அடையும் வழியை நமக்குக் காட்டியுள்ளார் லெனின் என்று 293 பக்கத்தில் முடியும்.

அந்தப் புத்தகத்தை இரண்டு நாளில் படித்துவிட்டு இந்தப் புத்தகத்தில் உள்ள உலகத்துக்காக ஏங்கத் தொடங்கினேன், இன்னமும்தான். அந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது பல இடங்களில் நான் கண்கலங்குவேன். இப்போதும் அப்படித்தான் நான் இதுவரை 50 முறைக்கு மேலாக படித்த புத்தகம், 30 வருடங்களுக்கு மேலாக என் சின்னஞ்சிறு நூலகத்தில் வைத்து பராமரிக்கும் புத்தகம்… இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது ஒருவேளை நான் கலங்குமிடத்தில் நீங்கள் கலங்காமல் போகலாம், இன்னும் நூறுமுறை படித்தாலும் நான் கண்கலங்கவே செய்வேன். நான் கண்கலங்கிய சில பகுதிகளைச் சொல்கிறேன் பாருங்கள்.

ஸிம்பீர்ஸ்க் நகரிலிருந்து தந்தையின் பணியின் காரணமாக லெனின் குடும்பம் கஸான் நகருக்குக் கப்பலில் பயணித்து குடிபெயர்ந்து செல்கிறது. துறுதுறுவென இருக்கும் சிறுவன் விளாந்திமிர் கப்பலின் நீராவி எஞ்சினுக்கு கறி தள்ளும் உழைப்பாளியை வேடிக்கைப் பார்க்கிறான் அந்த மனிதன் கடும் வியர்வையில் கரியும் கீல் எண்ணை பிசுக்குமாக ஊக்கமாக வேலை செய்துக்கொண்டிருப்பதும், தானும், தன் தந்தையும் மற்ற பயணிகளும் மிக நேர்த்தியாக உடையுடுத்தி கப்பல் மேல் தளத்தில் காற்றோட்டமாக சுகமாக ஆற்றை வேடிக்கை பார்பதையும் ஒப்பிட்டுப்பார்க்கிறான்…

அந்த நேரம் அவனுடைய அப்பா “விளாந்திமிர் வா சதுரங்கம் விளையாடலாம்” என்று அழைக்கிறார்.
காய்கள் நகர்த்தும்போதும் அவனுக்கு அந்த எஞ்சினுக்கு கரி தள்ளுபவனே நினைவுக்கு வர, “அப்பா அந்த கரி தள்ளுபவன் இவ்வளவு கடினமான சூழலில் உழைக்கிறானே… அவன் சூழலைக் கொஞ்சம் சுலபமாக்க முடியாதா? ம்… இந்தக் கப்பலின் முதலாளி இதைப்பற்றி ஏன்? கவலைபடவில்லை” என்று கேட்க அப்பா விளாந்திமிரை உற்றுப் பார்க்கிறார்.

” உலகத்தில் நியாயம் அப்படி ஒன்றும் இல்லை”

“அப்பா… நீங்கள் நியாயத்தை மட்டுமே ஆதரிக்கிறீர்கள் இல்லையா” என்று விளாந்திமிரின் அண்ணன் அலெக்சாந்தர் கேட்கிறான். (இந்த அலெக்சாந்தர்தான் பிற்காலத்தில் ஜார் மன்னனால் தூக்கிலிடபட்டவர்)

24ஆவது பக்கத்தில் “மனிதனிடத்தில் உனக்குப் பிடித்தது எது என்று தன் அண்ணன் அலெக்சாந்தரிடம் கேட்பான் விளாந்திமிர்(லெனின்).
அண்ணன் சொல்லுவான் “உழைப்பு, விஞ்ஞானம், நேர்மை… நம் தகப்பனார் அப்படிபட்டவர்தான் என்று சொல்லுவான் … இதை வாசிக்கும் ஒவ்வொருமுறையும் நான் என் நெஞ்சிலே கை வைத்து பார்ப்பேன் என் 16 வயதில் நான், என் இதயம், பிறகு கொந்தளிக்கும் புத்திளமறிவு என்ன பாடுபட்டிருப்போம்!

