2. அற உணவு, ஆழ் மனம், இணைய சமூகம்

ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் 80 வருடமாக ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. அதாவது 724 மனிதர்களின் வாழ்நாள் முழுக்க அவர்களின் மகிழ்வு, நல் வாழ்வு அளந்துகொண்டே வருகின்றனர். பின் அவர்களின் மனைவிகள்… இப்பொழுது 2000 குழந்தைகள் எனத் தொடர்கிறது. ஹார்வர்ட் மாணவர்கள் ஒருப்பக்கம், பாஸடனில் ஏழ்மையான பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் ஒருபக்கம் என 1938இல் இது ஆரம்பித்தது.

அதில் பலர் வாழ்வின் பயணத்தில் பல இடங்களுக்குச் செல்கின்றனர். ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி ஆகிறார். சிலர் மது போதைக்கு அடிமையாகி காணாமல் போகின்றனர். அவர்களப் பற்றித் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது. ஒலி நாடாக்கள், மருத்துவ பரிசோதனை என்று எதையும்விடவில்லை.

பலர் புகழ்அடைய வேண்டும், பணக்காரனாக வேண்டும் எதையாவது சாதிக்க வேண்டும் என்று அதைநோக்கிப் பயணித்தனர். எல்லாவற்றையும்விட எந்த மனிதன் ஆரோக்கியமாக, மகிழ்வாக வாழ்ந்து இருக்கிறான் என்றால்… மிக நெருக்கமான உறவில் மகிழ்வும், திருப்தியும் கொண்டவர்கள் மட்டுமே ஆரோக்கியமாக வாழ்ந்து உள்ளனர். வாழ்வு அப்படி எளிதாக எதையும் சாத்தியப்படுத்துவதில்லை. சிலவற்றை நோக்கி உழைக்க வேண்டி இருக்கிறது. அத்றகான நேரம் ஒதுக்க வேண்டி இருக்கிறது.

வேலைக்கு நேரம் ஒதுக்குகிறோம். பின், குழந்தைகள்.

ஆரோக்கியம், மருத்துவம் எனச் செல்லும். கடைசியாக மனைவி/ கணவனுடன் மணிக்கணக்கில் எப்பொழுது பேசினீர்கள்?

மிக மிக முக்கியமாக கணவன், மனைவிக்குள் காதலர்களுக்குள் ஒரு மூன்றாம் நபர் உள் நுழைகிறார். அவருடந்தான் பெரும்பாலான நேரம் செலவழிக்கப்படுகிறது. அவர் படுக்கையறைவரை வந்து கணவன். மனைவி தனிமைக்கே வேட்டு வைக்கிறார்.

ஒரு தோழி ஒருமுறை பேச்சுவாக்கில் சொன்னது. மிக மிக அந்தரங்கமான நேரத்தில்கூட போன் எடுத்து பார்ப்பாளாம். அவளுக்குப் போன் எல்லாவாற்றையும்விட அதிக போதையை தருகிறது.

இணையம் பெரும் போதை. இப்படி ஒரு போதையில் இருக்கும்பொழுது நெருக்கம் குறைந்துகொண்டே வருகிறது. பின் பெண்களை ஒரு வீட்டுப்பொருளாக ஆண்கள் கருதுவதால் வரும் விளைவு. வீட்டில் உள்ள ஆண் சுவாரசியம் அற்று செல்கிறான். இன்னொன்று அங்கீகாரம். எதற்கும் பாராட்டே இல்லாமல் கடந்து செல்வது.

ஒரு போன். தோழி அழுதுகொண்டு இருக்கிறாள். தற்கொலை செய்யணும்போல இருக்கு என்றாள். ஏன் எனக் கேட்டேன். வீட்டில் ஏதாவது, ச்சே… ச்சே… அந்த மனுஷன் தங்கம் என்றால், அவள் இணைய நண்பன் பேசுவதை நிறுத்திவிட்டு ஒதுங்கிச் சென்றுவிட்டானாம். எனக்கே தெரியாமல் அவனுடையை வார்த்தைகளுக்கு நான் அடிமையாகிவிட்டேன் என்றாள். இது பெண்ணுக்கு பெரும்பாலும், ஆணுக்கு சில இடஙகளிலும் நடக்கும். இப்படிப் பெரும்பாலான வீடுகளில் செல்போன் நுழைந்து இருக்கிறது. செல்போனுக்கு முழுக்க அடிமையாகி குடும்பத்தை கவனிக்கவே முடியாத ஆண் ஒருவர்ஆன்லைன் கவுன்சலிங் வந்தார், பின் ஒரு சிட்டிங் கூட அமரவில்லை. அவருக்குப் போன் வாழ்வு மிக முக்கியமான ஒன்றாக தோன்றி கவுன்சலிங்கூட வேண்டாம் என முடிவெடுத்து விட்டார். இரு குழந்தைகள், மனைவி, குடும்பம் பிரியும் அளவிற்கு இருக்கிறது.

