4. அ, ஆ, இ – ஆன்மீகம்

உணவுக்கும், ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் என தோன்றலாம்… மார்கழி பஜனை என்றால் என்ன நினைவுக்கு வரும்?

மாரியம்மன் கோவில் என்றால் ?

பக்ரீத், ரம்ஜான் என்றால்?

முனிக்கு குடும்பத்தோடு படையல் போடப்போகிறோம் என்றால்?

சர்ச்சில் பிரேயர் முடிந்த பிறகு என்ன செய்வோம்?

வள்ளலார் கோவில் என்றால்?

அவ்வளவு ஏன் இப்போது ‘டிரண்டில்’ இருக்கும் ‘இஸ்கான்’ என்றால்?

மார்கழியில் சுடச்சுட பொங்கல், மாரியம்மன் கோவில் கூழ், முனிசாமி கெடா வெட்டு, பக்ரீத், ரம்ஜான் பிரியாணி, திராட்சை ரசம் , அப்பம்.

அதோடு பிள்ளையார் கொழுக்கட்டை, தீபாவளி பலகாரங்கள், பொங்கல் பண்டிகையின் சர்க்கரைப் பொங்கல், நவராத்திரி சுண்டல், ஆடிப்பால், திருவாதிரைக் களி..

இது மட்டுமா… பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு, பெருமாள் கோவில் புளியோதரை, வடை இப்படிப் பல கோவில்களின் உணவு ‘லிஸ்ட்’ உலகின் எந்த மெனுவையும்விடப் பெரியதாக இருக்கும்.

மேலே சொன்னதெல்லாம் இந்தியாவில் என்றால்… இன்னொரு ருசிகரமான உண்மை சொல்லவா?

நாம் ‘ஜங்க்’ எனச் சொல்லும் பல உணவுகள் பிரசாதமாக வழங்கப்படுபவை… கேக் கிறிஸ்மசுக்கும், முட்டை, பிஸ்கட், பிரட், ரெட்வைன் ஈஸ்டருக்கும், ஹாட் கிராஸ் பன், குட் ஃபரைடேக்கும் என லிஸ்டின் நீளம் அதிகம்.

‘பிசா’ ஒரு புனித உணவாக ஒரு இடத்தில் படைக்கப்படுகிறது.

‘டம்ப்ளிங்க்’ எனப்படும் ‘மோமோஸ்’ நூடுல்ஸ் போன்றவை ‘தாவோயிச’த்தில் படையல் உணவுகளாகப் படைக்கப்படுகிறது. பேரீச்சை நபிகளின் விருப்ப உணவு! அது தவிர பல அரேபிய உணவுவகைகளையும் குறிப்பிட முடியும்.

இப்படி மதம், ஆன்மீகம் என எதை எடுத்தாலும் உணவு அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கக் காரணம்தான் என்ன?

‘சர்வைவல் விதி’ தான்.

உலகில் பஞ்சம் நிகழாத இடமே இல்லை. பசிதான் மனிதனின் ஆதாரம். பசியில் இருக்கும் யாருக்கும் எந்த அறிவுரையும் எடுபடாது. மனமும் சுத்தமாய் சொல் பேச்சு கேட்காது.

அப்படி என்றால் சாப்பாடு மட்டும்தான் ஆன்மீகமா என்றால் இல்லை! பட்டினியும் தான். உலகில் விரதம் இல்லாத மதங்கள் இல்லை. ஜெயின் மதம் 32 நாட்கள் வரையும், கிறிஸ்துவ மதம் 45 நாட்கள் வரையும் இஸ்லாமில் 30 நாட்கள் வரையும் விரதம் இருக்கும் முறைகள் இருக்கிறது.

சாப்பாடுதான் உடல் சக்திக்கும் மன சக்திக்கும் ஆதாரம். அதைச் சரியாகக் கொடுக்காவிடில் இரண்டும் சரியாகச் செயல்படாது.

உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் பொழுது பலரும் தடுமாறுவது இந்த ஆன்மீக உணவுகளை எடுத்துச் கொள்வதில்தான். திருப்பதி லட்டு, பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கல் எனச் சாப்பிட்டுவிட்டு கோவில் பிரசாதம் என்று சாப்பிட்டேன் என்பார்கள்.

ஒரு தொன்னை பிரசாதம் சாப்பிட்டால் 108 முறை கோவிலை வலம் வர வேண்டும். கலோரி கணக்கை மறைமுகமாய் கண்டுபிடித்த நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை.

மனம் மற்றும் ஆத்மா என்று இரண்டு இருக்கிறது. ஆத்ம உணவு என்று பல ஆசிரமங்களில் சமைக்காத உணவை உண்பார்கள். அங்கு அமைதியும், சாந்தியும் போதிக்கப்படும். எல்லாம் முயற்சியே… எது ஆத்ம உணவு என்பதில் பல ஆராய்ச்சிகள் நடத்தி இருந்தாலும் இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் மூளைக்கு நல்ல உணவுகள் உண்டு. ‘கீட்டொ’ உணவுகள்… வலிப்பு பிரரச்சினையை கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரப் பெரிதும் உதவுகிறது. ‘மைண்ட் டயட்’ என்று மூளைச் செயல்பாடுகளுக்கு உதவும் உணவுகளை அட்டவணைப் படுத்தியிருக்கின்றனர். ஆன்மீகம் மனதுக்கு மிக நெருக்கமாகப் பலவற்றைச் செய்கிறது.