பனிக்காலம் 1886 ஜனவரி 12ஆம் தேதி அப்பாவுக்கு ஓய்வேயில்லை. அவர் தன்னைக் கவனித்துக்கொள்வதேயில்லை என்று நினைக்கிறான். சாப்பாட்டு அறையில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள், அப்போது அப்பா அங்கு வருகிறார் எல்லோரையும் அமைதியாகப் பார்த்துவிட்டு திரும்பி தன்னறைக்குப் போய்விடுகிறார். விளாதிமிர் அப்பாவைப் பற்றி எதோ கவலையாக உணர்கிறான். சிறிது நேரத்தில் அப்பாவின் அறைக்குப்போன அம்மா அறைக்குப்போன நிமிடத்திலேயே அம்மாவின் அலறல் சத்தத்தை குழந்தைகள் கேட்டார்கள். மருத்துவரை அழைக்க ஓடினார்கள், ஆனால் அப்பாவின் உயிர் மருத்துவருக்காகக் காத்திருக்கவில்லை.
இதை வாசிக்கும் ஒவ்வொருமுறையும் நான் கண் கலங்குகிறேன்.

1895இல் லெனின் அரசியல் காரணங்களுக்காக சிறைக்கு அனுப்பப்படுகிறார். வார்டு 193 அவரை அடைத்துள்ள சிறை கொட்டடியின் எண். சிறையிலிட்டால் என்ன? அங்கும் வேலை செய்கிறார். ரொட்டியின் மென்மையான பகுதி மைக்கூடு, பால்தான் மை, பாலைத்தொட்டு புத்தக அச்சு வரிகளுக்கிடையே உள்ள வெண் பகுதியில் எழுதுவார்… காவலாளி பார்க்கும் தருணத்தில் மை கூட்டை மையுடன் விழுங்கிவிடுவார்… எப்படித் தந்திரம்?

அவருடைய அன்பு தோழி தோழர் பிறகு வாழ்க்கை துணையான நதேழ்தா கன்ஸ்தன்தீனவ்னா அவருக்குச் சிறை அதிகாரிகள் அனுமதித்த புத்தகங்களைச் சிறைக்கு கொண்டுவருவார். பின் படித்த புத்தகங்களைத் திருப்பி எடுத்துப் போவார். அப்படியான ஒரு சந்தர்பத்தில் சிறை காவலன் பக்கத்திலே நின்று ஒற்று கேட்க வாசித்த புத்தகங்களைத் தன் அன்புக்குரியவரிடம் திருப்பித் தந்தவர், “மரியாவின் புத்தகத்தையும் திருப்பி தந்துள்ளேன்” என்று சொல்கிறார் ஓ…. அப்படியானால் அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தில் எதோ செய்தியிருக்கிறது என்று பொருள் பிறகு “என்னுடைய அறை எண் தெரியுமா” என்று கேட்கிறார்… அப்படியானாள் அந்த எண்ணுள்ள பக்கத்தில் ஏதோ செய்தி உள்ளது என்று பொருள். பாலை தொட்டு புத்தகத்தில் எழுத சாதாரணமாக பார்த்தால் தெரியாது. எழுதப்பட்டுள்ள பக்கத்தை அனலில் காட்டினால் எழுத்துகள் வரிவரியாகத் தெரியும்.

பிறகு லெனின் கடும் பனி பொழிவுமிக்க சைபீரியச் சிறைக்கு அனுப்பப்படுகிறார். அங்கேயும் அவர் புரட்சிப் பணியைக் கைவிடவில்லை. சிறையிலிருந்து வந்த பிறகு, இஸ்க்ரா என்கிற செய்தித்தாளை ரசியாவில் அச்சிட முடியாது அதனால் ஜெர்மன் நாட்டுக்குப் போய் அங்கிருந்து அச்சிட்டு அதை ரசியாவுக்குள் அனுப்புவது என்கிற அவரது கடினமான பணியைப் பார்க்கும்போது ‘அடேங்கப்பா’ வியபடைந்துவிடுவோம். அதை அவர்கள் ரசியாவிற்குள் கொண்டுவந்து விநியோகம் செய்கிற அந்தப் பக்கங்களை வாசிக்கும்போது சாகசம் என நாம் நினைக்கும் ஜேம்ஸ் பாண்ட் படங்களெல்லாம் வெறும் குப்பைதான்