இன்னொரு ஆண் பேசும் வார்த்தைகள் அழகாக மாறுகின்றன. “ஏண்டி உனக்கு அறிவில்லையா… நாலு வார்த்தை பேசறான்னு போய் நம்பிருக்கன்னு ஒரு தோழியிடம் கேட்டேன்… அதுக்கூட என்னிடம் இதுவரை யாருமே பேசினதில்லைடி… ரொம்ப பிடிச்சு இருந்தது அந்த ஆறுதல் என்றார். என்ன சொல்ல முடியும்… தன்னம்பிக்கையில் மீண்டு விட்டார்.

ஒரு டிக் டாக் விடியோவில் முன்பெல்லாம் ஆயிரம் லைக்தான் வரும். ரவுடி பேபி சூர்யா கூட ஒரே ஒரு டிக் டாக் போட்டேன், பத்தாயிரம் லைக்ஸ், லட்சம் வியூஸ் என்று பேசிக்கொண்டிருந்தார், .இன்று வரை ஃபேஸ்புக்கில் ஆயிரம் லைக் வாங்கினாலே பிரபலம்தான். ஆனால் டிக் டாக்கில் அது மிக குறைவு என்ற பொழுது இணையத்தில் பலர் நுழைந்த வேகம் ஆச்சர்யமூட்டியது. சாதரண பெண்களின் நடனம் அழகுதான். அது அளவுக்கு மீறும்பொழுது குடும்பம் அதை எப்படி சேமிக்க முடியாமல் திணறுகிறது என்பது உணர முடியும். ஒவ்வொரு பெண்ணில் மோசமான அஙக அசைவுகள் டிக்டாக் கவனிக்கும் பொழுது அவளின் குழந்தைகள், குடும்பம் என் கண் முன்னால் வந்து செல்கிறது. அந்த ஆணின் மனம் இன்னும் பக்குவம் அடைந்து இருக்காது.

என்னிடம் டயட் எடுக்க வருபவர்களில் 20 முதல் முப்பது சதவிகிதம்வரை பிரிந்த சிங்கிள்கள். ஆண், பெண் இரு பக்கமும் உள்ளார்கள். அம்மா, அப்பா சிங்கிள்களும் உண்டு.

ஆண்களின் ஈகோ ஒரு உச்சக்கட்டம் நோக்கிப் பயணித்து இருக்கிறது. அவனால் இந்த சுதந்திரங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே சமயம் இன்னொரு பக்க ஆண்கள் பெண்கள் பின்னாடிப் போவதை ஒரு வேலையாக கொண்டு வீடு மறக்கின்றனர். தொழில் கூட மறந்து போகிறது.

அதெல்லாம் இல்லை நட்புதான் எனலாம். ஆண் இணைய பெஸ்டியாக இருப்பது பெண்ணுக்கு மகிழ்வாய் இருக்கலாம். அது அந்த ஆணின் மனைவிக்கு பிடிக்காது. அவளுக்கு தன் ஆண் ஹிரோ… இன்னொருவரின் ஜீரோ ஆக விரும்பவே மாட்டாள்.

செல்போன் கலாச்சாரம் டைவர்ஸ் விகிதத்தை பல மடங்கு அதிகரித்து இருப்பது கண்கூடு. ஆனால் கோர்ட்டில் கவலைப்படாமால் போனில் புது இணையரோடு கடலை போட்டுக்கொண்டு இருக்கும் சம்பவமும் நடைப்பெறுகின்றன.

ஆக மொத்தம் இணைய வாழ்வு எல்லாவற்றையும் புரட்டிபோட்டு இருக்கிறது.

ஆமாம் முதல் பத்தியில் எது ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை என்று ஹார்வர்ட் ஆராய்ச்சியில் சொல்லப்பட்டிருக்கு என்பது நினைவிருக்கா?

ஆம் உடல் நலம் என்பது உறவு நலமும் கூட?

இனி ஞாயிறு நோ போன் டே என்று கொண்டாடுவோமா?

எந்த உறவைக் கொண்டாடுகிறோமோ இல்லையோ. இண்டிமேட் உறவுடன் நீண்டக்காலம் நெருங்கி இருக்க சரியாக பிளான் செய்ய வேண்டும்.

அது அத்தனை எளிதில்லை. இருவரும் மனம் விட்டு திட்டமிட வேண்டும்

1. ஒருவருக்கு ஒருவர் முழு நம்பிக்கையில் செயல்பட வேண்டும்

2.எந்த சந்தர்ப்பதிலும் சந்தேகப்படக்கூடாது.

3. எக்காரணத்துக்காகவும் மூன்றாம் நபர் வரவேக்கூடாது முக்கியமாக குடும்பத்தினர், ஆண், பெண் நட்புகள்.