கண்ணன் சொன்ன பக்தி, நம்பிக்கைதான் சீக்ரெட் , புத்தர் , ஏசு, நபிகள் எல்லாருமே மதத்துக்கு அல்லது அப்போதிருந்த அமைப்புமுறைக்கு எதிராகப் போராடிய ஆன்மீகவாதிகள்தான். ஆனால் அவர்கள் பெயரில் மதங்கள் உருவானதுதான் வரலாற்றுச் சோகம். புத்தரின் போதனைகள் பெரும்பாலும் மனம் சார்ந்ததாய் இருக்கும்.

மன அமைதிக்குத்தான் ஆன்மீகம், மதம் என்பது போய் வேறு எதில் எதிலோ சிக்கிக்கொண்டோம். ஏனெனில் மதவாதிகள் ஒரு அமைப்பாகச் செயல்பட்டு அரசர்கள் முதல் கடைக்கோடி மக்கள்வரை தனக்குக்கீழ் கொண்டுவர பல்வேறு மூளைச் சலவை செய்து வைத்திருந்தனர். பல்வேறு மூட நம்பிக்கைகளைக் கொண்டுவந்ததும் இடைப்பட்ட மதவாதிகளின் வேலைதான். நிஜமாகவே காலத்திற்கு ஏற்றவாறு மதங்கள் மாறவில்லை எனில் கார்பரேட் சாமியார்கள் ஆன்மிகத்தை இன்னும் பலமாக விற்க ஆரம்பித்து விடுவார்கள்.

வாழ்வில் இதுவரை நடனமே ஆடியிராத பல மக்கள் உள்ளனர். நடனம் என்பது ஒருவகையான ‘ஸ்ட்ரெஸ் பஸ்டர்’. அதுவும் சும்மா இஷ்டத்திற்கு ஆடுவது மிக நல்லது. மைண்ட் ஃபிட்னஸ் வகுப்புகளில் நடனம் ஒரு முக்கிய பங்குவகிக்கிறது.

மதங்களில் பெரும்பாலும் நடனம் இல்லை அல்லது பெண்கள் தெருவில் ஆட முடியாது. இதைப் புரிந்த ஆன்மீக நிறுவனங்கள் இரவு முழுக்க ஆட, பாட வாய்ப்புக் கொடுக்கின்றன. அவர்கள் மதம் இல்லை எல்லாரும் வரலாம் என்று கூறினாலும் அவர்களுக்கான நம்பிக்கைகள் தனி. ஆக மொத்தம் ஒருபக்கம் அமைப்புமுறைகளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

பெண்களின் பெரும் கூட்டம் ‘நித்தி’ ஆசிரமத்தில் உண்டு என்று தோழி சொல்லி இருக்கிறார். அங்கு தங்கி யோகா கற்றுக்கொண்ட சிலர் அதன் நன்மைகளைக் கூறி இருக்கின்றனர். வெளி உலகில் மதம் சார்ந்த அழுத்தங்கள், கட்டமைப்புகள் பிடிக்காமல்தான் பெண்கள் ஆசிரமம் போயிருக்க வேண்டும். மதங்களின் பெரும் பிரச்சனை பெண் சம உரிமைதான். ஒரு ஐயங்கார் வீட்டில் பூஜை முடித்து மாமி முற்றம் எனப்படும் இடத்தில் கீழ் அமர்ந்து சாப்பிட வேண்டுமாம். மாமா மட்டும்தான் மேலே அமர்ந்து உணவு உண்ணலாமாம். இது மெத்தப் படித்த ஒரு கிராமத்து வீட்டில். இப்படிப் பல அழுத்தங்கள் மதங்களில் இருக்க மன அமைதிக்காக பெண்கள் கார்பரேட் சாமியார்கள் பக்கம் செல்கின்றனர். பின் குடும்பத்தையும் மாற்றிவிடுகின்றனர். மாற்றியும் நடக்கும்.

உண்மையில் மனதிற்கு என்ன வேண்டும்? ‘சப்கான்ஷியஸ் மைண்டில்’ ஒரு நம்பிக்கையை ஆழமாய் விதைத்தால் அது நம்மைத் தயார்ப்படுத்தி சாத்தியமிக்க செயல்களில் ஈடுபட வைக்கும். அதற்கு மத நம்பிக்கை தேவைப்படும். எப்படிப்பட்ட நம்பிக்கை என்றால் ஆயிரக்கணக்கான மக்கள் முன், நூற்றுக்கணக்கான மைத்துனர்கள் முன் தன் புடவை பிடியை விட்டுவிட்டுக் ‘கண்ணா காப்பாற்று’ எனச் சொல்ல வேண்டும். அதனால்தான் சாய் பாபாகூட எல்லாவற்றையும் என்னிடம் விட்டுவிடு என்கிறார். எது நடந்தாலும் கடவுளின் செயல் என்று விட்டால் கஷ்டங்களிலிருந்து மீள எளிமையான வாய்ப்பு. எளிய மனிதர்களின் ஆன்மீகம் ஒரு ரூபாயை மஞ்சள் துணியில் கட்டிவிட்டு எதிர்கொள்ளும் நம்பிக்கைதான். அதுதான் அவர்களைக் காப்பாற்றுகிறது.