96 பக்கத்தில்…1905இல் பத்யோம்கின் போர்கப்பல் மாலுமிகளின் துணிச்சலைப்பற்றிய என் வாசக மனம் என்றென்று நினைவில் கொள்ளும்.

லெனின் மாறு வேடத்தில் தப்பிச் செல்வது அதைவிட அவர் எதிரிகள் மத்தியிலேயே எவ்வளவு தந்திரமாகச் செயல்பட்டார் என்பதெல்லாம் ஒரு சிறந்த நாவலைவிடவும் விறுவிறுப்பானவை.

1910ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் வசிக்கிறார் ஒரு நாள் கட்சி கூட்டத்துக்கு செல்லும்போது வழியில் ஒரு கூடை ரோசா மலர்களை வாங்குகிறார்.. பிறகு கூட்டத்துக்குப் போனதும் அவர் விழிகள் தேடுகிறது அதோ அவர் காண விரும்பிய இரு மாதர்கள் அங்கே இருக்கிறார்கள். அம்மாவும், தங்கையும், அன்னையின் மடியில் ரோசா கூடையை அன்பின் பரிசென வைக்கிறார். தாயும் மகனும் அரவணைத்துக்கொள்கிறார்கள்… பிறகு தாயைக் கப்பலேற்றி ரசியாவிற்கு அனுப்புகிறார்… “போய் வா… அம்மா
அதன் பிறகு லெனின் தன் அம்மாவை பார்க்கவேயில்லை.

அம்மா இறந்தி 7 மாதங்களுக்குப் பிறகுதான் அவர் தாய்நாடு செல்ல முடிந்தது.

அந்தக் காட்சியெல்லாம் மிக அற்புதம்.

தலைமறைவு வாழ்க்கையின்போது இத்தாலி தீவு ஒன்றில் எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியும், லெனினும் சந்தித்துக்கொள்வார்கள். அப்போது சதுரங்கம் விளையாடும்போது லெனின் தோற்றுவிடுவார் தோல்வியால் அவரது முகம் சின்ன குழந்தையினுடையதுபோல ஏங்கிவிடும் காட்சிகளை மறக்கவே முடியாது.

எஞ்சின் எண் 293இல் தப்பிப்போன அதே ரயில் எஞ்சினில் கரி தள்ளுபவரைப்போல உதவியாளாக வேடமிட்டு தாய்நாட்டுக்குள் தப்பி வருகிறபோது உறுதியாகச் சொல்வார் “இதுதான் என் கடைசி தலைமறைவு” இனி பட்டாளிகள் மண்ணில் சுதந்திரமாக உலவலாம்…” அந்த வார்த்தையின் மகிழ்வை, நம்பிக்கையை நீங்கள் படிக்கும்போது உணர்வீர்கள்.

புரட்சி நடந்தபிறகும் அவரது உயிருக்கு ஆபத்து விளைவிக்க முதலாளிகளின் கையாட்கள் கொடுங்கோலன் ஜார் ஆட்கள் திட்டமிட்டபடியே இருந்தார்கள் ஆனால் அவர் தன் பாதுகாப்புக்காகப் பெரிதாக ஒன்றும் ஏற்பாடுகள் செய்துகொள்ளவில்லை. அப்படியான தருணத்தில் எதிரி ஒருத்தி அவரை சுட்டுவிட உதவிக்கு வரும் ஓட்டுனரை தடுத்து குண்டு காயங்களுடன் அவரே காருக்குள் நகர்ந்து போகிற காட்சிகள்…

ஆட்சியைக் கைபற்றி நாட்டை வழி நடத்தும் தலைவரான பிறகு, எவ்வளவோ மாற்றங்களைச் செய்தவரை கடும் உழைப்பு நல்கிய தோழரை 1924 சனவரி 21இல் காலம் திரும்ப அழைத்துக்கொண்டது. இதை எழுத்தாகப் படிக்கும்போது மனம் விம்மும்.