4. ஒவ்வொரு ரூபாயும் இருவரும் இணைந்து திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்

5. வெளியூரில் இருந்தால் சரியான கம்ப்யூனிகேஷன் அவசியம் விடியோ கால்ஸ், அப்போ அப்போ நான் நல்லாருக்கேன்… நீ எப்படி இருக்க… சாப்டியா… மாசந்திர வலி இருக்கா? உடம்பு ஓகே வா (இந்த இடைவெளியில்தான் இணைய ஆண்கள் உள்ளேப்போவார்கள்) பெண்களுக்கு பாதுக்காப்பு உணர்வும், அங்கிகாரமும் தேவை. ஆணுக்கு கவனிப்பும் அவன் தேவை நிறைவேற்றலும் தேவை. இதை இருவரும் செய்ய சரியான ஸ்பேஸ் இருக்க வேண்டும்.

6. ஒருவருக்கு ஒருவர் பாராட்டிக்கொள்ள வேண்டும்

7. திறமைகளை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்ல உந்து சக்தியாக இருக்க வேண்டும்

8. மறைத்தல்… என்னவாக இருந்தாலும், சண்டை வந்தாலும் இருக்கவே கூடாது. அது பெரும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்

9. புரிதல், இடைவெளி இரண்டும் மிக அவசியம்… nagging கூடவே கூடாது.

10. இருவருக்குமான நட்புகளை அங்கிகரிக்க வேண்டும் அனாவசிய கேள்விகள் கேட்கக்கூடாது.

11. என்ன பிரச்சனை என்றாலும் படுக்கைக்குச் செல்லும் முன் முடித்துவிட வேண்டும்.

12. வருடம் இருமுறை தனிமை சுற்றுலா சென்று மனம் விட்டு பேச வேண்டும்.

13. இன்னொருவரின் தேவையை கேட்டு கேட்டு நிறைவேற்ற வேண்டும். கேட்காமலும் நிறைவேற்ற வேண்டும்.

14. வாக்குவாதம் ஏதாவது வந்தால் ஒரு கோடு போட்டு நிறுத்திவிட வேண்டும் தேவையில்லாமல் ஈகோவை தூண்டிவிடக்கூடாது

15. இருவருக்குமான பொது பொழுது போக்கை உருவாக்கிக்கொள்ளலாம் புத்தகம் வாசிப்பது, கவிதை எழுதுவது, இணைந்து சினிமா பார்ப்பது. அதைப்பற்றி பேசுவது என பல விஷயங்கள் செய்யலாம். டயட், எக்சர்சைஸ் கோல்கள் கூட இணைந்தே செய்யலாம்.

16. தனிமையை ரசனையாக்கி கொள்ளும் வித்தை தெரிய வேண்டும்.

17. இருவரும் இருக்கும் பொழுது போன் நேரம், போன் இல்லா நேரம் வரையெறுத்துக்கொள்ள வேண்டும்

18. மிக முக்கியம். புன்னகையும், சிரிப்பும்..கலாய்த்தல் அளவுக்குள் இருக்க வேண்டும்.

19. எந்த சந்தர்ப்பத்திலும் யாரிடமும் குறை கூறிடவே கூடாது. விட்டுக்கொடுக்கவும் கூடாது.

20. பகிர்தலில் சமமாக இருக்க வேண்டும். ஆக்டிவ் லிசனிங்..அதாவது ஆழ்ந்து கேட்டுக்கொள்வது இருப்பக்கமும் நடக்க வேண்டும் வெற்று பேச்சுகள் சலிப்பை ஏற்படுத்தும்

21. அவ்வப்பொழுது இடைவெளி தர வேண்டும் அவரவர நட்புகளோட உள்ள தனிமையை புரிய வேண்டும்.
இதுப்போல் உங்களுக்கான சிலவற்றை வரையறுக்கலாம்.

ரூல்ஸ் எல்லாம் இல்லை. நல்லப்பழக்கங்கள் போல் இவற்றை வளர்த்துகொண்டால் உறவு நன்றாகும்

உறவின் மூலம் உள்ளம் மேம்படும்

உள்ளம் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும்

உடல் பயிற்சி மேற்கொள்வதுபோல் உறவுப்பயிற்சி மேற்க்கொள்ளும் காலம் வந்துவிட்டது.

உங்கள் உறவுக்கான பயிற்சிகளை எப்பொழுது திட்டமிடப்போகிறீர்கள்?

முந்தைய தொடர்கள்:

1.ஆரோக்கியம் பொறுத்தவரை –https://bit.ly/3b9jUlb

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. எது நம் வீடு ?- கிர்த்திகா தரன்
  2. நம்மைக் காக்கும் நல்ல பாக்டீரியாக்கள் - கிர்த்திகா தரன்
  3. தற்கொலையை மட்டும் நியாயப்படுத்தி விடாதீர்கள்- கிர்த்திகா தரன்
  4. 'இணையம் தூரத்தை அருகில் வைத்து, உறவுகளை தூரமாக்கிவிட்டது.' – கிர்த்திகா தரன்
  5. எங்கே இருக்கிறார் நவீன கடவுள்? - கிர்த்திகா தரன்
  6. மனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன? - கிர்த்திகா தரன்
  7. ஆரோக்கியம் பொறுத்தவரை நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நாம் - கிர்த்திகா தரன்