‘சைக்காலஜி தெரபி’ போல்தான் மதங்களும் அதன்முறைகளும் உருவாகின. நடுவில் பாதை தவறி இருப்பதுதான் காலத்தின் கட்டாயம் அல்லது விதி.

இனி சைக்காலஜிஸ்ட்கள் கடவுளாகும் வாய்ப்புண்டு.

‘சைக்கோ தெரபிகள்’ – ‘ரிச்சுவல்ஸ்’ எனப்படும் வழிப்பாட்டுமுறைகளாகலாம்.

சைக்காலஜி கிளினிக் ‘பிள்ளையார்’ கோவிலாகும். ஆஸ்பத்திரி ‘திருப்பதி’யாகும். ஏனெனில் மதங்கள் மாறாவிடில் உலகம் தன்னைப் புதுமாதிரியாகத் தகவமைக்கும்.

அந்தத் தகவமைத்தலில் இணையத்தின் பங்கு அதிகம் இருக்கும். தம்பி ஒருவர், “அக்கா ஆன்மீக சேனல் இத்தனை லட்சம் சப்ஸ்கிரைபர்கள்.. புதிதாய் நிறையச் செய்ய யோசனை இருக்கிறது” என்றார். இணையத்தில் நம்பர் 2 வியாபாரம் ஆன்மீகம்தான். 1 எது என்று குழந்தை கேட்டால் கூடச் சொல்லிவிடும்.

வாட்ஸ் அப் ‘பேமிலி’ குழுக்கள் பெரும்பாலும் ஆன்மீக குழுக்களாகவே மாறிவிட்டன. யார் எந்தக் கோவில் போகிறார்கள் என்பதுதான் அதில் போட்டி. அதை உடனே பகிர்ந்து “இந்த சாமியிடம் போனா போதும், எல்லாம் மறக்கும்” என தன்னையே மறக்க வைக்கும் இணையத்திடம் பேசிக்கொண்டு இருப்பார்.

இணையம் இன்றைய மிகப்பெரும் வரம் தரும் கடவுள், கைக்கு அடக்கமான ஆன்மீக போதை. மதங்களும், ஆன்மீகமும் வளர இணையம் எந்தளவுக்குத் துணைபுரிகிறதோ அதைவிட அதிகமாய் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

இதை எழுதும் பொழுது இணைய நண்பர் கற்றுக்கொடுத்த தியானமுறையை செய்துவிட்டுதான் எழுதவே ஆரம்பிக்கிறேன்.

தியான குருப் 3

ஹிலிங்க் குருப் 2

ஆன்மிக குருப்/ஒரு அறிவாளி தத்துவ குருப் -1

பகவத்கீதை உள்பட குருப் – 2

அதிகம் வாட்ஸ் அப் குழுக்களில் இல்லாத எனக்கே இத்தனை குழுக்கள். பங்கு பெறாவிடினும் தட் உள்ளேதான் இருக்கிறேன் என்பதால் கவனிக்க முடிகிறது.

ஆக மொத்தம் ஆன்மீகம் மனம் சார்ந்தது என்ற புரிதல் வந்தால் மதம் என்னும் பெயருக்கு வேலை இருக்காது.

கசப்பு மருந்து நல்லது. எனவேதான் சொல்கிறேன் ஆன்மிகம் மட்டுமே நல்லது. மதங்கள் அல்ல. ஏனெனில் அவை மனிதங்களைக் கொல்கிறது. இது புரியும் காலங்களில் மதம் மாற்றி எழுதப்பட்டு இருக்கும். நாம் நம் தலைமுறையில் அதைக் காண்போமா?
மனங்களை கேட்போம்!

முந்தைய தொடர்கள்:

3. மனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன? – https://bit.ly/33w5IjK
2.உறவுகள் தரும் அழுத்தங்கள் – https://bit.ly/2waiB6Q
1.ஆரோக்கியம் பொறுத்தவரை –https://bit.ly/3b9jUlb

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. எது நம் வீடு ?- கிர்த்திகா தரன்
  2. நம்மைக் காக்கும் நல்ல பாக்டீரியாக்கள் - கிர்த்திகா தரன்
  3. தற்கொலையை மட்டும் நியாயப்படுத்தி விடாதீர்கள்- கிர்த்திகா தரன்
  4. 'இணையம் தூரத்தை அருகில் வைத்து, உறவுகளை தூரமாக்கிவிட்டது.' – கிர்த்திகா தரன்
  5. மனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன? - கிர்த்திகா தரன்
  6. உறவுகள் தரும் அழுத்தங்கள் - கிர்த்திகா தரன்
  7. ஆரோக்கியம் பொறுத்தவரை நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நாம் - கிர்த்திகா தரன்