லெனின் ஒரேயடியாக ஓய்வு பெற்றுவிட்டார் அவரது உடலை க்கோர்க்கியிலிருந்து மாஸ்கோ கொண்டு செல்ல வராற்று சிறப்பு பெற்ற ஒரு ரயிலெஞ்சினை தேர்ந்நெடுத்தார்கள் அதுதான் உ-127 எண் கொட்ட ரயில் எஞ்சின்… கிளம்புகிறது எங்கும் நிற்காமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் போய் சேர வேண்டும் மக்களோ மக்கள் தோழனுக்கு விடை தர மனமற்று நிற்கிறார்கள்.

டிரைவர் மக்களிடம் பேசுகிறார் .

தோழர்களே லெனினுக்கு கால தாமதம் அறவே பிடிக்காது சரியான நேரத்துக்குக் கொண்டுபோவதாக நான் வாக்களித்துள்ளேன் உதவுங்கள் என்று சொல்லி அழுகிறார்… மக்கள் கண்ணீர் சிந்தியபடி வழிவிடுகிறார்கள். “போய் வா… தோழா உன் லட்சியத்தை நாங்கள் முன்னெடுப்போம் அறைகூவுகிறார்கள்… லெனின் அவர்களின் புகழுடலை சுமந்து ரயில் கூவலெழுப்பி கிளம்புகிறது….

இதை அடையும் வழியை நமக்கு காட்டியுள்ளார் லெனின் என்று 293 பக்கத்தில் முடியும். எதையென்று உங்களுக்கு உணர்த்தும் இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்தை நான் அந்த அண்ணனுக்குத் திருப்பி தரவேயில்லை, பெற்றோர் எனது துணிகளைவைக்க ஒதுக்கியிருந்த பீரோவின் அடி பகுதியை புத்தக அலமாரியாக மாற்றியிருந்தேன்… முதல் புத்தகம் ‘லெனினுக்கு மரணமில்லை…’ ஏற்கனவே மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்மீதான சுவை அறிந்தவனான எனக்கு இதை வாசித்தப்பிறகு புத்தகங்களைத் தேடிப் படிக்கவும் ருஷ்ய இலக்கியங்கள்பற்றி அறிந்துகொள்ளவுமான சிறு தீப்பொறியைப் பெற்றேன்.

இந்தப் புத்தகம் என்னை மட்டுமல்ல வாசிக்கப்போகும் உங்களையும் உலுக்கும்… அடுத்து திருடி வந்த புத்தகத்துடன் சந்திக்கிறேன்.

முந்தைய தொடர்கள்:

1.புத்தகங்களைத் திருடுகிறவன் – https://bit.ly/3baGDNO

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சகோதரிகள் : கரன் கார்க்கி
  2. சிங்கிஸ் ஐத்மாத்வ் : ஜமீலாவின் ‘’கிச்சினே பாலே ’’ -கரன் கார்க்கி
  3. அலெக்சாந்தர் புஷ்கினின் ’கேப்டன் மகள்’- கரன் கார்க்கி
  4. ‘’தாக்குங்கள்.. பெத்யூன் நம்முடன் இருக்கிறார்’’: ஒரு மருத்துவப் போராளியின் கதை- கரன் கார்க்கி
  5. உண்மை மனிதனின் கதை |  பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி
  6. ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம்: ‘உலகை குலுக்கிய பத்து  நாட்கள்’ - கரன் கார்க்கி
  7. சிங்கிஸ் ஐத்மாத்தவின் முதல் ஆசிரியன்: இரண்டு பாப்ளர் மரங்கள் - கரன் கார்க்கி
  8. லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.
  9. நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல, வாசிப்பது எனக்கு மண்ணில் நடப்பதுபோல - கரன்கார்க்கி
  10. 1. புத்தகங்களைத் திருடுகிறவன்